நாளை குறித்த அச்சத்தோடு...முட்கம்பிகளின் பின்னால்...

தங்களது குடும்பங்கள் பற்றிய விபரங்கள் அறியும் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இன்னும் தங்கள் உறவுகளை காணும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

சிறீலங்கா தடுப்பு முகாமின் கூடாரமொன்றின் வெளியே இருந்த அழுக்கான பிரதேசத்தில் 3 குழந்தைகள் நிற்கின்றார்கள். இவர்கள் தங்களது தாயைக் கண்டு 4 வாரங்கள் ஆகின்றன. கடைசியாக இவர்கள் பதுங்கியிருந்த பதுங்கு குழியினுள்ளே விழுந்த எறிகணையில் இவர்களின் தாயின் வயிறு துளைக்கப்பட்டது.

அன்றிலிருந்து இவர்கள் தனித்துவிடப்பட்டார்கள்.29 வயதான சாந்தி மருத்துவத் தொண்டர்களால் தற்காலிக வைத்தியசாலைக்குத் தூக்கிக்கொண்டு செல்லப்பட்டு, சத்திரசிகிச்சை செய்யப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டார். அதன் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பல் மூலம் எடுத்துச்செல்லப்பட்டார்.

அன்றிலிருந்து அவர் பற்றிய எந்த விபரங்களும் இல்லாமல் 33 வயதான அவரது கணவன் யோகீஸ்சுரன் மற்றும் குழந்தைகள் துயந்தினி, குவந்தினி, துக்ஷ்யந்தினி உள்ளனர். இவர்கள் பத்தாயிரக்கணக்கான மக்களோடு பிடிக்கப்பட்டு, மெனிக்பாம் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தங்களது குடும்பங்கள் பற்றிய விபரங்கள் அறியும் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.இன்னுமொரு முகாமில் உள்ள 27 வயதான திரிகண்டன் என்பவர் தனது பாசத்திற்குரியவளை பிரிந்து அனாதரவாக உள்ளார். அவர் பொக்கனையில் இடம்பெற்ற தனது திருமண புகைப்படத்தை காட்டினார்.

சென்ற மாதம் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சிறீலங்கா இராணுவம் புகுந்த போது இவர்கள் இருவரும் பிரிக்கப்பட்டார்கள். அன்றிலிருந்து இவர் தனது 4 வயதான தனது மகளையும் 9 மாத கர்ப்பிணியான தனது மனைவியையும் பற்றிய எந்த வித விபரமும் இன்றி இருக்கின்றார்.

அவர் அவர்களை கண்டுபிடிக்கும் உதவியை எம்மிடம் கூறினார். சிறீலங்காவின் தடுப்பு முகாமுக்குள் எண்ணிக்கையற்ற மக்கள் இதே நிலையிலேயே உள்ளனர். இறுதி வாரங்களில் இடம்பெற்ற புலிகள் மீதான சிறீலங்கா இராணுவத்தின் இரத்தம் தோய்ந்த கொடூரத் தாக்குதலில் பிரிக்கப்பட்டதும், காணாமல் போனதுமான தங்கள் உறவுகள் பற்றிய விபரங்கள் அறியும் உரிமை மறுக்கப்பட்ட நிலையிலேயே அனைவரும் உள்ளனர்.

முட்கம்பியினால் சுற்றி அடைக்கப்பட்ட ஆயிரத்து நானூறு ஏக்கர் பரப்பளவில் அதி உச்ச வெப்பமான பிரதேசத்தில் இரண்டு இலட்சம் மக்கள் நெருக்கி அடைக்கப்பட்டுள்ளனர். தற்காலிகமாக அடைக்கப்பட்ட கூடாரங்களுக்குள் இன்னும் தங்கள் உறவுகளை காணும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

மற்றவர்கள் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் தங்கள் உறவுகள் சிறீலங்கா இராணுவத்தால் பிரித்தெடுத்து செல்லப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் சிறீலங்கா அரசாங்கத்தால் `புனர்வாழ்வு மையங்கள் ' என்று கூறப்படும் முகாம்களுக்கு இது வரை ஒன்பதினாயிரம் விடுதலைப் புலிகளை அடையாளம் காணப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அவர்கள் அங்கேயே வருடக்கணக்கில் அடைக்கப்பட்டிருப்பார்கள். தெற்கிலே அமைக்கப்படும் முகாம்களுக்குள்ளேயே, விடுதலைப் புலிகளா இல்லையா என்று அடையாளம் காணப்படும் வரை மக்களை வைத்திருக்கப்போவதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுகின்றது. பரந்த பிரதேசத்தில் பல மைல்களுக்கு பரந்து கிடக்கும் அந்த கூடாரங்களுக்குள் அண்மைய சண்டைகளுக்குள் இடம்பெயர்ந்து வந்த இந்த துரதிஸ்டம் மிக்க மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு முன்னர் குறைந்தது இரண்டு வருடங்களாவது இங்கேயே அடைக்கப்பட்டிருப்பார்கள்.

31 வயதான இராசபாலன் நவரட்ணம் தனது மனைவி ஜெகதாவையும் 3, 5, 7 வயதான மூன்று பிள்ளைகளையும் சிறீலங்கா இராணுவத்தின் முன்னேற்றத்தின் போது பிரிந்து மே மாதம் 18ம் திகதி மெனிக்பாமை வந்தடைந்ததாக கூறினார். இவர் தொடர்ந்து கூறுகையில் சிறீலங்கா இராணுவம் முன்னேறி வந்து மக்களை ஒரு பெட்டி வடிவத்திற்குள் சுற்றி வளைத்தது. அதற்குள் நாங்கள் பிரிக்கப்பட்டோம்.

எனக்கு என்னசெய்வதென்று தெரியவில்லை. எங்களைச் சேர்த்துவைக்க தயவுசெய்து உதவுங்கள் என்றார். கொடூரப்போரின் ஆதாரங்கள் எங்குமே நிறைந்துள்ளது. 18 மாத குழந்தை உமாராணியை கையில் சுமந்தந்தபடி பாஞ்சி என்னும் இளம்பெண் எம்முடன் கதைத்தார். அந்தக் குழந்தையின் தலையும், கைகளும் கட்டுப்போடப்பட்டிருந்தன. அந்தக் குழந்தை எறிகணை வீச்சில் தலையில் காயப்பட்டும், கைவிரல்கள் நொருக்கப்பட்டதாகவும் தாய் அழுதபடி சொன்னார்.

மக்களை நிரந்தரமாக தடைமுகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் தந்திரமானது அனைத்துலகாலும் விமர்சிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறீலங்கா அதிகார வர்க்கத்தினர் இவற்றிற்கு எதிரான விளக்கத்தைத் தந்தனர். இராணுவ அதிகாரிகளும், நிர்வாகிகளும் இந்த மக்கள், அவர்கள் பாதுகாப்பிற்காகவும், ஏனைய மக்களின் பாதுகாப்பிற்காகவுமே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.

ஏனெனில் இவர்களின் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளோடு சம்பந்தப்பட்டவர்களே என்றும் கூறினார். சில அதிகாரிகள் அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தடைமுகாமிற்குள் நடப்பதாகவும், வேறு சில அதிகாரிகள் அப்படியான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லையென்றும் கூறினர்.

ஆனால் உண்மையில் அவர்களிடம் விடுதலைப் புலிகளின் பெயர்கள் கொண்ட ஒரு பெரிய பட்டியல் உள்ளது. அவர்களை அடையாளம் காண நீண்டகாலம் தேவை. ஒரு இராணுவ அதிகாரி இரகசியமாகக் கூறுகையில் ஏற்கனவே கைதானவர்களிடமிருந்து விபரங்கள் பெறப்படுவதாகவும், அதன் மூலம் மேலதிக தேடுதல் நடப்பதாகவும் தெரிவித்தார்.

63 வயதான சிவலிங்கம் என்னும் ஒரு மருத்துவ அதிகாரி அண்மையில் சில அடிப்படை வசதிகளைக்கொண்ட நாலாவது பகுதி முகாமினை வந்தடைந்தார். அவர் கூறுகையில் உண்மையில் அரசாங்கம் எங்கள் அனைவரையுமே விடுதலைப் புலிகளாகவே பார்க்கிறது.எங்களால் செய்யக்கூடியது எதுவுமில்லை என்றார். மற்றவர்களும் இறுதிச் சண்டைகளின் கொடூரங்கள் பற்றி பேச விரும்பினர்.

சிவலிங்கம் தொடர்ந்து விபரிக்கையில் பொதுமக்கள் பாரியளவில் இந்த இறுதி யுத்தத்திற்குள் அகப்பட்டு பாதிக்கப்பட்டனர் என்றார். ‘யுத்தம் எங்களைச்சுற்றி எங்குமே நிகழ்ந்தது. மக்கள் சுடப்பட்டார்கள். கையில் அகப்பட்ட துணிகளை எடுத்துக்கொண்டு மக்கள் ஓடத்தொடங்கினர். எல்லாப் பக்கத்தாலும் எறிகணைகளும், துப்பாக்கிக் குண்டுகளும் தாக்கின. மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

பெருந்தொகையான மக்கள் எறிகணை வீச்சிலும், விமானக் குண்டுத்தாக்குதலிலும் பலியாகினர். போர் விமானங்கள் ஓடிக்கொண்டிருந்த மக்கள் மீது தொடர்ச்சியாகக் குண்டுவீசின' என்றார். ஆனால் சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் பாதுகாப்பு வலையத்தின் மீதான விமானக் குண்டு வீச்சை மறுத்தே வந்தனர்.

அனைத்து அமைப்புக்களும், ஊடகங்களும் வெளியேற்றப்பட்ட நிலையில் கலைக்கிடமாக எங்களால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. மனித உரிமைகளின் ஐ.நா உயரதிகாரியான நவிபிள்ளை அவர்களும் அனைத்து விதமான யுத்த விதி மீறல்களையும் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு இலங்கையின் யுத்தம் உட்படுத்தப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நன்றி

ஈழமுரசு(29.05.09)

www.tamilkathir.com

Comments