தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்!--பழ. நெடுமாறன்


இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து விட்டோம்'' என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதற்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டது. ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையைவிட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்.

1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆதிக்கப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.

1977-ம் ஆண்டு ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது இந்தியாவின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பியது. அதற்கு ஒரே வழி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதேயாகும் எனத் திட்டமிட்டு செயல்பட்டது. இலங்கையின் பொருளாதாரம் மேற்கு நாடுகளுக்கு திறந்துவிடப்பட்டது. இதன் விளைவாகத் தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு மேற்கு நாடுகள் உதவத் தொடங்கின.

1983-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் சின்பெத் உளவுப்படையான மொசாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இலங்கைக்கு வந்து சிங்கள ராணுவத்துக்குப் பயிற்சி அளித்தனர். பிரிட்ட னைச் சேர்ந்த சிறப்பு விமானப் படையின் நிபுணர்கள் சிங்கள விமானப் படை விமானிகளுக்கு தமிழர் பகுதிகளில் குண்டு வீசப் பயிற்சி அளித்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமான கீனி மீனி சர்வீசஸ், சிங்கள ராணுவத்தில் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்க பயிற்சி அளித்தது. தென்னாப்பிரிக்க அரசு மூலம் இங்கிலாந்து சிங்கள ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை அனுப்பியது.

இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்தோங்கிய நிலையில் இந்திய அரசின் கருத்துகள் எதற்கும் சிங்கள அரசு மதிப்புக் கொடுக்கவில்லை. எனவே அதற்கு எதிராக சிங்கள அரசை மிரட்டுவதற்காக பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் அதாவது 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் முற்றுகைக்கு ஆளாகியிருந்த யாழ்ப்பாணத்தின் மீது பறந்து சென்று உணவுப் பொதிகளை வீசின. இதைக் கண்டு சிங்கள அரசு அச்சம் அடைந்தது. 1987-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இந்திய-இலங்கை உடன்பாட்டில் கையெழுத்து இட்டாக வேண்டிய நெருக்கடி ஜயவர்த்தனவுக்கு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின் சாரம் பின் வருமாறு அமைந்தது:

""இலங்கைக்கு இந்தியா தனது படையை அனுப்பி தமிழ்ப் போராளிகளின் ஆயுதங்களைக் களைய உதவும். இலங்கையில் அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்கித் தரும். இதற்குப் பிரதிபலனாக இலங்கையில் உள்ள அனைத்து வேற்றுநாட்டு ராணுவக் குழுக்களை இலங்கை அரசு வெளியேற்ற வேண்டும்'' என்பதே இந்த உடன்பாட்டின் அடிப்படையாகும்.

இதன் மூலம் ஜயவர்த்தன இரண்டு உண்மைகளைப் புரிந்து கொண்டார். 1. இந்திய அரசை நேரடியாகப் பகைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியாது. 2. மேற்கு நாடுகளை நட்பு சக்திகளாகப் பெற்றால் இந்தியாவின் தயவு இல்லாமல் தமிழ்ப் போராளிகளை முறியடித்துவிட முடியும் என்ற அவரின் திட்டம் வெற்றி பெறவில்லை.

இந்திய அரசு அவரை மிரட்டியபோது மேற்கத்திய நாடுகள் ஒன்றுகூட அவருக்கு உதவ முன்வரவில்லை. சின்னஞ்சிறிய இலங்கைக்காகத் தங்கள் பொருள்களின் விற்பனைக்கான மிகப் பெரிய சந்தை நாடான இந்தியாவுடன் முரண்பட மேற்கு நாடுகள் தயாராகவில்லை என்பதே உண்மையாகும்.

மேற்கண்ட இரு கசப்பான உண்மைகளை உணர்ந்து கொண்ட சிங்கள அரசு இந்தியாவிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கிழக்கு நோக்கித் திரும்பிற்று. மேற்கு நாடுகள் அவரைக் கைவிட்ட பிறகு இந்தியாவின் பகை நாடான சீனாவின் உதவியை நாட அது முடிவு செய்தது. அதிலிருந்து தொடங்கி சீனாவின் சார்பு நாடாக இலங்கை படிப்படியாக உருவெடுத்தது.

1993-ம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லே துறைமுகத்தில் சீனாவின் நோரிங்கோ நிறுவனம் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றைத் திறப்பதற்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி சிங்கள அரசு தனக்குத் தேவையான ஆயுதங்கள் அனைத்தையும் இந்தக் கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வேறு எந்த நாட்டிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கக் கூடாது. அப்படி வாங்குவதற்கு நோரிங்கோவின் அனுமதி தேவை.

இலங்கையில் சீனாவின் ஆயுதக்கிடங்கு அமைவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆசியப் பகுதிக்கே ஆபத்தானதாகும். இப்பகுதியில் உள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் போது உடனுக்குடன் ஆயுத உதவிகளைச் சீனா செய்யமுடியும்.

தென் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும் அங்கு ராட்சத எண்ணெய்க் கலன்களை அமைப்பதற்கும் புத்தளத்துக்கு அருகே நோரோச் சோலையில் 9000 மொகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் உதவும்படி இலங்கை அதிபர் சந்திரிகா 2005-ம் ஆண்டில் வேண்டிக் கொண்டார். சீனா பெரும் மகிழ்ச்சியுடன் இக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.

ஏனெனில் ஹம்பன்தோட்டா துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்போது இந்துமாக்கடலில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சீனா நோக்கிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். நோரோச் சோலையில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டால் அதற்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேதுக் கால்வாயை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர முடியும்.

2006-ஆம் ஆண்டு இறுதியில் மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கான துரப்பணி அனுமதியை எவ்வித டெண்டரும் இல்லாமல் சீனாவுக்கு இலங்கை அளித்தது. இதற்காக ஒதுக்கப்பட்ட இடம் சேதுக் கால்வாயிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சேதுகால்வாயில் செல்லும் அனைத்து நாட்டு சரக்குக் கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஆகியவற்றை சீனா தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

1974 ஜூலை 8-ம் தேதி இந்திரா காந்தி காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி இந்தத் துரப்பணப்பணியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். ஆனால் அந்த உடன்பாட்டை மீறும் வகையில் இந்தப் பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வான்புலிகளின் விமானத் தாக்குதலை இந்தியா அளித்த ரேடார்களினால் கண்டறிய இயலவில்லை எனக் கூறி சீனாவிடம் ரேடார்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டது. அதிக சக்தி வாய்ந்த இந்த ரேடார்கள் மூலம் இந்திய விமானப் படையின் நடமாட்டங்களையும் உளவறிய சீனாவுக்கு வழிவகுக்கப்பட்டது.

2008-ம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு சீனா ரூ. 500 கோடி உதவி அளித்துள்ளது. இந்தியாவையும் ஜப்பானையும் விட பன்மடங்கு அதிக நிதி வழங்கிய நாடாக சீனா திகழ்கிறது. கடந்த காலத்தில் சீனாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிய வகையில் இலங்கை அரசு 100 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது. அந்தக் கடனையும் சீனா தள்ளுபடி செய்தது.

சீனா மட்டுமல்ல, சீனாவின் நட்பு நாடுகளான பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகளை அளிக்க முன்வந்தன. இதற்குப் பின்னணியில் சீனா இருந்தது என்பது வெளிப்படையானது.

2006-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இலங்கைக்கு ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுத உதவிகளை அளித்தது. இதற்குப் பதில் உதவியாக இலங்கை அரசு இந்தியாவுடன் செய்து கொண்டதைப் போல பாகிஸ்தானுடனும் சுதந்திர வணிக உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது.

தென் இலங்கையில் உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுக்கான நீர்மின் நிலையம் அமைப்பதற்காகவும் கொழும்புக்கு அருகே உள்ள சபுஸ்கந்தா பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்குவதற்கும் உரிய உரிமங்களை ஈரானுக்கு அளிக்க இலங்கை அரசு முன்வந்தது. பதிலுக்குப் பெருந்தொகை ஒன்றை ஈரான் உதவி நிதியாக வழங்கியது. சீனாவின் ஆதரவு நாடான ஈரானை நட்பு நாடாக்கிக் கொண்டால் சீனா தன்னுடன் இன்னும் நெருக்கமாக வருமென இலங்கை அரசு கருதியது.

சீனாவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே புலிகளுக்கு எதிரான ராணுவ வெற்றிகளை அடைய முடியும் என இலங்கையை உணரச் செய்வதே சீன அரசின் நோக்கம் என்பதையும் அந்த நோக்கத்தில் அது வெற்றி பெற்றுவிட்டது என்பதையும் இந்தியா உணரவே இல்லை.

இதன் விளைவாக நான்காம் ஈழப்போர் தொடங்கிய 2006ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதியிலிருந்து இலங்கை மண்ணுக்குள் சீனாவின் காலடித்தடங்கள் ஆழமாகப் பதிந்துவிட்டன. சீனாவின் நண்பர்களுக்காகவும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள இலங்கை தயாராகிவிட்டது. இலங்கையரசின் சீன உறவின் விளைவாக இந்தியாவிற்கு ராணுவ ரீதியாக பெரும் அச்சுறுத்தல்கள் உருவாகிவிட்டன. பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவு வட இந்தியாவுக்கு பெரும் அபாயமாக விளங்குகிறது. அதே அளவுக்கு இப்போது உருவாகியிருக்கும் இலங்கை-சீன உறவு எதிர்காலத்தில் தென்னிந்தியாவிற்குப் பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள், ஏவுகணைத் தளங்கள், அணு உலைகள் ஆகியவற்றை வட இந்தியாவில் அமைத்தால் பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி அழியும் அபாயம் இருப்பதால் அத்தகைய தொழிற்சாலைகளைத் தென்னிந்தியாவில் அமைப்பது பாதுகாப்பானதென பிரதமர் நேரு கருதி அவ்விதம் செய்தார். தொடர்ந்து வந்த இந்தியப் பிரதமர்களும் இக்கொள்கையைப் பின்பற்றினார்கள். ஆனால் அதற்கும் இப்போது இலங்கை -சீனா -பாகிஸ்தான் அரசின் மூலம் அபாயம் தோன்றிவிட்டது.

இலங்கையரசுக்கு சீன அரசு ராணுவ ரீதியில் உதவி வருவது எதிர்காலத்தில் வணிக நலன்களை கருதி அல்ல. இந்தியா அமெரிக்காவுடன் கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக இந்துமாக்கடல் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் தனிமைப்பட்டுவிடக்கூடாது எனக் கருதுவதனாலேயேயாகும். ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பகுதியில் உள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமான உறவை சீனா வளர்த்து வருகிறது. ஏற்கெனவே பாகிஸ்தான், ஈரான் ஆகியவை சீனாவின் கூட்டாளிகளாகிவிட்டன.

20 வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் இந்தியா மட்டுமே ஒரே ஒரு மேலாதிக்க நாடாக விளங்கியது ஆனால் இப்போது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குட்பட்ட பகுதிகளில் சீனா நுழைந்துவிட்டது.

இந்துமாக்கடலில் இயற்கையாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இலங்கை உள்ளது. நிலவியல் அடிப்படையில் அது நடுமையமான இடத்தில் அமைந்துள்ளது. இந்துமாக்கடல் வழியே செல்லும் விமானத்தடங்களுக்கும், கப்பல் தடங்களுக்கும் இலங்கையே நடுமையமாக உள்ளது. எனவே இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையைப் பொருத்து அமைந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இலங்கை கவலைப்பட்டதில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் உறவாடவும், உடன்பாடுகள் செய்துகொள்வதற்கும் இலங்கை ஒருபோதும் தயங்கியதில்லை.

இலங்கையின் இந்தப் போக்கினை கண்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் "இந்துமாக்கடலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நிலையும்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.

"பிரிட்டனின் பாதுகாப்புக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனாவின் பாதுகாப்புக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதைப்போல இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிக முக்கியமானதாகும். இந்தியாவின் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அதனால் அபாயம் நேரிடும்'.

அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமையானது எதிர்காலத்தில் தனக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கலக்கம் சீனாவுக்கு உள்ளது. இந்தியாவில் ராணுவ, பொருளாதார முக்கியத்துவம்மிக்க பகுதியாக மாறிவரும் தென்னிந்தியாவின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இலங்கை தனது முழுமையான கட்டுபாட்டிற்குள் வரவேண்டும் என்பது இந்தியாவின் அவசியத் தேவை என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.

இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவருவதற்கும், விடுதலைப்புலிகளை ஓரங்கட்டுவதற்கும், தான் அளித்த உதவியினால் எதிர்காலத்தில் இலங்கை தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்கும் என இந்தியா கருதியது குறுகிய காலத்திலேயே பகற்கனவாய் போய்விட்டது. தனது நோக்கம் நிறைவேறியவுடன் இந்தியாவைத் தூக்கியெறிய இலங்கைத் தயங்கவில்லை. இந்தியாவின் தயவு இனி இலங்கைக்குத் தேவையில்லை. இரு அணு ஆயுத வல்லரசுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உறுதுணையாக நிற்கின்றன.

இலங்கை அதிபர் ராஜபட்சவின் தம்பியும், பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபட்ச கட்டுப்பாட்டில் உள்ள இணையதளத்தில் அவரின் நண்பர் ஜெயசூரியா என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்தியாவைப் பற்றி மிகவும் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

"ஈழத்தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கவேண்டுமென்று எங்களுக்கு ஆணையிட இந்தியாவுக்கு உரிமையில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து தலைவர்களும், அரசதிகாரிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் தமிழர்கள் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலமே இனப்பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்களை சரிசெய்திட முடியும் என்று கூறியிருக்கிறார். அவரிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால் இந்த அறிவுரையைக் கூற நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? இறையாண்மை மிக்க நாடான இலங்கைக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

தமிழர்களுக்கு எவ்வித அதிகாரங்களையும் வழங்கமாட்டோம். ஏனெனில் அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடுவதற்கு அதுவே வாய்ப்பாகிவிடும். அதுமட்டுமல்லாது இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட உடன்பாட்டையும் தூக்கியெறிவோம். அதன் மூலம் இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் துடைத்தெறிவோம்.

எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் நீங்கள் விடுதலைப்புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்துவிட்டோம்.'

கோத்தபய ராஜபட்சவின் இணையதளத்தில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை, அதிபர் ராஜபட்சவின் சம்மதம் இல்லாமல் வெளிவந்திருக்க முடியாது. இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான கருத்தையே இந்தக் கட்டுரை எதிரொலிக்கிறது.

இலங்கையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவிக்கவும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மின்வேலி முகாம்களுக்குள் அடைத்துச் சித்திரவதை செய்யவும், சிங்கள இனவெறி அரசுக்கு எல்லாவகையிலும் துணை நின்ற இந்திய அரசுக்கு கிடைத்த கைமாறு இதுதான். இத்துடன் நிற்கப்போவதில்லை. இந்தியாவின் பகை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் வலுவாகக் காலூன்றிவிட்ட நிலையில் தென்னிந்தியாவிற்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அபாயத்திலிருந்து இந்தியா மீள்வதற்கு வழி உண்டா? என்ற கேள்விக்குரிய விடை இந்தியாவிடம் இல்லை.

இலங்கையில் சிங்கள இனவெறிக்கெதிராக நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களோ, புலிகளோ தோற்கவில்லை. மாறாக இந்தியாவின் ராஜதந்திரம்தான் படுதோல்வியடைந்திருக்கிறது!

Comments