'' இனி? ''

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆணிவேருடன் அழித்து, பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக சிங்களம் எக்காளமிடும் இவ்வேளையில், தனியரசுக்கான தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்த படிநிலை என்ன? என்ற பெரும் கேள்வி இன்று உலகத்
தமிழர்களின் மனங்களின் எழுந்துள்ளது.

ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமில்லை என்று ஒருசாரரும், உலகோடும், சிங்கள தேசத்தோடும் ஒத்துப்போவோம் என்று இன்னொரு சாரரும்,
ஆயுதப் போராட்டமே ஒரேயொரு வழியென்று உறுதிபட மறுசாரருமாக, இன்று மூன்று துருவங்களாக உலகத் தமிழர்களின் கருத்தியல் உலகம் காட்சிதருகின்றது. இவற்றை அகக்கண் முன்னிறுத்தி, தனியரசுக்கான பாதையில் எம்முன்னே விரிந்து கிடக்கும் கடமைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1972ஆம் ஆண்டின் இறுதியில் புதிய தமிழ்ப் புலிகள் என்ற தேச சுதந்திர இயக்கத்தைப் படைத்து, பின்னர் 1976ஆம் ஆண்டில் அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர்சூட்டி, உலகத் தமிழினத்திற்கு தனித்துவமான
அடையாளத்தை வழங்கிய பெருமைக்குரிய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ அரசு, இன்று தமிழீழ மண்ணின் கானகப்பகுதிகளிலும், தமிழக மக்களின் இதயங்களிலும், புகலிட தேசங்களிலும் அணையாத நெருப்பாக அஞ்ஞாதவாசம் புரிகின்றது.

தமிழீழ அரசை நிறுவும் கனவை தாங்கள் சிதறடித்திருப்பதாக
சிங்களம் மார்தட்டிக் கொள்கின்ற பொழுதும், உலக விடுதலைப் போராட்டங்களையும், தமிழினத்தின் வீரம்செறிந்த வரலாற்றையும் கற்றுணர்ந்தவர்களுக்கு நாம் எங்கு நிற்கின்றோம் என்பது நன்கு புரிந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

1970ஆம் ஆண்டில் முதன்முதலாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தமிழீழ தேசியத்
தலைவர் அவர்கள், பின்னர் புலிவீரர்களையும், வீராங்கனைகளையும் உருவாக்கி, சிங்கள - இந்தியப் படைகளுக்கு எதிராகப் போராடி, 1990ஆம் ஆண்டில் தமிழீழ தனியரசை நிறுவினார்.

அன்று தமிழீழ தனியரசு பிரகடனம் செய்யப்படவில்லை. அதற்கு உலக சமூகம் அங்கீகாரம் அளிக்கவும் இல்லை. ஆயினும், யாழ்ப்பாணத்தையும், வன்னி மண்ணையும் மீட்டெடுத்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், அங்கு ஒரு அரசுக்கான நிர்வாக கட்டுமாணங்களை நிறுவி, அவற்றைப் பாதுகாப்பதற்கான போர்ப் படையணிகளைக் கட்டியெழுப்பி தமிழீழ அரசின் இறையாட்சியை நிலைநிறுத்திக் கொண்டார்.

தமிழீழ அரசின் நிர்வாக தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம், 1995ஆம் ஆண்டின் இறுதியில் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பொழுதும், தமிழீழ அரசின் கட்டுமாணங்கள் அழிக்கப்படவில்லை. மாறாக வன்னியை மையமாகக்கொண்ட தமிழீழ அரசின் இறையாட்சி, வன்னிப் பெருநிலத்தில் இருந்து விரிந்து,திருமலை மூதூர் கிழக்கு, ஈச்சிலம்பற்று, மட்டக்களப்பு வாகரை, படுவான்கரை ஆகிய நிலப்பகுதிகளுக்குப் பரவி, தென்தமிழீழ மண்ணிலும் ஆழமாக வேரூன்றிக் கொண்டது.

கடந்தமே மாதம் 18ஆம் நாளன்று முள்ளிவாய்க்கால் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதை தொடர்ந்து சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு வெளியிட்ட கணினி வரைகலை விவரணத்தின்படி, கடந்த 1981ஆம் ஆண்டில் வெறுமனவே வடக்குக் கிழக்கின் 2 விழுக்காடு பகுதிகளை மட்டும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், பின்னர் 1987ஆம் ஆண்டில் 48 விழுக்காடு பகுதிகளையும், 1990ஆம் ஆண்டில் 67 விழுக்காடு பகுதிகளையும், 1995ஆம் ஆண்டில் 61 விழுக்காடு பகுதிகளையும், 2000ஆம் ஆண்டில் 76 விழுக்காடு பகுதிகளையும் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்துள்ளனர். அதாவது, தமிழீழ தாயகத்தின் எழுபது தொடக்கம் எண்பது விழுக்காடு பகுதிகள் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக, கடந்த 2000ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்த அறிவித்தலுக்கு சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் விவரணம், இப்பொழுது ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றது.

இந்த யதார்த்த மெய்யுண்மையைப் பிரதிபலிக்கும் வகையிலேயே, கடந்த 2002ஆம் ஆண்டில் நோர்வேயின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன என்பது இங்கு நினைவூட்டத்தக்கது.

எனவே, அறப்போராட்டங்கள் தோல்வியுற்ற நிலையில், கடந்த 1970ஆம் ஆண்டில் ஆயுதவழி தழுவிய போராட்டத்தில் களமிறங்கிய பொழுது தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தரிசனம்செய்த தமிழீழ தனியரசு, 1990ஆம் ஆண்டில் நிதர்சனமாகி, 2002ஆம் ஆண்டில் உலகின் மறைமுக அங்கீகாரத்தைப்
பெற்று, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரை தனது இறையாட்சியை பேணிக் கொண்டதை எவரும் மறுக்க முடியாது. நிழல் அரசு ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்வகித்து வருகின்றார்கள் என்ற செய்தியை கடந்த 1990ஆம் ஆண்டில் உலக ஊடகங்கள் ஒப்புக்கொண்ட பொழுதே, தமிழீழ அரசின் இருப்பு உறுதிசெய்யப்பட்டது.

புதிய அரசு ஒன்றை உலகம் அங்கீகரிக்கும் பொழுது அது தனியரசு என்ற நிலையை ஈட்டுவது நிகழ்கால உலக ஒழுங்கின் அடிப்படை விதியாக திகழ்ந்தாலும், அரசின் இருப்பே நிழல் அரசு என்ற அழைக்கப்படுவதற்கான
தகுதியை வழங்குகின்றது என்ற சட்டபூர்வ நியாயத்தையும் எவரும் நிராகரித்துவிட முடியாது.

இந்த வகையில், உலகின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்காத நிழல் அரசு என்று அழைக்கப்படுவதற்கான தகுதியைப் பெற்றதன் மூலம், தனியரசு என்ற நிலையை 1990ஆம் ஆண்டில் தமிழீழம் ஈட்டிக் கொண்டது. எனவே, தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதவழி தழுவிய தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெறுபேறாகவே சகல
கட்டுமாணங்களையும், படையணிகளையும் கொண்ட தமிழீழ அரசு உருப்பெற்றது என்ற மெய்யுண்மையை எந்தவொரு மேதாவியும் மறுக்க முடியாது. நாமும் மறந்துவிட முடியாது.

இதேநேரத்தில், கடந்த 1948ஆம் ஆண்டில் ஈழத்தீவை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம் அகன்ற பொழுது காலூன்றிய சிங்கள ஆக்கிரமிப்பிற்கு எதிரான தமிழீழ மக்களின் அறவழி தழுவிய தேசிய விடுதலைப் போராட்டம், மூன்று தசாப்தகால நீட்சியில் தமிழீழ தனியரசுக்கான ஈழத்தமிழர்களின்
ஏகோபித்த ஆணைக்கு (வட்டுக்கோட்டை தீர்மானம்) வழிகோலிய பொழுதும், காந்தியவாதிகள் கட்டியம்கூறிய பாரத தேசத்தின் சுதந்திரத்தைத் தழுவிய தமிழீழ தேச விடுதலையை வழங்கத் தவறியது.

இன்னும்கூறப் போனால், அறவழிப் போராட்டங்கள் மீது நம்பிக்கையிழந்து,
தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்ட இளைய தலைமுறையின் உணர்வெழுச்சியின் வெளிப்பாடாகவே 1970ஆம் ஆண்டில் ஆயுதவழி தழுவிய தமிழீழ எதிர்ப்பியக்கம் உருவெடுத்தது. இதுவே தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில் தமிழீழ மண்ணில் பல்லாயிரம் புலிவீரர்களும், வீராங்கனைகளும் தோற்றம் பெறுவதற்கு வழிகோலியது.


இந்தியப் பேரரசு உறுதுணை நிற்க, உலக சமூகம் ஆசீர்வாதிக்க, கடந்த 2006ஆம் ஆண்டு யூலை மாதம் 26ஆம் நாளன்று மாவிலாற்றில் பெருமெடுப்பில் சிங்களம் தொடங்கிய நில ஆக்கிரமிப்பு யுத்தம், இன்று தமிழீழ தாயக பூமியை விழுங்கி, அடிமைத்தளைக்குள் வீழ்த்தி, ஆயுதவழி தழுவிய தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இத்தோடு ஆயுதவழி தழுவிய தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. மாறாக, ஈழப்போரில் நிகழ்ந்தேறிய பல்வேறு சமர்களில் ஒரு சமர் மட்டுமே இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. இந்த மெய்யுண்மையை உலகத் தமிழர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சிங்களம் கொக்கரிப்பது போன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்
துடைத்தழிக்கப்படவில்லை. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எம்மைக் கைவிட்டு எங்கும் நீங்கிச்சென்றுவிடவுமில்லை. மாறாக, உலகத் தமிழர்களின் அடிநாதமாகவும், ஈழத்தமிழர்களின் உயிர்மூச்சாகவும் விளங்கும் தமிழீழ தேசியத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் எம்மையெல்லாம் ஆகர்சித்து நிற்கின்றார்கள்.

இந்தியப் பேரரசின் உறுதுணையோடும், உலகின் ஆசீர்வாதத்தோடும், இன்று தமிழீழ மண்ணை வாளேந்திய சிங்கக் கொடி ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இது துட்டகைமுனுவிற்கு கிடைத்த வெற்றியும் அல்ல. எல்லாளனுக்கு
கிடைத்த தோல்வியும் அல்ல. சிங்களப் படைகள் வெற்றி பெறவும் இல்லை. பிரபாகரனின் சேனைகள் தோல்வியடையவும் இல்லை. இன்று தமிழீழ அரசுக் கட்டுமாணங்கள் தமது கட்டிடங்களை இழந்திருக்கக்கூடும்.

புலிப் படையணிகள் தமது தளங்களை இழந்திருக்கக்கூடும். ஆனால் தமிழீழ
தேசியத் தலைவர் எம்மை விட்டு மறைந்துவிடவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்படவுமில்லை. அணையாத நெருப்பாக எமது இதயங்களில் கனன்று கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைத் தீ, ஊழித்தீயாக எழுந்து விரைவில் சிங்கள ஆக்கிரமிப்பை சுட்டெரிக்கும்.

ஓயாத அலையாக சீறிப்பாய்ந்து சிங்கள இனவாதத்தை துடைத்தழிக்கும். பிரபாகரன் சேனைகள் வீறுகொண்டெழுந்து தமிழீழ மண்ணை மீட்டெடுக்கும் நாள் விரைவில் புலரும். மீண்டும் தமிழீழ மண்ணில் புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கும். 2009இல் இழந்த தமிழீழ அரசு, மீண்டும்
தனது இறையாட்சியை சொந்த மண்ணில் ஏற்படுத்திக் கொள்ளும்.
ஆனால், இவையெதும் மாயஜாலங்களால் நிகழப் போவதில்லை.

எந்தவொரு அதிசய தேவதையும் விண்ணில் இருந்து மண்ணிறங்கி தமிழீழ
அரசை தங்கத் தட்டில் எமக்குத் தூக்கித் தரப் போவதுமில்லை. இதற்கான முழுப்பணியும் பொறுப்பும் இன்று உலகத் தமிழர்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கள ஆக்கிரமிப்பை உடைத்தெறியும் ஓர்மத்துடன் அஞ்ஞாதவாசம் புரியும் எமது போராளிகளை நாம் உடனடியாக பாதுகாக்க வேண்டும். வதைமுகாம்களில் சிறைவகை;கப்பட்டுள்ள எமது உறவுகளை விரைவாக மீட்டெடுக்க வேண்டும். உலகத் தமிழினத்தின் கலங்கரை விளக்காகத் திகழும் எங்கள் பெருந்தலைவன்
பிரபாகரன் இலட்சியவழியை விட்டு இம்மியளவும் பிறழாது நேர்வழியில் பயணிக்க வேண்டும்.

எவருக்கும் விலைபோகாத எங்கள் பெருந்தலைவன், தலைகுனிவான பாதையில் நாம் பயணிப்பதற்கு ஒருபொழுதும் இடமளியான். ஆயுதவழி தழுவிய போராட்டமும், அறவழிசார்ந்த சனநாயக முன்னெடுப்புக்களும், அரசியல் நீரோட்டப் பயணங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புதியவை அல்ல. கடந்த 1977ஆம் ஆண்டில் சனநாயக வழியில் ஈழத்தமிழினம் வழங்கிய தனியரசுக்கான ஆணையை ஏற்று, அரசியல் நீரோட்டப் பயணமாக உலகத் தமிழினத்தை ஒரு கொடியின் கீழ் அணிதிரட்டி, கடந்த மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக ஆயுதவழி தழுவிய தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, சனநாயகம் தொடர்பாகவும், அரசியல் நீரோட்டப் பயணங்கள் தொடர்பாகவும் எந்தவொரு உலக சக்தியும் புதிதாக பாடம் புகட்டத் தேவையில்லை.

இவை தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை புதுப்பிரவேசங்களும் அல்ல. ஏற்கனவே சனநாயக வழியில் அரசியல் நீரோட்டப் பயணமாகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், எவ்வாறு புதிதாக சனநாயக - அரசியல் நீரோட்டத்தில் பிரவேசிக்க முடியும்? தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியில்கிடைத்த சனநாயக உரிமைகளை, சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பின் கீழ்எந்தவொரு ஈழத்தமிழனும் சுகிக்கவில்லை.

தமிழரசுக் கட்சி, இலங்கை தமிழ்காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய நான்கு தமிழ் அரசியல் கட்சிகளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தளர்வான கூட்டணியில் சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளித்ததன் மூலம் தமது சனநாயக பண்பை ஐயம் - திரிபு இன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தி விட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கும் கிடைத்த ஊடகச் சுதந்திரம், சிங்களதேசத்தின் சுயாதீன ஊடகங்களுக்குக்கூட சோசலிச சனநாயக சிறீலங்கா அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்றால் அது மிகையில்லை. இன்னும்கூறப் போனால், ஒரு தணிக்கை ஆணையாளர்கூட இன்றி இயங்கிய ஒரேயொரு தேசிய விடுதலை இயக்கம் என்ற பெருமை தமிழீழ விடுதலைப் புலிகளையே சாரும்.


இதேபோன்று, சோழர்களுக்குப் பின்னர் உலகத் தமிழினத்தை ஒரே அரசியல் நீரோட்டமாக புலிக்கொடியின் கீழ் அணிதிரட்டிய பெருமை, எங்களின் பெருந்தலைவன் பிரபாகரனையே சாரும். அவரது வழிகாட்டலில் - நெறியாட்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நீரோட்டப் பயணம்
அபரிதமானது. பிரமிக்கத்தக்கது.

இவ்வாறான பின்புலத்தில், ஆயுதவழி தழுவிய தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணி சலனப்படுவதும், எல்லாம் முடிந்து விட்டதாக அழுது புலம்புவதும், தமிழீழ தனியரசுப் பயணத்தைக் கைவிட்டு,
அரசியல் நீரோட்டம் - சனநாயகப் பயணம் போன்ற பெயர்களில் சிங்கள தேசத்தின் அடிமைத்தளையில் நாமே எம்மை வீழ்த்திக் கொள்வதும் அபத்தமானது. இன்னும் சுருங்கக்கூறினால் மிகவும் ஆபத்தானது.


படைவழியில் சிங்களத்தின் கைமேலோங்கிய நிலையில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு சமர் முள்ளிவாய்க்காலில் நிறைவுக்கு வந்துள்ளது. ஆனால், ஒரு சமர் யுத்தத்தின் முடிவாக அமையாது
என்ற போரியல் இலக்கணத்திற்கு அமைய, அடுத்த சமருக்கு நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

எவ்வாறு புகலிட தேசங்களில் இருந்து தாயகம் நோக்கி விரைந்து இஸ்ரேல்
என்ற தனியரசை யூதர்கள் நிறுவினார்களோ, அதேபோன்று தமிழீழ தனியரசை மீண்டும் நிறுவுவதற்கான பயணத்தை இப்பொழுதே நாம் தொடங்க வேண்டும்.
சிங்கள தேசத்திற்கு முழு உலகமும் வழங்கும் பொருண்மிய உதவிகளை விட அதிக அளவிலான நிதியை, தமிழீழ அரசை மீண்டும் நிறுவும் பணிகளுக்கு வழங்கும் வலிமை உலகத் தமிழர்களுக்கு உண்டு.

2002ஆம் ஆண்டில் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டதும், குறுகிய இடைவெளியில் வன்னி மண்ணை கட்டியெழுப்பிய உலகத் தமிழர்கள், தமது பொருண்மிய வலிமையை பன்மடங்காக அதிகரித்து, யூதர்களைப் போன்று தமிழீழ தனியரசு நோக்கி அவற்றைக் குவித்து, எமது வலிமையைப் பெருக்கி, தமிழீழ மண்ணை விட்டு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை ஓடோட விரட்டியடிக்க முடியும். உலகப் பரப்பெங்கும் அறவழியில் கிளர்ந்தெழுந்து தமிழீழ தனியரசுக்கான வேணவாவை வெளிப்படுத்த முடியும். நுட்பமான அரசியல் - இராசதந்திர நகர்வுகள் ஊடாக உலக சமூகத்தை எமது பக்கம் திருப்பி, முள்ளிவாய்க்காலில் இழந்த தமிழீழ தனியரசை மீண்டும் நிறுவ முடியும்.

இதனை விடுத்து, அரசியல் தீர்வை உலகம் எமக்கு அள்ளித் தரும் என்று நம்புவதோ, அன்றி சிங்களத்துடன் சமரசம் செய்து கொள்வதாகக் கூறி அதன் இறையாண்மையை ஏற்று, தேர்தல் சகதியில் குதிப்பதோ தமிழினத்திற்கு எள்ளளவும் பயனை ஈட்டித் தரப் போவதில்லை.

இதனால் எமக்கு ஒரு கிராம சபை கூட கிடைக்கப் போவதுமில்லை. ஒருபிடி நிலம் கூட மிஞ்சப்போவதுமில்லை.வழிகாட்டுவதற்கு என்றும் எங்கள்
பெருந்தலைவன் உள்ளான். மாவீரர்களின் சத்தியம் என்றும் எங்களுக்கு துணைநிற்கும். இதனைப் புரிந்து கொண்டு, சலனங்களையும், மனக்கிலேசங்களையும், நம்பிக்கையீனங்களையும் உதறியெறிந்து விட்டு, வீரத்தலைவனின் வீரம்செறிந்த பாதையில் வீறுகொண்டெழுந்து மீண்டும் தமிழீழ தனியரசை நிறுவுவோம். இதுவே காலம் எமக்கு இடும் கட்டளை. இதுவே தற்கால உலக ஒழுங்கில் நாம் ஈட்டக்கூடிய சாதனை.

ஆக்கம்: பிரம்மசீடன்

உங்கள் கருத்துக்களை கட்டுரையாளருக்கு அனுப்பி வைக்க premaseedan@yahoo.co.uk

Comments