புலிகள் காட்டிய மனிதாபிமானம்! - ஜெகத் கஸ்பர்





தாயக கனவுடன்

சாவினைத் தழுவிய

சந்தனப் பேழைகளே!

எங்கே, எங்கே

ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்!

விடுதலைப் போராளிகளுக்கு வீர வணக்கம்!

கடந்த இதழ் படித்துவிட்டு தொலைபேசியில் கதறி அழுதவர் பலர். நா தழுதழுத்து விம்மியவர் பலர். அரசு, தனியார் துறைகளில் உயர்பதவி வகிப்போர் கூட "இப்படி நாமெல்லாம் கையாலாகாத வர்களாகிவிட்டோமே, நம் கண்ணெதிரே ஒரு இனத்தை, விடுதலைப் போராட்டத்தை அழித்து விட்டார்களே' என்று கலங்கினர். நடு வயதுத் தாய் ஒருவர் என் அலுவலகம் தேடி வந்தார். வயது 48, வசிப்பது வளசரவாக்கம் என்றார். "மீண்டும் போராட்டம் துளிர்க்குமெனில் நானும் போராளியாக விரும்புகிறேன், வழி சொல்வீர்களா?' என்று கேட்டார். சிங்கப்பூரிலிருந்து ஆதிகேசவன் ""தமிழர்கள் நாம் தோற்றுவிட்டோமே ஐயா...'' என குரல் குறுகி அங்கலாய்த்தார்.

அழுவோம். கதறுவோம். உறக்கமின்றிப் புரள்வோம். அங்கலாய்த்துத் தவிப்போம். உள்ளுக்குள் குமுறுவோம். நம்மவரின் பேரழிவை சிங்களவர்கள் நாடெங்கும் கொண்டாடினரென்றால் குறைந்தபட்சம் கதறி அழும் உரிமையினையேனும் நாம் கொள்வோம். காயமுற்ற பத்தாயிரம்பேர் புல்டோசர்களால் ஏற்றிக் கொல்லப்பட்ட போதும், கடைசி நாளில் இருபதாயிரம் பேர் உயிரோடு புதைக்கப்பட்டபோதும், நாம் வெறு மனேதான் இருந்தோம். நினைத்தின்று அழுவோம். ஆயினும் அழுகையின் நிறைவில் உறுதியொன்று பிறந்திட வேண்டும். குறைந்தபட்சம் இன்று வதை முகாம்களில் நடைபிணங்களாய் உயிர் வாடும் மூன்று லட்சம் தமிழருக்கான குரலாய் எழுந்திடும் உறுதி. அவர்களுக்காய் களமிறங்கிப் போராடும் உறுதி.

அழுக்குப் படிந்து நம் உடலோடு ஒட்டிவிட்ட ஆடையொன்றை களைந்தெறியும் காலம் இது. ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் பயங்கரவாதம் என உலக, இந்திய ஊடகங்களும் சில அரசியற்கட்சிகளும் செய்த தொடர் பிரச்சாரம் நமக்குள்ளேயே அச்சம், தயக்கம், குற்ற உணர்வு மூன்றையும் உருவாக்கி செயல்பட முடியா நிலையில் வைத்திருந்தது. அதுதான் அந்த அழுக்கு ஆடை. களைந்தெறிவோம். ஈவிரக்கமின்றி இறுதி நாட்களில் மட்டுமே நாற்பதாயிரம் தமிழர்களை கொன்றழித்த இலங்கை அரசுதான் நிஜமான பயங்கரவாதி என்று முழங்குவோம். அம்மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றினை நமது பொது வரலாறாக சுவீகரிப்போம்.

இங்கு செய்யப்படும் பதிவுகள் யாவுமே அம்மக்களின் அனுபவங்களை நம் அனைவரதுமான பொது வரலாறாய் ஆக்குகின்ற நோக்குடன்தான் செய்யப்படுகிறது. மீண்டும் 2002-ல் நான் கண்ட கிளிநொச்சிக்கே செல்கிறேன். ""ஓயாத அலைகள்'' யுத்தத்தின்போது உன்மத்தமான சண்டைகள் நடந்த பளை பகுதியை பார்க்க வேண்டுமெனச் சென்றேன். "நெடுஞ்சாலையை விட்டு கீழிறங்காதீர்கள்' என வாகன ஓட்டுநர் எச்சரித்தார். கந்தக நிலம் போல் காட்சி தந்தது. எங்கும் ராணுவத்தால் கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டிருப்பதாகவும் அனைத்தையும் அகற்றி முடிக்க ஈராண்டுகளேனும் ஆகும் எனவும் சொன்னார்.

பளை பகுதி தமிழீழப் பரப்பின் தென்னைக் களஞ்சியம் என வருணிக்கப்படுவதுண்டு. எனது கண்களுக்குத் தெரிந்தவரை சுமார் நாற்பதாயிரம் தென்னை மரங்கள் தலை இழந்து மூளியாய் நின்றன. இலங்கை ராணுவத்தின் எறிகணை வீச்சில் முகடு முகம் இழந்த மரங்கள் என வாகன ஓட்டுநர் கூறினார். சந்திரிகா அம்மையார் காலத்திலேயே அத்துணை மூர்க்கத்தனமான எறிகணை வீச்சு நடந்ததென்றால் ராஜபக்சே-கோத்தபய்யா சகோதரர்களின் காலத்தில் முல்லைத்தீவு மக்கள் மீதான எறிகணை வீச்சு எப்படி இருந்திருக்கு மென எண்ணிப் பாருங்கள்.

பளை பகுதியில் மனம் கனத்து போரின் கோர வடுக்களை பார்த்து நின்றவேளை இரு சக்கர ஊர்தியில் ஒருவர் கம்பீரமாக வந்தார். பெயர் இளந்திரை யன். போராளி என அறிமுகம் செய்து கொண்டார். அருகில் பார்க்கத்தான் தெரிந்தது அவருக்கு ஒரு கால் இல் லையென்பது. செயற்கை மரக்கால் பொருத்தியிருந் தார். இதே பளை பகுதியில் நடந்த சண்டையில்தான் கால் இழந்தாராம். நான் வேரித்தாஸ் வானொலி ஃபாதர் ஜெகத் என்றதுமே இடைவெளி அகன்று நீண்ட நாள் நண்பரைப் போல் உரையாடினார்.

போராட்ட வாழ் வின், யுத்த களத்தின் எத்தனையோ அனுபவங் களை வீதியோரமாக நின்று கொண்டே விவரித் தார் இளந்திரையன். அவற்றுள் ஒன்று மறக்க முடியாதது. சக போராளி ஒருவர் வீர மரணம் அடைந்துவிட்ட செய்தியை அவரது வீட்டாருக்குச் சொல்வதற்காக இளந்திரையனும் வேறு நான்கைந்து போராளிகளும் சென்றிருக்கிறார்கள். செய்தியை சொன்னதுமே உணர்ச்சி வெடித்து அழுத குடும்பத்தினர் புலிகள் இயக்கத்தை திட்டி, செய்தி சொல்லச் சென்ற இவர்களையும் அடித்திருக்கிறார்கள். இத்தகு தருணங்களில் உயிருக்கு ஆபத்து என்றால்கூட போராளிகள் திருப்பித் தாக்கவோ, கடும் சொற்களால் பதில் சொல்லவோ கூடா தென்பது விடுதலைப் புலிகள் இயக்க விதி முறையாம். இறந்த போராளியோ வீட்டாரின் விருப்பமும் அனுமதியும் இன்றி இயக்கத்தில் இணைந்தவர் போலிருக்கிறது. அதனால்தான் அவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம். அடி தாங்க முடியாமல் போனபோது இளந்திரை யன் சொன்னாராம், ""உங்களுக்கு ஆத்திரம் தீருமட்டும் எங்களெ அடியுங்கோ... ஆனா ஒன்று... நாங்களும் போராளிகள். இன்றோ, நாளையோ, நாலு வருஷம் கழிச்சோ எங்கட மரணச் செய்தியெ சொல்ல நாலு போராளி கள் எங்கட வீடுகளுக்கும் போவினும். எங்க ளுக்கும் தாய், தகப்பன் சொந்தங்களெல்லாம் உண்டு. அவையளுக்கும் இப்பிடித்தான் ஒருவேளை கோபம் வரும். அதனாலெ நீங்க ஆத்திரம் தீருமட்டும் அடியுங்கோ'' என்றி ருக்கிறார். இதைக் கேட்டதுமே அதுவரை நேரம் அடித்தவர்கள் போராளிகளை கட்டிப்பிடித்து கதறி மன்னிப்புக் கேட்டிருக் கிறார்கள்.

பிரபாகரன் அவர்களுடனான எனது நேர்காணலின் போது நான் கேட்ட முக்கியமானதொரு கேள்வி: ""சிங்கள மக்களை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள், அவர்கள் சிறந்து வாழ வாழ்த்துவீர்களா?'' அதற்கு அவர் தந்த பதில்: ""தமிழ் மக்களாகிய எங்களை அடித்து அடித்து சிங்களவர்கள் களைத்துப் போய்விட்டார்கள். தமிழ் மக்களோ அடி வாங்கி வாங்கி களைத்திருக்கிறார்கள். எனவே அடித்தும் களைக்காமல், அடி வாங்கியும் களைத்துப் போகாமல் சமாதானமாகப் பிரிந்து வாழ்வது இருவருக்குமே நல்லது. மற்றபடி தமிழ் மக்கள் எவ்வாறு சிறந்து வாழவேண்டு மென்று ஆசைப்படுகிறேனோ அவ்வாறே சிங்கள மக்களும் சிறக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்'' என்றார்.

எத்தனையோ போராளிகளிடம் நான் அப்போது உரையாடினேன். நான் புனிதமாய் நம்பும் சகலவற்றின் மேலும் சாட்சியாய் சொல்கிறேன்... ஒரு போராளி கூட சிங்கள மக்கள் மீது வெறுப்பு கூறவில்லை. தமிழ் ஈழம், தமிழ் மக்கள் மீதான ஆர்வமும் அன்பும் ஒவ்வொரு போராளியின் உணர்வுகளிலும் உரையாடல்களிலும் பற்றி எரிந்ததைத்தான் பதிவு செய்ய முடிந்ததேயல்லாமல், சிங்கள மக்களை அழிக்க வேண் டும் என்ற உணர்வோட்டத்தை என்னால் அவதானிக்கவே முடியவில்லை. ""ஏன் சிங்களவன் தமிழ் மக்களை அழிக்க வேண்டி வரிந்து கட்டுகிறான்?'' என்ற கேள்வியைத்தான் அநேகம் போராளிகள் கேட்டனர். ஆ.இரகு பதி என்ற போராளி 1999-ம் ஆண்டு எழுதிய கடிதம் அவர்களின் பொதுவான உளப்பாங்கிற்கு ஓர் உதாரணமாய் இருந்தது. இதோ அக்கடிதம்:

""இம்மடலை நான் எழுதும் இடம் கிளிநொச்சி. ஆம்! இந்நகர் இப்போது எமது கையில். இந்நகரை மீட்க பலநூறு போராளிகளை இழந்துள்ளோம். ஆனால் இறுதியில் நாம் வென்றோம். இச்சமரில் கொல்லப்பட்ட இலங்கை ராணுவத் தினரின் உடல்களை கண்டபின் எமக்கிருந்த ஆவேச உணர்ச்சி மறைந்துவிட்டது. நான் சொன்னால் நம்பமாட்டீர்கள். உண்மையில் பரிதாபமே பிறந்தது. ஓர் ராணுவ வீரன். முப்பது வயதிருக்கும். காயமடைந்த நிலையில் கதறிக் கொண்டிருந்தான். நாங்கள் அவனை மீட்டு கள மருத்துவ இடத்திற்கு தூக்கிச் சென்றோம். அவன் தனக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும், எப்படியாவது தன்னை காப்பாற்றுமாறும் அழுதான். நாங்களும் எப்படியாவது அவனை காப்பாற்ற வேண்டுமென்று வெறியோடு இயங்கினோம். 700 மீட்டர் தூக்கிச் சென்றிருப்போம். அவனது பேச்சைக் காணவில்லை. பரிசோதித்தபோது இறந்திருந்தான். பாவமாக இருந்தது. அவனது இளம் மனைவியும் இரு பிள்ளைகளும் என்ன பாடுபடப் போகிறார்களோ என்று எமது மனம் கவலையடைந்தது''.

களத்தில் கை, கால் இழந்து, உடலெங்கும் வீரத் தழும்புகள் கொண்டிருந்த போராளிகளிடத்துக் கூட வெறுப்பினை என்னால் பார்க்க முடிய வில்லையென்பது உண்மையிலேயே வியப்பா யிருந்தது. வள்ளுவப் பெருந்தகை சொன்னதோர் பேருண்மை புரிந்தது: ""அறத்திற்கே அன்பு சார்பென்பர் அறியார்: மறத்திற்கும் அஃதே துணை''. அறம் மட்டுமே அன்பு நிலை சார்ந்ததென நாம் நினைக்கிறோம் - ஆனால் வீரமும் அன்புநிலை சார்ந்ததுதான் என்பதற்குச் சுடர்விடும் முன்னுதாரணங்களாய் அவர்களைக் கண்டேன். அறம் மறுக்கப்பட்டதால் மறம் தரித்தவர்கள் அவர்கள். மறம் தரித்தபோதிலும் எதிரியின் மீது தனிப்பட்ட வெறுப்பினை வளர்க்காதவர்கள். இவர்களைத்தான் உலகம் பயங்கரவாதிகள் என்றது.

எல்லோரும் துரோகம் செய்தும், பழி வாங்கியும் தீர்த்துவிட்டார்கள். நாமேனும் அவர்களது நினைவுகளை புனிதமுடன் சுவீகரிப்போம். எனது வானொலி நாட்களில் தமிழகத்திலிருந்து வரும் ஈழ விடுதலை ஆதரவுக் கடிதங்களை ஒலிபரப்புவதுண்டு. அதற்கு ஒரு போராளி எழுதிய கடிதம் நம்மிடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்த்தார்கள் என்பதற்கான பதிவு. இதோ அக்கடிதம்: ""இரத்தமும் தசையும் ஒன்றாய் கலந்த சகதிக்குள் இன்று உரிமைக்காகப் போராடுகின்ற என் போன்ற போராளிகளின் மனதில், நாம் உலகத்தாரால் புறக்கணிக்கப்பட்டவர்களல்ல... எமக்குத் தோள் தர மனிதம் இன்னமும் வாழ்கிறதென்ற உணர்வினை தமிழகத்து உறவுகள் எழுதும் கடிதங்கள் தருகின்றன. போராளியான பின்னரும் கூட எனது தாயார் என்னைப் பார்க்க வருகையில் சிற்றுண்டிப் பொதிகளை என் கையில் கொடுத்துவிட்டு முத்தமிட்டு கண்ணீர் மல்கப் பிரியும் வேளை எனது கண்கள் என் கட்டுப்பாட்டை இழக்கும். இனிமேல் என் அன்புத்தாயை உயிருடன் பார்ப்பேனா? அல்லது எனது உயிரற்ற உடலையாவது என் தாய் காண்பாரா?

அது பரவாயில்லை. என் மண்ணில் இன்று எனக்கு ஏராளம் உறவுகள். அவர்களது அன்பு தரும் நிறைவே போதும். ஆனால் எமது மக்களின் துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொள்ள இந்த உலகில் யாருமே இல்லை என்கின்ற உணர்வு இப்போது எம்மிடம் இல்லை, ஏனென்றால் தமிழகத்து உறவுகள் எம்மீது காட்டும் பரிவு'' -நம்மை அவர்கள் நம்பினார்கள். இப்போதும் கூட நம்புகிறார்கள்.

(நினைவுகள் சுழலும்)

Comments