நடேசன், புலித்தேவன் சரண் அடைவது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் விஜய் நம்பியார் பேசியிருக்கிறார்: ஐ.நா. பேச்சாளர் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் தலைமைச் செயலரான விஜய் நம்பியார் சிறிலங்காவில் இருந்தபோது சிறிலங்கா அரசுடன் பேச்சு நடத்தியிருக்கிறார்.

இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனின் பேச்சாளர் மிச்சேல் மொன்டாஸ் தெரிவித்துள்ளார்.

விஜய் நம்பியார் சிறிலங்காவுக்குச் செல்வதற்கு முன்பாக, சரணடைதல் தொடர்பான வேண்டுகோளுடன் பிரித்தானிய ஊடகவியலாளரான மேரி கொல்வின் அவரை முதலில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதி ஒருவரும் விஜய் நம்பியாரைத் தொடர்பு கொண்டிருக்கிறார்.

சரணடைவதாக இருந்தால் சிறிலங்கா படையினரிடம்தான் சரணடைய வேண்டுமே தவிர மூன்றாவது தரப்பினரிடம் அல்ல என்பதை சிறிலங்கா அரசு வலியுறுத்தி வருகிறது என்ற செய்தியை விஜய் நம்பியார் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

சரணடைவதற்கு விரும்பிய நடேசனிடமும், புலித்தேவனிடமும் வெள்ளைக்கொடியை ஏந்தி சிறிலங்கா படையினரிடம் காட்டினால் போதும், பாதுகாப்பாக சரணடையலாம் என்று விஜய் நம்பியார் கூறியிருக்கிறார்.

நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி வேண்டுகோள் ஊடகவியலாளர் மேரி கொல்வின் மூலமாக விஜய் நம்பியாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொழும்பில் இருந்த தூதரக அதிகாரிகள், அரசியல்வாதிகள் உட்பட பலருக்கும் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.

இது அரசின் உயர் நிலையில் உள்ளவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, பதிலுக்கு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டதாகக் கருதுகிறோம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் பேச்சாளர் மிச்சேல் மொன்டாஸ் கூறியுள்ளார்.

நடேசன் அல்லது புலித்தேவன் தொடர்பாக விஜய் நம்பியார் தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுவதை சிறிலங்காவின் வெளியுறவுத்துறைச் செயலாளர் பாலித கோகன்ன மறுத்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் வேறு பல உயர் தலைவர்களின் உடலங்களுடன், நடேசன், புலித்தேவன் ஆகியோரின் உடலங்கள் மோதல் பகுதியில் காணப்பட்டதாக சிறிலங்கா படையினர் மே 18 ஆம் நாள் அறிவித்தனர்.

இதற்கிடையே, ஊடகவியலாளர்கள் சிலருக்கு எதிராகவும், மோதல் பகுதியில் மருத்துவம் செய்து வந்த மருத்துவர்கள் சிலருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக வெளியாகி வரும் செய்திகளை ஐ.நா. கவனித்து வருவதாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மிச்சேல் மொன்டாஸ் பதிலளித்துள்ளார்.

Comments