அரசியல் உரிமைகளை அடைவதன் மூலமே மனிதாபிமான நெருக்கடிகளை நிரந்தரமாக நீக்க முடியும்

விடுதலைப்புலிகளின் இராணுவபலத்தை முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு கடந்த மாதம் 18 ஆம் நாள் தெரிவித்த பின்னர் சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தனது முதல் வெளிநாட்டு பயணத்தை பர்மாவுக்கு மேற்கொண்டுள்ளார்.

பர்மாவானது மேற்குலகத்தையும், இந்தியாவையும் முற்றாக புறம்தள்ளி சீனாவின் பிடிக்குள்ள உள்ள நாடு. அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்குலகம் நடவடிக்கைகளை எடுக்க முனைந்த போதெல்லாம் சீனா தனது அதிகாரங்களை பயன்படுத்தி பர்மாவை காப்பாற்றி வந்துள்ளது. சீனாவுடன் சிறீலங்கா நெருங்கிய உறவுகளை வளர்த்து வருகையில் சீனாவின் உற்ற நட்புநாடாக விளங்கும் பர்மாவையும் சிறீலங்கா அணைத்துக்கொள்ள முனைகின்றது.

பாதுகாப்பு மற்றும் இரஜதந்திர நெருக்கங்களுக்கு அப்பால் பௌத்த சமயம் என்ற சமயக்கோட்பாடுகளும் சிறீலங்காவிற்கும் பர்மாவுக்கும் இடையில் பரிமாற்றப்பட்ட பல சரித்திரங்களை கொண்டிருப்பதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கங்களுடன் சீனா, யப்பான், பர்மா, சிறீலங்கா ஆகிய நாடுகள் தமது நெருக்கத்தை அதிகரித்து வருகின்றன.

இந்த நெருக்கங்கள் மேற்குலகத்திற்கு மாத்திரமல்லாது, இந்து சமுத்திர பிராந்தியத்தின் இந்தியாவின் ஆளுமைக்கும் பாரிய சவாலாக மாற்றம் பெற்று வருகின்றது. சீனாவை பொறுத்தவரையில் அதன் இராஜதந்திர அணுகுமுறைகள் என்பது அமைதியின் எழுச்சியாகவே (Pநயஉநகரட சளைந) கொள்ளப்படுகின்றது.

அதாவது அது தன்னைச்சுற்றியுள்ள பிரதேசங்களில் அமைதியையும் உறுதித்தன்மையையும் ஏற்படுத்துவதன் மூலம் தனது பாதுகாப்பை பலப்படுத்த முற்பட்டு வருகின்றது. வடகொரியா மற்றும் பார்மா போன்றவற்றுடன் அத்தகைய அனுகுமுறைகளை கடைப்பிடித்து வரும் அதேசயம் சிறீலங்காவில் தமிழ் மக்களின் ஆயதப்போராட்டத்தை முறியடிப்பதற்கும் சீனா படைத்துறை மற்றும் இரஜதந்திர உதவிகளை அதிகளவில் வழங்கியிருந்தது. சிறீலங்கா அரசின் போரை இடையில் நிறுத்தும் நடவடிக்கைகளை உலகம் மேற்கொள்வதை தடுப்பதற்கான இராஜதந்திர அனுகுமுறைகளையும் சீனா மேற்கொண்டிருந்தது.

அதனையே இந்தியாவும் மேற்கொண்டிருந்தது. ஆனால் இந்தியாவை உள்வாங்கிகொள்ளும் மனநிலை தென்னிலங்கை மக்களுக்கு இல்லை. சீனாவின் இந்த அமைதியின் எழுச்சி என்பது முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நிறைவுபெற்றுள்ளதாகவே பிரித்தானியாவை தளமாக கொண்ட வென் லியோ (றுநn டுயைழ) என்ற பொருளியல் மற்றும் அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அதாவது தனது தெற்கு மற்றும் கிழக்கு வளையத்தில் உள்ள நாடுகளின் நெருக்கடிக்ளை தணிப்பதன் மூலம் தனது உறுதித்தன்மையை சீனா மேம்படுத்த முற்பட்டுள்ளதன் வெற்றியாகவே விடுதலைப்புலிகள் மீதான சிறீலங்கா இராணுவத்தின் வெற்றியை அவர் நோக்குகின்றார்.

மேலும் சீனாவை பொறுத்தவரையில் அது தென்னிலங்கையில் வலுவாக காலூன்றி விட்டது. ஏறத்தாள ஒரு பில்லியன் டொலர் முதலீடு, அது மட்டுமல்லாது மேலும் பல மில்லியன் டொலர்களை அது உதவியாகவும், ஆயுத தளபாடங்களை அது இலவசமாகவும் சிறீலங்காவுக்கு வழங்கியும் வந்துள்ளது.

விரைவாக வளர்ச்சிகண்டுவரும் சீனாவின் கைத்தொழில்துறை முன்னையதை விட தற்போது பலமடங்கு அதிகமான எரிபொருள் தேவையை உள்வாங்கிவருகின்றது. எனவே அதனை கொண்டுசெல்லும் தென்னாசியாவின் கடற்பாதையின் பாதுகாப்பை அது விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்பதுடன் சீனாவை வெளியேற்றுவது என்பதும் இலகுவான காரியமல்ல.

தற்போது இந்தியாவுக்கு சிறீலங்காவில் எஞ்சியுள்ளது வடக்கும் - கிழக்கும் தான். அங்கு தமிழ் மக்களின் ஆதரவுகள் இன்றி இந்தியா காலூன்ற முடியுமா என்றால் அது கேள்விக்குறியானதே. அதாவது சிறிலங்கா அரசு மிகவும் தந்திரமாக சீனாவை உள்வாங்குவதற்கும், இந்தியாவை வெளியேற்றுவதற்குமான காhரியங்களை நகர்த்தியுள்ளது என்றே கொள்ள முடியும்.

மேற்குலகத்தை பொறுத்தவரைக்கும் விடுதலைப்புலிகள் போரிடும் வலு உயர்வாக இருக்கும் போது அமைதி நடவடிக்கைகளில் அவர்கள் அதிக அக்கறை காண்பிக்க மாட்டார்கள் என்ற தோற்றப்பாடு ஒன்று 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிற்கு பின்னர் மேற்குலக சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அது தவறானது.

இந்த போலியான பிரச்சாரங்களை நம்பிய மேற்குலகம் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்துகின்றோம் என்ற சிறீலங்கா - இந்திய அரசின் கூட்டு நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் பல ஒத்துழைப்புக்களை வழங்கி வந்திருந்தது. அதாவது 1997 இல் ஆரம்பித்த ஜெயசுக்குறு படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் விடுதலைப்புலிகள் 32 நாடுகளை எதிர்த்து சமரிட்டிருந்தனர் என விடுதலைப்புலிகளின் மூக்கிய உறுப்பினர் திரு வே பாலகுமார் அவர்கள் தெரிவித்திருந்தார்.

ஆனால் நாலாவது ஈழப்போரின் பெரும்பகுதி வரை விடுதலைப்புலிகள் அனைத்துலகத்தின் நாடுகளை எதிர்த்தே சமரிட்டு வந்திருந்தனர். இதனை தான் சிறீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் றோகித போகோலகமாவும் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது சிறீலங்காவின் போருக்கு 20 நாடுகள் உதவிகளை நேரிடையாக வழங்கியதாக தெரிவித்திருந்தார். நேரடியற்ற விதத்தில் முழு உலகமும் ஆதரவுகளை வழங்கியிருந்ததையும் நாம் அறிவோம்.

எனினும் ஒரு எல்லைக்கு அப்பால் போரை தூண்டியவர்களேலேயே சிறீலங்கா - இந்திய கூட்டு அரசுகளின் இந்த போரை நிறுத்த முடியாது போய்விட்டது என்பது தான் உண்மை.

அதாவது சிறீலங்கா - இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கையில் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என மேற்குலகம் தற்போது உணர்கின்றது. விடுதலைப்புலிகள் இல்லாத நிலமை என்பது ஒரு அரசியல் வெற்றிடமாக உள்ளதாக அவர்கள் தொடாச்சியாக தெரிவித்து வரும் கருத்துக்களில் இருந்து ஒன்றை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

அதாவது விடுதலைப்புலிகளையே அவர்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்தனர் என்பதே அது. ஆயுத நடவடிக்கைகளுக்கு அப்பால் விடுதலைப்புலிகளின் அரசியல் நகர்வுகளுக்கு அவர்களை முக்கியத்துவம் வழங்கியிருந்தனர்.

தற்போதும் அவர்கள் அதனை விடுதலைப்புலிகளிடம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பாக விடுதலைப்புலிகள் அடுத்து மேற்கொள்ளப்போகும் நகர்வு என்ன என்பது தொடர்பாக அறிவதற்கு ஆவலாக உள்ளதாக மேற்குலகத்தின் இரஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளதுடன், மேற்குலகம் அவர்களின் நிலைப்பாட்டிற்கு பின்னால் நிற்கும் எனவும் கூறியுள்ளார்.

மேற்குலகத்தினரை இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் காலூன்ற விடாது தடுத்ததில் தென் ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பல ஒன்றிணைந்து செயற்பட்டதும் மேற்குலகத்திற்கு பாரிய ஏமாற்றமாகும். கடந்த மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நாவின் மனித உரிமை சபைக்கான சிறப்பு விவாதத்தில் இது தெளிவாகி விட்டநிலையில் மேற்குலகத்திற்கு வேறு ஒரு தரப்பின் ஆதரவுகள் தேவை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அனைத்துலகத்தின் இந்த பூகேள அரசியல் மாற்றங்களை உள்வாங்கி கொள்வதற்கும், தற்போது அனைத்துலகத்திலும் தமிழ் மக்கள் மீது ஏற்பட்டுள்ள அனுதாபங்களை சரியாக பயன்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு ஒரு வலுவான அரசியல் தலைமைத்துவமும், கட்டமைப்பும் தேவை.

இருந்த போதும் தமிழ் இனம் தற்போது இரு முக்கிய பிரச்சனைகளை எதிர்நோக்கி நிற்கின்றது. ஒன்று தமிழ் மக்களின் அறுபத்தியொரு வருடகால உரிமை போராட்டத்தின் நோக்கமான அரசியல் தீர்வு, இரண்டாவது தற்போது உக்கிரம்பெற்றுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கான தீர்வு.

தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி என்பது தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப்போராட்டத்தின் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட படை நடவடிக்கையின் விளைவாக தோற்றம் பெற்றது. அது உரிமைக்கான போரின் ஒரு பகுதி. எனினும் இந்த சவால்களை நாம் முறியடிக்க வேண்டுமெனில் நாம் எமது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொண்டாலே அதனை நிரந்தரமாக நீக்க முடியும்.

அரசின் மீது அதற்கான அழுத்தங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டாலும், அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கான எமது நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்பட வேண்டும். தடைமுகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதாக இருந்தாலும் சரி, கைதுசெய்யப்பட்டுள்ள போராளிகளை வெளியில் எடுப்பதாக இருந்தாலும் சரி, மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சிங்களகுடியேற்றங்களை வெளியேற்றுவது என்றாலும் சரி அதனை மேற்கொள்வதற்கு நாம் எமது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்துலகத்தின் மேற்பார்வையில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களும், முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களுமே அதற்கான சிறந்த வழிகளாகும். ஏனெனில் நியாயமான தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டு அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் சிறீலங்கா அரசின் படை முகாம்கள் கூட வடக்கு கிழக்கில் இருக்கமுடியாத நிலை ஒன்று தோன்றும். அதனை தான் அன்று விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கமும் தெரிவித்திருந்தார்.

2002 ஆம் ஆண்டு ஏற்றட்ட போர் நிறுத்த உடன்பாட்டின் மூலமோ அல்லது அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல சுற்று பேச்சக்களின் மூலமோ ஏன் அதனை நாம் அடையவில்லை என நீங்கள் கேட்கலாம். இன்று எமக்கு ஆதரவாக எழுந்துள்ள புறச்சூழல்கள் போல அன்று எமக்கு ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படவில்லை. அதனை ஏற்படுத்தி கொள்ளாததும் நாம் விட்ட தவறாகும்.

தமது மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுக்கு ஏற்ப படைத்துறை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், இரஜதந்திர ரீதியாகவும் விடுதலைப்புலிகள் தம்மால் முடிந்ததை சிறப்பாக செய்திருந்தனர். ஆனால் நாம் தான் பலமாக ஒன்று திரண்டு போராடி தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அவர்களின் கோரிக்கையை பலப்படுத்த அன்று தவறிவிட்டோம்.

ஆனால் சிறீலங்கா அரசு மேற்குலகத்தின் அழுத்தங்களையும் புறம்தள்ளி பிராந்திய வல்லரசுகளின் உதவியுடன் தன்னை பலப்படுத்த தனது வளங்களை அனைத்தையும் ஒன்று திரட்டி செயற்பட்டு வருகின்றது. போர் நிறைவடைந்துவிட்டால் படைத்துறை கட்டமைப்புக்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது வழமை அதாவது அவற்றில் பல குறைப்புக்கள் ஏற்படுவதுண்டு. 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டின் போதும் படைத்துறை கட்டமைப்புக்களில் பல தளர்ச்சிகளை ஏற்படுத்துவது தொடர்பான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்து வருகின்ற போதும் அது தனது படை கட்டுமானங்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தளர்த்துவதற்கு முனவரவில்லை. மாறாக படையினரின் பலத்தை அதிகரிக்க முற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் சிறீலங்காவின் பல பகுதிகளிற்குள்ளும் ஊடுருவி உள்ளதாகவும் அவர்களை கைதுசெய்யும் வரை சிறீலங்கா அரசு தற்போது மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நீக்கப்போவதில்லை என சிறீலங்காவின் காவல்துறை பணிப்பாளர் விக்கிரமரட்ணாவும், அவசரகாலத்தை நீக்கப்போவதில்லை என அரசும், இராணுவத்திற்கு மேலும் ஒரு இலட்சம் பேரை சேர்க்கப்போவதாக இராணுவத்தளபதியும் கூறி வருகின்றனர்.

எனவே போர் முடிந்து விட்டது என அரசு கூறிக்கொண்டாலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைத்து அதனை தீர்க்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதை இந்த சம்பவங்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றன. சிறீலங்கா அரசினை பொறுத்தவரையில் மீண்டும் விடுதலைப்புலிகள் பலம்பெற்றுவிடக்கூடாது என்பதில் மட்டுமே குறியாக உள்ளது.

எனவே தமிழ் மக்களுக்கு அமெரிக்கா மறைமுகமாக தெரிவிக்கும் கருத்துக்களை உள்வாங்கவேண்டிய நிலையில் நாம் தற்போது நிற்கின்றோம். அண்மைக்காலமாக அமெரிக்கா ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் அழுத்தி கூறுகின்றது. அதாவது சிறீலங்கா அரசு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அதுவாகும்.

அமெரிக்கா அரசு அதனை ஆரம்பித்து விட்டதாகவும், மேலும் அதனை விஸ்த்தரிக்கப்போவதாகவும், புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்து வருகின்றது. சிறீலங்கா அரசிற்கு அமெரிக்கா சொல்லும் இந்த செய்தியில் தமிழ் மக்களுக்கும் ஒரு தகவல் புதைந்துள்ளது.

அதாவது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்ககூடிய பலமாக கட்டமைப்பு ஒன்றை புலம்பெயர்ந்த நாடுகளின் வாழும் ஈழத்தமிழ் மக்கள் உலகெங்கும் வாழும் தமிழ் சமூகத்துடனும், அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகளுடனும் பலமாக கட்டி எழுப்பவேண்டும் என்பதே அதுவாகும்.

உலெகெங்கும் பரந்து வாழும் 12 இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களின் குரல்களை ஈழத்தீவின் அரசியல் பிரச்சனைகளில் இருந்து யாரும் ஒதுக்கிவிட முடியாது. உலகம் எங்கும் பரந்து வாழும் ஏறத்தாள பத்து கோடி தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவாக ஒருமித்த ஆதரவு கொடுத்தால் அதனை உலகமோ அல்லது பிரந்திய வல்லரசுகளோ புறக்கணிக்கவும் முடியாது.

மொன்ரோநீக்குரோ என்ற சின்னம் சிறிய தேசம் உருவான போது உலெகெங்கும் புலம்பெயர்ந்து வாழந்து வந்த பல இலட்சம் மொன்ரோநீக்குரோ குடிமக்கள் தமது நாட்டுக்கு சிறப்பு விமானங்களில் சென்று தனிநாட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததையும் இங்கு நாம் மறந்துவிட முடியாது

-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி -வீரகேசரி வாரவெளீயீடு

Comments