தமிழர் சுய நிர்ணயத்திற்கான போராட்டத்தின் நீண்ட வரலாற்றுப் பயணத்தில் காலத்திற்குக் காலம் ஏற்பட்ட பின்னடைவுகள், சரிவுகள், சதிகள், சூழ்ச்சிகள், பிராந்திய அழுத்தங்கள் யாவற்றையும் தாண்டி அதனுடைய வரலாற்றுப் பாதையின் திருப்பு முனையில் நின்றவேளை பிராந்திய அழுத்தங்களும், உட்புறத் துரோகங்களும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வியலில் என்றும் மறக்க முடியாத வன்னிக் கறைபடிந்த கறுப்பு நாட்களை தடம்பதித்துச் சென்றுவிட்டது.
இந்தக் கறைபடிந்த எமது வரலாற்றுப் பயணத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மக்களை மனித நேயத்துடன் அரவணைப்பதற்காக புலம்பெயர் தமிழர்கள் எடுத்து வைத்திருக்கும் முதலாவது தடமாக 'எமது மக்களுக்கு நாமே கை கொடுப்போம்' என்ற வகையில் மேற்கொள்ளப்படுவதுதான் புலம்பெயர் தமிழர்களினால் அனுப்பப்படும் மனித நேயக்கப்பல் நடவடிக்கை.
இந்த வருட ஆரம்பத்தில் வன்னியில் ஏற்பட்டிருந்த இராணுவ நெருக்கு வாரங்களுக்கு மத்தியில் வன்னியில் வாழ்ந்த மூன்றரை இலட்சம் மக்களுக்கான போதிய உணவு, மற்றும் மருத்துவ வசதிப் பற்றாக்குறையும், நெருக்கடியையும் அடுத்து வன்னியிலிருந்து விடுக்கப்பட்ட உணவு வழங்கல் உதவிக்கோரிக்கையை அரசோ, அல்லது சர்வதேச சமூகமோ கருத்திற் கொள்ளாது பட்டினிச் சாவு என்ற நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற ஏக்கத்தினை மனதில் கொண்டு அவர்களுக்கான உணவு, சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்குமுகமாக புலம்பெயர் தமிழர்கள் யாவரும் ஒன்றுதிரண்டு அவர்களுடைய அயராத முயற்சியின் பயனாக வன்னி மக்களுக்கான நிவாரண உதவித்திட்டம் ஒன்றை வகுத்திருந்தனர்.
இந்த நிவாரணத்திட்டத்தின் இறுதி வடிவம்தான் வணங்காமண் என்றழைக்கப்பட்ட மனித நேய கப்பல்ப்பயண நடவடிக்கை. மனித நேயக்கப்பல் நடவடிக்கையின் ஆரம்பப் புள்ளி இலண்டனில் உருவானது. இந்நடவடிக்கை முதலில் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டாலும் அது பூமிப்பந்தெங்கும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான ஈழத்தமிழர்களை ஒரு குடையின் கீழ் அணிதிரளச் செய்தது.
வன்னி மக்களுக்கான நிவாரணப் பணிக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் யாவரும் பெருமெடுப்பிலான உணவுப் பொருட்களையும், மருத்துவப் பொருட்களையும் சேகரிப்பதற்கான நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டிருந்தனர். பிரித்தானியா மற்றும் ஐரோப்பியா நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து, நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து இத்தாலி ஆகிய நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் புலம்பெயர் தேசங்களில் உருவாக்கியிருந்த பொது அமைப்புக்கள், நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், மற்றும் உலகத்தமிழ்ப் பிரபலங்கள் எனப் பல்வேறுபட்டவர்களும் தமது பங்களிப்பினை இதய சுத்தியுடனும் அர்ப்பணிப்புடனும் செய்திருந்தனர்.
அத்தோடு கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூலாந்து, சிங்கப்பூர், இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் இணையத்தளம் ஊடான நிதியுதவிகளை வழங்கியிருந்தனர். குறுகிய கால இடைவெளிக்குள் 450 மெட்ரிக் தொன் எடையுள்ள உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவை பிரித்தானிய சுங்கப்பகுதியினரால் பரிசோதித்து முத்திரையிடப்பட்ட பின்னர்'Sea Ruby' (IMO: 9006447) என்று பெயரிடப்பட்ட கப்பலில் ஏற்றப்பட்டு பிரித்தானியாவில் உள்ள Ipswich என்ற துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி புறப்பட்ட மனித நேயப்பயணம் ஐரோப்பிய வாழ் மக்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுவதற்காக பிரான்சில் உள்ள Fos-Sur-Mer என்ற துறைமுகத்தை நோக்கி தனது முதல்ப் பயணத்தை ஆரம்பித்தது.
இவ்வாறு பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட மனித நேயக்கப்பல் ஐரோப்பிய வாழ்த் தமிழர்களால் சேகரிக்கப்பட்டு அவை பிரான்சில் உள்ள பெக்கம்ப் எனுமிடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 434 மெட்ரிக் தொன் உணவு, மருத்துவப் பொருட்களும் பார ஊர்திகளில் ஏற்றப்பட்டு Fos-Sur-Mer என்ற துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மொத்தமாக 884 மெற்ரிக் தொன் உணவுப் பொருட்களையும் Sea Ruby'என்ற கப்பலின் கொள்ளவிற்கு ஏற்ற முடியாத காரணத்தினால் சிரிய நாட்டைச் சேர்ந்த 'கப்டன் அலி' Captain Ali" (IMO: 6619920) என்ற கப்பலில் ஏற்றப்பட்டு கடந்த 07.05.2009 அன்று ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு வன்னி மக்களின் துயர் துடைப்புப் பயணத்தைக் கப்பல் ஆரம்பித்தது.
இம் மனிதாபிமான கப்பல் பயண நடவடிக்கைக்கான தயார்படுத்தல்கள் ஒழுங்கமைப்புக்களைச் செய்வதில் அதன் ஏற்பாட்டாளர்கள் மிகப்பெரும் சவால்களை எதிர் கொண்டிருந்தனர் என்பது உண்மை. ஏனெனில் இதற்கு முன்னர் இவ்வாறானதொரு நடவடிக்கையில் தமிழர் யாரும் ஈடுபட்டது கிடையாது. எனவே முன்னனுபவமில்லாத ஒரு முதல் நடவடிக்கையாகவே இதனைக் கருத வேண்டும். எனவே இதில் ஏற்பட்ட சிரமங்களையும், இடர்களையும் சகித்துக் கொண்டு புலம்பெயர் நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகச் செயற்படுவதோடு அவற்றினை நடைமுறைப்படுத்துவதில் மிகப்பெரிய இடர்களும் தடைகளும் ஏற்பட்டிருந்தன.
உதாரணமாக பயணத்திற்கான கப்பலை வாடகைக்கு அமர்த்துவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன. இலங்கைக் கடற்பரப்பிற்கு பயணம் செய்ய பல கப்பல் நிறுவனங்கள் அஞ்சி வாடகைக்கு வர மறுத்தன. அல்லது அவற்றுக்கான காப்புறுதிக் கட்டணங்களாக கப்பலின் பெறுமதி அளவு பணத்தினை வாடகைப் பணமாகக் கேட்டன. இதிலிருந்தே அதன் பயண ஏற்பாட்டாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியும். அடுத்துப் பொருட்கள் சேகரிக்கின்றபோது கூட பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் கிளம்பின.
நிவாரணப் பொருட்களை உலக மக்கள் யாவரிடமும் கேட்டுப் பெறலாம் என்று கூறி சேகரித்துக் கொண்டிருக்கையில் புலம்பெயர் தமிழர்களை விழிப்படையச் செய்யும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் திடீரெனத் தோன்றிய ஈழத்துப் பெண்மணி கூறிய காத்திடமான கருத்தினை முன்வைக்க விரும்புகிறேன். "நாம் பிற மக்களிடம் எமது மக்களிற்காக பிச்சை கேட்க வேண்டியதில்லை. இது வெக்கக்கேடு. வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்றரை இலட்சம் மக்களுக்கு ஐரோப்பாவில் மட்டும் வாழ்கின்ற ஐந்து இலட்சம் தமிழர்களால் சோறு போட வக்கில்லையென்றால் பிறகெதற்கு எமக்குத் தமிழீழம்.
எமது மக்களுக்கு நாமே கைகொடுப்போம்" என்று ஆவேசமாகக் கர்ச்சித்தார். இதனை நேரடியாகப் பார்த்த ஒவ்வொரு ஈழத்தமிழனுடைய நெஞ்சையும் அது உறுத்தியிருக்கும் இதனை நேரடியாகப் பார்த்த என்னுடைய கண்கள் பனித்து நெஞ்சம் கனத்தது. நிவாரணப் பொருட்கள் சேகரிக்கின்ற காலப்பகுதி ஐரோப்பாவைப் பொறுத்தவரை கடும் குளிரும், மழையும் சேர்ந்த ஒரு காலநிலை நிலவிய காலமது.
இருப்பினும் இரவு பகலெனப் பாராது பொருந்தொகையான தொண்டர்கள் இந்நடவடிக்கையில் மிகவும் உற்சாகமாக செயற்பட்டு தமது உறவுகளுக்கு தம்மாலான கடமைகளை எப்போதும் செய்வதற்கு தயாராகவே உள்ளனர் என்பதை இங்கு வெளிக்காட்டியிருந்தனர். இந்த வகையில் வன்னி மக்களுக்கு வழங்குவதற்காக புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கான நிவாரணப் பொருள்ப் பொதி ஒன்றினுள் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துச் சிறுமி கைப்பட எழுதிய சிறிய துண்டொன்றில் "நாங்கள் உங்களை எப்பொழுதும் கைவிடமாட்டோம்.
நீங்கள் கவலைப்படவேண்டாம்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இதிலிருந்து புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினரும் தாயகத்தையும், மக்களையும் மிக ஆழமாகவே நேசிக்கின்றனர் என்பது புலப்படுத்தப்படுகிறது.தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்ததாலும் அவர்களுடைய உடல் தான் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றதே தவிர அவர்களுடைய உணர்வும், உயிரும் தாயகத்தை நோக்கியதாகவே உள்ளது.
எனவேதான் வன்னியில் ஏற்படுகின்ற மிக இறுக்கமான அழுத்தங்களின் போதெல்லாம் புலம்பெயர் நாடுகளின் தலைநகரங்களின் வீதிகளில் தமிழர்கள் இறங்கி வெகுஜனப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் தான் எமது மக்களுக்கான முதற்கட்ட நிவாரணப் பணியாக இந்த மனிதநேயக் கப்பல் பயணம் அமைகிறது. இம்மனிதாபிமான நடவடிக்கைக்கு பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்கள், முக்கிய பிரபலங்கள் எனப்பலர் பங்கெடுத்துக் கொண்டாலும் இம்முயற்சியில் குறிப்பிடத்தக்க சில தனிநபர்களும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருந்தனர்.
அந்தவகையில் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தைச் சேர்ந்த பிரபல பொப்பிசைப் பாடகி மாயா பிரித்தானியாவைச் சேர்ந்த மொடலிங் அழகி ஜோனா லும்லே,‘ACT NOW' என்கின்ற மனிதநேய தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரிம் மாட்டீன், 20இற்கு மேற்பட்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள். மற்றும் ஈழத்தமிழர்களுக்காக கிளிமஞ்சாரோ மலை ஏறிய கீரன் அரசரட்ணம், மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் ஆர்வலர்கள் எனப்பலரும் இந்நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும்படி அல்லது விநியோக ஒழுங்குகளை கப்பல் பயண ஏற்பாட்டாளர்களுக்கு செய்து கொடுக்கும் படியான கடிதங்களை இலங்கை அதிபருக்கு அனுப்பியிருக்கின்றனர்.
‘ACT NOW' என்கின்ற மனிதநேய தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்த ரிம் மாட்டீன் அவர்கள் கடந்த 18ம் திகதியிலிருந்து பிரித்தானியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் 'இப்பொழுது இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆகவே அகதி முகாம்களுக்குள் இருக்கும் மக்கள் தங்கள் தங்கள் பிரதேசங்களிற்குக் குடியமர்த்தப்படுவதோடுI.C.R.C, UNHCR உட்பட்ட தொண்டு நிறுவனங்களை அகதிமுகாம்களிற்குள் அனுமதித்து அவர்கள் தங்கள் நடவடிக்கையைத் தங்குதடையின்றி நடாத்த அனுமதிக்க வேண்டும்' எனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழீழ உறவுகளுகாக ஆபிரிக்காவின் தன்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையில் ஏறிவிட்டு வந்த கீரன் அரசரட்ணம் அவர்கள் கருத்துக் கூறும்போது, நாம் ஈழமண்ணை விட்டு வெளியேறி நீண்டகாலமாகத் தடைப்பட்டுப் போயிருந்த எம் உறவுகளின் பாசப்பிணைப்பு இந்தக் கப்பல்ப் பயணத்தின் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. என்றார். கடந்த ஏழாம் திகதி பிரான்சிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக பொருட்களை ஏற்றிக் கொண்டு தாயகம் நோக்கிச் செல்ல பிரான்சிலிருந்து 12 மாலுமிகளுடன் புறப்பட்ட 'கப்டன் அலி' என்ற கப்பல் கடந்த 16ஆம் திகதி சுயஸ் கால்வாயைக் கடந்து செங்கடலில் பிரவேசித்தது.
இந்தக்கப்பலில் செய்மதித் தொடர்பாடல்வசதி, இணையத்தளவசதி, டிஜிரல் நேரடிக் காணொளி வசதிகள் முதலானவற்றைக் கொண்டிருப்பதனால் கப்பலின் உட்புற வெளிப்புற நிகழ்வுகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் அவதானிக்க முடியும். "கப்டன் அலி கப்பல் சுயெஸ் கால்வாயை கடப்பதற்குத் தரித்து நின்றவேளை பிரித்தானியாவிலிருந்து எகிப்திற்கு விமான மூலம் சென்ற வைத்தியர் குழு, மற்றும் கமூச சேவைப் பணியாளர்கள், அடங்கலான குழுவினர். சுயஸ் கால்வாயில் கப்பலில் ஏற்றப்பட்டு தற்போது கப்பலில் பயணம் செய்துகொண்டிருக்கின்றனர்.
இவர்களில் முக்கியமானவர் முன்னர் இலங்கையில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் சிறப்பாகக் கடமையாற்றிய ஐஸ்லாந்தைச் சேர்ந்த Mr. Kristjan Guðmundsson என்பவரும் அடங்குவார். இவர் இலங்கையில் சகல அரசியல் இராணுவப் பிரமுகர்களுடன் பரீட்சயம் உள்ளவர் என்பதனால் இந்நடவடிக்கையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும், இடர்களையும் சுமூகமாகத் தீர்க்கக் கூடிய சாதுரியம் இவரிடம் உள்ளதனால் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களில் இவர் முக்கியத்துவம் பெறுகிறார். அத்தோடு இவர்களுடன் சர்வதேச ஊடகவியலாளர்கள் சிலரும் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.
16ஆம் திகதி சுயெஸ் கால்வாயைக் கடந்து செங்கடல் ஊடாக பயணம் செய்த 'கப்டன் அலி' என்ற மனிதநேய நிவாரணக் கப்பல் 20ம் திகதி செங்கடலைத் தாண்டி ஏடன் வளைகுடா ஊடாக பயணம் செய்து இப்பந்தி எழுதப்படும் போது அராபியக் கடலினூடாகச் சென்று இந்தியாவின் மேற்குக் கரையை அண்மித்துப் பயணித்துக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இன்னும் சில தினங்களில் கப்டன் அலி என்கிற மனித நேயக்கப்பல் இந்து சமுத்திரமூடாக இலங்கையின் கிழக்குக் கடல் எல்லையை அண்மித்துவிடும்.
நிவாரணப் பொருட்களுடன் வந்து சேரப்போகும் கப்பலின் பொருட்களை வன்னி மக்களுக்கு எவ்வழியூடாக எங்கிருந்து யாரால் விநியோகிப்பது என்பது தொடர்பான பல்வேறுபட்ட சர்ச்சைக்குரிய வினாக்களுக்கு விடையளிப்பது கடினமாயினும், நிவாரணப் பொருட்களுடன் சர்வதேசக் கடற்பரப்பில் திருகோணமலைக்கு அண்மையாக தரித்து நிற்கப்போகும் கப்பலினால் வரும் வாரம் இலங்கையில் அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதகின்றது. ஏனெனில் சர்வதேச நாடுகளின் ஆதரவினையும், ஐநாவின் அனுசரணையையும் புலம்பெயர் தமிழர்கள் வேண்டி நிற்பதனால் நிவாரணப் பணிக்கான ஒழுங்குபடுத்தல்களை அல்லது விநியோக நடவடிக்கைக்கான வழிமுறைகளை தொண்டு நிறுவனங்களின் வாயிலாக மேற்கொள்ளவேண்டிய தேவை சிறீலங்கா அரசுக்கு உண்டு.
எனவே அடுத்த வாரம் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலாம் கட்ட மனிதநேய நிவாரணப்பணி ஆரம்பமாகும். இதன் மூலம் வன்னியில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து அகதிகளாக்கப்பட்டு அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்றரை இலட்சம் மக்களின் துயரங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களும் பங்கெடுத்துக்கொள்வதோடு தொடர்ந்தும் அவர்களுக்கான நிவாரணப் பணிகளைச் செய்து அல்லல்ப்பட்ட எம்மக்களுக்கு நாமே கை கொடுப்போம், என்ற உறுதியை அளிப்பதோடு "அவர்களுடைய சுபீட்சமான வாழ்வுக்கு என்றும் துணையாக புலம்பெயர் தமிழர்கள் நிற்பார்கள் என்ற நம்பிக்கையை ஊட்டி எம்மக்களின் அன்புக்கரம் என்றும் ஈழத்தமிழர்களை அரவணைத்துக் கொள்ளும்" என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும்.
நன்றி
ஈழமுரசு(29.05.09)
www.tamilkathir.com
Comments