ஜனநாயக போர்வையில் நிகழ்ந்த மனிதப் படுகொலையை வேடிக்கை பார்த்த உலக நிறுவனங்கள்

தமிழ் மக்களுடைய இன்றைய நிலை ஒரு இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்டதல்ல. இன்னொரு கடற் கோளால் ஏற்பட்டதுமல்ல. ஒரு அரசாங்கம் தன்னுடைய மக்கள் மீது பெருமெடுப்பில் குண்டு வீச்சுக்களை நடாத்தியதாலும்,
பாரிய எறிகணைகள் கொண்டு தாக்குதல் நடாத்தியதாலும் சில தரப்புக்களுடைய அறிக்கைகளின்படி சட்டரீதியற்ற இரசாயன ஆயுதங்களைப் பாவித்ததாலும் ஏற்பட்டதே இப் பேரழிவு.
பேர்ளின், பாரிஸ் லண்டன் போன்ற இடங்களில் முன்னர் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவிருந்தவர்கள் கூட மனிதாபிமானச் சட்டங்களை மீறியது தொடர்பிலும், போர்க்குற்றங்களை இழைத்துள்ளமை தொடர்பிலும், இலங்கை மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இந்நாட்டின் சுயமரியாதையுள்ள எந்தவொரு புத்திஜீவியும், எந்தவொரு விமர்சகரும் இந்த மனிதாபிமான நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தே அக்கறைப்படுவர். நீங்களோ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை எதிரொலிக்கிறீர்கள் என வன்னியிலுள்ள முகாம்களிலுள்ள தமிழ் இளைஞர்களுக்கு கல்விச்சாதனங்கள் வழங்க சகவாழ்வு மன்றம் எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் குமார் ரூபசிங்ஹ நிதி உதவி கோரியிருந்ததை கண்டித்து கருத்துத் தெரிவிக்கும் போது பேராசிரியர் நீல்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் வன்னியிலுள்ள முகாம்களிலுள்ள தமிழ் இளைஞர்களுக்கு கல்விச்சாதனங்கள் வழங்க நிதி உதவி கோரியிருந்தமை குறித்து உங்கள் கோரிக்கைக்குப் பதிலளிக்க அனுமதியுங்கள்.

என்னுடைய நிலைப்பாட்டைத் தெளிவாக நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லி விடுகிறேன். நான் முற்று முழுதாக உங்களுடைய கோரிக்கையை நிராகரிக்கிறேன்.

2006 ஆம் ஏப்ரல் மாதம் சுவிஸ்லாந்து நாட்டின் சூரிச் நகரில் இடம் பெற்ற ஒரு மாநாட்டில் உங்களுடையது உட்பட பல குரல்கள் சமாதானம் தொடர்பாகவும், பேச்சுவார்த்தை தொடர்பாகவும் ஒலித்ததை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஆயுதப் போராட்டம் தோல்வியுற்றதை அடுத்து விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டதையடுத்து இந்தக் கதையாடல்கள் எல்லாம் தொலைவுக்குச் சென்று விட்டன. இப்போது உங்களுடைய பங்களிப்பை நீங்கள் எவ்வாறு செய்யப் போகிறீர்கள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாகவும், இனவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் பேர் தொடர்பாகவும் சர்வதேச ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

நீங்களோ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை எதிரொலிக்கிறீர்கள். தற்காலிகமாக இடம் பெயர்ந்த மூன்று இலட்சம் மக்கள் நலன்புரி முகாம்களில் இருக்கிறார்கள் என்று. இது ஒரு ஓர்வலியன் மொழி. யுதார்த்தத்தை தலைகீழாக மாற்றிக் காட்டும் முயற்சி. இம்முகாம்களைச் சுற்றி முட்கம்பிகள் இடப்பட்டிருக்கின்றன. முகாம்களினுள் செல்வதற்கும் வெளியேறுவதற்கும் இராணுவம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் முகாம்களைப் பார்வையிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது.

கலக எதிர்ப்பு, நலன்புரி முகாம்கள். இடைத்தங்கல் முகாம்கள். புனர்வாழ்வு முகாம்கள் எனப்பல புதிய சொற்றொடர்களை அரசாங்கம் கையாள்கிறது. இவையெல்லாம் இனவாதக் கொள்கைகளே.

சந்தேகத்திற்கிடமில்லாமல் மக்கள் புலிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாக நீங்கள் குறிப்படும் போது பிந்துனுவேவ மற்றும் செம்மணியை மட்டுமல்ல ஐநாவினாலும் மற்றும் மனித உரிமை நிறுவனங்களாலும் பல தசாப்தமாக நீடித்துவருவதாகப் பலமுறை சுட்டிக்காட்டப்பட்ட சட்டரீதியற்ற ஆட்கடத்தல்கள், படுகொலைகள், பெருமளவிலான மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் என்பவற்றையும் மறந்து விட்டீர்கள் என்று தோன்றுகிறது.

தங்களுடைய சொந்த அனுபவத்திற்குப் புறம்பாக 2007 ஜுலை நடுப்பகுதியில் கிழக்கை விடுவித்த போது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்தும் இந்த மக்கள் அறிந்திருக்கக் கூடும். ஐசிஎஸ்இன் அறிக்கையின்படி கிழக்கு விடுவிக்கப்பட்டதற்குப் பின்னர் அரசாங்கம் கூறியது போல அது கிழக்கின் உதயமாக அமையாமல் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, பயங்கரமான வன்முறைகள், நிலப்பறிப்பு, அடக்குமுறை என்பனவற்றின் விளைநிலமாக அது மாறிப் போயுள்ளது.

இவ்வுதாரணங்கள் இலங்கை அரசாங்கத்தால் அங்குள்ள சிறுபான்மை இன மக்கள் மொழி, கல்வி, அரச வேலைவாய்ப்புக்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள் என்பவற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை எடுத்தியம்புகின்றன.

இந்தப்பின்னணிகளுக்குப் பின்னால் உங்கள் கோரிக்கையை வைத்துப் பார்க்கிற போது இலங்கை அரசாங்கத்தின் இனவாதக் கொள்கையை சட்டரீதியானதாக்கும் தன்மை அதில் தெரிகிறது.

பதிலாக சிங்கள மக்களை சோவனிசத்திற்கெதிராக அணிதிரட்டல், ஜனநாயக வேசமிடும் சர்வாதிகார அரசை அம்பலப்படுத்தல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முயற்சி செய்தல், பங்குபற்றும் அரசியல் முறைமையை உருவாக்குதல், சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கு இடங்கொடாமை என்பவற்றுக்காக உங்கள் குரல் ஒலித்திருக்க வேண்டும் எனவும் பேராசிரியர் நீல்சன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilnet.com/img/publish/2009/06/EAppeal_01.jpg

Comments