பிரபாகரன் சித்ரவதை செய்யப்பட்டதாக யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கை பல்வேறு தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சூழலில், இந்த அமைப்பின் அறிக்கையை மறுத்துள்ளது இலங்கை அரசு. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும், பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜ பக்சேவும் ""பிரபாகரன் சித்ரவதை செய்யப்படவில்லை. அவர் தப்பித்துச் செல்ல முயன்றபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்'' என்று ஓங்கி மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதனை ஒப்புக்கொள்ள மறுக்கும் அதே பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் மனித உரிமை அமைப்பு, பிரபாகரன் குறித்து முன்னுக்குப் பின் முரணாகவும் மாற்றி மாற்றி பொய்யான தகவல்களை இலங்கை அரசு பரப்புவதாக தற்போது சுட்டிக்காட்டியுள்ளது.
இதுபற்றி யாழ் பல்கலைக்கழக வட்டாரங் களைத் தொடர்புகொண்டபோது... ""புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த பிரபாகரன் ஆம்புலன்சில் தப்பிச் செல்ல முயற்சித்தார், அப்போது ராணுவத்தினர் சுற்றி வளைத்துச் சுட்டதில் பிரபா கரன் இறந்தார் என்று முதல் முதலாக அறிவித்தது இலங்கை ராணுவம்.
ஆனால், சிலமணி நேரங் களிலேயே இதனை மாற்றிக் கொண்ட ராணுவத்தினர், பிரபாகரனின் கைத்துப் பாக்கியை கொண்டுவந்து தங்கள் படைத்தலைமையிடம் ராணுவ வீரர் ஒருவர் காட்டியதாகவும், கைத்துப்பாக்கியின் உறையில் இருந்த எழுத்தை வைத்தே பிரபாகரன் இறந்திருப்பதை அறிந்துகொண்டதாகவும் தெரிவித்தனர் ராணுவத்தினர்.
இந்தத் தகவலை தெரிவித்ததற்கு மறுநாளே, பிரபாகரன் உடலை நந்திக்கடல் பிரதேசத்தில் கைப்பற்றியதாகவும் அவரது உடலில் அவரது அடையாள அட்டை இருந்ததாகவும் கூறியது ராணுவம்.
இப்படி நேரத்துக்கு நேரம் முரண்பட்ட தகவலைத் தெரிவித்தது. ராணுவம் கூறிய இவையெல்லாம் நம்பும்படியாக இல்லை. காரணம் ராணுவம் கூறிய எந்த ஒரு தகவலிலும் நிலையாக நின்று தொடர்ந்து கூறிக்கொண்டி ருக்கவில்லை. மாற்றி மாற்றி முரண்பட்ட பொய்யான தகவல்களையே ராணுவத்தினர் கூறி வந்ததிலிருந்தே இவையெல்லாம் இட்டுக்கட்டி கூறப்பட்டவை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த ரீதியில்தான் எங்கள் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது'' என்கின்றனர்.
ஆக... பிரபாகரன் பற்றி இலங்கை அரசும் ராணுவமும் இட்டுக்கட்டிய பொய்களையே அவிழ்த்துவிட்டுள்ளன என்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மனித உரிமை அமைப்பு தனது அறிக்கையில் சாடியிருக்கிறது. அதாவது, ஒரு பொய்யை மறைக்க மற்றொரு பொய்யை இலங்கை அரசு அறிவித்துக் கொண்டேயிருக்கிறது.
இலங்கை அரசின் பொய் முகங்களை வெளிப் படுத்தியுள்ள பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மனித உரிமை அமைப்பு, பிரபாகரன் சித்ரவதை செய்யப்பட் டார் என்று கூறிய விவகாரம் குறித்து சர்வதேச அளவில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்பினர் அலசிக் கொண்டிருக்கின்றனர்.
சர்வதேச தொடர்பு களில் இதுபற்றி நாம் விசாரித்தபோது... ""பிரபாகரன் குறித்து இலங்கை அரசு வெளியிட்டுவரும் செய்திகள் அண்டப்புளுகு என்று உலகத்துக்குத் தெரியும். இதே கருத்தைத்தான் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் பதிவு செய்திருக்கிறது. ஆனால் இதே சங்கம்தான் இலங்கை ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி, "பிரபாகரன் சித்ரவதை செய்யப்பட்டார்' என்று அறிக்கையில் கூறியுள்ளது.
முரண்பட்ட தகவல்களைக்கூறும் ராணுவத்தின் கூற்றுகளில் நம்பகத்தன்மை இல்லை என்று கூறுகிற இந்த அமைப்பு, பிரபாகரன் சித்ரவதை செய்யப்பட்டார் என்று ராணுவத்தினர் கூறியதை மட்டும் எப்படி உண்மையாக இருக்கும் என்று நம்பியது? அதனை நம்பி எப்படி அறிக்கை வெளியிட்டது. ஆக, பிரபாகரன் குறித்து பொய்யான தகவல்களை மாற்றி மாற்றி இலங்கை ராணுவம் கூறியது போலத்தான், அவர் சித்ர வதை செய்யப்பட்டார் என்கிற தக வல்களும்'' என்று விவரிக்கின்றனர்.
உண்மை ஒருநாள் உலகத்தின் முன் நிற்கத் தானே போகிறது.
-கொழும்பிலிருந்து எழில்
Comments