உறங்காத கண்மணி களை அறிவீர்களா? இவர் களின்றி 2000-ம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் போ ராட்டம் சாதித்த மிகப்பெரும் ராணுவ வெற்றிகள் ஒன்றுகூட சாத்தியப் பட்டிருக்காது. விடுதலைப்புலிகளின் முன்னணி ராணுவ புலனாய்வுப் பிரிவின் பிள்ளைகளுக்குப் பெயர்தான் "உறங்காத கண்மணிகள்'. நிலவு காயும் நாட்கள்தான் இவர்களது தீபாவளி. கனத்த இரவுகளில் இவர்களுக்கு மட்டும் நூறு கண்கள் திறக்கும். காற்றோடு காற்றாய் போவார்கள். கணப்பொழுதில் வெட்டி மறையும் மழை மின்னல்போல் எதிரியின் தளங்களை ஊடுருவி உட்புகுவார்கள்.
புலிகள் படைத்த ராணுவ வெற்றிகளுக் கெல்லாம் முக்கிய காரணம் அவர்களது துல்லியமான திட்டமிடல். பிசிரற்ற திட்டமிடலுக்கு ஆதாரத் துணையாய் இருப்பது "உறங்காத கண்மணிகள்' கொண்டுவரும் உளவுத் தரவுகள். எழுத எளிதாக இருக்கிறது. ஆனால் அவர்களது வாழ்க்கை நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அதிசயங்களில் ஒன்று.
ஒரு ராணுவ முகாமை தாக்கி அழிக்கும் முடிவினை தலைமை எடுத்த பின்னர் முதலில் புறப்படுவது உறங்காத கண்மணிகள். தாக்குதல் தொடங்குவதற்கு ஓராண்டு, ஆறேழு மாதங்களுக்கு முன்னரே அவர்களது பயணம் தொடங்கும். பெரிய முகாமென்றால் ஆயிரத்திலிருந்து, ஐந்தாயிரம் ராணுவத்தினர் வரை இருப்பார்கள். முட்கம்பி வேலிகள், கண்ணிவெடி வெளிகள், கண்காணிப்பு கோபுரங்கள், ஐம்பது மீட்டருக்கு ஒரு காவல் அரண் இவை அனைத் தையும் கடந்துதான் ஓர் இரவுப்பொழுதில் ஊடுருவி உள் நுழைவார்கள்.
உள் நுழைந்தபின் அந்த முகாம் குறித்த முழு தகவல்களையும் திரட்டி வரைபடமாக்கி முடித்த பின்னரே அங்கிருந்து வெளியேறுவார்கள். எங்கெல்லாம் கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டிருக்கின்றன, பீரங்கித் தளம் எந்த இடத்தில் இருக்கிறது, மின் இணைப்புகளுக்கான தலைமையிடம் எங்கிருக்கிறது, முன் அரணில் எத்தனை ராணுவத்தினர் நிற்கின்றனர், அவர்கள் என்ன ரக துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள் என அத்தனை தகவல்களையும் சேகரித்து முடிக்க பல வாரங்கள் ஆகும். எதிரியின் கண்களில் படாமல் அவர்களது நரம்பு மண்டலத்திலேயே குடியிருந்து இத்தனை நாட்கள் எப்படி அவர்களால் இயங்க முடிந்ததென்பதை அறிந்தால் நீங்கள் உங்களையுமறியாமல் வியந்து தலைபணிவீர்கள்.
இரவுகளில்தான் இவர்கள் இயங்குவார்கள். இயங்கவும் முடியும். பகலெல்லாம் இவர்கள் எங்கு பதுங்கியிருப்பார்கள் தெரியுமா? இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்தும் கக்கூஸ் கழிவுகள் வந்திறங்கும் மலக் கிணறுகளில், ஆயிரம், ஐந்தாயிரம் ராணுவத்தினர் இருக்கும் மலக்கிணறு பற்றி எழுதவே நாற்றம், அசிங்கமாக அருவருக்கிறது. நினைக்க குமட்டு கிறது. அக்கிணறுகளுக்குள் நாட்கணக்கில், வாரக் கணக்கில் தங்கியிருப்பதென்றால் எந்தளவுக்கு இலட்சிய உறுதியும், சுயம் அறுத்த அர்ப்பணமும் வேண்டுமென எண்ணிப்பாருங்கள். இதனை எழுதுகின்றபோதே அந்தக் கண்மணிகள் காவி யங்கள் படைத்த தமிழீழத் திசைநோக்கி விழுந்து தொழவேண்டும்போல் உணர்வெழுகிறது.
எதிரியின் பாசறைகளது கழிவுக் கிணறுகளில் பகல் முழுதும் நின்று சாய்ந்துறங்கி இரவெலாம் கண்விழித்துப் படம்பிடிக்கும் இவர்கள், ஊடுருவி உள்ளிருக்கும் நாட்களில் வாழ்வது வைட்டமின் மாத்திரைகளில். குடல்வற்றி சுருங்கி ஒட்டிப் போகாதிருக்கவேண்டி பிஸ்கட்டுகளும் ரஸ்க்கும் கணக்கு பார்த்துச் சாப்பிடுவார்கள். நன்றாகச் சிங்களம் பேசும் லாவகமும், கூடவே சுட்டித்தனமும் கொண்ட கண்மணிகளென்றால் நள்ளிரவுவரை வேவுத் தகவல்கள் சேகரித்துவிட்டு சிலமணிநேரம் ராணுவத்தினரின் கூடாரங் களிலேயே படுத்துறங்கி வேடிக்கை செய்வதும் உண்டாம். இயக்கம் இட்ட பணி முழுமையாய் முடிந்தபின் உள்துழைந்ததுபோல் ஓர் இறுக்கமான இரவில் வெளியேறுவார்கள். பிடிபட்டு கொடும் சித்ரவதைகளுக்குப்பின் கொல்லப்படும் துயரங்களும் நடப்பதுண்டு.
உறங்காத கண்மணிகள் கொண்டுவரும் தரவுகளின் அடிப்படையில் எதிரியின் முகாம் போலவே ஒன்றை கட்டியெழுப்பி உருவாக்கு வார்கள் புலிகளின் பயிற்சிப் பிரிவினர். முன்பொரு கட்டுரையில் தமிழீழ வரலாறு தந்த ஈடு இணையற்ற பயிற்றுவிப்பாளர் கடாஃபி அவர்களை கெஞ்சி மன்றாடி பயிற்சி முகாம் ஒன்றினைப் பார்வையிட்டது பற்றிக் குறிப்பிட்டி ருந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். எந்த இடத்தில் என்ற விபரக் குறிப்பை இங்கு தவிர்க்க விரும்புகிறேன்.
பயிற்சி முகாம் நுழைவாயிலில் அவர்கள் பொறித்து வைத்திருந்த இரு வசனங்கள் மறக்க முடியாதவை. வாயில் முகப்பில் அவர்கள் எழுதியிருந்தது: ""கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை.'' எத்துணை பெரிய உண்மையை மின்னிடும் சொல்லாடல். கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை. காட்டுவெளி போன்ற புதர் பரப்பில் துண்டோ, பாயோ இன்றி தரையில் படுத்துறங்க வேண் டும். பாம்பு வரலாம், தேள் கடிக்கலாம், எது வேண்டுமா னாலும் தங்கள் மீது ஊரலாம். நள் ளிரவு 12 மணிக்குத் தான் படுத்திருப் பார்கள். மூன்று மணிக்கு விசில் ஊதப்படும். மின் னல் வேகத்தில் துடித்தெழுந்து ஆயுதத்துடன் முடை நாற்றமெடுக் கும் இடுப்பளவு சாக்கடைக்குள் குதித்து நிலை யெடுக்க வேண்டும். அடுத்த மூன்று மணி நேரத்துக்கு அசையாது அப்படியே நிற்கவேண்டும். உடலைவிட மன உறுதிக்குத்தான் இங்கு பயிற்சி. பயமும், பணிந்து போகும் குணமும், தாழ்வு மனமும் இயல்பிலேயே கொண்டதொரு இனத்தினது மரபணுவில் போர்க் குணம் ஏற்றிப் புடமிடும் பாசறை!
பயிற்சி முகாம் நுழைவாயிலில் பொறித்து வைத்திருந்த பிறிதொரு வசனம். ""ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.'' உபயம் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்றார்கள்.
""இந்த என் கையாலேயே எங்கள் செல்வங்களை ஏழு போராளிகளை நான் கொன்றிருக்கிறேன்'' என்று கடாஃபி சொல்லும்போதே அவரது உடல் அதிர்ந்து கண்கள் ஒருகணம் துயரத்தில் ஆழ்ந்ததை கவனித் தேன். "உறங்காத கண்மணிகள்' கொண்டுவரும் தகவல்களின் அடிப்படையில் எதிரி முகாமையே "டம்மி' உருவாக்குவார்களென்று சொன்னே னல்லவா? ஆனால் பயிற்சியோ நிஜ சண்டையாக இருக்கும். புலிகளே இரு பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவினர் சிங்கள ராணுவம்போல் நிலையெடுப்பார்கள்.
உதாரணமாக, உறங்காத கண்மணிகள் தந்த தகவலின் படி எதிரி முகாமின் முன் அரங்கில் மூன்று அரண் நிலை களும் அவற்றின் பின் முப்பது ராணுவத்தினர் ஏ.கே.47 துப்பாக்கிகளோடும் நிற்கிறார்களென்றால் அவ்வாறே இங்கும் புலிகள் அதே ஆயுதங்களோடு நின்று சுடுவார் கள். நிஜமாகச் சுடுவார்கள். அதனை எதிர்கொண்டு எப்படி அந்த அரண் நிலைகளை தாக்கி கைப்பற்றுவதென்பது தான் பயிற்சி. மின்னல் மழைபோல் பீறிப் பறந்து வரும் துப்பாக்கி ரவைகளின் தூரம் - வேகம் இவற்றை கணநேரத் தில் கணித்து தலையை தாழ்த்தியும் வலது இடது புறங் களில் வெட்டிச் சரிந்தும் தரையில் பொத்தென விழுந்து படுத்தும் அவர்கள் களமாடும் காட்சியினை இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்குகிற வலு உங்களதும் எனதும் இதயங்களின் ரத்தக்குழாய்களுக்கு நிச்சயம் இல்லை.
கடாஃபி சொன்னார் : ""என்ட கையாலெ ஏழு போ ராளிகள் செத்தது தாங்கஏலா வேதனைதான். ஆனா அத்தகைய பயிற்சியாலெ நிஜ சண்டையில் எழுநூறு போராளிகளின் உயிரை நாங்கள் பாதுகாக்கிறோம்'' ஆம் கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை.
இதுவரை எழுதிவிட்டு இரவு 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றேன். அதிகாலைவரை உறக்கம் வரவில்லை. குவார்ட்டர், பிரியாணி, கைப்பணம் இல்லா மல் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கக்கூட தொண்டர்கள் இல்லை என்ற அரசியல் களப்பணி காட்சியை கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கண்ட எனக்கு உறங்காத கண்மணிகளின் நினைவு உயிரைப் பிழிந்தது. முன்பொருமுறை நான் குறிப்பிட்டதுபோல் சிலுவைப் போர்களுக்குச் சென்றவர்களுக்கும், ஜிகாத் போருக்குப் போனவர்களுக்கும் மரணத்திற்குப் பின் பரலோகப் பரிசு இருந்தது. ஆனால் தமது தமிழ் தலைமுறைகள் ஒருநாள் விடுதலைபெற்று சுயமரியாதையுடன் தமது தாயகத்தில் வாழ்வார்கள் என்பதைத் தவிர இந்த உறங்காத கண்மணி களுக்கு வேறென்ன இருந்தது? இத்துணை அர்ப்பணமும், தியாக உணர்வும் கொண்டு வரலாற்றுப் பேரதிசய மாய் எழுந்த ஒரு விடுதலை இயக்கத்தை உலகின் அத் தனைபேரும் சேர்ந்து முற்றுகையிட்டு, வதைத்து தகர்த் திட தமிழ் இனம் என்ன பாவம் செய்தது... நாமெல் லாம் கையாலாகாத வர்களாய் பார்த் திருக்கவல்லவா இக் கொடுமை நடந்தேறி யது... என்றெல்லாம் எண்ண மனம் உண்மையிலேயே ஆற்றுப் பெற முடியாமல் தவிக்கிறது.
கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பில் இருந்தபோது போராளி ஒருவர் பகிர்ந்து கொண்ட பிறிதொரு பதிவு இதனை படிக்கிற உங்களால் மரணம்வரை மறக்க முடியாத ஒன்றாய் இருக்கும். பெருமழை பெய்த ஒரு நாள். இடத்தின் பெயர் சரியாக ஞாபகம் இல்லை. கஞ்சிக்குடிச்சி ஆறு என்று நினைக்கிறேன். சிறியதோர் ராணுவ முகாம் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்துவிட்டு திரும்புகிறார்கள் 17 போராளிகள். திரும்பி வரும்வேளை அக்காட்டாற்றில் பெருவெள்ளம். கடக்க முடியாதென்ற நிலை. ஆற்றின் அப்பக்கமாய் இருந்த தம் தளத்திற்கு "வாக்கி-டாக்கி'யில் பேசி கயிறு கொண்டு வரச்செய்து எப்படியோ இருபுறமும் இழுத்துக் கட்டி அதைப் பிடித்துக்கொண்டே ஆற்றைக் கடக்கிறார்கள். இவர்கள் நட்டாற்றை கடக்கையில் பிற முகாம்களிலிருந்து திரண்டு வந்த சிங்கள ராணுவத்தினர் கயிறை அறுத்துவிட 17 பேரையும் பெருவெள்ளம் அடித்துச் செல்கிறது. ஆற்றங்கரைகளை அறிந்தவர்களுக்குத் தெரியும், கரையோரங்களில் மரமும் இல்லை- செடியும் இல்லை என்பது போன்ற ஒருவகை புதர்கொடி இருப்பது. அப்படியொரு புதர்கொடியை ஒரு போராளி பற்றிப் பிடித்துக்கொள்கிறார். அடுத்த நிமிடம் வெள்ளம் அடித்துவரும் இன்னொரு போராளியும் அதே புதர்கொடியை பிடிக்க எத்தனிக்கிறார். முதலில் அக்கொடியை பிடித்து நின்ற போராளிக்குத் தெரிகிறது இரண்டு பேரையும் தாங்கும் வலு அந்த புதர்கொடிக்கு நிச்சயம் இல்லையென்பது. இரண்டாவது வந்த போராளி கொடியைப் பிடிக்க கையை நீட்டவும் முதற்போராளி, ""நீ பத்திரமா போய் சேர்ந்திடப்பா'' என்று சொல்லிக்கொண்டே தன் கையை எடுத்து பெருவெள்ளத்தோடு போகிறார். எங்கோ கடலுக்குள் போன அவரது உடல்கூட கிடைக்கவில்லையாம்.
தமிழர்களே, நண்பர்களே! கேளுங்கள், உரத்துச் சொல்கிறேன். அருட்குருவாகிய நான் அந்த புதர்கொடியினை முதலில் பிடித்தவனாய் நின்றிருந்தால் நிச்சயம் இன்னொருவருக்காய் என் கைகளை எடுத்திருக்கமாட்டேன். நம்மில் பைபிள், குர்ரான், நாயன்மார்கள், ஆழ்வார் களையெல்லாம் படிக்கிற எத்தனைபேர் இத்தகைய தியாகத்திற்குத் தயாராகியிருப் போம் என ஆத்ம சோதனை செய்து பார்ப்போம். கண்கண்ட எங்கள் தெய்வீகச் செல்வங்களே நீர் வாழ்ந்த திசை நோக்கி கரம் கூப்பினோம்.
(நினைவுகள் சுழலும்)
Comments
what really went wrong?
தமிழக மக்களின் கையாலாத்தனம்
புலம்பெயர் மக்களின் சுடலை ஞானம்
உலக மேலாதிக்க வல்லரசுகளின் தமிழர் விரொதம்
இவற்றுடன் மோதி வெல்லுவத்ற்கு புலிகள் வல்லரசு இல்லை
ஒரு குஞ்சு முட்டையிலிருந்து வெளிவரும் போது அடித்து கொன்றிருக்கின்றார்கள்
அதற்கு இவர்கள் எல்லாம் காலத்தால் தண்டிக்கப்படுவார்கள்
முதலில் இந்தியா அதன் பலனை அனுபவிக்கும்