இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார, வசந்த கருணாகொட என போர்க்களத்தில் இலங்கை இராணுவத்திற்கு வெற்றியீட்டித்தந்த பல இராணுவத் தளபதிகள் இவ்வாறு பதவி உயர்வு பெறுவதாகக் கூறி வெளிநாடுகளுக்கு அவசர அவசரமாக அனுப்பிவைக்கிறது இலங்கை அரசு. இதன் பின்னணி என்ன ? இவர்கள் நாட்டில் இருப்பதால் பல உண்மைச் சம்பவங்கள் வெளியில் வந்துவிடும் என்ற அச்சமா, இல்லை இவர்கள் பாதுகாப்புக் குறித்து கவலையா இல்லை இராணுவத்தை மறுசீரமைக்கத் திட்டமா.
எது எப்படி இருப்பினும் ஒரு இராணுவத் தளபதியாக போர்க்களங்களில் உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் உள்ள ஒரு அதிகாரி, ஒரு நாட்டின் துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டால் அதை அவர் விரும்புவாரா என்ற கேள்வி இங்கே எழுகிறது. ஒரு வெளிநாட்டிற்குச் சென்று அங்கு உள்ள இலங்கைத் தூதரகத்தில் ஒருவட்டத்திற்குள் அவர் செயல்படவேண்டும், சகஜமாக வெளி ஆட்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலை உருவாகும், இலங்கைத் தூதுவராலய பணியாளர்களுடனும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் மட்டுமே தொடர்புகள் பேணும் நிலை தோன்றும்.
இந்த நிலை இவர்களுக்கு நன்கு விளங்கியிருக்கும். இருப்பினும் கட்டாயமாக, பதவி உயர்த்துவதுபோல, ஒருவரை நாசூக்காக நாட்டில் இருந்து அகற்ற இந்த தூதுவர் பதவிகளை இலங்கை அரசு கையாண்டுவருவதாக எமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இராணுவ அதிகாரிகள் இராஜதந்திரிகளோ, அல்லது அரசியல் பின்புலம் உள்ளவர்களோ அல்லர் என்பது யாவரும் அறிந்த உண்மை. இருப்பினும் நாம் சற்று வித்தியாசமான கோணத்தில் யோசித்துப்பார்த்தால், இலங்கை அரசு ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் செயல்படுவது போலவும் தோன்றுகிறது.
இராணுவத் தளபதிகள் பலரை இவ்வாறு வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிப்பதன் மூலம், புலம் பெயர் சிங்களவர்களிடையே ஒரு எழுச்சியைச் தூண்ட முற்படுகிது. இராணுவத் தளபதிகளுக்கும், புலம் பெயர் நாடுகளில் உள்ள சிங்களவர்களுக்கும் இடையில் பல சந்திப்புக்களை நிகழ்தியும், மற்றும் தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு பாரிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை இலங்கை அரசு தயாரித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
எது எவ்வாறு இருப்பினும் புலம்பெயர் தமிழர்களே தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக இருப்பதால், அவர்களின் போராட்டங்களை, அரசியல் நகர்வுகளை முடக்க இலங்கை அரசு தற்போது முற்பட்டுவருவதால், தமிழர்கள் பிரிவுகளைக் கடந்து, பிளவுகளைத் தவிர்த்து புத்திஜீவிகளாக ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயல்படுபதே நல்லது. இலங்கை அரசின் நகர்வுகளை உன்னிப்பாக அவதானித்து, அதை தகர்க்கும் வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படவேண்டும்.
தூதுவர்களாக மற்றும் துணைத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் இராணுவத் தளபதிகள் என்ன செய்கிறார்கள், அவர்கள் புரியும் வேலைத் திட்டங்கள், நிகழ்ச்சி நிரல்கள் என்பனவற்றை நாம் நன்கு கவனித்து எமது அரசியல் நகர்வுகளை நகர்த்துவது எமது வெற்றிக்கு வழியமைக்கும்.
Comments