ஈழப் போராட்டம் ஓய்ந்துவிடாது

ஈழ விடுதலைப் போராட்டம் ஓயாது; மீண்டும் புலிகள் உருவாகுவார்கள் என்று கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ‘நக்கீரன்’ இதழுக்கு (ஜூன் 17) அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பேட்டி விவரம்:

ராணுவ லாரிகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஈழத்தில் தமிழினம் ஒரு பேரழிவிற்கு உட்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறையில் இருக்கும் கு.இராமகிருட்டிணனின் மனவோட்டங்களை அறிய அவரது வழக்கறிஞர் மூலம் நம் கேள்விகளை வைத்தோம்.

ராணுவ வண்டிகள் மீதான தாக்குதலினால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப் பட்டிருக்கும் நீங்கள் சிறை வாழ்க்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

ராணுவ லாரிகள் மீதான தாக்குதலையடுத்து தேசிய பாதுகாப்புச் சட்டம் என்கிற ஆடையை எனக்கான அளவுகளால் சிரத்தையெடுத்து எனக்கு அணிவித்திருக்கிறது அரசாங்கம். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்படுபவர்களுக்கு ஓராண்டு கட்டாயச் சிறை என்று மிரட்டுகிறது இந்த ஆடை. ஆனால் 1985 ஆம் ஆண்டே நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் போது மிசா என்ற ஆடையால் ஓராண்டு சிறையில் இருந்தேன்.

பின் மூன்றரை ஆண்டுகள் தடா என்ற ஆடையை சிறைச்சாலை எனக்கு அணிவித்தது. அதற்குப் பின் என் இளமைக் காலம் தொட்டு 30 முறை வெவ்வேறு ஆடைகளை சிறைச்சாலைகள் எனக்கு அணிவித் திருக்கின்றன. இப்போது ஈழத்தில் செத்துக் கொண் டிருக்கும் என் தாய்த் தமிழ் உறவுகளுக்காய் போரா டியதற்காக என் மீது அணிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஆடை என்னைப் பொறுத்தவரை நைந்து போன ஒரு பழைய துணிதான்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக செய்தி வெளியான நாளில் சிறைக்குள்ளிருந்த உங்களின் மனோ நிலை?

தம்பி பிரபாகரன் கொல்லப்பட்டார், 25 ஆயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். முக்கியத் தளபதிகளும் கொல்லப்பட்டார்கள் என்று செய்தி கிடைத்த நேரம். அய்யோ.... தம்பின்னு அழறதா? இல்ல... என் அம்மா... என் அப்பா... என் தங்கச்சின்னு மொத்த பேரையும் கொன்னுட்டாங்களே... அதுக்காக அழறதா? முப்பது ஆண்டு காலம் பாடுபட்ட தமிழீழம் வீட்டு வாசல் வரை வந்து கைகூடாம போயிருச்சேன்னு அழறதா?

என் தாயார் தடாவில் நான் சிறையில் அடைக்கப் பட்டிருந்தபோது இறந்துபோனார். அப்போதுகூட கன்னம் வரைக்குமே வழிந்த கண்ணீர் பிரபாகரன் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட போது என்னுடைய கட்டுகளை எல்லாம் அடித்து துவம்சம் செய்து கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தது. என்னோடு கைது செய்யப்பட்டிருந்த அனைத்து தோழர்களும் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்கள்.

அன்றைய நாளில் என்னைப் பார்க்க சிறைக்கு வந்திருந்த வைகோ... ‘தம்பி நல்லாயிருக்கறார். கவலைப்படாதீங்க...’ என்று நம்பிக்கையூட்டினார். ஆனாலும் தொடர்ந்து தம்பி இறந்துவிட்டார் என்ற பத்திரிகைகளின் பரப்புரைக்கிடையே பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று நக்கீரன் வெளியிட்ட செய்தி மேலும் எங்களை தெம்பூட்டியது என்பது நிஜம்.

ஒரு பொய்யான செய்தியை தாங்கிக் கொண்டு வந்து ஒட்டு மொத்த தமிழினத்தையும் மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழச் செய்த அந்த நாளை நான் மறக்கவே விரும்புகிறேன்.

ஈழத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் சூழலில் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவோம் என்று இலங்கை அரசு சொல்வது சாத்தியமா?

கடலை ஒரு கையால் அள்ளி உங்கள் கைகளில் தருவேன் என்று யாரேனும் சொன்னால் நீங்கள் நம்புவீர்களேயானால் நிச்சயம் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்பது சாத்தியம் தான். இங்கே ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் என்று சொல்பவர்களும், வழங்கப்படும் என்று சொல்பவர்களும் எந்தெந்த துறைகளில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் என்றோ, வழங்கப்படும் என்றோ சொல்லவே யில்லையோ?

இதைவிட இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் ஒரு உண்மையை சொல்லியிருக்கிறானாம் கோத்தபாய ராஜபக்சேவின் நண்பனும், எழுத்தாளனுமான ஜெயசூர்ய.

தமிழர்களுக்கு நாங்கள் எதற்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும்? இந்த விஷயத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உட்பட இந்தியாவில் உள்ள யாரும் எங்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டிய தேவையில்லை என்று கோபம் தெறித்திருக்கிறான். போதுமா அதிகாரப் பகிர்வின் இலட்சணம்?

அதே போல தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும் - என்பது உண்மையானால் ராஜ பக்சேவின் கையிலிருந்து நலத்திட்டங்கள் எதையும் எம் தமிழர்களுக்கு கொடுக்கக் கூடாது.

ஐ.நா.வும் செஞ்சிலுவைச் சங்கமும்தான் எம் மக்களுக்கு உதவ வேண்டும். அப்பாவைக் கொன்றவன் பிள்ளைகளுக்குப் பாலும் கொடுப்பதை உண்டு உயிர் வாழுமளவுக்கு இன்னும் மானங் கெட்டுப் போய்விடவில்லை தமிழினம்.

உண்மையைச் சொல்லுங்கள். விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து விட்டோம் என்று இலங்கை அரசு சொல்கிறது. அப்படியானால் ஈழப் போராட்டம் முடிவடைந்து விட்டதா?

இந்த மாபெரும் மனிதப் பேரழிவுக்குப் பின்னும் நான்கு இலட்சம் எண்ணிக்கைக்கு மேல் அங்கே குத்துயிரும் குலையுயிருமாக நடமாடிக் கொண்டிருக்கிறது கேட்பாரின்றிப் போன தமிழினம்.

இனி எம் தாய்மார்களின் “கற்பு” எக்காளத்தோடு சிங்களர்கள் சந்தையில் விலை பேசப்படும். என் தமிழ் இளைஞர்கள் அடிக்கடி காணாமல் போய் ஏதேனும் ஒரு காட்டுப் பகுதியிலோ, நீரிலோ அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்படலாம். இளம் பெண்களின் வீடுகளெல்லாம் சிங்களர்களின் அந்தப்புரம் என்ற பதாகைகளை தாங்கி நிற்கும்.

தமிழ்ப் பெண்களைத் தனதாக்கிக் கொண்டு இனத்தையே கலப்பினமாக்கி விடத் துடிப்பார்கள் சிங்களர்கள். இந்தக் கொடுமைகள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்ததின் விளைவே அம்மக்களிலிருந்து புலிகள் உருவானார்கள். இப்போதும் உருவாவார்கள்.

ராஜபக்சே, கோத்தபாய, பொன்சேகா சொல்வது போல் ‘புலிகளை முற்றாக ஒழித்து விட்டோம்’ என்பது உண்மையானால் மேலும் ஒரு இலட்சம் இளைஞர்களை தங்கள் நாட்டு இராணுவத்திற்கு சேர்க்க வேண்டியதின் அவசியம் என்ன?

அவர்கள் இப்போதுதான் பயமென்னும் பாயில் விழுந்து விட்டு தூங்குவது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

-கோவை இராமகிருட்டிணன் -



Comments