கடந்த இதழில் வெளியான "பிரபாகரனின் வெற்றிக்குத் துணை நிற்கும் மதிவதனி' கட்டுரையில் பிரபாகர னுடனான தனது முதல் சந்திப்பை பதிவு செய்திருந்தார் ஓவியர் நடராசா.
"32 வருடங்களுக்கு முன் பிரபாகரனுக்கு உங்களிடமிருந்து ஓவியம் எதுவும் தேவைப்பட்டதா?'
நமது கேள்வியை உள்வாங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார் அந்தப் பெரியவர்.
""எனக்குத் தெரிந்த மாறன் என்ற இலங்கை மாணவர் இரண்டு யாழ்ப்பாண இளைஞர் களை அழைத்து வந்தார். அவர்களின் பெயர்கூட எனக்குத் தெரியாது. பேச்சுவாக்கில் மாறன் ஒருவரை "தம்பி' என்றும், மற்றொருவரை "பேபி' என்றும் அழைத் தார். ஆனால் பேபியோ, தம்பியை மணி என்றே கூப் பிட்டார். இவர்கள் யாராக இருந்தால் என்ன? இவர் களின் உண்மையான பெயர் என்னவாக இருக் கும் என்பதிலெல்லாம் நான் ஆர்வம் காட்டவில்லை. ஆனா லும் இலங்கைத் தமிழர்கள் மீதான பற்றால், "உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்' என்று கேட்டேன். அதற்கு அந்தத் தம்பி "நாங்கள் ஒரு இயக்கம் ஆரம்பித்திருக் கிறோம். அதற்கு "தமிழீழ விடு தலைப் புலிகள்' என்று பெயர்கூட வைத்துவிட்டோம். இந்த இயக்க மானது சிங்கள இனவெறி அரசுக் கும், அதன் அடக்குமுறைக்கும் எதிரானது. பண்டைய காலத்தில் தமிழன்தான் இலங்கையை ஆண் டான் என்பதற்குச் சான்றுகள் இருக் கிறது. அந்த சோழமன்னன் புலிக்கொடி பறக்க இலங்கையில் ஆட்சி நடத்தியிருக்கிறான். அதனால் எங்கள் இயக்கத்தின் சின்னத்திலும் புலி இடம்பெற வேண்டும் என்று விரும்பு கிறோம். சிவகாசி பட்டாசு லேபிள்களில் வரையப்பட்டிருந்த புலிப்படங்கள் சிலவற்றைப் பார்த்தோம். எங்களுக்குப் பிடிக்கவில்லை. புலி என்றால் சீறவேண்டும். புலியின் முகத்தில் சீற்றம் பூரணமாக வெளிப்பட வேண்டும். இப்படி ஒரு படத்துக்காக பல இடங்களில் பல நாட்கள் அலைந்துவிட்டோம். எதுவும் மனநிறைவாக இல்லை. பிறகுதான் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கிறோம்'' என்றார்.
அவர்களின் எண்ணத்துக்கேற்ப நான் வரைந்து கொடுத்த படத்தில் சீற்றம் கொண்ட புலியின் முகம் எதிர்பார்த்தபடியே அமைந்துவிட்டது. அவர்களுக்கும் திருப்தியாக இருந்தது. அப் போது நான், "வளையத்தைத் தாண்டி வெளியே வருவதுபோல் புலிகளின் நகங்கள் விரிந்த கால்கள் இருந்தால் நன்றாக இருக் குமே' என்று எனது அபிப்பிராயத்தைச் சொன்னேன். உடனே தம்பி "அப்படியே வரையுங்கள் அண்ணா' என்றார் ஆர்வத் தோடு. பிறகுதான் வளைவை மூன்றாகப் பிரித்து ஒவ் வொன்றிலும் 11 தோட்டாக்கள் என 33 தோட்டாக் களை வரைந்தேன். அவர்களின் விருப்பப் படியே நுனியில் குத்துக்கத்தி உள்ள இரண்டு துப்பாக்கிகள் ஒன்றுக் கொன்று குறுக்காக வளைவின் பின்புறம் இருக்கும்படி வரைந்தேன். இப்படித்தான் அந்த இயக்கத்துக்கு புலிச்சின்னம் உருவாயிற்று.
இந்தச் சின்னத்துக்கு பிளாக் எடுத்துத்தரும்படி என்னிடம் கேட்டார் தம்பி. நானும் செய்து கொடுத்தேன். அந்த மூலப்படம் மற்றும் ஃபிலிம் நெகட்டிவ்கள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன. பிறகு புலிச்சின்னம் பொறித்த லெட்டர்பேடு, அடையாள அட்டைகள் அச்சடித்துத் தரவேண்டுமென்றார். அதையும் நிறைவேற்றிக் கொடுத்தேன்.
இப்படித்தான் பேச்சினூடே "இயக்கத்தின் இன்னொரு தேவையும் பூர்த்தியாகாமலே காலம் கடந்துகொண்டிருக்கிறது' என்றார். அது விடுதலைப்புலிகளின் சீருடை சம்பந்தப்பட்டது. உடனே நான் "முயற்சித்துப் பார்ப்போமே' என்று ஜவுளிக்கடையில் காக்கித்துணி வாங்கிவரச் செய்து, அதில் சில வண்ணங்களை பட்டைப் பட்டையாகத் தீட்டினேன். பிறகு பிரபாகரனுக்கு ஏற்ற அளவில் அத்துணியைத் தைத்து அணியச்செய்து, என்.சி.சி. தொப்பியும், பெல்ட்டும் வாங்கி தொப்பியில் பித்தளையிலான புலிச் சின்னத்தை மாட்டி அவரை போட்டுக்கொள்ளச் செய்து, பின்னணியில் என் மனைவியின் சேலையைக் கட்டித் தொங்கவிட்டு எனது நிக்கான் கேமராவில் பல போட்டோக்களை எடுத்தேன். அப்போது அவர் ஏ.கே.47 ரக துப்பாக்கி ஒன்றை கம்பீரமாகக் கையில் வைத்துக்கொண்டார். சின்ன வயதில் மட்டுமே போட்டோ எடுத்திருந்த தம்பி, விவரம் தெரிந்த பிறகு எந்தச் சூழ்நிலையிலும் தன்னை யாரும் படம் எடுக்க அனுமதித்ததில்லை. அதற்குக் காரணம் அவரது தலைமறைவு வாழ்க்கைதான்.
ஆனாலும் இயக்கத்துக்காக முதல் முதலாக சீருடை அணிந் திருந்த படத்தை என்மீது நம்பிக்கை வைத்து எடுத்துக்கொண்டார். பின்னாளில் இந்தச் சீருடையே மாற்றம் கண்டு, தமிழ்நாட்டில் நடந்த பயிற்சி முகாம்களின்போது புலிகளின் சீருடை யானது. இன்று உலகமே வியந்து போற்றிக்கொண்டி ருக்கும் வீரத்தலைவன் "அதிரடியான சாதனை ஒன்றை நிகழ்த்திக் காட்டிவிட்டே மீண்டும் மக்கள் முன் தோன்றுவார்' என்று கோடானுகோடி தமிழர் களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் தம்பியின் மன தில் அன்று நான் இடம்பிடித்ததை பெரும் பாக்கியமாகவே எண்ணு கிறேன்.
தம்பியும்கூட இயக்கத்தில் முப் படையையும் அமைத்து ஹைடெக் கான நடவடிக்கைகளை மேற்கொள் ளக்கூடிய பெரிய தலைவராகிவிட்ட பிறகும்கூட சாமானியனான என்னை மறந்துவிடவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடல் நலிவுற்ற நிலையில் நான் இலங்கைக்குப் போனபோது, அவர் என்னை உபசரித்த விதமும், அங்கே வீரர்கள் பலரும் ஆர்வத்தோடு என் னுடன் புகைப்படம் எடுத்துக்கொண் டதும் இன்னும் நெஞ்சில் நிழலாடிக் கொண்டேயிருக்கிறது. அங்கே என்னை விடுதலைப்புலிகளின் கப்பல் தளத்துக்கு அழைத்துச் சென்றார் தம்பி. அங்கே நாங்கள் ஏறிய கப்பல், கப்பல் படைத்தலைவர் சூசையின் கட்டளையை ஏற்று செயல்பட்டது. அப்போது தம்பி, சூசையிடம் வடக் குப் பக்கம் பீரங்கியைத் திருப்பி சிறிது மேல்நோக்கி சுடச்சொன்னார், அதன் செயல்பாட்டை நான் அறிந்துகொள்வதற்காக. அப்படியே கப்பலில் நீண்டிருந்த பீரங்கியால் சுட்டார்கள். அந்தக் குண்டுகள் ஒவ்வொன்றும் பல மைல் தொலைவு சென்று தாக்கக்கூடியது என்றார் தம்பி. அப்போது கப்பலின் மேலே பறந்த கொடியைக் காண்பித்து "நீங்கள் வரைந்த புலிச்சின்னத்தைத் தாங்கி எத்தனை கம்பீரமாகப் பறக்கிறது பாருங்கள் அண்ணா...' என்றார் ஒரு குழந்தையைப் போல. எனக்கு உடம்பெங்கும் சிலிர்த்தது'' என்று கண்களை மூடி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
"அன்பின் அண்ணா விற்கு...
நலம். நலமேயுள் ளோம். அதுபோல் நீங்க ளும் நலமேயிருக்க அன் னைத் தமிழை வேண்டு கிறேன்' -என்று பிரபா கரன் 1980-களில் தனக்கு எழுதிய கடிதங்களை இன்றும் பாதுகாத்து வரும் ஓவியர் நடராசா, ""தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் வெளியீடான அண்டன் பாலசிங்கம் எழுதிய "சோசலிசத் தமிழீழத்தை நோக்கி...' என்ற புத்தகத்துக்கு என்னை அட்டைப்படம் வரையச் சொன்னார் தம்பி. ஏ.கே.47 துப்பாக்கியை வீரன் ஒருவன் தூக்கிப்பிடிக்க... பின்னணியில் இலங்கைத் தீவில் தமிழ் ஈழநாடு மட்டும் சிவப்பு நிறத்தில் தெரியும்படி வரைந்துகொடுத்தேன்.
அப்போது தம்பி என்னிடம் சொன்னார்... "அண்ணா! புத்தகத்தில் ஒன்றை எடுத்து முழுமையாகப் படித்துப் பார்ப்பேன். அவற்றில் ஒரே ஒரு எழுத்துப்பிழை இருந்தால்கூட, புத்தகங்கள் அனைத்தையும் ஒன்றாகக் குவித்து மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திவிடுவேன். ஏனென்றால்... இயக்கத்திலிருந்து வெளியிடப்படும் முதல் வெளியீட்டில் ஒரு சிறு பிழையும் இருந்துவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்றார். அப்படி அவர் சொன்னது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. தம்பி முன்னின்று நடத்துகிற இந்த இயக்கத்தில் பிழை என்பதே இருக்கக்கூடாது என்பதில் அவருக்கிருந்த கடுமையான உறுதிப்பாடு மீண்டும் என்னை வியக்க வைத்தது.
எனக்கே சிக்கலை ஏற்படுத்திய, நான் வரைந்த ஓவியங் களைப் பற்றிச் சொல்கிறேன். இந்திய அமைதிப்படை ஈழத் திற்கு சென்ற பிறகு நடந்த சம்பவங்களின் அடிப்படையில் சில படங் களை வரைந்துகொடுத்தேன். அதிலே ஒரு படத்தில் ஒரு குள்ளநரி யானது ஒரு வேடுவன் காலைப் பிடித்துக்கொண்டு ஒரு புலியைச் சுட்டிக்காட்டி, அதன்மீது அம்பு எய்து கொல்லும்படி தூண்டிக் கொண்டிருப்பது போலவும், அந்த வேடுவனும் தந்திரம் நிறைந்த குள்ளநரியின் பேச்சைக் கேட்டு, அம்பால் அந்தப் புலியின் அருகில் சென்று எய்துவிட்டது போலவும், அம்பால் அடிபட்ட அந்தப்புலி கடுமையுடன் எய்தவன் மீது கோபமாகத் திரும்புவது போலவும் வரைந்து, ராஜீவ்காந்தியை வேடுவனாகவும், ஜெயவர்த்தனேயை குள்ளநரியாகவும் சித்தரித்திருந்தேன். இன்னொரு படத்தில் ராஜீவ் காந்தி ஒரு புலியின் வாலை வலியச் சென்று இழுப்பது போலவும், அருகே ஜெயவர்த்தனே கைகொட்டி மகிழ்வது போலவும் வரைந்திருந்தேன்.
நான் வரைந்த இந்தப் படங்களே, ராஜீவ்காந்தி கொலையில் எனக்கும் சம்பந்தமிருப்பதாக ஒரு சந்தேகத்தை உண்டுபண்ணி என்னை காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தியது. ராஜீவ்காந்தி யின் மரணம் என்னை உலுக்கியதையும், ராஜீவ்காந்தி கொலைத் திட்டம் எதுவும் எனக்குத் தெரியாது என்பதையும் உள்ளது உள்ளபடி க்யூ பிராஞ்ச் போலீஸ் விசாரணையின்போது தெளிவாக்கினேன். அவர்களும் ஒரு ஓவியன் என்ற முறையில் என் கருத்தினை வெளிப்படுத்திய படங்களே அவை என்பதை புரிந்துகொண்டு விசாரித்ததோடு என்னை விட்டுவிட்டார்கள்.
மரணம் நெருங்கிவிட்ட இந்த வயதிலும் என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி இது-
"நான் ஒரு புலி அங்கத்தினனா?' என்று புன்முறுவல் பூத்தவர்...
""தமிழீழ விடுதலைக்காக வீர மரணத்தைத் தழுவிய பல்லாயிரம் வீரர்களும் துயில் கொள்ளும் அம்மண்ணில் தமிழர்கள் இன்னும் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழீழத்தை வென்றெடுக்காமல் பிரபாகரன் உயிர் பிரியவே பிரியாது. தம்பியின் மன உறுதியை அறிந்தவன் என்ற வகையில் இதை நான் அழுத்தமாகவே சொல்கிறேன்.'' -பெரியவர் வடித்த கண்ணீர்த் திவலைகள்கூட அவர் கன்னத்தில் ஒரு ஓவியம்போல தமிழீழமாகத் தேங்கி நின்றது.
-சி.என்.இராமகிருஷ்ணன்
படம் : அண்ணல்
Comments