புலிகளிடம் போர்க்கைதியாக இருந்த கடற்படை சிப்பாய் பீ.பீ.சிக்கு பரபரப்பு வாக்குமூலம்

2006 நவம்பர் மாதம் புலிகளால் கைது செய்யப்பட்ட 7 இலங்கைக் கடற்படையினரில் சமிந்த குமார ஹெவாஜ் என்பவரும் ஒருவர். வன்னியில் இறுதிக்கட்ட சண்டைவரை இந்த 7 பேருக்கும் ஒரு ஆபத்தும் வராமல் பாதுகாத்த புலிகள், கடந்த மே 17 இல் அவர்களை விடுவித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். அவர் பி.பி.சி இன் சிங்கள சேவைக்கு பேட்டியளித்துள்ளார்.

போர்க்கைதிகள் அனைவரும் சீமெந்தால் கட்டப்பட்ட பதுங்கு குழிக்குள் வைக்கப்பட்டிருந்த போதும், இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக்களால் அவை தொடர்ந்து அதிர்ந்து

கொண்டிருந்ததாகக் கூறும் சமிந்த குமார, இறுதி நேரத்தில் துப்பாக்கி ரவைகள் சில தமது பதுங்கு குழிக்குள் விழுந்ததாகவும் கூறியுள்ளார்.

புலிகளால் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள் அனைவரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் புலிகள் பதிவு செய்திருந்ததாகவும், புலிகள் அவர்களை ஒருவித சித்திரவதைக்கும் உள்ளாக்காமல் மரியாதையுடன் கவனித்துக் கொண்டதாகவும் கூறியுள்ள சமிந்த குமார தாம் இருந்த பதுங்கு குழிகளைச் சுற்றி புலிகளின் பல முகாம்கள் இருந்ததாகவும் கூறினார்.

போர்க்கைதிகள் எவரும் குடியிருப்புகளின் மீது ஷெல் வீழ்ந்ததைக் காணக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்ற அவர், பொதுமக்கள் குடியிருப்புகள் என்று தாம் அறிந்திருந்த பகுதிகளை அண்டி பல ஷெல்கள் வீழ்ந்ததை தம்மால் உறுதிப்படுத்த முடிந்ததாக மேலும் பி.பி.சி சிங்கள சேவைக்குக் கூறினார். எனவே தான் பொதுமக்கள் வன்னியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் சமிந்த குமார.ஆரம்ப காலத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கிளிநொச்சி மாவட்ட கனகபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகள், பின்னர் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

"இடம் மாறும்போது புலிகளின் வாகனங்களில் எங்களைக் கொண்டு சென்ற புலிகள், பின்னர் ராணுவத்தினரின் தாக்குதல் அதிகரித்ததன் பின்னர் எங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் கால்நடையிலேயே கூட்டிச் சென்றார்கள்" என்று புலிகள் தம்மீது வைத்திருந்த அக்கறை பற்றி பெருமையாகக் கூறினார். பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது ஷெல் விழுந்து அவர்கள் பட்ட பல இன்னல்களைத் தாம் அறிந்துள்ளதாகக் கூறிய இவர் இறுதி நேரச் சண்டையின்போது நடந்த சில முக்கிய விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகள் எவருமே ராணுவத்தினரிடம் சரணடையும் நோக்கில் இருக்கவில்லை. புலிகளுக்கு இறுதி நேரச் சண்டைகளுக்குத் தேவையான ஆயுத தளபாடங்கள் சில போதாமல் போன கட்டத்தில் கூட அவர்கள் இவ்வாறு சரணடையும் முடிவுக்கு வராமல் தம்மிடம் உள்ள ஆயுதங்களின் ஓசை தானாகவே அடங்கும் வரை ராணுவத்தினரை எதிர்த்துப் போராடி வீரமரணமடையவே விரும்பி இருந்தனர் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் சமிந்த குமார.

சயனைட் குப்பியை தமது மாலையாக அணிந்திருந்த புலிகளே சரணடைந்து விட்டார்கள் என்று மார்தட்டிய சிங்களப் படையினருக்கும், எமது மக்களின் சந்தேகத்துக்கும் இவரது பேட்டி சரியான பதிலளிக்கும் என நாம் நம்புகிறோம். கண்முன்னே இறந்து கொண்டிருந்த மக்களையும் அவர்கள் பட்ட அவலங்களையும் கண்டு சகிக்க முடியாத சில அரசியல் பிரிவினர்கள் சரணடைய முற்பட்டது கூட, புலிகள் அகிம்சை வழி தீர்வுக்குக்கூட தயார் என்று காண்பிக்கவும் மக்களைக் காக்க வேண்டிய தமது கடமையைச் செவ்வனே செய்வதற்குமே ஆகும்.

ஆனால் சண்டையில் ஈடுபட்ட தளபதிகளோ, போராளிகளோ ராணுவத்திடம் போய் மண்டியிட்டு சரணடையும் எண்ணத்தைக் கனவில் கூடக் கொண்டிருக்கவில்லை என்று அறியும்போது தமிழர்களாகிய நாம் என்றுமே கோழைகள் அல்ல.... எங்கள் நிலத்தைக் கைப்பற்றும் எமது தொடர் போராட்டங்கள் என்றுமே தொடரும்... என்று கூறுவதில் தமிழுணர்வாளர்கள் நெஞ்சை நிமிர்த்திப் பெருமைப்படுகின்றனர்.

Comments