ஈழத்தின் மரண முகாங்கள்

யுத்தத்தில் ஜெயித்து விட்டதாகவும், பிரபாகரனைக் கொன்று எரித்து விட்டதாகவும் தன்னுடைய சிங்கள சினிமாவுக்கு `THE END' போட்டு விட்டார் ராஜபக்சே. விடுதலைப் புலிகளின் ஒரே அதிகாரபூர்வக் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் செ.பத்மநாதனும் பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டார். உண்மையிலேயே எல்லாம் முடிந்துவிட்டதா? இலங்கை அரசு தமிழர்களை வெற்றி கொண்டுவிட்டதா? "இதுவரை ராஜபக்சேயின் காட்டில் அடைமழை பொழிந்தது என்னவோ உண்மைதான்.. இனிமேல்தான் அவருக்கு சோதனைகள் ஆரம்பம்.." என்கிறார் இலங்கைத் தமிழ் எம்பி சிவாஜிலிங்கம்.

சீனா மற்றும் ரஷ்யாவின் `வீட்டோ பவர்' உதவியுடன் இதுவரை ஐநா விசாரனையிலிருந்து தப்பி வந்து கொண்டிருக்கும் ராஜபக்சேவை வளைத்துப் போட பல மேற்குலக நாடுகள் தயாராகி விட்டன. புலம்பெயர்ந்த தமிழர்களின் வலிமைமிக்க லாபி தன் வேலைகளை ஆரம்பித்து விட்டது. பிரபாகரன் `இறந்து விட்டதாக' அறிவிக்கப்-பட்டிருப்பது கூடப் புலிகளின் மற்றொரு அரசியல் தந்திரமே என்று சொல்பவர்களும் உண்டு. உலகத்தின் கருணையைத் தங்கள் பக்கம் திருப்ப வேண்டுமென்றால் கொஞ்ச நாளைக்கு அறப்போராட்டம் செய்வதுதான் நல்லது என்று ஈழத்தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆயுதமில்லாத அந்தப் போராட்டத்தை எதிர்த்து ஆட ராஜபக்சேவுக்கு அனுபவமும் இல்லை, அதே நேரம் மடியில் கனமும் உண்டு. உலக நாடுகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு வந்து விட்டது. மெல்ல மெல்ல அமெரிக்கா கூடத் தன் வாயைத் திறக்க ஆரம்பித்து விட்டது. அது முழுக்க மாறி விட்டால் அதன் வாலான இந்தியாவும் பின் பாட்டை மாற்றிப் பாடும் என்பது தமிழர்களின் நம்பிக்கை.

"அமெரிக்க ராணுவத்தின் உளவுத் துறை சாட்டிலைட் எடுத்திருக்கும் போர்க்களப் படங்களில் தெரியும் அப்பட்டமான இனப்படு-கொலைக்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் உலகையே அதிர வைக்கப் போகின்றன. போராளிகளை ஒடுக்கும் சாக்கில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை பயங்கரமாகக் கொலை செய்து கொண்டிருக்கும் ராஜபக்சே விரைவில் `இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப் படுகொலையாளன்' என்கிற அவப்பெயரைப் பெறப் போகிறார்'' என்கிறார்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள். ஐநா சபைக்குக் கூட லேசாக வீரம் வர ஆரம்பித்திருப்பது ஆச்சரியம்தான்.

இலங்கை அரசின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் பல நாடுகள், பிரபாகரன் `கொல்லப்பட்ட' விவகாரத்தில் இலங்கை அரசு அடித்த அந்தர்பல்டிகளைக் கண்டு குழம்பிப் போயிருக்கின்றன. பத்திரிகையாளர்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ, மருத்துவ நிபுணர்களுக்கோ ƒஷீ நீணீறீறீமீபீ, பிரபாகரன் உடல் காட்டப்படவில்லை. டி என் ஏ டெஸ்ட் தேவையில்லை என்று சொல்லி ராவோடு ராவாக எரித்து விட்டதாகச் சொல்வது நம்பக்கூடியதாக இல்லை. முதல் நாள் காட்டப்பட்ட பிரபாகரனின் உடலில், சம்பந்தமில்லாத வகையில் "இளமையான" பிரபாகரனின் முகம் இருந்ததை அருமையான மார்ஃபிங் கிராபிக்ஸ் என்கிறார்கள் கம்ப்யூட்டர் நிபுணர்கள். அடுத்த நாள் காட்டப்பட்ட உடலோ முதல் நாள் வீடியோவுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் இருந்தது. பிரபாகரன் குடும்பத்தையே கொன்று விட்டதாக அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் கொல்லப்படவில்லை என்று தலையைச் சொறிந்தது ராணுவம். பொட்டு அம்மான், சூசை, ரமேஷ் போன்றவர்களின் `டம்மி' உடல்களைக் கூட ராணுவம் காட்டவில்லை. ஏற்கெனவே சுனாமி உள்பட பல சூழ்நிலைகளில் பிரபாகரன் `கொல்லப்பட்டு விட்டதாக' அறிவித்த இலங்கை அரசு, சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனைப் போல் இப்போதும் ஒரு அனிமேஷன் படத்தைக் காட்டி விட்டது. புலிகளும் தற்காலிகமாக மங்களம் பாடி விட்டார்கள். பிரபாகரன், சுபாஷ் சந்திரபோஸ் போல் ஒரு `தேவதைக் கதை' ஆனாலும் ஆச்சரியப்-படுவதற்கில்லை. விடை தெரியாத மர்மம் அது. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

பிரபாகரனும் விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்களும் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பது இப்போது ஆராய்ச்சிக்குரிய கேள்வி அல்ல. அதிலுள்ள உண்மைகளும் பொய்களும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தெரிந்து விடும். யுத்தம் முடிந்து போராளிகளும் ஒடுக்கப்பட்டு விட்ட நிலையில், யுத்தத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் என்னென்ன, போர்ச் சட்டங்கள் எப்படியெல்லாம் மீறப்பட்டன, கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை என்ன, வன்னிப் பகுதி அகதி முகாம்களில் சிக்கி உள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்களின் இப்போதைய நிலை என்ன என்பதெல்லாம்தான் பதில் சொல்லப்படாத கேள்விகளாகி நிற்கின்றன.

வட இந்திய டிவி சானல்களைப் போல் இலங்கை அரசு தரும் செய்திகளை மட்டுமே மென்று துப்பாமல், மறுபக்கத்தையும் நியாய உணர்வோடு ரிப்போர்ட்டிங் செய்து கொண்டிருக்கும் சில உலக மீடியாவின் மூலம் அந்த அகதி முகாம்களில் நடக்கும் கொடுமைகள் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. கடந்த மூன்று மாதங்களாகவே, கிளிநொச்சியை ராணுவம் பிடித்த நாட்களில் இருந்து வன்னிநிலத்தின் மூலைகளுக்கு ஓடிக் கொண்டே இருந்த சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்களின் மேல் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டே வந்தன. அதில் பலியானவர்கள் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் என்றால், படுகாயமடைந்தவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல்.

இன்று வவுனியாவில் இருந்து வன்னி நோக்கிச் செல்லும் பாதை முழுக்க ராணுவ ஆயுதக் கிடங்குகளாகவே காட்சி அளிக்கின்றன. வன்னிநிலமெங்கும் குருதிப் புனல் ஓடுகிறது. மக்கள் வாழ்ந்த அந்த நீண்ட நெடிய வன்னிப்பகுதியில் புழுதி பறக்கச் செல்லும் ராணுவ ஜீப்புகளும் வண்டிகளும்தான் கண்ணுக்குத் தெரியும் ஒரே காட்சி. வவுனியாவிலிருந்து பல மைல்கள் தொலைவில் உள்ள மடவாச்சி என்கிற இடத்திற்கு அடுத்து, உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. வன்னியில் சிக்கியுள்ள தங்கள் உறவினர்கள், நண்பர்களைக் காண இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் தமிழர்களில் ஒரு சிலர் மட்டுமே தீவிர கண்காணிப்புக்குப் பிறகு உள்ளே விடப்படுகிறார்கள். உள்ளே செல்லும் அவர்களின் கதி என்ன ஆகிறது என்று யாருக்கும் தெரியாது.

இத்தனை கெடுபிடிகள் இருந்தால் எங்களால் அப்பாவி மக்களுக்கு உதவ முடியாது என்று சொல்லி தன் பணிகளை நிறுத்திக் கொண்டது அகில உலக செஞ்சிலுவைச் சங்கம். செட்டிக்குளத்தில் உள்ள மெனிக் ஃபார்ம் பகுதியில் மட்டும் நான்கு பெரிய தடுப்புக் காவல் முகாம்களை வைத்திருக்கிறது சிங்கள ராணுவம். வவுனியாவில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த நான்கு முகாம்களில் மட்டும் சுமார் 1, 65,000 தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் குடிப்பதற்குத் தண்ணீர், கழிப்பிட வசதிகள் கூட இன்றி இவர்கள் படும் பாடு வெளிஉலகம் அறியாதது. கிட்டத்தட்ட மூவாயிரம் விடுதலைப் புலிகள் அகதி மக்களோடு கலந்திருப்பதாக ராணுவம் அநியாயத்துக்குச் சந்தேகப்படுவதால், இவர்கள் கடுமையாகச் சித்திரவதைப் படுத்தப்படுகிறார்கள்.

இந்த அகதி மக்களை இப்போது அச்சப்படுத்தும் ஒரு வார்த்தை `தலையாட்டி'. `டெட் பாடி எக்ஸ்பர்ட்' கருணா வழி வந்த சில ஆள்காட்டிகளைத் தங்களுடன் அழைத்து வரும் ராணுவம், அங்குள்ள இளைஞர்களை வரிசையாக நிறுத்தி "இவன் புலியா?'' என்று கேட்கும். `ஆள்காட்டி' ஆம் என்று தலையாட்டினால் உடனே இழுத்துச் சென்று சுட்டு விடுவார்கள். `இல்லை' என்று தலையாட்டினால் விடுதலை கிடையாது. அவர்கள் வேறு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்-படுவார்கள். அங்கே தமிழ் இளைஞர் என்கிற ஒரே காரணத்துக்காக வேறு தண்டனைகள் காத்திருக்கும்.

அகதி மக்களில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை விட்டு விடும் ராணுவம் இளைஞர்களையும் பெண்களையும்தான் அதிகம் குறி வைக்கிறது. இளைஞர்கள் அத்தனை பேரும் புலிகள், பெண்கள் அத்தனை பேரும் தங்களின் உடல்பசியைத் தீர்க்க வேண்டியவர்கள். இதுதான் ராணுவத்தின் ஒரே எண்ணம். குழந்தைகள் எதிர்காலத்தில் போராளிகளாகி விடக்கூடும் என்று அச்சப்படுவதால் அந்தக் குழந்தைகளின் விதி வேறு விதமாக எழுதப்படுகிறது. அம்மை, காலரா போன்ற கொள்ளை நோய், வயிற்றுப் போக்கு, காய்ச்சல், உணவு, தண்ணீர் இல்லாமை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்க்குழந்தைகள் மெல்ல மெல்ல சாவை நோக்கிச் செல்வதை சைக்கோ சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது ராணுவம். வவுனியாவில் மட்டும் இதைப் போல் 40 தடுப்புக் காவல் முகாம்கள். எல்லா முகாம்களையும் சுற்றி ஆளுயர கம்பி வேலிகள். துப்பாக்கிகளோடு காவல் புரியும் ராணுவ வீரர்கள். யாரும் உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை.

யுத்தத்தில் குண்டு வீசி பல்லாயிரம் தமிழ் மக் களைக் கொன்று விட்ட இலங்கை அரசு, அடுத்து நிவாரணப் பணிகள் என்கிற பெயரில் ரகசியமான படுகொலைகளை அரங்கேற்ற ஆரம் பித்துவிட்டது. செஞ்சிலுவைச் சங்கம், பத்திரிகையாளர்கள், தொண்டு நிறு வனங்கள், ஐநா கண்காணிப்புக் குழுக்கள் என்று யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில் இந்த மரண முகாம்களில் சிக்கியுள்ள தமிழர்களைக் காப்பாற்றப் போவது யார்? செல்வாக்கு மிக்க யூதர்களுக்காகத் தனிநாடு அமைத்துக் கொடுத்த உலகம், இந்தப் பஞ்சைப் பராரிகளான ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்யப் போகிறது? தமிழர்களின் போராட்டத்துக்கு எந்த வகையிலும் உதவாதது மட்டுமின்றி, இலங்கை அரசுக்கு இன்று வரை சகல உதவிகளும் செய்து கொண்டிருக்கும் இந்தியாவின் கொள்கைகளில் சிறிதளவாவது மாற்றம் வருமா? இந்தக் கேள்விகளுடன் அடுத்த கட்ட போராட்டத்துக்குத் தயாராகி விட்டார்கள் ஈழத்தமிழர்கள். அவர்களின் கைகளில் புலிக்கொடி. அதில் பிரபாகரனின் படம், மர்மம் நிறைந்த `மோனலிஸா' சிரிப்புடன்..

தமிழரும் சிங்களரும் சேர்ந்து வாழ்வது சாத்தியம்தானா?

மெரிக்காவிலுள்ள இல்லினாஸ் பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் ஃபிரான்ஸிஸ் பாயில் உலக இனப்படுகொலை வரலாறு பற்றிப் பல வருடங்கள் ஆராய்பவர். அவர் ஒரு அமெரிக்க வானொலிக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் இப்படிச் சொல்லியிருந்தார்.

"சுதந்திரம் அடைந்த காலம் தொட்டே இனவெறிக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது இலங்கை அரசு. புத்தமத குருமார்களின் வன்முறைக் கொள்கைகள்தான் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளைத் தீர்மானிக்கின்றன. தமிழர்களைப் பூண்டோடு அழித்து விட வேண்டும் என்கிற உள்மன வெறி கொண்ட அந்த அரசின் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் எப்படி உண்மையும் நேர்மையும் இருக்கும்? அதனால்தான் எல்லா அமைதிப் பேச்சு வார்த்தைகளுமே அங்கே தோல்வி அடைந்து விட்டன.

உலகத்தின் பல்வேறு இனப்படுகொலைகளைப் பற்றி ஆராய்ந்த அனுபவத்தில் சொல்கிறேன். ஒரு இனத்தையே அழிக்கும் கொள்கையை வைத்திருக்கும் எந்த அரசும் அந்தக் கொள்கையை எப்போதும் மாற்றிக் கொள்ளாது. வரலாற்று ரீதியாக ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இனப்படுகொலைகளை அனுபவித்து் வரும் தமிழர்களின் மனதில் உள்ள ஆறாத காயங்களும், சிங்கள மக்களின் மனதில் உள்ள மேலாண்மை எண்ணமும் இருவேறு துருவங்கள். அவர்களால் ஒரு போதும் நிம்மதியாக சேர்ந்து வாழ இயலாது. தமிழர்களின் சுதந்திரம்தான் ஒரே தீர்வு!"

- கிருஷ்ணா டாவின்ஸி

Comments