சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருப்பது வேதனையான விடயம்: சத்யராஜ்

ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருப்பது ரொம்பவும் வேதனையான விடயம் என்று தமிழின உணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார இதழ் அவரிடம் எழுப்பிய கேள்விகளுக்கான பதில்கள் வருமாறு:

இத்தனை நாளும் ஈழத்திற்காக குரல் கொடுத்த திரையுலகம் இன்று போர் முடிந்து, தமிழர்கள் இரும்புக் கொட்டடிக்குள் உணவின்றி, மருந்தின்றி, உடையின்றித் துன்பப்படும்போது மௌனமாக இருக்கிறதே...

நீங்கள் சொல்வதுபோல் இப்போதுதான் அதிகமாக குரல் கொடுக்க வேண்டும். அதற்கான நேரம் இதுதான். நிச்சயம் குரல் கொடுப்போம். மாவீரன் சீமான் போன்றவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இனிமேலயாவது தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து, கொடுத்து நடத்தினாதான் சிங்களர்களுக்கு நல்லது. இனி மறுபடியும் ஒரு போராட்டம் வந்தால், புரட்சி வெடித்தால் இதை விட வேகமாக வரும்.

ஐ.நா.வின் போர் குற்ற விசாரணைக்கு இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டிருக்கிறதே...

ரொம்பவும் வேதனையான விடயம் இது. இதைச் செய்ய எப்படி மனசு வந்ததுன்னு தெரியல. இதைப் பற்றி வெளிப்படையா இங்கிருப்பவங்க பேச முடியாத சூழ்நிலை. ஈழத் தமிழர்களுக்கு கண்ணுக்குத் தெரியுற முள் வேலின்னா, நமக்கு கண்ணுக்குத் தெரியாத சட்டம் என்கிற வேலி தடுக்குது. எந்த ஒரு விடயமும் விடுதலையை நோக்கித்தான் போகும். மனதிலிருந்து விடுதலை தேடுறதுதான் ஆன்மிகம். அதாவது மனவிடுதலை. அதேபோல ஈழத்தில் தேவை இன விடுதலை. அதற்காக எந்த ரூபத்திலாவது போராட்டம் வெடித்துக் கொண்டுதான் இருக்கும்.

Comments