புவிசார் அரசியலைப் புரிந்து மீண்டெழுவோம்

ஐ.நா சபையின் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல் குறித்த தீர்மானம் முறியடிக்கப்பட்டுள்ளது.அத்தோடு சிறீலங்கா முன்வைத்த நிதி வழங்கும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் இந்தியாவே முழு மூச்சாகச் செயற்பட்ட விவகாரம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுற்ற பின்னர், தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கமொன்று உருவாகுவதை, மேற்குலகால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தடுக்கலாமென்பதால், அதனை முறியடிக்க வேண்டிய தேவை இருப்பதாக இந்தியா வியாக்கியானம் கூறியுள்ளது.

மனித உரிமைக் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை மற்றும் ஐ.நா மனித உரிமை விவகாரத் தலைமைப் பொறுப்பாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் விடுத்த வேண்டு கோள்களையும் இந்த உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இத்தகைய சங்கங்கள் விடுக்கும் அறிக்கைகளையும், கண்டனங்களையும் ஏற்று, அதன்வழி செயற்படவேண்டுமென்கிற நிர்ப்பந்தம் இவர்களுக்கு இல்லையென்பதை நாம் எப்போதோ புரிந்திருக்க வேண்டும்.

இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருந்த வன்னி மக்கள், இறுதிக் காலகட்டத்தில் விடுத்த அவசர மனிதாபிமான உதவிக் கோரிக்கைகளை, இந்த நாடுகள் புறுக்கணித்திருந்தன.இன்று வவுனியா வதைமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களிற்கான உதவிகள் வழங்கப்படுவதனையும் இவர்கள் தடுக்க முனைகிறார்கள்.

அந்த மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமென்கிற விவகாரத்தில், அழுத்தம் கொடுக்கக்கூடிய வல்லமையையும் இச்சங்கங்கள் இழந்துள்ளன.மேற்குலகும், அதற்கு எதிரான அணிகளும், மோதலில் ஈடுபட்டு, ஓர் தேசிய இனத்தின் வாழ்வுரிமையை அழிக்க முற்படுவதுபோல் தெரிகிறது.

இம்மக்களின் மீள்குடியேற்றம் குறித்தோ அல்லது உடனடியான பாதுகாப்பு பற்றியோ அதிகம் அக்கறை கொள்ளாமல், பேரினவாத அரச யந்திரத்தை இயங்க வைக்கும் முனைப்பில், இந்தியா தலைமையிலான கூட்டணி செயற்படுகிறது.

பிராந்திய, சர்வதேச வல்லரசாளர்களின் இராஜதந்திர மோதல்களில், தமிழினத்தின் அவலநிலை நீண்டு செல்வதைத் தடுத்து நிறுத்த, புலம்பெயர் தமிழ் மக்களால் மட்டுமே முடியுமென்கிற யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்."அவர் இருக்கிறாரா, இல்லையா" என்கிற விவாத அரங்குகளில், புலம்பெயர்ந்த தமிழ்மக்களை முடக்கி, தனது இன அழிப்பு தாண்டவத்தை நீடிக்க முனைகிறது சிங்களம்.

"மக்களின் விடுதலை" என்கிற உறுதியான நிலைப்பாட்டிலிருந்து, திசைமாறிச் செல்வதனை,எந்தச்சக்திகள் விரும்புகின்றனவென்ற விடயத்தையும் உணரவேண்டும்.அண்மைக்காலமாக சிங்களமும், இந்திய ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் பரப்புரையன்றை அவதானித்தால், இவர்களின் உள்நோக்கம் புரியப்படலாம்.

புலம்பெயர்ந்த மற்றும் தமிழக மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் சிதைக்கப்படவேண்டுமென்கிற விடயங்களில், அதிக அக்கறையினை இவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆயுதப் போராட்டத் தலைமை அழிந்துவிட்டது என்று மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறுவதன் மூலம், புலம்பெயர் மக்களின் போராட்ட உளவுரணை அழித்து விடலாமென்பதே இவர்களின் கணிப்பு.

ஆனாலும் குட்டையை அதிகம் குழப்பினால், மீன் பிடிக்க முடியாதென்பதும் இவர்களுக்குத் தெரியும்.இந்த வேளையில், எதிர்த் தரப்பினரின் உளவியல் சமரினை தெளிவாகப் புரிந்து, தமது சர்வதேச மயப்பட்ட வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டிய வரலாற்றுப் பொறுப்பு, மாணவ இளைஞர்களுக்கு உண்டு.

அதேவேளை தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை, வேரடி மண்ணோடு அழிக்க முற்படும் பிராந்திய, உலக வல்லரசாளர்களின் புவிசார் இராஜதந்திர நிலைப்பாடுகளையும் புரிந்து கொள்ளவேண்டும்.எல்லாவற்றையும் இழந்துவிட்டோமென்கிற சோக உணர்விற்குள், தொடர்ந்தும் தமிழ்மக்களை வைத்திருக்க வேண்டிய தேவை சிங்களத்திற்கு உண்டு.

இத்தகைய சதி நகர்வுச் சிறையிலிருந்து மீண்டெழுந்து, தாயக மக்களைக் காக்கும் பொறுப்பு, தற்போது புலம்பெயர்ந்த ஈழமக்களுக்கே உண்டு."கூட்டுமனச்சிதைவுகள் யாவும், சமூகத்திலிருந்து அந்நியமாகிப் போதலிற்கே வழிவகுக்கும்",அதனையே சிங்களமும் எதிர்பார்க்கிறது.

எத்தகைய அரசியல் தீர்வினையும் பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் வழங்கப் போவதில்லை. அவ்வாறு தந்துவிடுவார்களென்று உறுதிமொழி கூறுபவர்களும், சிங்களத்தின் தயவில் வாழ்பவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

புலம்பெயர் நாட்டில், புதிய பரிமாணம் கொண்ட அரசியல் தளமொன்றினை நிறுவவேண்டிய அவசியத்தை இனியாவது நாம் புரிதல் வேண்டும்.சரியான மக்கள் போராட்ட கருத்தாதரவுக் குழுமங்களோடு இணைவினை ஏற்படுத்தினால், கியூபாவும், நிக்கராகுவாவும் கூட எமது பக்க நியாயத்தை புரிந்துகொள்ளும்.

நன்றி

இதயச்சந்திரன்

ஈழமுரசு(29.05.09)

www.tamilkathir.com

Comments