இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா செய்யப் போவது என்ன?

இலங்கையின் இன நெருக்கடியில் கடந்த இரண்டரைத் தசாப்த காலமாக செல்வாக்குச் செலுத்தி அழுத்தம் கொடுத்துவந்த இந்தியா இப்போது, எதனையும் செய்ய முடியாத ஒரு நிலையில் இருக்கின்றது. அதிகாரப் பரவலாக்கல் உட்பட அரசியல் தீர்வு முயற்சிகளில் இந்தியாவின் அழுத்தத்தை தமிழ்க் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் எதிர்பார்க்கின்ற போதிலும், "இது உங்களுடைய பிரச்சினை; நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள்' என்பதுதான் இந்தியாவின் பிந்திய நிலைப்பாடாக வெளிப்படுகின்றது.

இலங்கையின் பத்திரிகை ஆசிரியர்களின் குழு ஒன்று கடந்தவாரம் புதுடில்லி சென்று இந்திய வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரிகள், புத்திஜீவிகள், பத்திரிகையாளர்களைச் சந்தித்ததுடன் இனநெருக்கடி விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக அவர்களுடன் ஆராந்தது.

இந்த விஜயத்தின் போது இடம்பெற்ற சந்திப்புகள், பேச்சுவார்த்தைகளின் போதே ஈழத் தமிழர்களுக்காக இந்தியா வருங்காலத்தில் குரல்கொடுக்கப்போவதில்லை என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்த விஜயத்தின்போது இடம்பெற்ற சந்திப்புகளில் முக்கியமானது இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், இணைச் செயலாளர் திருமூர்த்தி ஆகியோருடனான சந்திப்புகளாகும். இதனைவிட இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரிகள், ஆவாளர்களை உள்ளடக்கிய புத்திஜீவிகளுடனான சந்திப்பும் புதுடில்லியிலுள்ள முக்கிய பத்திரிகையாளர்களுடனான சந்திப்பும் இலங்கைப் பிரச்சினை தொடர்பிலான இந்தியாவின் தற்போதைய அணுகுமுறையைப் புரிந்துகொள்வதற்கு உதவிபுரிந்துள்ளன.

இலங்கையின் இன நெருக்கடியைப் பொறுத்தவரை 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தொடர்ந்தே இந்தியாவின் தலையீடு ஆரம்பமாகியது. இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே ராஜிவ் ஜெயவர்த்தன உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் பலனாக உருவாக்கப்பட்டதுதான் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தச் சட்டமூலம். அதன்மூலமாகவே மாகாணசபைகள் அமைக்கப்பட்டன. இதில்குறிப்பிடப்படவேண்டிய மற்றொரு அம்சம் வடக்கும்கிழக்கும் இணைக்கப்பட்டமையாகும்.

இன நெருக்கடிக்கான தீர்வுக்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுதான் ஒரே தீர்வு என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாக அன்று முதல் இருந்து வருகின்றது. இந்திய இலங்கை உடன்படிக்கையில் வடக்குகிழக்கு இணைக்கப்பட்டபோதிலும் இந்த இணைப்பைத் தொடர்வதா இல்லையா என்பது ஒரு வருட காலத்தின் பின்னர் நடைபெறும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாகவே தீர்மானிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழர் தரப்பு விசனம் தெரிவித்தவேளையில், ராஜிவ் காந்நி உறுதிமொழி ஒன்றை வழங்கினார். அதாவது, சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தவே அவ்வாறான சரத்து ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ராஜிவ் காந்தி, இணைப்பு தொடர்வதற்கு தான் உத்தரவாதமளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில் இணைப்பை உள்ளடக்கியதாக 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்ற ஒரு நம்பிக்கை தமிழர் தரப்பில் காணப்பட்டது. இருந்தபோதிலும் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்டுள்ள இலங்கை அரசாங்கம், தனக்கு இசைவான ஒரு தீர்வைத் திணிப்பதற்கான வாப்புகள் உருவாகியுள்ள நிலையில் தமிழர் தரப்புக்காக இந்தியா குரல் கொடுக்கவோ அல்லது அழுத்தங்களைப் பிரயோகிக்கவோ தயாராகவில்லை என்பதை புதுடில்லியில் கடந்தவாரம் இடம்பெற்ற சந்திப்புகளின்போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

திருமூர்த்தியுடனான சந்திப்பு

இந்திய வெளிவிவகார இணைச் செயலாளர் திருமூர்த்தியை "சௌத்புளொக்' எனப்படும் இந்திய வெளிவிவகார அமைச்சுக் கட்டிடத்தில் சந்தித்துப் பேசியபோது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிகரித்துவரும் உறவுகள் தொடர்பாகவே முக்கியமாகக் குறிப்பிட்டார். அத்துடன் இனநெருக்கடி தொடர்பாக பத்திரிகை ஆசிரியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

இந்தியப்படை இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதிலேயே இந்தியா பெருமளவுக்கு அக்கறை காட்டியதாகத் தெரிவித்த அவர், அண்மைக்காலமாக பொருளாதார ரீதியாகவும் இரு தரப்பினருக்குமிடையிலான உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இரு தரப்புக்கும் இடையிலான நம்பிக்கை இப்போது வலுவடைந்திருக்கின்றது எனவும் அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.

இன நெருக்கடிக்கான தீர்வு தொடர்பாகக் குறிப்பிட்ட அவர், தமிழர்களுடைய நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் தாம் பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகவும் தெரிவித்தார். அதேவேளையில், 13ஆவது திருத்தச் சட்டமூலம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த இடத்தில் குறுக்கிட்ட தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் உங்களுடைய நிலைப்பாடெனில் வடக்குகிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்குமா எனக் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த திருமூர்த்தி "வடக்குகிழக்கு இணைப்பு தேவையில்லை என இலங்கை கருதினால் அதனைச் செயலாம். இணைப்பதா இல்லையா என்பது உள்நாட்டு விவகாரம். அதில் நாம் தலையிடவோ அழுத்தம் கொடுக்கவோ முற்படப் போவதில்லை' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதேவேளையில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இந்தியா இருப்பதாகவும் வலியுறுத்திய அவர் "உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தீர்வு ஒன்றை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறிவருகின்றார்.

அவ்வாறான தீர்வு ஒன்று முன்வைக்கப்படுமாயின் அதற்கு இந்தியாவின் ஆதரவு கிடைக்கும்'எனவும் தெரிவித்தார். தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் வல்லாதிக்க நிலைக்கு சவால்விடும் நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இலங்கை அரசாங்கம் அண்மைக்காலமாக இராணுவ ரீதியான உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது. இதனை இந்தியா எவ்வாறு நோக்குகின்றது என பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வி ஒன்றைக் கொடுத்தார்.

இதற்குப் பதிலளித்த திருமூர்த்தி, "சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இலங்கையின் உறவுகள் வலுவடைந்திருப்பதை இந்தியா புரிந்துகொள்கின்றது. அது இலங்கைக்குத் தேவையானதாகவும் இருந்துள்ளது' எனத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே அந்த நாடுகளுடனான உறவுகளை இலங்கை பலப்படுத்திக்கொண்டது. அந்தக் கட்டத்தில் இலங்கை அரசுக்கு இருந்த தேவையை இந்தியா புரிந்துகொண்டுள்ளது என்ற கருத்தையே வெளிவிவகார இணைச்செயலாளரின் இந்தக் கருத்து பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

சிவசங்கர்மேனன் கருத்து

திருமூர்த்தியுடனான சந்திப்பு நடைபெற்ற மறுநாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன் இலங்கை பத்திரிகை ஆசிரியர்களின் குழுவைச் சந்தித்தார். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய "சௌத்புளொக்' கட்டிடத் தொகுதியிலுள்ள வெளியுறவுச் செயலாளரின் அலுவலகத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.

கடந்த காலங்கள் மகிழ்ச்சியானதாக இல்லை எனக் குறிப்பிட்ட சிவசங்கர் மேனன், போருக்குப் பிந்திய புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காக இந்தியா, இலங்கைக்கு 500 கோடி ரூபாவைக் கொடுக்கின்றது எனவும் இது ஒரு பகுதி மட்டுமே எனவும் குறிப்பிட்டார். "சுதான் விடுதலைப் புலிகளுடன் நடத்தியது இந்தியாவின் போரையே' என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருப்பது தொடர்பாகக் கேட்டபோது, ஒரு வகையில் அது சரியானதே என மேனன் பதிலளித்தார்.

ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளே கொலைசெதிருப்பதாலும் இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புபட்டதாக இருப்பதாலும் ஜனாதிபதி அவ்வாறு கூறியிருப்பது சரியானதே என தாம் கருதுவதாக மேனன் மேலும் விளக்கமளித்தார். இலங்கையின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்தியா பாதுகாப்பானதாக இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக அடுத்ததாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டியவை எனவும் குறிப்பிட்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர், இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை இந்தியாவோ அல்லது நோர்வேயோ முன்மொழிய முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயத்தில் மகிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ள திட்டம் சிறப்பானது எனவும் குறிப்பிட்ட அவர், இலங்கைக்குச் சிறப்பானது எது என அவர் தீர்மானிக்கின்றாரோ அதற்கு இந்தியா ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்தார். 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்குமா எனக் கேட்டபோது "இல்லை" எனப் பதிலளித்த மேனன், இந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

"13ஆவது திருத்தச் சட்டமூலம் இலங்கைப் பாராளுமன்றத்திலேயே கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியா தாயோ, தந்தையோ அல்ல" எனத் தெரிவித்த மேனன், "தீர்வு முயற்சிகளைப் பொறுத்தவரையில் இலங்கை கேட்டுக்கொண்டால் மட்டுமே உதவுவோம்" எவ்வாறான ஒரு தீர்வை முன்வைக்க வேண்டுமென வலியுறுத்த மாட்டோம்" எனவும் தெரிவித்தார்.

புத்திஜீவிகளின் கருத்து

புதுடில்லியிலுள்ள ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் புத்திஜீவிகளுடனான சந்திப்பு ஒன்றிலும் இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்கள் பங்குகொண்டனர். உலக விவகாரங்களுக்கான இந்தியப் பேரவையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இந்திய அமைதிப்படையின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் மேத்தா உட்பட படை அதிகாரிகள் சிலரும் பங்குகொண்டார்கள்.

இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராகப் பணியாற்றிய சத்வால் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இங்கு உரையாற்றிய இந்திய புத்திஜீவிகள் சமூகத்தைச் சேர்ந்த பலரும் "விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியாகத் தோற்கடித்திருப்பதன் மூலம் பிரச்சினை முடிவடைந்துவிட்டதாகக் கருதக்கூடாது, அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை முன்வைப்பதன் மூலமாக மட்டுமே நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என வலியுறுத்தினார்கள்.

இல்லையெனில் மீண்டும் வன்முறைகள் வெடிப்பதற்கான வாப்புகள் இருப்பதால் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளைக் கருத்திற்கொண்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்கு இலங்கை அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தினார்கள்.

இதேவேளையில் இந்த கலந்துரையாடலில் பங்குகொண்ட சிங்களப் பத்திரிகை ஆசிரியர்கள் பலரும், "இலங்கையில் காணப்பட்டது விடுதலைப் புலிகளின் பயங்கரவாதப் பிரச்சினை மட்டும்தான். இப்போது விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டமையால் அந்தப் பயங்கரவாதப் பிரச்சினையும் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதனால் எந்தவொரு தீர்வையும் முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை" என வாதிட்டனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் எந்தவிதமான ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்படவில்லை எனவும் அவர்கள் நியாயப்படுத்த முனைந்தனர். இந்த விடயத்தில் இந்தியா எதனையும் போதிக்கத் தேவையில்லை எனவும் சிங்கள பத்திரிகையாளர் ஒருவர் கடுமையான தொனியில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த நிலையில் அரசியல் தீர்வு தொடர்பாக சிந்தித்த சிங்களத் தரப்பினர், புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் தீர்வு ஒன்றைத் தட்டிக்கழிப்பதற்கு முற்பட்டுள்ளமையைத்தான் சிங்களப் பத்திரிகை ஆசிரியர்களின் இந்தக் கருத்துகள் பிரதிபலிப்பதாக இருந்தது.

பேரினவாத மேலாதிக்கம் மேலோங்கியிருக்கும் இந்த நிலையில், தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் நிலைப்பாட்டிலிருந்து இந்தியாவும் முற்றாக விலகிக்கொண்டிருப்பது பேரினவாதிகளுக்கு பெருமகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும்.

அதேவேளையில், தமிழர்களின் எதிர்காலத்தையும் இது கேள்விக்குறியாக்குகின்றது. தமிழர்களின் பேரம் பேசும் சக்தியாகக் கருதப்பட்ட விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவதற்கு ஆதரவை வழங்கிய இந்தியா, இப்போது ஒதுங்குவது ஏன்?

- ஆர்.பாரதி

நன்றி: தினக்குரல் (21.06.2009)

Comments