கங்கணம் கட்டிக்கொண்டு வீசும் கடும் பனிக்குளிருக்குள்ளும் சுழன்றடிக்கும் காற்றுக்குள்ளும் அனலாய்க் கொதிக்கும் கோடை வெப்பத்துக்குள்ளும் இன்னுமின்னும் பல்வேறு சிரமங்களுக்குள்ளும் உலகின் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் ஈறாகப் பல்வேறு நிறுவனங்களிலும் கருத்தூன்றிக் கல்வி பயின்று வரும் உங்களிற்கு ஒரு சாதாரண சகமாணவன் அசாதாரண சூழ்நிலையில் விடுக்கும் வேண்டுகோளினைத் தாங்கிவரும் மடலிது.
முதலில் இன்றளவும் நீங்கள் எல்லோரும் ஒரே குரலில் தெரிவித்து வந்த ஆதரவுக்கும் ஒன்றிணைந்து செய்திட்ட பங்களிப்புகளுக்கும் எனது(ம்) நன்றிகளைத் தெரிவித்துத் தொடர்கிறேன்.
அன்பானவர்களே! எமதினிய தாயகப் பரப்பிலே அதனைச் சூழ்ந்துள்ள நீர்ப்பரப்பிலே எமது வான்வெளியிலே கடந்த சில மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருப்பவை பற்றிய உண்மைச் செய்திகளைப் பூரணமாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் நீங்கள் தவித்துக் கொண்டிருப்பீர்கள் என்பது எம்மெல்லோருக்கும் தெரியும்.
நம் மாணவச் செல்வங்கள் அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவலங்களை உங்களால் ஓரளவுக்கேனும் ஊகித்துணர முடியும் என்றாலும் கணந்தோறும் மரணத்தை எதிர்பார்த்துச் சொல்லொணாத் துயரத்துள் தோய்ந்து பெரிதும் மனமுடைந்துள்ள நம் சொந்தங்களின் சோகம் யாருடைய கற்பனைக்கும் எட்டாதவை.
நிச்சயமாக நீங்கள் எம்மீது வைத்துள்ள அளவிடமுடியாத அன்பால் அக்கறையால் உங்கள் உறவுகளான எம்மைப் பற்றித் தினசரி பல மணி நேரம் சிந்திப்பீர்கள்தான்; உங்கள் பாசமிகு பெற்றோருடனும் நண்பர்களுடனும் உறவினருடனும் ஏன் உங்கள் அயலவருடனும் கூட அவ்வப்போது கலந்துரையாடுவீர்கள்தான்.
ஆனாலும் தற்போது(ம்) பன்னாட்டுப் பத்திரிகைகளிலும் பல்வேறு வானொலி தொலைக்காட்சிச் சேவைகளிலும் இன்னோரன்ன இணையதளங்களிலும் அன்றாடம் வெளிவரும் செய்திகளின் கதாநாயகர்களாகி ஆங்காங்கே அவ்வப்போது வெளிவரும் பல்வேறு தரப்பினரதும் அறிக்கைகளுக்குப் புள்ளிவிபரங்களாகவும் மாறிவிட்ட எமதினிய மக்களின் பரிதாப நிலை பற்றி இந்த உலகம் சரிவர அறியுமா...??!
இதோ சர்வதேச ஆவணமான யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. யார் யாரோ வந்தார்கள் கைகுலுக்கினார்கள் ஏதேதோவெல்லாம் பார்த்தார்கள் பேசினார்கள் உத்தரவாதங்களை அளித்தார்கள் கட்டுக் கட்டாக அறிக்கைகளை வெளியிட்டார்கள் நிழற்படங்கள் கூட எடுத்துக் கொண்டார்கள். ஆனாலும் என்னவாயிற்று.....??
எம் மக்களுக்குத்தான் இன்னும் விடியவில்லையே....??!இராண்டுகளுக்கு முன்னர் "தமிழர்கள் நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் வாழ்ந்தாலும் பாரிய அச்சுறுத்தலை எதிர் நோக்குகின்றனர்" என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்ததை நீங்கள் இணையதள செய்தியொன்றில் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
அதே காலப்பகுதியில் சிறீலங்காவின் அரசு மனித உரிமை மீறல்களைத் தடுக்காது போனால் அதற்கான அனைத்துலகத்தின் உதவிகளை அந்தந்த நாடுகளின் ஊடாகத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப் போவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய இயக்குனர் கூறியிருந்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆனாலும் அதன் பின்னர் நடந்ததுதான் என்ன?? பௌத்த பேரினவாத சிங்கள சிறீலங்கா அரசு தான்தோன்றித் தனமாக யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து போர் முழக்கத்துடன் பகிரங்கமாக வெளியேறியபோது சர்வதேசங்களும் மௌனமாக வாளாதிருந்ததனவே அன்றித் தடுத்து நிறுத்தி அவ்வுடன்படிக்கையை மதித்துத் தொடருமாறு கேட்கவோ அதில் கைச்சாத்திட்ட வண்ணம் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தவோ இல்லையே...??
இதன் விளைவு என்னவாயிற்று?? சிறீலங்கா அரச படைகள் பெருமெடுப்பில் நிகழ்த்தத் தொடங்கிய கண்மூடித்தனமான கனரக ஆயுதங்களின் தாக்குதல்கள் யுத்த வானூர்திகளின் கொத்தணிக் குண்டுத் தாக்குதல்கள் சுற்றிவளைப்புகள் ஆக்கிரமிப்புகள் விசாரணைகள் சித்திரவதைகள் பாலியல் வன்புணர்வுகள் பலாத்காரங்கள் கொலைகள் கொள்ளைகள்
பலவந்தமான காணாமல் போகச் செய்தல்கள் பயமுறுத்துதல் கப்பங்கோரல் பணப் பறிப்புகள் என்றும் உணவுத்தடை மருந்துத்தடை மின்சாரத்தடை பொருளாதாரத்தடை பாதைத்தடை போக்குவரத்துத்தடை பேச்சுத்தடை தொலைதொடர்புத்தடை என்றும் இன்னுமின்னும் எத்தனையோ அழுத்தங்களுக்கும் நாகரிகமடைந்த மனிதகுலம் இதுவரை கண்டிராத உச்ச கட்டக் கொடுமைகளுக்கும் நமது தாய் மண்ணே பரிசோதனைக்களம் ஆயிற்று;
நமது மக்களே நல்ல உதாரணங்களாகினர். கடுஞ்சமர்கள் மூலம் எம்மண்ணினை எதிரிப்படைகள் ஆக்கிரமித்து வருகையில் எதிர்வந்த தாக்குதல்களை எல்லாம் தற்காப்புக்காக எதிர்கொண்ட நமது தரப்பு அண்மையில் கூட மக்கள் நலன் கருதி ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தை அறிவித்த போதும் எமது மக்களின் நிலைமை பற்றியும் தமது நிலைப்பாடுகள் பற்றியும் எடுத்தியம்பியபோதெல்லாம் எமக்குக் கிடைத்த பலன்தான் என்ன.....?
உண்மை நிலைமைகள் பற்றி அறிந்து இருந்த இராஜதந்திரிகளும் யதார்த்தம் புரிந்திருந்த பன்னாட்டுச் சமூகத்தினரும் பாராமுகமாயிருந்த சர்வதேச அமைப்புகளும் நீதியின் மீது நம்பிக்கை வைத்து பொறுமை காத்துச் செயற்பட்ட நம் மக்களுக்கு அளித்த பரிசு தான் என்ன......??
இப்பொழுதுவரை எங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் சிங்கள அரசினது அநீதியிழைப்புகளுக்கும் அதன் முப்படைகளினது போர்க்குற்றங்களுக்கும் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களினது பல்வேறு வகையிலான அக்கிரமங்களுக்கும் யார் யாரெல்லாம் பங்குதாரர்கள் பொறுப்பாளிகள்.........?
எனதருமைச் சோதரரே! எது எவ்வாறிருப்பினும் நாம் இப்பொழுதெல்லாம் எதிர்பார்த்திருப்பது உங்கள் நேசக்கரங்களையே; புலம்பெயர்ந்திருப்பினும் சாவிலும் வாழும் எங்களுக்காய் பொங்கு தமிழாய் ஆர்ப்பரித்து அடங்காப்பற்றுடன் எழுந்து எமது ஒட்டுமொத்த விடிவிற்காய் உரிமைக் குரல் எழுப்பி உலகெங்கும் உரிமைப் போர்ப் பேரணிகள் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றை மனம் தளராது நடாத்திக்கொண்டிருக்கும் உங்களையே;
உங்கள் கூட்டுமுயற்சிகளின் நற்பயன்களையே. வெல்க தமிழ் என்று உலகின் மூலை முடுக்கெங்கும் முழங்கிய நீங்கள் எதிர்வரும் புதன்கிழமை யூன். 3. 2009 அன்று - எமது தாயகப் பகுதிகளில் சிறீலங்கா இராணுவத்தின் மேற்பார்வையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பெடுத்து எமது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும்
- இருபத்தோராம் நூற்றாண்டில் மாபெரும் இனப்படுகொலைக்குப் பொறுப்பாக இருந்த சிறிலங்கா ஆட்சியாளர்களையும் அதன் இராணுவத் தலைமையையும் சர்வதேச குற்றக் கூண்டில் நிறுத்துவதை உறுத்திப்படுத்துமாறு வேண்டியும் - பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கான உடனடி நிவாரணம் நேரடியாகச் சென்றடைவதை வலியுறுத்த வேண்டியும் - இலங்கைத் தீவில் இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைவதை வெளிக்கொணரவும் என முன்னெடுக்கும் "தமிழீழமே தாகம்" எனும் மாபெரும் பேரணிக்கு எமது மக்கள் சார்பாக எனது நல்வாழ்த்துக்களை இத்தால் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
புலமை ஆற்றல் இணைந்து பாரிய அதிசயம் நிகழ வேண்டுமெனில் அது நமது ஒன்று திரண்ட தளரா முயற்சியாலும் தற்துணிவினாலும்தான் சாத்தியமாகும். வரலாற்றை மக்கள் அல்லாது தனியொருவர் தீர்மானிப்பதில்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இக்காலகட்டத்தில் சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் விட்டு வைத்துள்ளது என்ற உண்மையை பரப்புரைகள் மூலம் உலகெங்கும் பறை சாற்றுங்கள்.
அழுத்தங்கள் சவால்கள் போட்டிகள் பல நிறைந்த இவ்வுலகில் உங்கள் படிப்பறிவின் மூலமும் எமது பட்டறிவின் மூலமும் பெற்ற எமது தேசத்தின் விடுதலைப் போரின் நியாயப்பாடுகளை எட்டுத்திக்குமறிய விளக்கிக் கூறுங்கள். போதியளவு உணவின்றி மாற்று உடையின்றி தகுந்த உறையுளின்றி ஏன் இந்த மனிதப் பிறப்புக்குரிய உரிமைகள் எதுவுமே இன்றி நாம் இன்றிருக்கும் இந்த அவல நிலைமைக்கு காரணங்கள் எவை எனத் தெளிவாய்க் குறிப்பிட்டு ஆதாரத்துடன் நிரூபியுங்கள்.
எமது மாணவரின் கல்வியின் முன்னைய தரம் பற்றி தரப்படுத்தலின் விளைவுகள் பற்றி பல மாதங்களாக ஏடின்றி எழுத்தறிவின்றி நம் இளையவர்கள் இங்கு எதிர்கொண்டுள்ள இழிநிலை பற்றி எடுத்துக் கூறுங்கள். எஞ்சியுள்ள எதிர்காலத்துக்காய் - எமது சந்ததிகளின் நல்வாழ்விற்காய் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் குன்றாத தமிழ்தாய் சுதந்திர தமிழீழ தேசத்திலே மிளிர்வதற்காய்
"நமக்கு வேண்டும் நமது நாடு!" "நமக்கு வேண்டும் நமது உரிமைகள்!!" "தமிழீழமே நமது தாகம்!!!" என்று உரத்து முழங்குங்கள்.
எமது அரசியற் சுதந்திரத்துக்கான எமது போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின்வழி நடப்பதாகக் கூறும் உலக நாடுகளையும் பன்னாட்டுச் சமூகத்தவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்ளுங்கள்.
இறுதியாக எம்மாணவ சமூகத்திற்குத் தன் 'கடமை' பற்றி முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்தி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே முதன் முதலில் 'சயனைட்' அருந்தி வீரகாவியமாகிவிட்ட தியாகி பொன். சிவகுமாரனின் நினைவுகளுடன் ஐம்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கைத்தீவில் பிரகடனப்படுத்தப்பட்ட "சிங்களம் மட்டும்" சட்டத்தையும் அதன் இன்றளவுமான விளைவுகளையும் நினைவூட்டியபடி எமது அரசியல் தலைவிதியை நாமே தீர்மானித்து -
விடுதலை பெற்ற மனிதர்களாக நாமும் இப்புவிதன்னில் தலை நிமிர்ந்து வாழும் வரை போராடுவோம் என்று உறுதி கூறி விடை பெறுகிறேன்.
நன்றி!
இவ்வண்ணம் உளமார் விடுதலை உழைப்பினை நாடி நிற்கும்
உங்கள் உடன் பிறவாச் சகோதரன்.
www.tamilkathir.com
Comments