எது நடக்க வேண்டும் என்று கொங்கிரஸ் கட்சி விரும்பியதோ அதனைப் பொறுத்தவரை இப்போது அது நிறைவேறிவிட்டதாகவே கருதப்படுகின்றது.
விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களைப் பிரித்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எத்தனையோ சதி வலைகளுக்குள் இருந்தும் மீண்டெழுந்த ஈழத் தமிழினம், இப்போது மீண்டெழ முடியாத வலைக்குள் வீழ்ந்துவிட்டதாக கற்பிதம் கொள்ளப்படுகின்றது. புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக இப்போது பிரச்சாரம் சூடுபிடித்திருக்கின்றது.
புலிகள் அழிக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்பதுபோன்று கதை பேசிய யாரும் இப்போது தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பது பற்றி வாய் திறப்பதில்லை. மூன்று இலட்சம் மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு, கேட்பாரற்று முட்கம்பி வேலிகளுக்கு உள்ளே முடக்கப்பட்டு நடைப்பிணமாக்கப்பட்டுள்ளனர். நாள் தோறும் அந்தத் தடுப்பு முகாம்களில் இடம்பெறும் அளவுக்கு அதிகமான மரணங்களும், படையினரால் வலுகட்டாயமாக கொண்டு செல்லப்படும் இளைஞர், யுவதிகளின் நிலைமையும் அந்த முகாமின் நிலைமையை சொல்லாமல் சொல்லுகின்றன.
அந்த மக்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கான விடை தேடல்களை விடுத்து, மனித உரிமை மீறல்களில் குற்றம்சாட்டப்பட்டு சிறீலங்கா தண்டிக்கப்பட்டுவிடுமோ என்ற கவலையே இப்போது அதன் நேச சக்திகளுக்கு மேலோங்கி இருக்கின்றது. அந்த மக்களைக் காப்பாற்றுவதைவிட, சிறீலங்கா அரசைக் காப்பாற்றுவதுதான் இப்போது அருகிலுள்ள இந்தியா முதல் சீனா, ரஷ்யா போன்ற பெரும் நாடுகள் வரைக்கும் பெரும்பாடாக இருக்கின்றது.
நன்றிகெட்ட தனமாக செயற்படும் சிறீலங்காவிற்கு தனது விசுவாசத்தைக் காண்பிப்பதற்கு இந்தியாவின் ஆளும் அரசு படுகின்றபாடுகள் வெளியில் இருந்து பார்ப்பவர்களையே வெட்கம் கொள்ள வைக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் சபையில், சிறீலங்கா தனது பக்க நியாயத்தை புரிய வைப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளை விட, சிறீலங்காவைக் காப்பாற்ற இந்தியா எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சிதான் பலராலும் வியந்து நோக்கப்பட்டுள்ளது.
ஆனால், சீன உறவில் திளைக்கும் சிறீலங்காவிற்கு இந்தியா ஒரு பொருட்டல்ல. இதனை வரலாறுகள் பல தடவை தெளிவு படுத்திவிட்டன. இப்போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவை அரவணைப்பதுபோல் செயற்படும் சிறீலங்கா, நாளை அதற்கான தேவை இல்லாது போகும் நிலையில் இந்தியாவை தூக்கியெறிந்துவிடும் தெனாவெட்டு அதற்கு இருக்கின்றது. சிங்களத்தின் இந்த மனோ நிலையை புரிந்துகொள்ள விரும்பாத அல்லது தெரிந்துகொண்டும் வலுகட்டாயமாக சிங்களத்திற்கு உதவ முனைந்து நிற்கின்றது இந்தியா. மிகக்கேவலமாகவும் அச்சுறுத்தியும் எழுதினாலும்கூட, அதனைக் கண்டுகொள்ளாமல் சிங்களத்திற்கு சாமரம் வீசும் இந்தியாவிற்கு உலகைச் சுற்றி வந்தாலும் மாங்கனி கிடைக்காது, சீனப் பிள்ளையாரே அதனை அனுபவிக்கப்போகின்றார் என்ற யதார்த்ததை புரிய அதிக காலம் எடுக்காது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
சிறீலங்காவைத் தனது இராஜதந்திரப் பிடிக்குள் கொண்டு வர தமிழ் மக்கள் பட்டினி கிடக்காமலேயே அன்று பூமாலை போட்டது ராஜீவின் கொங்கிரஸ் அரசு. ஆனால், கடற்கரை மணல் வெளியில் பட்டினியால் மக்கள் செத்து மடிந்தபோதுகூட கண்டுகொள்ளாமல், சிறீலங்கா அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பக்க பலமாக நின்றபோது புரிந்துவிட்டது இந்தியாவின் தமிழ் மக்கள் மீதான கரிசனை என்ன என்பது.
உண்மையாகவே ஈழ மக்களின் மீது இந்தியாவிற்கு அக்கறை இருந்திருந்தால் என்றைக்கோ இந்தப் பிரச்சினையில் ஒரு தீர்வினை அது எட்டியிருக்கமுடியும். ஆனால், தனது பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த தமிழ் மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்துவதனாலேயே இத்தனை அழிவுகளை அந்த மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் வேதனைக்குரிய உண்மை.
இந்நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் எழும் கேள்விகள் இவைகள்தான். ஈழத் தமிழ் மக்கள் முழுமையாக அழிந்து போவதை இந்திய அரசு விரும்புகின்றதா? அல்லது சிங்களத்தின் கைகளில் ஒரு அடிமையைப் போல அடங்கி, ஒடுங்கி வாழ்வதை அது எதிர்பார்க்கின்றதா?
அல்லது, அந்த மக்களும் ஒரு சுயநிர்ணய உரிமைகொண்ட இனமாக பிரிந்து சென்று வாழ்வதை அது விரும்புகின்றதா?
என்பதே அந்தக் கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கான விடையை இந்தியா தெளிவாக வைக்காதவரை, பிராந்திய வல்லாதிக்கத்திற்கு தமிழ் மக்கள் பலியாகிக்கொண்டிருப்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
ஆசிரியர் தலையங்கம்
ஈழமுரசு (19.06.2009)
Comments