ஈரடி பின்னால் ஓரடி முன்னால்?

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக் கூடிய அபாயமும் தென்படுகின்றது.

போராட்டம் ஒரு துயர முடிவைச் சந்தித்துள்ளது என்பதற்கு அப்பால், தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் மரணம் தொடர்பாக வெளிவரும் முரணான சேதிகளே மக்களின் துயரத்துக்கும், குழப்பத்துக்கும் அதிகளவில் காரணங்களாக உள்ளன.

இன்றைய நிமிடத்தில் தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறாரா,

ஆய்வு:சண் தவராஜா


இல்லையா என்பதை ஆராய்வதிலேயே தமிழ் மக்களின் கவனம் வெகுவாகக் குவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விவாவதத்திற்கு கிட்டிய எதிர்காலத்தில் முடிவு இருக்கப் போவதில்லை என்பதே யதார்த்தம்.

அதேவேளை, முடிவு காண முடியாத இந்த விடயம் தொடர்பில் சர்ச்சைப்படுவதை விட்டுவிட்டு வேறு விடயங்களில் நாம் அவசரமாகவும், அவசியமாகவும் கவனஞ் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் தமது துயரத்தின் உச்சத்தைச் சந்தித்துள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இன்னமும் கூட அதிலிருந்து அவர்கள் மீளவில்லை என்பதுவும் உண்மை. ஆனால், இதற்காக நாம் எமது அடுத்த கட்டச் செயற்பாடுகளை மறந்துவிடலாமா? எதிர்பாராத இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை. அதற்காக நாம் ஸ்தம்பிதம் அடைந்துவிட முடியாது. இழப்புக்களைத் தாங்கிக் கொண்டு நாம் முன்னோக்கி நடைபோட வேண்டியது அவசியம்.

ஐ.நா. அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி தற்போது சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் போதுமான உணவின்றி, சுத்தமான குடிநீரின்றி, சுகாதார வசதிகள் இன்றி, நடமாடும் சுதந்திரம் இன்றி வாடுகின்றார்கள். இது தவிர பிள்ளைகள் தமது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப் பட்டுள்ளார்கள். பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றார்கள்.

இடைத்தங்கல் முகாம்கள் தவிர, போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய ஆயிரக் கணக்கான மக்கள் இன்னமும் கிளிநொச்சி பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் அவர்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிறி லங்கா அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி இன்னமும் சுமார் 9,000 வரையான போராளிகள் தடுத்துவைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகி;ன்றது. இத்தொகை நாளுக்கு நாள் உயர்ந்தும் வருகின்றது. இவர்கள் தடுப்புக் காவலில் மிருகத்தனமாக நடத்தப்படுகின்றார்கள் என்பது சொல்லாமலேயே புரியும்.

இது தவிர காயப்பட்ட நிலையில் கணிசமான எண்ணிக்கையிலான பொது மக்களும், போராளிகளும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இவர்களுள் சுமார் முப்பதாயிரம் வரையானோர் தங்களின் அவயவங்களை இழந்திருக்கிறார்கள். இவர்களில் அநேகருக்குக் கண்துடைப்புச் சிகிச்சைகளே வழங்கப்பட்டு வருவதாக தெரிகின்றது. சிறி லங்கா அரசு நினைத்தால் இவர்களைக் காப்பாற்றவும் முடியும், கொல்லவும் முடியும்.

இந்நிலையில் இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் வாழும் மக்களின் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு என்பவற்றுக்கும், தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் விடுதலை மற்றும் மறுவாழ்வு என்பவற்றுக்கும் முன்னுரிமை அழிப்பNது நியாயமானது.

ஏற்கனவே, சிறி லங்கா அரசிடம் சரணடைந்துள்ள தயா மாஸ்ரர் போன்றோர் வழங்கிவரும் தகவல்கள் காரணமாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய, தொடர்ந்தும் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து கொண்டே தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் தந்துவந்த சிங்களப் புத்திஜீவிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளன. விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்கள் பலர் உயிருடன் அரசின் கையில் சிக்கிவரும் நிலையில் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளில் வாழ்வோருக்கும் கூடப் பல நெருக்கடிகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

போரட்டத்தின் இறுதி நாட்களில் எவ்வாறு தமிழ் மக்கள் ~கைவிடப் பட்டார்களோ’ அதுபோன்று இவர்களையும் கைவிட்டுவிடலாகாது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

போர் முடிவிற்கு வந்துவிட்டதாக சிறி லங்கா அரசு அறிவத்துள்ள போதிலும் அதன் தமிழர் விரோதப் போக்கும், போர் முனைப்பும் இன்னமும் குறைந்து விடவில்லை. சொல்லப் போனால் அது இன்னமும் அதிகரித்திருக்கிறது என்றே கூற வேண்டும். இதுநாள்வரை, போர்க்குற்ற விசாரணைகளுக்காக அஞ்சிக் கொண்டிருந்த சிங்களத் தலைமை மே 26, 27 ஆம் திகதிகளில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 11 ஆவது விசேட கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தைத் தோற்கடித்ததில் இருந்து மேலும் உற்சாகம் பெற்றிருக்கின்றது.

துட்டகைமுனுவின் பாணியில் தமிழர்களை வெற்றி கொண்டு விட்டோம் என்ற மமதையில் இருக்கும் சிறி லங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் ஒரு லட்சம் படையினரை இராணுவத்தில் சேர்க்கவுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் என்ற பெயரை இனிமேல் யாரும் உச்சரிக்காத ஒரு நிலையை உருவாக்கப் போவதாகவும் சூழுரைத்திருக்கின்றார்.

வன்னியில் போர்ப் பிரதேசங்களில் சிக்குண்டிருந்த தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளின் தலைமையையும் சர்வதேச சமூகம் காப்பாற்றும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு - குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்களுக்கு - நிறையவே இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே புலம்பெயர் நாடுகளில் தொடர்ச்சியான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களிலும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தூரதிர்ஷ்டவசமாக ஊடக விழிப்புணர்வையும் தமிழ் மக்கள் மத்தியில் எழுச்சியையும் ஏற்படுத்தியதைத் தவிர வேறு எதனையும் இத்தகைய போராட்டங்களால் சாதிக்க முடியாமற் போய் விட்டது.

இதேவேளை, சிறி லங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணையையாவது நடாத்துவதில் சர்வதேசம் விடாப்பிடியாகச் செயற்படும் என்ற எதிர்பார்ப்பும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப் பட்ட தீர்மானம் தேற்கடிக்கப் பட்டதுடன் பொய்த்துப் போனது.

இத்தகைய யதார்த்தங்களின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வுகள் அமைய வேண்டும்.

தற்போதைய நிலையில் மற்றுமொரு ஆயுதப் போராட்டம் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியாத நிலையே உள்ளது. இத்தகைய தீர்மானம் தற்கொலைக்கு ஒப்பானதுடன், ஏற்கனவே பல்வேறு இழப்புக்களைச் சந்தித்து ஏதிலிகளாக இருக்கும் மக்களுக்கு மேலும் இழப்புக்களை ஏற்படுத்துவதற்கே வழி கோலும். இன்றைய நிலையில் அந்த மக்களிடம் உயிர்களைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவுமே இல்லை. உரிமைப் போராட்டத்துக்கு தன்னலமற்ற ஆதரவை இதுவரை நல்கிய அந்த மக்களுக்கு உரிமைகளைப் பெந்றுத் தருவதில் தவறியிருந்தாலும், ஆகக் குறைந்தது அவர்களிடம் எஞ்சியிருக்கும் உயிர்களைக் காப்பதற்காவாவது நாம் மானசீகமாக முயல வேண்டும்.

எனவே, எம்முன்னே இருக்கின்ற ஒரே தெரிவு ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாக எமது இறுதி இலக்கை நோக்கி நகர்த்திச் செல்வதே.

இன்றைய சூழ்நிலையில் களத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை அகற்றப்பட்டுவிட்ட நிலையில் அல்லது அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் உயிரோடு இருப்பதாகக் கருதப்படும் ஒருசில தலைவர்கள் கூடத் தங்களைப் பகிரகங்கமாக வெளிக்காட்ட முடியாத நிலையில் புலம்பெயர் சமூகத்தில் இருந்தே அந்தத் தலைமை - தற்காலிகமாகவேனும் - உருவாக வேண்டிய தேவை இருக்கின்றது.

இது நடைமுறைச் சாத்தியமானதா? இதனால் எதையாவது சாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படலாம்.

ஒரு காரியத்தை முன்னெடுக்கும் போது நாம் முதலில் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும். அதன் பிறகே இந்த இலக்கை எவ்வாறு சென்றடைவது என்பதைப் பற்றி திட்டமிட வேண்டும்.

தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் சுதந்திரமாக, இறைமையுள்ளவர்களாக வாழவே விரும்பினர். இலங்கைத் தீவில் அவர்கள் அவ்வாறு வாழ விரும்பியமைக்கு வலுவான காரணங்கள் நிறையவே உள்ளன. அவர்கள் எதற்காகப் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தார்களோ. அந்தக் காரணங்கள் இப்போதும் மாற்றமின்றி உள்ளன. எனவே, அவர்களது இலட்சியமும் மாற்றமடைய வேண்டிய அவசியமில்லை.

அந்த உன்னத இலட்சியத்தை எட்டுவதற்காக இதுவரை சுமார் 2 லட்சம் வரையான உயிர்களையும் கோடிக் கணக்கான டாலர் பெறுமதியான சொத்துக்களையும் அவர்கள் இழந்துள்ளார்கள்.

இத்தனை இழப்புக்களின் பின்னும் அவர்கள் தமது இலட்சியப் பாதையில் ஒரு அடியேனும் முன்னேற முடியவில்லை. யதார்த்தமாக நோக்கினால் அவர்கள் முன்னைய நிலையை விடப் பின்னோக்கியே சென்றுள்ளார்கள் எனலாம். இது தேவைக்கும் அதிகமானது.

இந்நிலையில் இன்றைய யதார்த்தம் தமிழ் மக்கள் தமது போராட்டப் பாதையை மாற்றியாக வேண்டிய தேவையை வலியுறுத்தி நிற்கின்றது.

இடம்பெயர்ந்த மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதற்கும் எமது மக்களின் விடுதலைக்காக தீரமுடன் போராடிய போராளிகளை தடுத்து வைத்துச் சித்திரவதை செய்வதற்கும், அவர்களுக்கு ஆதரவு வழங்கிய ஏனையோரை வேட்டையாடுவதற்கும் சிங்கள இனவெறி அரசு தகுந்த காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றது. அதற்கான வாய்ப்பை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் வழங்கிவிடக் கூடாது.

மறுபுறம், விடுதலைப் புலிகள் என்ற நாமமே இனி இலங்கைத் தீவில் இருக்கக் கூடாது எனச் சிங்கள தேசம் விரும்புகின்றது. இதனையே புலம்பெயர் நாடுகளில் வாழும் ஒரு சில புத்திஜீவிகளும், மாற்றுக் குழுவினரும் கூட விரும்புகின்றனர்.

இன்றைய நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாகத் தோற்றடிக்கப்பட்டாலும் கூட அவர்கள் முன்னெடுத்த போராட்டம் பல சாதனைகளைப் படைத்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இன்று உலகத் தமிழினம் ஒன்றுபட்டிருக்கின்றதென்றால், தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருக்கின்றதென்றால், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசினால் கொடுமைகள் இழைக்கப் பட்டுள்ளன எனச் சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளதென்றால், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற சிந்தனை உருவாகியுள்ளதென்றால் அது விடுதலைப் புலிகளாலும் தேசிய தலைவர் பிரபாகரனாலுமே சாத்தியப் பட்டிருக்கின்றது. எனவே, அந்தத் தியாகமும், பெருமையும் அழிக்கப்படவோ, வரலாற்றில் இருந்து அகற்றப்படவோ அனுமதிக்கக் கூடாது.

எனவே, இத்தகைய சிந்தனைகளின் அடிப்படையில் புதிதாக உருவாகப் போகும் விடுதலைப் புலிகளின் தலைமை வன்முறை அரசியலைக் கைவிடுவதாக அறிவித்துவிட்டு ஜனநாயக அரசியலில் பிரவேசிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், விடுதலை விரும்பிகளை ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனைச் சபையொன்றை ஏற்படுத்தி அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிட்டுவதுடன் சிறி லங்கா அரசோ இந்தியாவோ அந்த முயற்சியைப் புறம்தள்ளி விட முடியாத நிலை உருவாகும்.

இன்று யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலை ஒத்திப் போடும் முயற்சிகள் பயனளிக்காதவிடத்து, தேர்தலில் விடுதலைப் புலிகள் நேரடியாகவோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாகவே பங்கெடுக்க வேண்டும். விடுதலைப் புலிகள் 90 களில் பதிவு செய்த ~விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி’ என்ற அரசியல் கட்சி இன்னமும் சிறி லங்கா தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக இருப்பதை மறந்துவிடக் கூடாது.

ஈழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களுமே துன்ப துயரங்களை அனுபவித்து உள்ளார்கள் என்ற போதிலும் அதிகபட்ச துன்பத்தை, துயரத்தை அனுபவித்தவர்கள் வன்னி மக்களே. அனைத்தையும் இழந்த நிலையில் இன்று தடுப்பு முகாம்களில் வாடும் அவர்கள் நிம்மதியாக வாழ தத்தம் இடங்களுக்குத் திரும்ப வேண்டுமாக இருந்தால், முன்னாள் போராளிகளில் கணிசமானோர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாக வேண்டுமாக இருந்தால்,
இன்னமும் உயிர்ப்பலி நிகழாமல் தற்போது தென் தமிழீழத்திலும் ஏனைய இடங்களிலும் மறைந்து வாழும் போராளிகள் பொதுமன்னிப்புப் பெற்று சகஜ வாழ்வில் பிரவேசிக்க வேண்டுமாக இருந்தால்
இதுவொன்றே சரியான மார்க்கம்.

இதேவேளை, தற்போதைய சோர்வு மனப்பான்மையில் நாம் தளர்ந்து, செயலற்றுப் போய்விடாமல் நமது தொடர்புகளைத் தொடர்ந்து பேணி எமது தாயக மக்களின் நலவாழ்வுக்காக நாம் பாடுபட வேண்டும். குறிப்பாக தாய்த் தமிழகத்தில் எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சகல அரசியல் கட்சிகளுடனும் உறவுகளைப் பேணி எமது அரசியல் செயற்பாடுகளுக்கான ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எமது போராட்டப் பாதையில் நோர்வே, சுவிற்சர்லாந்து போன்ற ஒரு சில நாடுகள் எமது மக்களின் நலவாழ்வுக்காக உண்மையாகவே பாடுபட்டிருந்தன. அந்த உறவு தொடர்ந்து பேணப்பட வேண்டும்.

இது தவிர, இன்றைய நிலையில் எமக்காகக் குரல்தர சர்வதேச முன்னணி ஊடகங்கள் சில தாமாகவே முன்வந்துள்ளமை பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம். இந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன், சர்வதேச மன்றமான ஐ.நா.வில் எமது குரல் தொடர்ந்து ஒலிப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறி லங்கா அரசுக்கு எதிராக அண்மையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முறியடிக்கப்பட்ட போதிலும் அத்தகைய ஒரு முயற்சிக்கு ஊடாக வெளிப்பட்டுள்ள சேதி மிக முக்கியமானது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத வன்முறையற்ற, ஜனநாயக வழிப்பட்ட ஒன்றாக அமைய வேண்டும் என்ற கருத்தையே மேற்குலக நாடுகள் இதுவரை வலியுறுத்தி வந்தன. அன்றைய சூழலில் அக்கருத்தை உள்வாங்கி நாம் செயற்படத் தவறியிருந்த போதிலும், இன்றைய சூழ்நிலையில் அதுவே மிகப் பொருத்தமான தெரிவாக உள்ளது. அது தவிர, அத்தகைய தெரிவின் ஊடாக இத்தகைய நாடுகளின் தார்மீக ஆதரவையும் நாம் எமது இலட்சியத்துக்காகப் பெற்றுக் கொள்ள முடியும்.

உலகின் பல்வேறு மூலைகளிலும் போராடிக் கொண்டிருக்கின்ற பல்வேறு போராட்ட அமைப்புக்களுக்கும் பல்வேறு போராட்ட முன்மாதிரிகளை விடுதலைப் புலிகள் இயக்கம் இதுவரை வழங்கியுள்ளது. எதிர்பாராத வகையில் இத்தகையதொரு இராணுவத் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையிலும், தனது அரசியற் செயற்பாடுகளுக்கு ஊடாக, இக்கட்டான நிலையிலும் தனது மக்களின் நலன்களுக்காகத் தன்னைத் தகவமைத்தக் கொண்டு சரியான வழிநடத்தலை வழங்கிய அமைப்பு என்ற முன்மாதிரியை வழங்க விடுதலைப் புலிகள் முன்வர வேண்டும்.

இவை அனைத்தும் விரைந்து செய்யப்பட வேண்டும். தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் நாம் தோல்விப் பாதையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியாகவே அமையும்.

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு. - திருக்குறள்

நன்றி:நிலவரம்

Comments