கருத்து மாற்றம் அவசியம் ஆனால் விழிப்புடன் இருங்கள்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிக விழிப்பாகவும் அரசியல் தெளிவுடனுமேயே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். காரணம் தமிழர்களின் தன்னாட்சி,தாயகம் என்ற அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாகவும் அதுதான் நீண்ட காலப்போக்கில் தமிழர்களிற்கு தாயகத்தில் பாதுகாப்பு தரும் என்ற அசைக்க முடியாத நிலைப்பாடு.

ஒரு சில தனிநபர்கள் சிறு விழுக்காட்டு மக்கள் தவிர அனைவரும் ஒரு தீர்க்கமான அடிப்படையில்தான் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். நீண்ட போராட்ட வரலாற்றுப் பின்னணியினையும் மிக நீண்ட அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட படிப்பினைகளையும் கொண்டே மக்கள் இந்த தீர்மானங்களுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன விடுதலைப் போராட்டங்களின் போது அந்த விடுதலைப் போராட்டத்திற்கு காப்பரணாக இருக்கின்ற மக்கள் மீதும் மிக மோசமான அடக்கு முறைகளை ஏவி விட்டு அவர்களின் இலட்சியம் நோக்கிய அசைவியக்கங்களை மட்டுப்படுத்தல், இல்லாமல் செய்தல்,வெறுப்படைய செய்தல் ஆகியவற்றின் மூலம் ஆக்கிரமிப்பாளர்கள் தமது இலக்கினை அடைய முயற்சி செய்கின்றனர்.

இதன் பின் சர்வதேசமும் ஆக்கிரமிப்பாளர்களின் ஆலோசனைக்கு அமைவாக போரிற்கு பிந்திய செயற்பாடு எனவும் நல்லிணக்க நிகழ்ச்சி திட்டம் என்றும் மக்களின் காயங்களை மாற்றும் நடவடிக்கை என்றும் தடவி தடவி செயற்பட்டு போராடும் இனத்தினது ஒட்டுமொத்த நோக்கங்கள் செயற்பாடுகள் அனைத்ததையும் மாற்றி அமைத்து விடுவார்கள்.

இது எமது விடுதலைப் போராட்டத்திலும் நிறையவே நடைபெற்று வருகின்றது ஆனால் மக்களும் தேசியத்தலைமையும் உறுதியாகவும் நின்றமையினால் தான் இன்று உலக அரங்கில் எமது போராட்டம் பற்றிய தேவைப்பாடும் எமது இனத்திற்கான விடுதலை பற்றிய தேவைப்பாடும் இருந்து கொண்டேவருகின்றன.மக்கள் கஸ்டப்படுகின்றார்கள், போராளிகள் கஸ்டப்படுகின்றார்கள், அங்கு எமது இனமே இல்லாமல் போய்விடும் என்றும் அதனால் ஏதாவது ஒரு உடன் பாட்டிற்கு வரவேண்டும் என்றும் சிலர் கவலைப்படுகின்றார்கள்.

நல்லதோர் கரிசனை தான் ஆனால் இதே கரிசனையுடன் தான் பல பேச்சு வார்த்தைகளும் உடன்பாடுகளும் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டன. இறுதியாக கடந்த 2002 போர்நிறுத்த உடன்பாடும் ஏற்படுத்தப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று ‘ மக்கள் துயரங்களை போக்குதல்' ஆனால் இந்த காலகட்டம் தான் எமது போராட்டத்தினை சிதைத்தது மட்டுமல்ல ஆக குறைந்தது மக்களின் வாழ்வாதாரங்களை கூட நிறைவேற்ற முடியாமல் போனது.

உள்ளார்ந்த ரீதியாக ஆராயப்போனால் இவை புலப்படும். பன்னாட்டு அமைப்புக்களின் சில ஆக்க பூர்வமான முடிவுகளை கூட சிங்கள அரசு இழுத்தடித்து செயற்படுத்தியது. உதாரணமாக உலக வங்கியின் பொதுக்கட்டமைப்பினை குறிப்பிடலாம்.தவிர பல போராளிக் குழுக்கள் ,அரசியல் தலைமைகள், தனி நபர்கள், புத்திசீவிகள் அனைவரும் மக்களுக்கு புனர்வாழ்வு கொடுக்க வேண்டும் அவர்களது துன்ப துயரங்களை போக்க வேண்டும் என கூறிக்கொண்டு அரசாங்கம் சர்வதேசம் ஆகியவற்றிக்கு பின்னால் சென்று நடந்தவை என்ன?

குறிப்பாக யாழ்மாவட்டம் விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்ட்டு 18 வருடகாலமாக என்ன நடக்கின்றது மக்கள் துன்பதுயரங்கள் நீக்கப்பட்டதா? ஆக குறைந்தது ஊரடங்கு சட்டத்தினையோ மீன்பிடி சட்டத்தினையோ நீக்க முடிந்ததா? இரகசிய கைதுகள் காணாமல் போதல் ஆகியவற்றினை நிறுத்த முடிந்ததா? ஏன் மக்கள் தமது சொந்த இடங்களிற்கு சென்று மீழ குடியேற முடிந்ததா?அடுத்ததாக கிழக்கு மாகாணத்தை புனரமைப்பு செய்ய போவதாக தேர்தலில் பங்குபற்றி வெற்றி பெற்ற குழுக்களால் ஏதாவது செய்ய முடிந்ததா?

விடுதலைப் புலிகள் வெளியேற்றப்பட்ட பின்பும், ஆயுதக்க குழுக்கள் தமது நடவடிக்கையினை கைவிட்டு சனநாயகப் பாதைக்கு திரும்பி தேர்தலில் போட்டியிட்டு வந்த பின்னரும் கூட திருமலையிலும் அம்பாரையிலும் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.தவிர மக்கள் இன்னமும் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள், ஆனால் சிங்கள குடியேற்றம் நடைபெறுகின்றது. கொலை,கொள்ளை, ஆட்கடத்தல், சிறுவர் கொலைகள் நடைபெறுகின்றன. அனைத்தையும் சனநாயக வழிக்கு சென்றோர்களால் நிறுத்த முடிந்ததா? அவர்களால் கௌரவ சனாதிபதி அவர்களிற்கு என்று ஒரு கடிதம் மட்டுமே எழுத முடியும்.

சரி போரில் சிக்கிய பொதுமக்களிற்கும் போரில் பங்கு பற்றிய போராளிகளிற்கும் சனநாயக பாதையில் சென்றவர்கள் என்ற அடிப்படையில் என்ன செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்களை சமூக விரோத செயற்பாடுகளில் தூண்டி விடப்பட்டார்களே தவிர வேறொன்றும் இல்லை.

போராட்டகாலங்களில் நீண்டகாலம் மக்களோடு மக்களாக இருந்தவர்கள், அல்லது போராட்டத்தில் நீண்ட காலம் செயற்பட்டவர்கள், நீண்டகாலமாக அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்ட மக்கள், புத்திசீவிகள் யாவருமே காலத்திற்கு காலம் பல்வேறு கட்டங்களில் தங்களிற்கு ஏற்பட்ட சலிப்பு, நம்பிக்கை இன்மை, இயலாத்தன்மை, பயம், சுயநலன், மக்கள் துன்பதுயரங்களை சகித்து கொள்ளாமை ஆகியவற்றினால் பல சூழல்களில் பல கோணங்களில் இழுபட்டு சென்றுள்ளார்கள்.

தமிழீழ தேசியத்தலைவரை தவிர.பின்பு அதற்கு சனநாயக நீரோட்டம், மக்கள் நலன், வன்முறையற்ற பாதை என்ற நாகரீகமான ஆடைகளால் அலங்கரிப்பார்கள். ஆனால் அவர்களால் தமிழின படுகொலைகளை மட்டுமன்றி தமிழ் மக்களிற்கான புனர்வாழ்வினை கூட செய்யமுடிவதில்லை.காரணம் சிங்கள அரசின் கொள்கையே தவிர வேறொன்றும் இல்லை. சிங்கள அரசு தமது இன அழிப்பு கொள்கையினை ஒருபோதும் மாற்றப்போவது இல்லை.

சனநாயக வழியில் போராடினாலும் அல்லது மக்கள் நலன்கருதி ஏதாவது உடன்பாட்டிற்கு போனாலும் இது நடந்தே தீரும். ஆனால் தமிழ் மக்கள் மற்றும் தலைமை தான் முடிவு எடுக்கவேண்டும். நாம் மக்கள் நலன் கருதி எதிரியுடன் உறவாடி மக்கள் போராளிகளின் துயர்துடைக்கலாம் (நிச்சயமாக சாத்தியம் இல்லை) என எண்ணினால். சிங்கள அரசாங்கம் சர்வதேசம் மற்றும் தமிழ் மக்களின் தலைமையுடன் சேர்ந்து தனது இன அழிப்பினை செய்யும்.

எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்தால் (எந்த வழியிலாவது) அரசின் செயற்பாட்டினை ஒரு வன்பறிப்பு செயலாகவே பார்க்கப்படும்.எல்லா வழியிலும் போராடியும் அல்லது மீண்டும் சனநாயவழியிலும் சென்று புனர்வாழ்வு, புனரமைப்பு, என்ற மாயைக்குள் சிக்குண்டு எமது தாயகத்தில் இராணுவ பிடிக்குள் இருக்கும் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் இலட்சியத்தினை மறந்து செல்லலாம் ஆனால் புலம்பெயர்ந்த மக்கள் தான் எமது இலட்சியத் தீயினை அணையாது பாதுகாத்து இறுதி வரை கொண்டு செல்லவேண்டியவர்கள்.

புலம்பெயர்ந்த மக்களின் பொது வேலைத்திட்டம் என்பது இலட்சியத்தில் ஒன்று பட்டு நிற்றல் என்பதே ஆகும் ஏதாவது தீர்வுப் பாதை நோக்கிய செயற்பாடு என்பது தாயகம், தன்னாட்சி என்ற அடிப்படைகளை ஏற்றுக்கொண்ட திட்டமே ஆகும்.இலங்கையில் தமிழர் முஸ்லிம்கள் மலையகத்தமிழர் ஆகியோர் ஒரு பொது வேலைத்திட்டத்திற்கு உடன்பட முடியுமா?

எமது தேசியத்தலைவர் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையில் சமாதான காலத்தில் பணி செயவதற்கு மிகுந்த ஆர்வமாக இருந்தார் செயற்படுத்தியும் பார்த்தார் ஆனால் முடியவில்லை காரணம் மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களில் உறுதியான தலைமை இருக்கவில்லை இருந்தாலும் அவர்களிடம் தமது சொந்த நலனிற்காக பேரம் பேசும் நிலையிலேயே இருந்தனர்.

சொந்த மக்களிற்காக அல்ல.மக்களிற்காக பேரம் பேசுகின்றோம் மக்களிற்காக அரசுடன் சேர்ந்து போகின்றோம் என்று கூறிய முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் மக்களிற்கு எதனை செய்ய முடிந்தது. அபிவிருத்தி என்ற போர்வையில் சிறுபான்மை மக்களின் நிலங்களை அபகரிப்பதனை தடுத்து நிறுத்த முடிந்ததா? உதாரணமாக முஸ்லிம் மக்களிற்கு அம்பாரை மாவட்டத்தில் அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதனையும் சிங்கள தொகுதிக்குள் கிராமங்கள் விழுங்கப்டுவதனையும் குறிப்பிடலாம்.

ஏன் அண்மையில் முஸ்லிம் மக்களிற்கு சவூதி அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளையே அவர்களிற்கு கொடுக்க முடியவில்லை.யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை 18 வருட காலமாக இன்னமும் அரசாங்கம் புத்தளத்தில் அகதிகளாகவே வைத்திருக்கின்றார்கள். காரணம் இரண்டு முதலாவது புலி எதிர்ப்பு பிரச்சாரத்திற்காக இரண்டாவது ஒரு கபட நோக்கம் அதாவது அவர்களை புத்தளத்தில் குடியேற்றினால் அவர்களது பலம் அதிகரித்துவிடும் என்பதே ஆகும்.

ஏனெனில் 2002 ம் ஆண்டு சமாதான காலப்பகுதியில் கிழக்கு மற்றும் வன்னி மாவட்ட முஸ்லிம்கள் தமது சொந்த இடத்திற்கு வந்தார்கள் ஆனால் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீழ் திரும்புவதனை இலங்கை அதிகாரிகள் ஊக்குவிக்க வில்லை.அடுத்ததாக மலையக மக்களின் வாக்குகளை பிரிக்கும் நோக்கில் அவர்களது கிராமங்களிற்குள் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றார்கள் அதனை தடுக்க முடிந்ததா? அல்லது வாக்குரிமை இல்லாத மக்கள் அனைவரிற்கும் வாக்குரிமை பெற்று கொடுக்க முடிந்ததா?

சிங்கள அரசுடன் சேர்ந்து செயற்படுவது என்பது தம்மை தலைவர்கள் என்று கூறுபவர்கள் தமக்கான தொடர் இருப்பினையும் பாதுகாப்பையும் தேடிக்கொள்வதற்காகவே அன்றி வேறொன்றும் இல்லை அதனைத்தான் இனிவரும் சில தமிழ் தலைமைகளும் வேறு வேறு பெயர்களில் செய்யப் போகின்றார்களா?இங்குதான் மக்கள் விழிப்பாக இருத்தல் அவசியம். தற்போது நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் சகல விடயங்களும் காலத்திற்கு காலம் உடன்பட்டும் பரீட்சித்தும் பார்த்த தொன்றுதான்.

இன அழிப்பு என்பதும் கொடுமைகள் என்பதும் எப்போதுமே தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றது. ஆனால் சிலவேளை வெளிப்படையாகவும் வேகமாகவும் நடைபெறுகின்றன. ஆகவே இனஒழிப்பு நடவடிக்கையில் ஏற்ற இறக்கங்களிற்கு ஏற்ப நாம் செயற்படாது உதியான இலட்சியத்திற்கு ஏற்ப செயற்படுதலே காலத்தின் தேவை. எமது கடமையும் கூட.இருக்கின்ற மக்களையும் போராளிகளையும் காப்பாற்றுவதற்கு சர்வதேசத்தினை வலியுத்த வேண்டும், சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்

ஒவ்வொரு நாடுகளிலும் போராட்டங்களை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்,தேவையேற்படின் உள்ளுர் சமூககட்டமைப்புக்களையும், தமிழ்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கதைத்து அவர்களையும் பலப்படுத்த வேண்டும். தவிர தேசியத்தின் காப்பரணாக விளங்கும் புலம்பெயர்ந்த மக்களும் விடுதலைப்புலிகளும் சனநாயக நீரோட்டம் புனரர்வாழ்வு புனரமைப்பு, சேர்ந்து போதல் என்பது போன்ற தந்திரோபாயங்களிற்குள் குதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சிறையில் உள்ள போராளிகளை பாதுகாக்கவேண்டும்,மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கரிசனை வரவேற்க தக்கது ஆனால் ஆதே நேரம் 25,000 மாவீர்கள் உயிரிழந்த ஒரு இலட்சம் பொதுமக்கள் ஆகியோர்கள் தான் எமக்கு முடிவெடுப்பதற்கான அங்கீகாரத்தினை தந்தார்கள் என்பதனையும் மறந்துவிடக்கூடாது.தேசிய விடுதலைப் போராட்டத்தினை தொடர்ந்து செய்துகொண்டு உலகப் பொறுப்புணர்வாளர்களினை மீண்டும் மீண்டும் தட்டியெழுப்பி அவர்களிடம் சில பணிகளை ஒப்படைப்போம்.

ஊள்ளுர்மக்களிற்கு நம்பிக்கை ஊட்டி அவர்கள் ஊடாக அல்லது மாற்று வழிகளை கையாண்டு துயரங்களை போக்க செய்வோம்.போராடினோம் ஒன்றும் சரிவரவில்லை என்ற சலிப்பு பேச்சுக்களை விட்டு விட்டு இன்னும் இன்னும் எப்படி போராடலாம் என்பது பற்றி சிந்திப்போம்.சர்வதேச ஆதரவு பெறுவது அனைவருடனும் சேர்ந்து போவது என்பது எழிதான விடயம் அல்ல எழிதாக இருக்க வேண்டும் என்றால் இலட்சித்தினை கைவிடவேண்டும்

அவர்கள் சொற்படி கேட்டு நடக்கவேண்டும் இது தலைமைகளிற்கு சுகமான வேலையாக இருக்கும் அவர்களிற்கு சுக வாழ்க்கையும் பாதுகாப்பும் கிடைக்கும் ஆனால் மக்களிற்கு அமைதியான மையானங்கள் தான் இறுதியில் கிடைக்கும்.சர்வதேசமும் ஐக்கியநாடுகள் சபையும் அந்நிய தேசங்களும் ஆக்கிரமிப்பாளர்களும் சலிப்பு தன்மைகளையும் நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்துவதில் தலைசிறந்தவர்கள் தமிழர்களிற்கு மட்டுமன்றி அண்மைய காலங்களில் பல இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு கூட அவர்கள் தவறிவிட்டார்கள் இது திட்டமிட்ட செயல்.ஆனால் அந்த இனங்கள் இன்னமும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றன தற்போது சர்வதேசத்தின் பார்வைகள் அவர்கள் பக்கம் திரும்புகின்றன.

புலம்பெயர் மக்களே கீழ்காணும் விடயங்களில் உறுதியாக நின்று செயற்படுவோம்.

எமது சுய நிர்ணய உரிமையினை அடிப்படையாக கொண்ட உரிமைப்போராட்டத்திற்கான ஆதரவு திரட்டுதல்தமிழ் இனஒழிப்புக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் ஆதரவினை திரட்டுதல்இலங்கை ஒரு பயங்கரவாத, போர்க்குற்றம் புரியும் நாடு என்றும் அதனை சர்வதேச நாடுகள் புறக்கணிக்கவேண்டும் எனவும் போராடுதல்.நாட்டில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் சிறையில் உள்ள போராளிகள் ஆகியோர்களை சர்வதேச சட்டத்தின் படி நடாத்துதல்.

தமிழர் தாயக பிரதேசங்களில் இயல்பு நிலையினை ஏற்படுத்தும் பொருட்டு அனைத்து பெரும்பான்மை சிங்கள ஆயுதப்படைகளையும் வெளியேற்றுதல்.இவையே எமக்கு முக்கியமானவை ஆகும். சிங்கள அரச இயந்திரத்திற்குள் சமாதானம்,சகவாழ்வு, சனநாயகம், வன்முறையற்ற போராட்டம், சூழ் நிலைக்கு ஏற்ப ஒத்து போதல் என்ற பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடமாட்டார்கள் எம் மக்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடுவோம்.

நன்றிவணக்கம்

கே.பி.அறிவன்.

www.tamilkathir.com

Comments