விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17 ஆம் நாள் வீரமரணத்தை தழுவிக்கொண்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைக்ளுக்கு பொறுப்பான பிரதிநிதி திரு செல்வராஜா பத்மநாதன் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக விடுதலைப் புலிகளின் அனைத்துலக புலனாய்வு பிரிவின் தலைவர் அறிவழகன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இரண்டு அறிக்கைகளிலும் பல இரஜதந்திர நகர்வுகளின் தாக்கங்கள் உள்ளன.இருவரும் விடுதலைப் புலிகளின் அமைப்பின் முக்கிய உறுப்பினராவர் அறிவழகன் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் நிலை தளபதிகளில் ஒருவர்.
திரு பத்மநாதன் கடந்த ஜனவரி மாதம் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைக்ளுக்கு பொறுப்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர். விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர்.எனவே எந்த தகவல் சரியானது? எது தவறானது என்பது தொடர்பான குழப்பங்கள் எழுவது சகஜமே.
இந்த நிலையில் எமக்கு ஒரு தெளிவான சிந்தனையும், அரசியல் முதிர்ச்சியும் தேவை. விடுதலைப் புலிகளின் தற்போதைய நடவடிக்கைகளில் அதிகளவிலான இராஜதந்திர நகர்வுகள் பொதிந்துள்ளன. அதன் பின்னால் ஒரு அனைத்துலக வலைப்பின்னலை விடுவிக்கும் நடவடிக்கைகளும் உள்ளன.
அவர்கள் உலகிற்கு ஒரு தகவலை சொல்ல முற்பட்டுள்ளனர், அதே சமயம் தமிழ் மக்களுக்கும் அதனுாடாக பிறிதொரு தகவலை கூறமுற்பட்டுள்ளனர். பல அழுத்தங்களும் அதன் மூலம் நமக்கு தேவையான பல அனுகூலங்களும் திமைறைவில் நடைபெற்று வருகின்றன என்பதே இந்த இரு தகவல்களினதும் பொருள்.
இந்த இரு தகவல்களையும் உள்வாங்கிக்கொண்டு விடுதலையின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டிய பாரிய கடமை ஒன்று எம்முன்னால் உள்ளது என்பது மட்டுமே உண்மை. ஒரு விடுதலைப் போரில் சில தகவல்கள் நடைபெற்ற சம்பவங்களால் தோற்றுவிக்கப்படுபவை.
ஆனால் சில தகவல்கள் ஒரு சம்பவத்தை உருவாக்குவதற்காக தோற்றுவிக்கப்படுபவை.வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற தகவல்கள் எமக்கு கிடைப்பது இது முதல் தடவையல்ல. 1989களில் இந்திய இராணுவம் அவர் இறந்துவிட்டதாக தகவல்களை பரப்பியிருந்ததுடன் ஆதாரங்களையும் முன்வைத்திருந்தது.
ஆனால் 1990களில் தான் தலைவர் மீண்டும் மக்கள் முன் தோன்றினார். அதனை போலவே 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் தலைவர் இறந்துவிட்டதாக சந்திரிகா அரசும் தகவலை பரப்பியிருந்தது.சிறீலங்கா கடற்படையினர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை தேடும் பணியையும் முடுக்கிவிட்டிருந்தனர்.
ஆனால் பிரபாகரன் மீண்டும் வந்தார். நாலாம் கட்ட ஈழப்போரை பொறுத்தவரையில் அதன் இறுதிக்கட்டம் கடந்த ஜனவரி மாதம் 2ம் நாள் கிளிநொச்சி நகரம் படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகியிருந்தது. அந்த சமர்களில் விடுதலைப் புலிகள் தமது நிலங்களை தக்கவைப்பதற்கு அதிக சிரத்தை எடுக்கவில்லை.
மறுவளமாக நிலங்கள் குறுகிய போதும் அவர்கள் அச்சமடையவில்லை.மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடங்கள் தொடர்பான தெளிவான சான்றுகள் பலவற்றை அவர்கள் விட்டும் சென்றிருந்தனர்.
அதாவது கடந்த பெப்ரவரி மாதம் விசுவமடு பகுதியை படையினர் கைப்பற்றிய போது நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த இல்லம் ஒன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்தும் மேற்சட்டையையும், சில மருந்து பொருட்களையும், ‘கோல்ட் கொமோண்டோ' ரக துப்பாக்கியையும் விட்டு சென்றிருந்தனர்.
அதன் பின்னர் ஆனந்தபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் பல பிரத்தியேக ஆவணங்களை விட்டு சென்றிருந்தனர். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவரின் குடும்ப புகைப்படங்களும் வேறு சில பொருட்களும் தவறவிடப்பட்டிருந்தன.
இந்த சம்பவங்கள் மூலம் இராணுவமும் சிறீலங்கா அரசும் ஒரு முடிவுக்கு வந்திருந்தன. அதாவது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது முற்றுகைக்குள் இருப்பதாக அவர்கள் கருதிக்கொண்டனர். எனவே அவர்களின் முழு படை பலமும், கவனமும் அங்கு செறிவாகியிருந்தது.
கடற்படையின் முழு வளங்களும், வான்படையின் வேவு அணிகளின் முழுபலமும் அங்கு தான் மையம் கொண்டிருந்தன. ஆனால் யதார்த்தம் என்பது மாறுபட்டது. உண்மையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருப்பின் அவர் தொடர்பான தகவல்களை யாரும் எதிரியின் கண்ணில் படுமாறு பின்னால் விட்டு சென்றிருக்க மாட்டார்கள்.
122 மி.மீ பீரங்கிகளை எடுத்து செல்பவர்களுக்கு ஒரு கோல் கொமோண்டோ துப்பாக்கியை கொண்டு செல்வது கடினமானது அல்ல.இராணுவம் வீட்டின் கொல்லைப்புறத்திற்குள் நுழைந்த போது தான் தலைவர் தப்பியோடியிருப்பார் என்ற வாதங்களும் பலவீனமானவை.
எனவே சில சம்பவங்கள் அங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளன என்பது உண்மை. அதற்கான காரணங்கள் என்ன? இந்திய அரசும் சிறீலங்கா அரசும் இணைந்து அனைத்துலகத்தினதும், ஐ.நாடுகள் சபையினதும் ஆதரவுகளுடன் நடத்திய இந்த போரை முறியடிப்பதற்கு விடுதலைப் புலிகள் தனியாக ஆயுதங்களை மட்டும் நம்பியிருக்கவில்லை.அதனை முறியடிப்பதற்கு தந்திரங்களும், இராஜதந்திர அணுகுமுறைகளும் பெருமளவில் கையாளப்பட்டுள்ளன.
அனைத்துலக சமூகம் மீதான இராஜதந்திர அழுத்தங்களின் பெரும் பகுதியை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மேற்கொண்டிருந்தனர். தந்திரமான உத்திகளை விடுதலைப் புலிகள் களத்தில் பயன்படுத்திக் கொண்டனர். அதனுாடாகத்தான் இந்த போரின் இறுதிக்கட்டம் பயணிக்கத் தொடங்கியது.
பாதுகாப்பு வலையத்தின் மீது படையினர் மேற்கொண்ட தாக்குதலின் இறுதியான மூன்று நாட்களும் முக்கியமானவை. சனிக்கிழமை (16) தொடக்கம் திங்கட்கிழமை (18) வரையிலும் பல சம்பவங்கள் மிகவும் குறுகிய நேரத்தில் நடைபெற்றிருந்தன. பெருமளவான மக்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவான காயப்பட்ட மக்களையும், போராளிகளையும் பாதுகாப்பாக ஒரு மூன்றாம் தரப்பினுாடாக சரணடையவைக்கும் முயற்சிகளும் அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தன.
காயப்பட்ட போராளிகளை பாதுகாப்பாக நகர்த்தும் பொறுப்புக்கள் அரசியல்துறை பொறுப்பாளர் திரு பா.நடேசனிடமும், சாமாதான செயலக பணிப்பாளர் திரு புலித்தேவனிடமும், கட்டளை தளபதி கேணல் ரமேஸ் இடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஏனைய போராளிகளும் பெருமளவான தளபதிகளும் 17 ஆம் நாள் இரவு வரையிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பு தாக்குதல்களில் வெளியேறியிருந்தனர்.
ஆனால் மனிதாபிமான ரீதியாக மேற்கொள்ளப்பட்ட இந்த அணுகுமுறைகளை அனைத்துலக சமூகமும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களும் புறம்தள்ளியிருந்தன என்பது வேதனையானது. மேற்குலகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்த போதும் இந்தியா அதனை தடுத்துவிட்டது.
தமிழக முதல்வர் கருணாநிதி, அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களம், சிறீலங்காவிற்கான அமெரிக்கா துாதுவர் றொபேட் ஓ பிளேக், ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அனைத்துலக செஞ்சிலுவை சங்கம், அனைத்துலகத்தின் மூத்த ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரிடமும் காயமடைந்த மக்களினதும், போராளிகளினதும் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் எதுவும் நடைபெறவில்லை.இந்த நிலையில் சிறீலங்கா அரசினை பரிந்துரை செய்திருந்தார் ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார். அதாவது சரணடைபவர்களின் பாதுகாப்புக்களை சிறீலங்கா அரசு உறுதிப்படுத்தும் என நம்பியார் தெரிவித்திருந்தார்.
அதற்கு பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் தரைம்ஸ் நாழிதழின் ஊடகவியலாளர் மரி கொல்வின் என்பவரின் தகவல் சாட்சியாக உள்ளது. ஆனால் சரணடைந்தவர்களை சிறீலங்கா அரசு திட்டமிட்ட முறையில் படுகொலை செய்துள்ளது. அதற்கு ஆதரவாக இந்தியாவும், ஐ.நாவும் செயற்பட்டுள்ளதும் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே கடந்த 18 ஆம் நாள் காலை சிறீலங்கா நேரம் 8.00 மணியளவில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து ஒரு மூன்றாம் நிலை பொறுப்பாளரினதும், போராளியினதும் குரல்கள் அனைத்துலகத்தை எட்டியிருந்தன. அவர்களின் குரல்களில் இருந்து அவர்கள் மரணத்தின் இறுதி மணித்துளிகளை நெருங்கிக்கொண்டு இருக்கின்றனர் என்பது தெளிவாகியது.
அவர்களுக்கு சில நுாறு மீற்றர் தொலைவில் இராணுவத்தின் வெடியோசைகளை தொலைபேசி ஊடாக கேட்க முடிந்தது. ஆனால் அவர்கள் மரணத்தை கண்டு அஞ்சவில்லை. தாம் இல்லாவிட்டாலும் இந்தப் போராட்டத்தை எமது தேசியத்தலைவரின் கரங்களை பலப்படுத்தி நீங்கள் முன்னெடுத்து செல்லவேண்டும் என்ற செய்தியை புலம்பெயர்ந்த மக்களுக்கு தெரிவிக்குமாறு கூறினர்.
ஆற்றமுடியாத வேதனை நெஞ்சத்தை நிறைத்து கொண்டது. எனினும் எந்த வினாடியும் தொலைதொடர்பு துண்டிக்கப்படலாம் என்ற நிலை, அவர்களின் உறவுகளை பற்றி கேட்கவில்லை, எமது உறவுகளை பற்றி கேட்கவில்லை, மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்ற போதும் இறுதியாக எஞ்சியிருந்த ஒரு சில வினாடிகளில் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தான்.
எமது தலைவர் எங்கே?அங்கிருந்து வந்த பதில் தெளிவானது. தலைவர் பாதுகாப்பாக உள்ளார். நீங்கள் போராட்டத்தை தொடருங்கள் என்பது தான். அதனுடன் தொடர்பும் நின்று போனது. சாகும் தருணத்திலும் தலைமையினதும், போராட்டத்தினதும் நினைவுகளை சுமந்து கொண்டு அந்த இரு குரல்கள் மட்டுமல்ல பல நுாறு மக்களினதும், காயமடைந்த போராளிகளினதும் குரல்கள் அந்த கடற்கரை மணலில் அடங்கிப்போய் விட்டன.
ஆனால் அவர்கள் எம்மிடம் விட்டுச்சென்ற பணி பெரியது.எனவே இன்று உலகெங்கும் ஒருங்கிணைந்து ஒரு குரலாக ஒலிக்கும் தமிழ் தேசியத்தின் ஆன்மாவை நாம் அணையவிடலாகாது, அதன் அழுத்தம் உலகின் நகர்வுகளில் பல மாற்றங்களை எற்படுத்தியிருந்ததை நாம் புறம்தள்ளவும் முடியாது.
- இழந்துபோன எமது உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை.- சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மீதான விசாரணைகள் அனைத்துலகத்தில் மேற்கொள்ளப்படும் வரை.- சிறீலங்காவின் பொருளாதாரத்தின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் வரை. - வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த போராளிகளையும் பொதுமக்களையும் படுகொலை செய்தவர்களை தண்டிக்கும் வரை. - அதற்கு உதவியாக இருந்த ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரை அதன் பதவியில் இருந்து துரத்தும் வரை.- பல ஆயிரம் மக்களின் படுகொலைகளை பார்த்தும் பேசாமடைந்தையாக இருந்த ஐ.நா அதற்கான பதிலை தரும் வரையில் நாம் போராடத்தான் வேண்டும்.
சிறீலங்கா அரசினை பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளை முற்றாக முறியடித்துள்ளதாக தெரிவித்துவருகின்றது. ஆனால் விடுதலைப் புலிகளின் இறுதி நடவடிக்கை அந்த பிராந்தியத்தில் புதிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதே யதார்த்தமானது. அதாவது தமிழீழத்தை உருவாக்குவதற்கான அரசியல் அனுகூலங்களும், இராஜதந்திர உதவிகளும் முன்னரை விட தற்போதே பிரகாசமாக உள்ளன.
வேல்ஸ் இல் இருந்து அருஷ்
நன்றி
ஈழமுரசு(29.05.09)
www.tamilkathir.com
Comments