பிரபாகரன் தொடர்பான சிறீலங்காவின் கூற்றில் இருக்கும் பொய்த்தன்மைகள்

குற்றப்புலனாய்வின் அடிப்படையில் ஒரு பெரிய சூட்டுச் சம்பவத்தில் இறந்து கிடப்பவர் மிகச் சிறந்த முறையில் படத்திற்கு நிற்பவர்போல் கிடந்தார் என்பது சாத்தியமற்றதாகும்.


அவர் பல தரப்பட்ட மக்களுக்கு பல முகங்கள் கொண்டவர். விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணமானது சிங்கள மக்களுக்குப் பெரு மகிழ்ச்சியையும், தமிழ் ஆதரவாளர்களுக்கு பெரும் கவலையையும், அவரின் இறப்பு இலங்கைக்கு அமைதியைக் கொண்டுவரும் என நினைப்பவர்களுக்கு ஆசுவாசத்தையும் வழங்கியுள்ளது.

அவர் உண்மையில் இறந்துவிட்டாரா? பத்திரிகையாளர்களை அனுமதிக்காததையும், சர்வதேச பகுப்பாய்வுக்கு அனுமதிக்காததையும் பார்க்கும்போது நம்பகத்தன்மை அற்றுப்போகிறது. அரசாங்கத்தின் முதல் அறிக்கையிலேயே நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். பிரபாகரன் போர்க்களத்திலிருந்து அம்புலன்ஸ் வாகனத்தில் தப்பியோடும்போது கொல்லப்பட்டதாக அறிவித்தனர்.

அவர் இப்படி ஒரு முட்டாள்த்தனமான காரியத்தில் ஈடுபட்டிருக்கமாட்டார். அதற்கு சந்தர்ப்பமே இல்லை. நினைத்துப்பாருங்கள்! சிறீலங்கா இராணுவம், புலிகளின் தலைவரையும், போராளிகளையும் ஒரு சதுரக் கிலோ மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் முடக்கிவிட்டதாகக் கூறியது. அந்தப்பகுதி மிகச் சிறியதும், இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டதுமாகும்.

ஒரு ஈருருளியில் சென்றால்கூட கண்டுபிடிக்கப்பட்டுத் தடுக்கப்படக்கூடிய நிலப்பரப்பு. இந்த அடிப்படையில் அவர்கள் எப்படி அம்புலன்ஸ் வண்டியில் யாரும் அறியாமல் தப்பமுடியும் என்று நினைத்திருக்கக்கூடும். அவர் அப்படியானதொரு சிறிய நிலப்பரப்பிலிருந்து தப்பவேண்டுமாயின் நிலக்கீழ்ப் பாதையிலேயே தப்பியிருக்கலாம்.அதன்பிறகு பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகப் படம் வெளியிடப்பட்டிருந்தது.

முதலாவது கேள்வி:

அவர் அம்புலன்ஸ் வாகனத்தில் கொல்லப்பட்டிருந்தால் அவரது உடல் எப்படி ஆற்றங்கரையில் கிடைத்திருக்கும்? இந்தப்படம் செயற்கையானது என்று தெரிகிறது. தலை பிளக்கப்பட்ட நிலையில் முகம் தெளிவாகவும், கண்கள் அகல விரிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. இது அவர் கண்களை அடையாளம் காட்டி நம்பவைக்க சிலர் செய்த உத்தியாக இருக்கலாம்.

இது எனக்குச் சில வருடங்களின் முன்னர் டெல்லி அன்சால் பிளாசாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தீவிரவாதியின் படம் பல பத்திரிகைகளின் முன்பக்கத்தை நிரப்பியிருந்ததை நினைவு படுத்துகிறது.

அப்படத்தில் தீவிரவாதி கையில் துப்பாக்கியுடன் இறந்திருந்த விதம் நம்பகத்தன்மை அற்றதாக இருந்தது. உடனடியாகவே இப் படம் சோடிக்கப்பட்டு தயார்ப்படுத்தி எடுத்த படம் என்பது விளங்கியது. நான் எத்தனையோ போராளிகளின், மக்களின், இராணுவத்தின் உடல்கள் போர்க்களத்தில் இறந்துகிடந்ததைப் பார்த்திருக்கின்றேன்.

குற்றப்புலனாய்வின் அடிப்படையில் ஒரு பெரிய சூட்டுச் சம்பவத்தில் இறந்து கிடப்பவர் மிகச் சிறந்த முறையில் படத்திற்கு நிற்பவர்போல் கிடந்தார் என்பது சாத்தியமற்றதாகும். தொடர்ச்சியான விசாரணைகளும் இந்த சந்தேகத்தையே வெளிப்படுத்தின.

இதே உணர்வுதான் பிரபாகரன் உடல் என்று காட்டப்பட்ட படத்தைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்டது. சந்தேகத்திற்கு அப்பால்கூட இந்தப் படத்தைப் பார்த்தபோது அதில் ஒரு குழறுபடி இருந்தது தெரிந்தது.

முதல் அறிக்கையில் அம்புலன்ஸ் எறிகணை வீச்சிற்கு உள்ளாகி எரிந்து முற்றாக அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. நீங்கள் ஒரு வாகனத்தை உந்துகணையாலோ, எறிகுண்டுகளாலோ தாக்கினால் அது வெடித்துச் சிதறும்.

பிரபாகரன் வாகனத்துள் இருந்திருந்தால் அவர் சிறு துகள்களாகச் சிதறியிருப்பார். அல்லது சதைப்பிண்டமாகவாவது அடிக்கப்பட்டிருப்பார்.இவை அனைத்துமே திட்டமிட்டுச் சோடிக்கப்பட்டவையாகவே தெரிகிறது.

அதற்கப்பால் பிரபாகரனை கருணாவாலும், தயா மாஸ்ரராலும் அடையாளம் காட்டவைக்கப்பட்டது. இது பொலிஸ் பாதுகாப்பிலுள்ள கைதிகள் தரும் வாக்குமூலத்திற்கு ஒப்பானது. இதன்மூலம் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால் அரசு தரப்பில் சொல்லப்பட்ட செய்திகள் எதிலும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.

‘பிரபாகரன் ஒருநாளும் உயிருடன் பிடிபடமாட்டார்' என நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். அத்துடன் நான் இன்னுமொன்று சொல்ல விரும்புகிறேன். அப்படி அவருக்கு வேறு வழிகள் இல்லாவிட்டாலும், அவர் தனது உடல்கூட எதிரியிடம் அகப்படவிடமாட்டார். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1.அவர் ஒரு சிறந்த இராணுவவியல் மாணவர். அவரது உடல் கிடைத்தால் அதற்கு வெற்றிகொண்ட சிங்கள இராணுவம் எவ்வளவு அவமரியாதைகள் செய்யுமென்பது அவருக்குத் தெரியும். எல்லா வெற்றி பெற்ற இராணுவமும் வரலாறு வழியாக இதையே செய்துள்ளனர்.

எனக்கு இன்னும் ஆப்கான் தலைவர் நஜிபுல்லா தலிபான் இராணுவத்தால் கொல்லப்பட்டு, விளக்குக் கம்பத்தில் தூக்கில் இடப்பட்டு அவரது மூக்குத் துவாரங்களில் சிக்கரட் பற்றவைத்து உடல் எங்கும் அடிக்காயங்களும் காணப்பட்ட நிலையிலேயே இருந்தார்.

நான், கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் பெண் போராளிகளின் உடல்கள் ஆடை களையப்பட்டு அம்மணமாக இழுத்துவந்து சித்திரவதை செய்த காட்டுமிராண்டி சிங்கள இராணுவத்தின் செயல்களை காணொளியில் பார்த்துள்ளேன்.

பலர் பிரபாகரனை வெறுத்துள்ளனர். ஆனால் பிரபாகரனை அனைவரும் புரிந்துகொள்ளல் வேண்டும். அவர் ஒரு அபரிவிதமான பெருமைக்குரியவர். அவர் தனது வாழ்க்கை தமிழ் மக்களின் கௌரவத்தையும், எதிர்காலத்தையும் மீள்நிறுத்தப் போராடுவதில் பெருமையுடையவர்.

அவர், தன் உடல் எதிரிகளால் கைப்பற்றப்பட்டு தனது தமிழ் இனத்திற்கு நிரந்தர அவமானத்தையும், கௌரவ இழப்பையும் ஏற்படுத்த ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டார். அவர் சயனைற் அருந்துவதோடு மட்டுமன்று தன்னை மெய்ப் பாதுகாவலர்களால் சுடவைத்தும் தனது இறப்பை உறுதிசெய்திருப்பார். அத்தோடு தனது உடலை சிதறச்செய்து தூள் தூளாக்கி அடையாளமிழக்கச் செய்திருப்பார்.

2.இரண்டாவது காரணமாக அவர் தனது உடல் கண்டுபிடிக்கப்படுவதை ஏன் தவிர்த்திருப்பாரெனில், நினைவுபடுத்திப் பாருங்கள் பிரபாகரனின் அபிமானத்திற்குரிய நாயகனாகிய சுபாஸ் சந்திரபோஸ் இன்றும் உயிருடன் இருப்பதாகவே பலரால் எண்ணப்படுகிறார்.

இந்த முடிச்சானது எதிர்காலத்தில் மறைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும். பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்படாவிட்டால் அவர் உயிருடன் உள்ளாரா? இல்லையா என்பது யாராலும் நிரூபிக்கப்படாத இராணுவ இரகசியமாகவே இருக்கும். மக்கள் மனதில் அவர் என்றுமே உயிருடன் இருப்பார்.

அப்படி அவர் இருந்திருந்தாலும் அவரது கொள்கைகள் மக்களால் கொண்டுசெல்லப்படும்.நான் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்று நம்பவில்லை. அவரது உயிர் அவரால் மட்டுமே எடுக்கப்படக்கூடியது. அவர் அப்படி தன்னை மாய்த்துக்கொள்வதற்கு தனது தளபதிகளுடன் முடிவு செய்திருந்தால் அந்த நாள் மே 16 ஆகவே இருந்திருக்கும்.

The Weekபத்திரிகையில் எனது கடைசிக் கட்டுரையில்(Cruching Tiger May 3)பிரபாகரனின் அடுத்த செயற்பாடுகளைப் பற்றி நான் எழுதுகையில் ‘அவர் இந்திய தேர்தல்களை மிக அவதானமாக உன்னிப்பதையும் டெல்லி அரசில் மாற்றங்கள் ஏற்படுவதையும் அவதானித்தார்.

அத்தோடு அவர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் வாழ்விற்கான மாபெரும் ஆதரவு ஏற்படுவதையும் பார்த்திருந்தார். அத்தோடு பராக் ஒபாமா எமது பிரச்சினையை சரியாக ஆய்வு செய்வார் என்றும் பார்த்திருந்தார்.' என எழுதியிருந்தேன்.

மே 13ல் சிறீலங்காவின் மனிதாபிமான அவலங்களையிட்டு ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் புலிகள் உடனடியாக ஆயுதங்களைக் களையவேண்டுமென்றும், நூற்றுக்கணக்கான மக்களைப் பலிகொள்ளும் இனஅழிப்பிற்கான எறிகணை வீச்சுக்களை உடனடியாக அரசாங்கம் நிறுத்தவேண்டுமென்றும் கூறினார்.

புலிகளின் பேச்சாளரும் ஒபாமாவின் கூற்றிற்கு புலிகள் இணங்குவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் சிறீலங்கா அரசாங்கமானது இதனை நிராகரித்து, பிரபாகரனின் கைப்பிடியில் இருந்த கடைசித்துண்டு நிலத்தையும் பறிப்பதற்கு தனது கொலைவெறித் தாக்குதலை நிறுத்தாது தொடர்ந்தது.

மே 16ல் இந்தியத் தேர்தல் பெறுபேறுகள் வந்தபோது அனைத்து ஊடக பிரச்சாரங்களுக்கும் எதிராக கொங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டது. இதன்மூலம் பிரபாகரனுக்கு எதிரானவர்கள் தங்களது அதிகாரத்தில் மேலும் ஐந்து வருடங்கள் தக்கவைக்கப்பட்டார்கள். அதேபோல் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான வைகோ ஓரங்கட்டப்பட்டார்.

பிரபாகரன் இந்த யுத்தத்தை தனியாக எதிர்கொண்டார். அவருக்கு இந்த யுத்தத்தில் சந்திக்கப்போகும் தனது இழப்புக்கள், போராளிகளின் இழப்புக்கள், புலம்பெயர் மக்களிடம் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் என்பவற்றை அவர் அறிந்திருந்தார். இது ஒரு பயங்கரமான உண்மையாகும்.

அடுத்த ஐந்து வருடங்களிற்கு இந்தியாவின் மேலாண்மையில் இருக்கும் கொங்கிரஸ் அமைப்போடும் ஆண்மையற்ற சர்வதேச சமூகத்தோடும் மோதுவதென்பதும் தம்மை தக்கவைப்பதும் கடினமானது. இன்றைய சர்வதேச நடைமுறைகளில் குறுகியகாலத்தில் ஈழம் அமைப்பதென்பது சாத்தியப்படாததொன்றாகும்.

சென்றகாலத்தில் பிரபாகரன் ஓரங்கட்டப்பட்டபோது அவர் மீண்டும் அனைத்தையும் அடியிலிருந்தே ஆரம்பித்தார். இதன்மூலமே நான் சொல்கிறேன், அவர் போரைத் தொடர்வாரென்று. ஆனால் கொங்கிரசின் வெற்றியும், தமிழ்நாட்டின் அரசியல் தோல்வியும், சிறீலங்காவின் பிடிவாதப்போரும், அமெரிக்க ஜனாதிபதியின் சொற்களைக்கூட மறுதலிக்கும் சிறீலங்கா அரசாங்கத்தின் போக்கும் பிரபாகரனை இறுதிவரை யுத்தமிடத் தூண்டியிருக்கலாம்.

எல்லோரும் வாசிக்கவேண்டிய 1964ம் ஆண்டு வெளிவந்த ஆஸ்திரிய எழுத்தாளரான Stefan Zwei‘நேற்றைகளின் உலகம்' நாவலின் முன்னுரையில்Harry Zohn தனது வாழ்க்கை 3 தடவைகள் இரண்டு உலக யுத்தத்திற்கு மத்தியில் ஆரம்பத்திலிருந்து மீளத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.

அவர் தனது நாலாவது தடவையாக பிரேசிலில் இந்த நாவலின் பின்னர் புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார். ஆனால் Zweig யும் பிரபாகரனும் நேர் எதிர்க்கொள்கையுடையவர்கள். ஆனால் நான் பிரபாகரனின் மனநிலை மே 16ல் எப்படி இருந்திருக்குமென்று நினைக்கின்றேன்.

எனது கொள்கைக்கு வலுச்சேர்ப்பது என்னவெனில் புலம்பெயர்நாட்டிலுள்ள மக்களில் பலர் தங்களுக்கு வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவர்கள் கண்ணீருடன் விடைபெற்றதாகவும் சொன்னார்கள். அதியுயர் தரங்களில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவப்பிரிவு இறந்துவிட்டதாகவும் அல்லது கூட்டாகத் தற்கொலை செய்யப்பட்டதாகவும் அவ் அழைப்பில் சொல்லப்பட்டதாகக் கூறினார்கள்.

மே 16 இந்த உலகத்தில் பிரபாகரனும் அவரது 300 அதிகாரி நிலைப் போராளிகளும் கூட்டுத் தற்கொலை செய்யப்போவதாகவும், தம்மை வெடிக்க வைக்கப்போவதாகவும் உலகம் முழுவதும் வதந்திகள் பரப்பப்பட்டன. சிறீலங்கா அரசாங்கத்தின் இராணுவ இணையத் தளமானது புலிகள் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட குண்டு வெடிப்புகளின் சத்தங்கள் மிக அண்மையில் கேட்பதாக அறிவித்திருந்தார்கள்.

இது புலிகள் கூட்டாகச் செய்த தற்கொலைச் சத்தங்களே என்று பொருள்படச் சொல்லியிருந்தார்கள். சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போரில் தனது வெற்றியை அறிவித்தவேளையில் மே 17 நண்பகல் விடுதலைப் புலிகளின் வெளியுறவுச் செயலாளரின் அறிக்கையில் இந்த யுத்தமானது ஒரு கசப்பான முடிவை எட்டியுள்ளது. எமது மக்களின் கொடூரப் படுகொலைகளை நிறுத்துவதற்கு எங்களுக்கு ஒரே ஒரு தெரிவே எஞ்சியுள்ளது.

நாம் எமது துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்கின்றோம். இவ் அறிக்கையில் சர்வதேச சமூகத்தின் மௌனத்தைக் கண்டித்தும், சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கிய அவசர அழைப்புக்களை நடைமுறைப்படுத்த சக்தியற்ற சர்வதேச சமூகத்தைச் சாடியும் இருந்தது.

விரக்தி, துக்கம், கசப்பான முடிவு போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த எந்த உதவியும் இன்றி போராடினோம். ஆனால் மக்கள் அழிவுகளை எம்மால் காப்பாற்ற முடியவில்லை என்றும் இருந்தது.

இது ஒரு தற்கொலை அறிக்கை வாசிப்பதுபோன்று இருந்தது. எந்தவிதமான காரணங்களுக்கப்பாலும் பிரபாகரன் மே 17 தற்கொலை செய்திருப்பார் என்பதை நான் நம்பமாட்டேன். பிரபாகரன் சகுனங்களிலும், எண்களிலும் நம்பிக்கை உடையவர். அவர் என்னிடம் முன்பு 8 இலக்கமானது மிகவும் அதிர்ஸ்டமான இலக்கம் என்று கூறியுள்ளார்.அவர் பிறந்ததும் நவம்பர் 26. இதை நான் அறிவித்திருந்தும் அந்த நாட்களில் சிறீலங்கா அரசாங்கம் இதைக் கவனத்தில் எடுக்கவில்லை.

ஆனால் சாள்ஸ் அன்ரனி இவற்றில் நம்பிக்கை குறைந்தவர். இராணுவத்தை கிலிகொள்ளச்செய்த அவரது பல தாக்குதல்கள் 26ம் திகதியிலேயே அமைந்திருந்தன. 2006 ஏப்ரல் 26ல் விடுதலைப் புலிகளின் தற்கொடைக் குண்டுதாரி சரத் பொன்சேகாவைக் குறிவைத்து தாக்குதல் நடாத்தியிருந்தார். சரத் பொன்சேகாவே பிரபாகரனின் வாழ்க்கைக்கால எதிரியாவார்.

பிரபாகரன் இலக்கங்களுடனான நம்பிக்கையைத் தெரிவித்தபோது, நான் Cheiro வைப் படித்திருந்தேன். அவரின் கூற்றின்படி 8ம் இலக்கத்தில் பிறந்தவர்களது வாழ்க்கை அதியுச்ச வெற்றியை அல்லது அதியுச்ச வீழ்ச்சியைச் சந்திக்கும் என எழுதியுள்ளார். மே 18 அதிகாலை 3 மணியளவில் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் பா.நடேசன் அவர்களும், சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகம் புலித்தேவன் அவர்களும் தமது ஐரோப்பியத் தொடர்புகளுக்குத் தொடர்புகொண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக தம்மையும், தம்மோடு சேர்ந்த 1000 காயமடைந்த போராளிகளையும், மக்கள் பணியாளர்களையும் அங்கிருந்து வெளியேற்ற உதவுமாறு கோரியிருந்தனர்.

ஆனால் சில மணித்தியாலங்களின் பின்னர் சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சு நடேசன் அவர்களதும், புலித்தேவன் அவர்களதும், அன்ரனியுடையதும் உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்திருந்தது. விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசாங்கத்தின் துரோகத்தனத்தை குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அவர்களின் கூற்றின்படி சர்வதேசத் தொடர்புகள் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும், சிறீலங்கா இராணுவத்துடன் போரை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு பேசியிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அவர்களின் உத்தரவின்படி நடேசனும், புலித்தேவனும் ஆயுதமின்றி வெள்ளைக்கொடியோடு அருகில் இயங்கிக்கொண்டிருந்த சிறீலங்கா இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவினரிடம் சென்றனர்.

ஆனால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இது உண்மையாகும் பட்சத்தில், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இது ஒரு போர்க்குற்றமாகும். சிறீலங்காவின் இணையத் தளங்களில் வெளியிடப்பட்ட இறந்த உடலங்களின் படங்களின் எண்ணிக்கை, இந்தப் போரானது ஒரு மாபெரும் இரத்தப்படுகொலையின் பின்னரே முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

மே 18 ல் சிறீலங்கா இராணுவம் சாள்ஸ் அன்ரனியின் உடலத்தின் படத்தை வெளியிட்டிருந்தனர். அதுவரைகாலமும் போரில் விருப்பற்று இருப்பதுபோல் ஒரு பருமனான களைப்படைந்த சாள்ஸ் அன்ரனியின் படங்களையே வெளியிட்டிருந்தனர். இப்போது அவர்கள் இரு படத்தையும் வெளியிட்டிருந்தனர்.

ஒன்றில் உயிருடனும், மற்றொன்றில் உடலமாகவும். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் இரண்டிலும் நீலநிற உடையே அணிந்திருந்தார். அப்படியாயின் அவர்கள் சொல்ல நினைப்பது நடேசன், புலித்தேவன் அவர்களோடு சேர்ந்து சாள்ஸ்சும் பொதுமகன்போல் உடையணிந்து வெள்ளைக் கொடியுடன் வந்திருக்க வேண்டும்.

படங்களில் அவர் சுத்தமாகவும், சவரம் செய்தும், அமைதியாகவும் காணப்படுகிறார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை சிறிது நேரத்தின்பின் நடந்த படுகொலையில் இவர்களின் முகங்கள் முழுமையாக மாற்றமடைந்துள்ளது. எல்லா விடுதலைப் புலிப் போராளிகளும் சீருடைகளையே அணிந்திருப்பார்கள்.

சாள்ஸ் அன்ரனி சண்டையிட்டிருந்தால் அவரும் அப்படியான உடையிலேயே இருந்திருப்பார். ஆனால் இராணுவத்தின் பார்வையில் சாள்ஸ் அன்ரனியும் மற்றவர்களும் பொதுமக்களின் உடைகளில் தற்கொலைத் தாக்குதலுக்கு வந்ததாகவும் கூறினார்கள்.ஆனால் அவரின் உயிருடன் உள்ள படங்கள் இக்கூற்றுக்கு ஆதாரம் சேர்ப்பவையாக இல்லை. ஆனால் அரசாங்கத்திற்கு பிரபாகரனின் உடலத்தின் படத்தை வெளியிடுவதற்கு ஒரு முழுநாள் தேவைப்பட்டிருக்கின்றது.

முன்னர் கூறியபடி பிரபாகரன் தனது படையணியுடன் வெடித்துச் சிதறியிருந்தால் அங்கு யாருமே இருந்திருக்கப் போவதில்லை. அப்படியாயின் அரசாங்கத்திற்கு இந்தப் பிரபாகரனின் ‘இரட்டை' எங்கிருந்து வந்தது. இது எப்படிச் சாத்தியமானது. இதற்கான பதில் சுலபமானது. இராணுவத்திற்கு ஒரு இறந்த உடலத்தைக் காட்டவேண்டிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இல்லாவிட்டால் யாரும் பிரபாகரன் இறந்ததாக நம்பமாட்டார்கள்.

சிறீலங்கா இராணுவம் தம்மைத் தாமே வெடிக்கவைத்து இறந்ததாகச் சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கவும்மாட்டார்கள் அதை இல்லையென்று ஆதாரம் காட்ட பிரபாகரனும் வெளியே தோன்றியிருக்கமாட்டார். ஆகவே அவர்களுக்கு ஒரு உடலம் காட்டப்படுவது அத்தியாவசியமானது. அத்தோடு மே 20ல் சிறீலங்கா பாதுகாப்பு அரசு தனது இணையத் தளத்தில் ‘அவர் எப்படி இறந்தார் என்பதை நாங்கள் வெளியிடப்போவதில்லை' என்று ஒரு ஆச்சரியத்தக்க அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

ஆனால் இந்தக்கதை மேலும் சுவாரசியமானது. விடுதலைப் புலிகள் அன்ரனி பற்றி மௌனமாகவே இருந்தனர். ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்தனர். ஆனால் சிலர் விடுதலைப் புலிகள் இந்த வதந்தியை வெல்வதற்கு பிரபாகரன் ஒரு தொலைக்காட்சிச் செவ்வியை வழங்குவதன் மூலமே அவர் உயிருடன் இருப்பதை உறுதிசெய்யமுடியுமென நம்புகின்றனர்.

ஆனால் இப்படி நடந்தால் அவர் தனது போலியை வைத்தே இந்தத் தோல்விக்குரிய போரை நடத்தியதாகவும் கூறுவார்கள். அத்தோடு அவரது அனைத்து அசைவுகளும் சிறீலங்கா புலனாய்வுத்துறையால் கண்காணிக்கப்படும். இது அவர் உயிருடன் இருந்தால்மட்டுமே. ஆனால் இத்தனை குழப்பங்களிற்கும் சர்வதேச சமூகம் சிறீலங்கா அரசாங்கத்தை பிரபாகரனின் மரபணு சோதனையையும், அன்ரனியின் மரபணுச் சோதனையையும் கனடாவிலும், ஐரோப்பாவிலும் வாழும் அவரின் சகோதரிகளுடன் ஒப்பிட்டு நிரூபிக்கும்படி வற்புறுத்த முடியும்.

இதன் மூலம் அனைத்துக் குழப்பங்களையும் அடக்கிவிட முடியும். இந்தியாவும், இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், நோர்வே ஆகியோர் இவ் அழுத்தத்தை சிறீலங்கா மீது திணிக்க முடியும்.

தமிழில் - சோழன்

நன்றி

ஈழமுரசு(29.05.09)

www.tamilkathir.com

Comments