படைத்துறை ஆய்வாளர் அருஷ் ஈழமுரசிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி
கேள்வி: விடுதலைப் புலிகளை முற்றாக முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது, சிறீலங்கா அரசின் இந்த அறிவிப்பின் அர்த்தம் என்ன?
பதில்: கடந்த 2006 ஆம் ஆண்டு உக்கிரமடைந்த நான்காவது ஈழப்போரின் இறுதிச்சமரை சிறீலங்கா அரசு பாரியதொரு இனப்படுகொலையுடன் நிறைவு செய்துள்ளதே தவிர விடுதலைப் புலிகளோ அல்லது தமிழ் மக்களின் உரிமைக்கான போரோ முடிந்துவிட்டதாக அது அர்த்தமாகாது.ஏனெனில் விடுதலைப்போர் என்பது அதன் குறிக்கோளை அடையும் வரை ஏதோ ஒரு வடிவத்தில் தொடரவே செய்யும். அது ஆயுதப் போராட்டமாகவோ, அரசியல் போராட்டமாகவே அல்லது இராஜதந்திர அணுகுமுறைகளாகவோ இருக்கும்.
நாலாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் மாபெரும் சக்தியாக மாற்றம் பெற்றுவிட்டனர். எங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் விடுதலைப் புலிகள் அவர்களின் உரிமைக்கான விடிவெள்ளியாக மிளிர்ந்த வண்ணம் தான் உள்ளனர். இன்று அவர்கள் உலெகெங்கும் பரந்து பாரிய விருட்சமாக கிளைபரப்பி நிற்கின்றனர்.பாரிய படை வளம், அனைத்துலகத்தின் இராணுவ தொழில்நுட்ப உதவிகள் கொண்டு விடுதலைப் புலிகளின் மரபுவழியிலான போரிடும் ஆற்றலை வேண்டுமென்றால் குறைத்துவிட முடியும். ஆனால் அந்த அமைப்பை முற்றாக அழிப்பது என்பது இயலாத காரியம்.
விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றது. ஆனால் உண்மையில் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முற்றான அழிவை சந்தித்திருந்தால் அதன் ஏனைய கட்டமைப்புக்கள் சிதறிப்போயிருக்கும். ஆனால் அவ்வாறு நிகழ்ந்ததற்கான சான்றுகள் எதனையும் நாம் காணமுடியவில்லை.மேலும் தற்போது இந்திய அரசும் சிறீலங்கா அரசும் இணைந்து அனைத்துலகிலும் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களை சீர்குலைத்துவிட முயன்று வருகின்றன. அதில் அவர்கள் தோல்வி கண்டால் தமிழ்மக்களுக்கு எதிரான போரில் அவர்கள் தோல்வி கண்டதாவவே அர்த்தமாகும்.ஆனால் சிறீலங்கா அரசு விடுதலைப் புலிகளை முறியடித்து விட்டதாக தொடர்ச்சியாக தெரிவித்து வருவதானது அந்த கருத்துக்குள் தமிழ் மக்களின் உரிமைக்கான போரை வஞ்சகமாக மறைத்துவிடும் முயற்சியாகும்.
கேள்வி: இந்திய அரசின் மீது ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கோபமும் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அது எவ்வாறு இந்திய நலனுக்கு குந்தகமாக அமையும்?
பதில்: இந்திய மத்திய அரசு சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழ் மக்களிற்கு எதிராக மிகப்பெரும் இனப்படுகொலையை நடாத்தி முடித்துள்ளது என்பது தான் உண்மையானது. இது அனைத்துலகத்தினாலும் நன்கு அறியப்பட்ட விடயம். இதனை பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ரைம்ஸ் நாளேடு தொடக்கம் கொரியாவில் இருந்து வெளிவரும் ரைம்ஸ் நாளேடு வரைக்கும் வெளிக்கொண்டுவந்துள்ளன.இந்தியாவை பொறுத்தவரையிலும் அது தன்னை ஒரு ஜனநாயக நாடாக வெளியுலகத்திற்கு வெளிக்காட்டி வந்த போதும் அண்டைய நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை அந்தந்த அரசுகளின் ஊடாக இந்தியா மேற்கொண்டே வந்துள்ளது. ஆனால் தமிழ் மக்களின் விடயத்தில் உலக அரங்கில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கான முகமூடி கிழிந்துள்ளது.
இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது கட்டவிழ்த்துவிட்ட மிகப்பெரும் மனிதப்பேரவலம் இதுவாகும். அதனை இந்தியா மேற்கொண்டது ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் வெறுப்புக்களையும், கோபங்களையும் இந்தியா மீது திருப்பியுள்ளது. தமிழ் இனத்திற்கு எதிரான போரை ஊக்குவித்து வந்த இந்தியாவை சேர்ந்த சில ஆய்வாளர்கள் கூட இந்த கருத்தை முன்வைத்துள்ளனர்.
சீனாவை பொறுத்தவரையில் அது தென்னிலங்கையில் வலுவாக காலுVன்றி விட்டது. ஏறத்தாள ஒரு பில்லியன் டொலர் முதலீடு. அது மட்டுமல்லாது மேலும் பல மில்லியன் டொலர்களை அது உதவியாகவும், ஆயுத தளபாடங்களை அது இலவசமாகவும் சிறீலங்காவுக்கு வழங்கியும் வந்துள்ளது.விரைவாக வளர்ச்சிகண்டுவரும் சீனாவின் கைத்தொழில்துறை முன்னையதை விட தற்போது பலமடங்கு அதிகமான எரிபொருள் தேவையை உள்வாங்கிவருகின்றது. எனவே அதனை கொண்டுசெல்லும் தென்னாசியாவின் கடற்பாதையின் பாதுகாப்பை அது விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்பதுடன் சீனாவை வெளியேற்றுவது என்பதும் இலகுவான காரியமல்ல.
தற்போது எஞ்சியுள்ளது வடக்கும் கிழக்கும் தான். அங்கு தமிழ் மக்களின் ஆதரவு இன்றி இந்தியா காலுVன்ற முடியுமா என்றால் அது கேள்விக்குறியானதே. அதாவது சிறீலங்கா அரசு மிகவும் தந்திரமாக சீனாவை உள்வாங்குவதற்கும், இந்தியாவை வெளியேற்றுவதற்குமான காரியங்களை நகர்த்தியுள்ளது என்றே கொள்ள முடியும்.
கேள்வி: தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை தமிழக அரசும் அதன் கூட்டணி கட்சிகளும் மறைமுகமாக ஆதரித்துள்ளன என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது தொடர்பாக?
பதில்:தமிழகம் ஏறத்தாள 80 மில்லியன் தமிழ் மக்களை கொண்ட மாநிலம், கடந்த மே மாதம் வன்னிப்பகுதியில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இறுதித்தாக்குதலை அவர்களால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அங்கு கொல்லப்பட்ட 20,000 மேற்பட்ட மக்களின் உயிர்களை அவர்கள் காப்பாற்றியிருக்கலாம்.அங்கு ஆட்சியில் இருந்தவர்கள் நாடகங்களை நடித்தார்களே தவிர எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முன்வரவில்லை. அவர்களுக்கு தமிழ் மக்களை காப்பாற்ற கிடைத்த சந்தர்ப்பங்களை கூட அவர்கள் தவறவிட்டிருந்தனர். எனினும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக சில கட்சிகளும், தமிழின உணர்வாளர்களும் தமிழக மக்களும் ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.
இருந்த போதும் அவற்றை எல்லாம் ஆளும் கூட்டணி கட்சி சிறுமைப்படுத்தி விட்டது. காங்கிரஸ் - திமுகா தலைமையிலான மாநில கூட்டணி அரசு ஒரு சில தமிழ் மக்களை கூட காப்பாற்ற முன்வரவில்லை.தமிழகத்தின் அரசியல் கட்சிகளில் புலியின் ஒரு இனத்தின் பெயரை கொண்ட கட்சி ஒன்றின் தலைவர் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை தேர்தலுக்கு முன்னர் மேற்கொண்டிருந்தது நீங்கள் அறிந்ததே. ஈழத்தமிழ் மக்களுக்காக தான் உயிரை துறக்கப்போவது போன்ற பாவனைகளையும் அவர் தோற்றுவித்திருந்தார். ஆனால் தேர்தல் காலத்தில் அவர் மீண்டும் காங்கிரசுடன் இணைந்து கொண்டிருந்தார்.
ஏப்ரல் மாதமளவில் மோதல் மிகவும் உக்கிரமடைந்த போது விடுதலைப் புலிகள் மக்களை பாதுகாப்பாக அகற்றிவிட்டு வெளியேறும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். எனினும் அவர்களுக்கு பிரச்சனையாக இருந்தது போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களே. சிறீலங்கா படையினர் குழந்தைகளையும், பெண்களையும், காயமடைந்தவர்களையும் படுகொலை செய்வார்கள் என்பது வெளிப்படையானது.எனவே விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும், முதிய வர்களையும் கொண்ட ஒரு ஆயிரம் பேர் கொண்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியுமா என விடுதலைப் புலிகளின் கேணல் தர உறுப்பினர் ஒருவர் நான் மேல் குறிப்பிட்ட அந்த தலைவரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
ஏப்பிரல் மாதம் 20 ஆம் நாள் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த மக்களை தாங்களே கொண்டுவந்து விடுவதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு அந்த தலைவர் தான் ஆளும் கட்சியிடம் பேசிவிட்டு பதில் தருவதாக தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் அதனை மறுத்ததுடன், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொள்வதையும் அவர் தவிர்த்து விட்டார்.இன்று அந்த மக்களில் பெரும்பாலனவர்கள் உயிருடன் இல்லை. குழந்தைகளும், பெண்களும் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். ஆனால் இந்திய தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் அந்த கட்சியின் தலைவர் மீண்டும் ஈழத்தமிழ் மக்களை காப்பாற்ற போவதாக கூறிக்கொண்டு பாரிய பேரணி ஒன்றை அண்மையில் நடத்தி முடித்திருந்தார்.
அந்த பேரணியானது எமது மக்களை படுகொலை செய்துவிட்டு அந்த பிஞ்சுக்குழந்தைகளின் சாம்பல் மேட்டில் நடத்தப்பட்ட பேரணியாகவே எனக்கு தோன்றியது. தமிழகத்தின் சில கட்சிகளின் கபட நாடகங்களிற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இவர்கள் எல்லாம் தமது அரசியல் நலன்களை உதறிவிட்டு எப்போது இதயசுத்தியுடன் தமிழ் இனத்தை காப்பாற்ற முன்வருவார்கள் என்பது தான் ஒவ்வொரு தமிழ் குடிமகனினதும் மனதிலும் தற்போது உள்ள ஆதங்கம்.
கேள்வி: இந்தியாவுடன் மேற்குலகமும் இணைந்து தமிழ் மக்களிற்கு எதிரான போரை முன்னடுத்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் மேற்குலகத்திடம் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது அதற்கான காரணங்கள் என்ன?பதில்:விடுதலைப் புலிகள் போரிடும் வலு உயர்வாக இருக்கும் போது அமைதி நடவடிக்கைகளில் அவர்கள் அதிக அக்கறை காண்பிக்க மாட்டார்கள் என்ற தோற்றப்பாடு ஒன்று 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிற்கு பின்னர் மேற்குலக சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அது தவறானது.இந்த போலியான பிரச்சாரங்களை நம்பிய மேற்குலகம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துகின்றோம் என்ற சிறீலங்கா ‡ இந்திய அரசின் கூட்டு நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் பல ஒத்துழைப்புக்களை வழங்கி வந்திருந்தது. ஆனால் ஒரு எல்லைக்கு அப்பால் போரை துVண்டியவர்களேலேயே சிறீலங்கா இந்திய கூட்டு அரசுகளின் இந்த போரை நிறுத்த முடியாது போய்விட்டது என்பது தான் உண்மை.
அதாவது சிறீலங்கா ‡ இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கையில் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என அவர்கள் உணர்கின்றனர். விடுதலைப் புலிகள் இல்லாத நிலமை என்பது ஒரு அரசியல் வெற்றிடமாக உள்ளதாக அவர்கள் தொடாச்சியாக தெரிவித்து வரும் கருத்துக்களில் இருந்து ஒன்றை உணர்ந்துகொள்ள முடிகின்றது.
அதாவது விடுதலைப் புலிகளையே அவர்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்தனர் என்பதே அது. ஆயுத நடவடிக்கைகளுக்கு அப்பால் விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வுகளுக்கு அவர்களை முக்கியத்துவம் வழங்கியிருந்தனர்
தற்போதும் அவர்கள் அதனை விடுதலைப் புலிகளிடம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பாக அடுத்து மேற்கொள்ளப்போகும் நகர்வு என்ன என்பது தொடர்பாக அறிவதற்கு ஆவலாக உள்ளதாக மேற்குலகத்தின் இரஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளதுடன், மேற்குலகம் அவர்களின் நிலைப்பாட்டிற்கு பின்னால் நிற்கும் எனவும் கூறியுள்ளார்.
மேற்குலகத்தினரை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் காலுVன்ற விடாது தடுத்ததில் தென் ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பல ஒன்றிணைந்து செயற்பட்டதும் மேற்குலகத்திற்கு பாரிய ஏமாற்றமாகும். கடந்த மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நாவின் மனித உரிமை சபைக்கான சிறப்பு விவாதத்தில் இது தெளிவாகி விட்டநிலையில் மேற்குலகத்
திற்கு வேறு ஒரு தரப்பின் ஆதரவுகள் தேவை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
கேள்வி: மனிதாபிமான பிரச்சனை, அரசியல் பிரச்சனை இவை இரண்டும் தற்போது தமிழ் சமூகம் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சனைகள் இதற்கு எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதில் ஏதும் வேறுபாடுகள் உண்டா?
பதில்:இன்று ஒட்டுமொத்த தமிழ் இனமும் இரு முக்கிய பிரச்சனைகளை எதிர்நோக்கி நிற்கின்றன. ஒன்று தமிழ் மக்களின் அறுபத்தியயாரு வருடகால உரிமை போராட்டத்தின் நோக்கமான அரசியல் தீர்வு, இரண்டாவது தற்போது உக்கிரம்பெற்றுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கான தீர்வு.தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி என்பது எமது உரிமைக்கான ஆயுதப்போராட்டத்தின் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட அடக்குமுறையின் விளைவாக தோற்றம் பெற்றது. அது விடுதலைப் போரின் ஒரு பகுதி. எனினும் இந்த சவால்களை நாம் முறியடிக்க வேண்டுமெனில் நாம் எமது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொண்டாலே அதனை நிரந்தரமாக நீக்க முடியும்.
சிறீலங்கா அரசின் மீது அதற்கான அழுத்தங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டாலும், அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்பட வேண்டும். தடைமுகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதாக இருந்தாலும் சரி, கைதுசெய்யப்பட்டுள்ள போராளிகளை வெளியில் எடுப்பதாக இருந்தாலும் சரி, மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சிங்களகுடியேற்றங்களை வெளியேற்றுவது என்றாலும் சரி அதனை மேற்கொள்வதற்கு நாம் எமது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.அனைத்துலகத்தின் மேற்பார்வையில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களும், முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களுமே அதற்கான சிறந்த வழிகளாகும். ஏனெனில் நியாயமான தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டு அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் சிறீலங்கா அரசின் படை முகாம்கள் கூட வடக்கு கிழக்கில் இருக்கமுடியாத நிலை ஒன்று தோன்றும். அதனை தான் அன்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கமும் தெரிவித்திருந்தார்.
கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு தாமே சீருடையை அணிவித்ததாக சிறீலங்காவின் 53 ஆவது படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா தெரிவித்துள்ளது தொடர்பாக?
பதில்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும் கருத்துக்களும், புகைப்படங்களும், நடைபெற்ற சம்பவங்களும் ஒன்றுக்கு ஒன்று பல முரண்பாடுகளை கொண்டவை. அதாவது சிறீலங்கா அரசின் பின்னைய தகவல்கள் அவர்களின் முன்னைய தகவல்களை பொய்யாக்கி வருகின்றன.விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சீருடையை இராணுவம் அணிவித்திருந்தால் அவரின் கைத்துப்பாக்கி அங்கு எவ்வாறு வந்தது என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. மேலும் விடுதலைப் புலிகளின் தலைவரின் கைத்துப்பாக்கி என காண்பிக்கப்பட்ட துப்பாக்கியும் அவருடைய பிரத்தியோக துப்பாக்கியல்ல.
வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரினது கைத்துப்பாக்கிகள் தனித்துவமானவை. அவை லேசர் மூலம் வழிநடத்தப்படும் துாரங்களை கணிப்பிடும் கருவிகளை கொண்டவை. நீங்கள் முன்னைய புகைப்படங்களில் இருந்து அவற்றை ஆராய்ந்து கொள்ளலாம்.அது மட்டுமல்லாது அவரின் துப்பாக்கி உறையும் உலோகத்திலானது. அதாவது பட்டனை அமுக்கியதும் துப்பாக்கியை வெளியே தள்ளும் பொறிமுறை கொண்டது. ஆனால் காண்பிக்கப்பட்டவை சாதாரண 9 மி.மீ கைத்துப்பாக்கியும், உறையும் தான். இவ்வாறு நுVறு காரணங்களை முன்வைக்க முடியும். அவற்றை இங்கு கூறுவதாக இருந்தால் அது பல பக்கங்களை நிரப்பிவிடும்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை சிறீலங்கா அரசு தனது பிரச்சாரத்திற்கு பல ஒப்பனைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதுடன் பல தகவலகளை மறைக்கவும் முற்படுகின்றது. ஆனால் அவற்றின் நோக்கம் ஒன்று தான், அது தமிழ் மக்களின் விடுதலைப் போரை முற்றாக மழுங்கடித்து விடுவதேயாகும்.
கேள்வி: அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்து வருவது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
பதில்: இங்கு நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது விடுதலைப் புலிகளுக்கு எந்த ஒரு நாடும் படைக்கல உதவிகளையோ, நிதி உதவிகளையோ அல்லது இராஜதந்திர உதவிகளையோ வழங்கவில்லை. அவர்கள் தமது சொந்த மக்களின் வளங்களை அடிப்படையாக கொண்டே அனைத்துல நாடுகளின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சிறீலங்கா - இந்திய அரசுகளின் கூட்டு படை நடவடிக்கைக்கான எதிர்ச்சமரை மூன்று வருடங்கள் நடத்தியுள்ளனர்.
படைபல ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ அல்லது இரஜதந்திர உறவுகள் ரீதியாகவோ அவர்களின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினரையும், பல ஆயிரம் தொன் வெடிகுண்டுகளையும் எதிர்கொண்டவாறு மரபுவழியிலான சமரை அவர்கள் தொடர்ச்சியாக நிகழ்த்த முடியாது.உதாரணமாக வன்னி படை நடவடிக்கையின் போது சிறீலங்கா வான்படையின் கிபீர் விமானங்கள் 9,000 தடவை குண்டுகளை வீசியுள்ளது. அது ஏறத்தாழ 2000 கிலோ குண்டுகளை காவிச்செல்லக்கூடியது, எம்ஐ‡24 ரக தாக்குதல் உலங்குவானுVர்திகள் அதில் உள்ள மூன்று கி.மீ துVரவீச்சுக்கொண்ட 80 மி.மீ ஏவுகணைகள் மூலம் 19,792 தடவைகள் தாக்குதலை நடத்தியுள்ளன. இவை தவிர அந்த உலங்குவானுVர்திகள் 30 மி.மீ பீரங்கிகள், 12.7 மி.மீ கனரக துப்பாக்கி, 250 கிலோ எடையுள்ள குண்டுகளையும் காவிச்சென்று தாக்குதல் நடத்தியுள்ளன.80,000 இற்கு மேற்பட்ட பல்குழல் உந்துகளைகளையும், பல இலட்சம் எறிகணைகளையும் இறுதிக்கட்ட சமரின் போது இராணுவம் பயன்படுத்தியுள்ளது. அதாவது மிகப்பெரும் இராணுவபலம் கொண்டு விடுதலைப்புலிகளின் மரபுவழியிலான போரிடும் திறனை இராணுவம் கலைத்துள்ளது. எனினும் இந்த மோதல்களின் போது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக்கை உலகின் கவனத்தில் பதிந்துள்ளது.
சிறீலங்காவில் தமிழ் மக்கள் அடிப்படை உரிமைகள் கூட இல்லாது வாழ்கினறார்கள் என்ற உண்மையை இந்த போர் அவர்களுக்கு உணர்த்தியுள்ளது.சுருக்கமாக கூறினால் கடந்த மூன்று வருடங்களாக சிறீலங்காவில் இரு பெரும் இராணுவங்கள் மோதி உள்ளன என்பதே உண்மையானது. இந்த மோதல்களும், அதனால் ஏற்பட்ட மனிதப்பேரவலங்களும் தான் அனைத்துலகத்தின் கவனத்தை எமது பக்கம் திருப்பியுள்ளது. எனவே மோதல்கள் நிறைவுபெற்ற பின்னர் ஏற்பட்டுள்ள இந்த காலப்பகுதி என்பது அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகளுக்கான காலமாகும். அதனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்çககளை தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் விடுதலைப்புலிகள் தமது துப்பாக்கிகளை மெளனமாக்கியுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
கேள்வி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டங்கள் தொடர்பான கருத்துக்கள் எழுந்துள்ளன. அதன் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் அனுகூலம் தொடர்பாக ஏதும் கூறமுடியுமா?
பதில்: நாடு கடந்த அரசு என்பது ஒரு இனம் அதற்குரிய அதிகாரங்களை அதனை ஆதரிக்கும் நாடுகளிடம் இருந்து அல்லது மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டுக்கு வெளியே அமைத்துக்கொளும் அரசியல்- இராஜதந்திர கட்டமைப்பாகும். இதன் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடம் தொடர்பை பேண முடியும் என்பதுடன் வெவ்வேறு நாடுகளில் வாழும் ஒரு இன மக்களிடம் மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளின் ஆதரவுகளுக்குமான எல்லைகளை தளர்த்தும் நடவடிக்கையாகவும் இது கொள்ளப்படும்.
உள்நாட்டு போரில் வெளிநாடுகளின் தலையீடுகள் என்பது அனைத்துலக தலையீடுகளாகும். அது பல வடிவங்களாக இருக்கலாம் அமைதி நடவடிக்கையாகவோ, மனிதாபிமான நடவடிக்கையாகவோ அல்லது படை நடவடிக்கையாக கூட இருக்கலாம்.
தற்போதைய உலக ஒழுங்கில் படைத்துறை ரீதியான தலையீடுகளை ஒரு நாடு மற்றைய நாடு ஒன்றின் மீது நேரடியாக மேற்கொள்ளும் சாத்தியங்கள் குறைவாக காணப்படுகின்ற போதும், அவர்கள் அதனை மனிதாபிமான நடவடிக்கை என்ற போர்வையில் மேற்கொள்வதுண்டு. இந்த தலையீடுகளில் பெரும்பாலானவை மோதலில் ஈடுபடும் தரப்பினரில் ஒரு தரப்பினரை பலப்படுத்தும் நடவடிக்கையாகவே அமைவதுண்டு. ஆனால் அதனை மேற்கொள்வதற்கு போராடும் மக்களுக்கு ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பும், இராஜதந்திர உறவுகளும் தேவை.
அல்ஜீரியாவில் நடைபெற்ற போரின் போது பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த அல்ஜீரியா மக்கள் அல்ஜீரியா அரசு மீது காத்திரமான அழுத்தங்களை ஏற்படுத்தி வந்திருந்தனர். அல்ஜீரியன் அரசு அதனை முடக்குவதற்கு முயன்றபோதும் அது வெற்றிபெறவில்லை.
அல்ஜீரியா அரசுக்கு எதிராக புலம்பெயர்ந்து வாழந்த மக்கள் பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்ட தொடர் அரசியல் போராட்டங்கள் 2001 ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டுவரையிலும் பல நீதிவிசாரணைகளை அரசின் மீது கொண்டுவந்திருந்தது. இந்த போராட்டங்கள் அல்ஜீரியா இராணுவம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதாவது அந்த மக்களின் நாடுகடந்த நடவடிக்கை அரசுக்கு பல அழுத்தங்களை ஏற்படுத்தியிருந்தது.
ஹய்ட்டியிலும் ஐ.நாவின் அமைதி நடடிக்கைகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஹய்ட்டி மக்களினதும், நாடுகடந்த அரசினதும் பங்களிப்புக்கள் அதிகம். தமிழ் மக்களை பொறுத்தவரையிலும் சிறீலங்காவுக்கு வெளியில் ஏறத்தாழ 12 இலட்சம் ஈழத்தமிழ் மக்கள் பரந்து வாழ்கின்றனர், அது மட்டுமல்லாது உலெகெங்கும் பத்துக்கோடி தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இந்த வளங்களை ஒன்றிணைப்பதன் மூலமும், அதன் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கை மூலமும் சிறீலங்கா அரசின் மீதும், அதற்கு ஆதரவுகளை வழங்கும் அனைத்துலக நாடுகள் மீதும் காத்திரமான அழுத்தங்களை வழங்க முடியும்.
எமது பிரச்சனைகள், எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல்கள், துன்பங்கள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட குரலாக நாம் உலகில் ஒலிக்க முடியும்.
சிறீலங்காவில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையில் அரச தலைவரை ஜனநாயக வழிகளில் தேர்ந்தெடுக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு இல்லை. இன விகிதாசாரம் அதற்கு ஒத்துழைக்காது. எனவே சிறீலங்கா கூறுவது போல ஜனநாயக வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என கூறுவது தவறானது. ஜனநாயக வழிகளில் சிங்கள மக்களால் தேர்ந்தொடுக்கப்பட்ட அரசு என்பதே சரியானது. எனவே அங்கு தமிழ் மக்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் நாடுகடந்த அரசு அதற்கான வழிகளை திறக்கலாம்.
கேள்வி: சிறீலங்கா அரசுக்கு அதிகளவு ஆயுதங்களை வழங்கிவந்த இஸ்ரேல், சிறீலங்கா மீதான போர் குற்ற விசாரணைகள் தேவை என கூறிய காரணம் என்ன?
பதில்: இஸ்ரேல் சரியான நகர்வினை தான் மேற்கொண்டிருந்தது. ஆனால் அரபுநாடுகள் தான் அதனை தவறவிட்டுவிட்டன. அதாவது காசா பகுதியில் ஏறத்தாழ 1,400 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இஸ்ரேல் மீது தீர்மானங்களை கொண்டுவர ஐ.நாவின் பாதுகாப்பு சபையும், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மேற்கொண்ட முயற்சிகளின் போது பல நாடுகள் ஆதரவுகளை வழங்கியிருந்தன.
ஏன் இந்தியா கூட முழு மூச்சாக நின்றது. ஆனால் தற்போது சிறீலங்கா - இந்திய அரசுகள் கூட்டாக இணைந்து அனைத்துலகத்தின் போரியல் விதிகள் என்றாலும் சரி, மனிதாபிமான விதிகள் என்றாலும் சரி, எல்லாவற்றையும் புறம் தள்ளி 20,000 இற்கு மேற்பட்ட மக்களை ஒரு குறுகிய காலத்திற்குள் படுகொலை செய்துள்ளன. மேலும் 300,000 இற்கு மேற்பட்ட மக்களை சிறையில் அடைத்து வைத்துள்ளது.தனது நடவடிக்கைகளை எதிர்ப்பதன் மூலம் தம்மை ஜனநாயக நாடுகளாக காண்பிக்க முற்பட்ட இந்த நாடுகளின் ஜனநாயக முகமூடிகளை இஸ்ரேல் சரியான தருணம் பார்த்து கலைத்துள்ளது. மேலும் வருங்காலத்தில் இஸ்ரேல் என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் அதனை தட்டிக் கேட்கும் உரிமையை சிறீலங்காவை ஆதரித்த நாடுகள் இழந்துள்ளன. குறிப்பாக சிறீலங்காவின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை ஆதரித்த அரபு நாடுகளுக்கு பலஸ்த்தீனத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் கண்டிக்கும் அருகதையும் இருக்கப்போவதில்லை.சிறீலங்காவுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்தாலும் சமயம் பார்த்து தனது எதிர்கால நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை இஸ்ரேல் உருவாக்கி உள்ளது.
கேள்வி: சிறீலங்காவின் பொருளாதாரம் மீதான தொடர் அழுத்தங்கள் தேவை என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவது தொடர்பாக?
பதில்: இன்றைய உலகில் ஒரு நாட்டின் வல்லமையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக ஆயுதங்களைவிட பொருளாதார கட்டமைப்பே அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்போது உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார தளம்பல் உலக ஒழுங்கிலும், அதன் அசைவியக்கத்திலும் அதிக மாற்றங்களை கொண்டுவரும் எனவும் நம்பப்படுகின்றது. அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையான அணு ஆயுதங்களை கொண்டிருந்த சோவியத்து ஒன்றியம் சிதறிப்போனதும் வலுவான பொருளாதார கட்டமைப்பு இல்லாததனால் தான்.தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை சிறீலங்கா அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனில் சிறீலங்கா மீதான அழுத்தங்கள் அவசியம் என்பதுடன், அதன் படைத்துறை கட்டமைப்புக்களோ அல்லது பொருளாதார கட்டமைப்புக்களோ அல்லது ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளோ பலவீனமாக இருத்தல் வேண்டும்.
சிறீலங்கா அரசு இந்த வழிகளில் பலவீனமாவதை தடுப்பதற்கு ஆசியநாடுகள் பல வழிகளிலும் உதவி வருகின்றன. எனினும் சிறீலங்காவின் பொருளாதாரத்தை பலவீனமாக்குவதற்கு மேற்குலகத்துடன் சேர்ந்து நாம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.மறுபுறமாக தற்போது சிறீலங்காவின் பொருளாதாரத்தை பலவீனமாக்கும் நடவடிக்கைகளை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதனை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான முடிவு எட்டப்படும் வரையிலும் நாம் தொடர வேண்டும்.அண்மையில் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளிதழ் கூட ஒரு தகவலை கூறியிருந்தது. அதாவது ஒரு கையுறையோ அல்லது புடவையோ வாங்கும் போது அது சிறீலங்காவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதனை வாங்காதீர்கள் என்று கூறியிருந்தது.சிறீலங்கா அரசை பொறுத்தரையில் போர் நிறைவுபெற்றதாக கூறிக்கொண்டு தனது பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் தற்போது இறங்கியுள்ளது. அதீத படை வளத்தை கொண்டு போரை நிறைவுசெய்து விட சிறீலங்கா அரசினால் முடியலாம், ஆனால் சிறீலங்காவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் பலம் எம்மிடம் உண்டு.
உலகில் ஏற்பட்ட பொருளாதார தளம்பல், அனைத்துலகத்திலும் உக்கிரம் பெற்றுவரும் தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் சிறீலங்காவின் முதலீட்டுத்துறை, உல்லாசப்பயணத்துறை, ஏற்றுமதித்துறை என்பன பாரிய பாதிப்புக்களை சந்தித்துள்ளன. இதன் எதிரொலியாக 380,000 பேர் தென்னிலங்கையில் வேலையிழந்துள்ளனர், துறைமுகங்களில் கொள்கலன்களை கையாளும் தொழில் 30 விகிததத்தால் வீழச்சி கண்டுள்ளது.பொருளாதார வளர்ச்சி 3 விகிதமாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. எனவே இதனை மேலும் பலவீனமாக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதரவுகள் தேவை. சிறீலங்காவின் பொருட்கள் மீதான தொடர்புறக்கணிப்புக்கள், சிறீலங்காவுக்கு செல்லும் உல்லாசப்பயணிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள், சிறீலங்காவுக்கு நிதி உதவிகளை செய்யும் நாடுகள் மற்றும் நிதி அமைப்புக்கள் மீதான அழுத்தம் என்பன பயனுள்ளவை.
Comments