சொல்லாமல் போகார் எம் தலைவர்
இந்தக் கட்டுரைக்கு பலரிடம் இருந்தும் ஆதரவுகளும், அச்சுறுத்தல்களும் வந்ததாக ஈழமுரசு நிர்வாகத்தினர் சொன்னார்கள். தலைவர் இருக்கின்றாரா..? இல்லையா..? என்ற விவாதத்தை இந்தக் கட்டுரை எழுப்பவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
தலைவர் இல்லை என்று சொல்கின்றவர்களிடமும் இருக்கின்றார் என்று நம்பிக்கை கொள்கின்றவர்களிடமும் அதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை.ஆனால், எங்கள் தலைவருக்கு என்றைக்குமே சாவு இல்லை என்பதே என்னுடைய வாதம்.
மக்களை வழி நடத்துகின்ற ஒரு தலைவருக்கு, மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு தலைவருக்கு மரணம் என்பது எப்போதும் வருவதில்லை. காலம் காலமாக - வரலாறு வரலாறாக அவர்கள் அந்த நேசிக்கப்படுகின்ற மக்களிடம் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அவரை அந்த மக்களிடம் இருந்து பிரித்து எவராலும் இலகுவில் சாகடித்துவிட முடியாது.
சேகுவரா இறந்து விட்டதாக சொன்னார்கள். ஆனால், இன்று உலகம் முழுவதும் உள்ள அவரை நேசிக்கின்ற அவர் வழி நடக்கின்ற மக்கள் மனங்களில் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார். அதனால்தான் 30 வருடங்கள் கழித்து அவரது எலும்புகளை கியூபாவிற்கு எடுத்துவந்தபோது, கியூபாவின் அப்போதைய அதிபர் பிடல் கஸ்ரோ அழுத்தமாகச் சொன்னார் ‘சேகுவரா மீண்டும் திரும்பி வந்திருக்கின்றார்" என்று. அந்த மக்களும் அதனைத்தான் ஏற்றுக்கொண்டார்கள். அவர் உயிருடன் வந்திருப்பதாகவே அவர்கள் கருதினார்கள், இன்றும் அப்படித்தான் கருதுகின்றார்கள்.
எனவே, இன்று தலைவரை சாகடித்துவிடத் துடிப்பவர்களின் சிந்தனைக்குப் பின்னால் இருக்கின்ற அர்த்தம் புரியவில்லை. அவரை நேசிக்கின்ற மக்கள் அவரது சாவினை நம்பவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னால் அதனைப் புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாமல், தங்கள் வழியில் தங்களைப்போல இறந்ததை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அடம்பிடிப்பதன் அர்த்தம் அல்லது அதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்ற கேள்வியே எழுகின்றது.
சரி, நாங்கள் எங்கள் விடயத்திற்கு வருவோம்.
தலைவர் எப்போதும் தன்னுடைய உயிர்ப் பாதுகாப்பை பொருட்படுத்துவதில்லை. மக்களுடைய விடுதலைக்காக போராட புறப்பட்டபின் உயிரைப் பாதுகாக்க ஒதுங்குவதென்பதை தலைவரின் மனது ஏற்றுக்கொண்டதில்லை என்பதை களமுனையில் கண்ட அனுபவங்களின் ஊடாக நான் அறிந்துகொண்டிருக்கின்றேன்.
அது, இந்திய இராணுவத்தினரிடம் ஆயுதங்களை ஒப்படைத்து ஒரு சில நாட்கள் கடந்திருந்த நிலை. தியாகி திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமும் அப்போது ஆரம்பித்திருக்கவில்லை. சாவகச்சேரி எழுதுமட்டுவாள் பகுதியில் தென்னந்தோப்பில் இருந்த போராளிகளின் தளம் ஒன்றுக்கு வந்திருந்த தலைவர், ஆயுத ஒப்படைப்பிற்கு பின்னான விளக்க உரையொன்றை போராளிகளின் முன் நிகழ்த்தினார். அப்போது அவர், அரசியல்பிரிவு தங்களுடைய வேலையைப் பார்க்கும். ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் எங்கள் பயிற்சிகளை நாங்கள் தொடர்ந்து வழமைபோல் செய்வோம் என்று கூறியிருந்தார்.
அதன் பின்னர் தியாகி திலீபனினதும், பன்னிரு போராளிகளினதும் வீரச்சாவினைத் தொடர்ந்து இந்தியப் படையினருடான போர் 10.10.1987 அன்று தொடங்கியது. தலைவர் யாழ்ப்பாணத்தில்தான் இருக்கின்றார் என்பது இந்தியப் படையினருக்கு நன்றாகவே தெரிந்திருந்தமையால்தான் இந்தியப் படையினரின் போர் யாழ்குடாவிலேயே முதலில் தொடங்கியது. தலைவர் இருக்கும் பகுதியை அடையாளம் கண்டுகொண்டே இந்தியப்படையினர் யாழ். பல்கலைக்கழகத்தில் படையினரை விமானமூலம் தரையிறக்கினார்கள்.
அவர்களின் புலனாய்வுத்துறை எடுத்திருந்த தகவல் சரியாகவே இருந்தது. படையினர் தரையிறக்கப்பட்ட பகுதிக்கு முன்னாலேயே தலைவர் தங்கியிருந்த வீடு இருந்தது. வழமையாக அந்த வீட்டிற்குள் நுழையும் தலைவர் அங்கிருந்து பின் பக்க வழியாகச் சென்று சற்று தொலைவில் உள்ள வீட்டிலேயே தங்குவார்.
அதேபோல் திரும்ப வெளியே செல்லும்போது அந்த வீட்டிற்கு வந்தே அங்கிருந்து வெளியில் செல்வார். எனவே புலனாய்வுத்துறையினரின் தகவல்கள் தலைவர் அந்த வீட்டிலேயே இருப்பதாக உறுதிப்பட வைத்தது. அதனால்தான் அதிரடியாக அந்த வீட்டிற்கு முன்னால் இருந்த பல்கலைக்கழக மைதானத்தில் படையினரைத் தரையிறக்கினார்கள்.
ஆனால், அங்கு நின்றிருந்த போராளிகள் படையினர் தரையிறங்குவதற்கு முன்னமே படையினரை சுட்டு வீழ்த்தத் தொடங்கிவிட்டனர். இதேவேளை, தாக்குதல் தொடங்கியதை அறிந்து அந்தச் சண்டைக் களமுனைக்கு தலைவரும் வந்தவிட்டார். அத்துடன், அதன் பின்னர் இடம்பெற்ற இந்தியப் படையினருடனான மோதல்களில் தலைவர் நேரிலேயே பங்கேற்றிருந்தார்.
தலைவரை அங்கிருந்து வெளியேற்றுவதே போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் பெரும்பாடாக இருந்தது. ஒருகட்டத்தில் இந்தியப் படையினரின் எறிகணைகள் தொடர்ச்சியாக களமுனையில் வந்து விழத்தொடங்கிவிட்டன. அதற்கு மத்தியிலும் கோள்சரையும் கட்டிக்கொண்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தலைவர் முன்னணிக் களமுனைக்கு செல்ல முயல, தலைவரைப் போராளிகள் இழுத்துப்பிடிப்பதும், ஒரு கட்டத்தில் தலைவர் அவர்களை உதறித்தள்ளிவிட்டு முன்னோக்கி செல்ல அப்போது எறிகணைகள் வேறு அருகில் வந்து விழுந்து வெடித்துக்கொண்டிருக்க அங்கு நின்றிருந்த இம்ரான் (லெப்.கேணல் இம்ரான்) ஓடிச்சென்று தலைவரின் காலை இழுத்து கீழே விழவைக்க போராளிகள் பலர் தலைவருக்கு மேலே கவசமாகக் கிடந்துவிட்டார்கள்.
அதன் பின்னர் மேஜர் பசீலனின் வற்புறுத்தலால் அங்கிருந்து முல்லைத்தீவுக்கு தலைவரை அழைத்துச் சென்றபோது வழிகளில் இந்தியப் படையினருடன் மோதல்கள் வெடித்தபோதும் தலைவரும் தாக்குதலில் ஈடுபட்டுவிடுவார். அவரை அதற்குள் இருந்து மீட்டெடுத்துச் செல்வதே போராளிகளுக்கு பெரும் பாடாக இருந்தது. அவ்வளவிற்கு தனது உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் களமுனையில் தலைவர் நடந்துகொள்வார்.
சாதாரண தளபதிகளே களமுனையில் நின்றுவிட்டால் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு போராளிகள் எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கும்போது, தலைவரே நிற்கின்றார் என்றால் சற்று யோசித்தப் பாருங்கள்.
களமுனையில் தளபதி முன்னே நடந்து சென்றால் போராளிகள் ஓடியோடி அவருக்கு முன்னே நடப்பார்கள். அவரைக் காப்பாற்றினால்தான் அடுத்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தமுடியும் என்ற நம்பிக்கைதான் அதற்குக்காரணம்.
அன்று ஒரு கரந்தடிப்படையாக இருந்துகொண்டு எந்த வளங்களுமே இல்லாமல் தலைவரைப் பாதுகாப்பதற்கு முயன்றவர்கள், இன்று முப்படைகளையும் கொண்டிருந்த நிலையில், முள்ளிவாய்க்காலில் ஒரு சதுரக் கிலோ மீற்றர் பரப்பிற்குள் களமுனை சுருங்கிய நிலையில், தலைவரே விரும்பினாலும் போராளிகளும் தளபதிகளும் அவரை அங்கு நிற்பதற்கு விட்டு வைத்திருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா..?
- விதானையார்
ஒரு முன்னாள் போராளியின் நினைவுப் பதிவில் இருந்து
நன்றி : ஈழமுரசு (10.07.2009)
Comments
Thalaivar never backed up. He SHOULD be alive at least for the people who love him the most. He fought for us for 30 years. Enough is enough. Let him have a life for himself. I pray for him though I doubt god damn god exists.