ஆயுதம் தாங்கிய படையினரின் தீவிர கண்காணிப்பு, பலத்த பாதுகாப்பு, கெடுபிடி, விசாரணை போன்ற பல்வேறு அபாயகரமான சூழலுக்குள்ளேயே இன்னமும் அமுக்கி வைத்துள்ளதையே
தொடரும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றன.வன்னியின் மிகப்பெரும் உக்கிரமான இறுதி யுத்தத்தின் பிடியிலிருந்து தப்பிப்பிழைத்து இடம்பெயர்ந்தவர்களில் மிகப்பெருமளவிலானோர் சுமார் மூன்று இலட்சம் மக்கள் வவுனியாவிலுள்ள நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஏனையோர் யாழ். குடாநாட்டிலுள்ள நலன்புரி நிலையங்களிலும் திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை நலன்புரி நிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாகவே பெருமளவிலானோரால் அறியக்கூடிய நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப் பிரதேசத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் வெளியுலகத் தொடர்புகள் எதுவுமற்ற நிலையில் ஒரு இறுக்கமான சூழ்நிலைக்குள்ளேயே தள்ளப்பட்டுள்ளனர்.
புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள இரு இடைத்தங்கல் முகாம்களில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 6,668 பேர் தற்போது தங்கியுள்ளனர் என்று இங்கு பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
3,227 ஆண்களும் 3,589 பெண்களும் தங்கியுள்ளனர். இவர்களில் குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் உள்ளடங்கலாக பெரும் எண்ணிக்கையிலான அவயவங்களை இழந்தவர்களும் உள்ளதாக தொண்டர் நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
வன்னியில் இடம்பெற்ற உக்கிரமோதல்களின் பிடியிலிருந்து தப்பிப்பிழைத்து காடுகள், குளங்கள்,வாவிகள், கடலேரி என்பவற்றையெல்லாம் மிகப்பெரும் துயரங்களுக்கு மத்தியில் தாண்டி கால்நடையாகவும் படகுகள் மூலமும் புல்மோட்டையை வந்தடைந்த இவர்கள் அங்குள்ள பாடசாலைக் கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர் இவர்கள் அனைவரும் பாடசாலைக் கட்டிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு புல்மோட்டைப் பிரதேசத்தில் இரு இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சஹனகம1, சஹனகம2 என்று இந்த முகாம்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
சஹனகம1 நான்கு பிரிவுகள் உள்ளதாக தொண்டர் நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். ஏ பிரிவில் 179 குடிசைகள் அமைக்கப்பட்டு 351 குடும்பங்களைச் சேர்ந்த 1204 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 571 பேர், பெண்கள் 631 பேர் அங்கவீனமானோர் 320 பேர், 60 வயதுக்கு மேற்பட்டோர் 67 பேர்.
பீ பிரிவில் 172 குடிசைகள் அமைக்கப்பட்டு 371 குடும்பங்களைச் சேர்ந்த 1232 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 569 பேர், பெண்கள் 663 பேர் அங்கவீனமானோர் 37 பேர், 60 வயதுக்கு மேற்பட்டோர் 73 பேர்.
சீபிரிவில் 173 குடிசைகள் அமைக்கப்பட்டு 452 குடும்பங்களைச் சேர்ந்த 1418 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 651 பேர், பெண்கள் 767 பேர், அங்கவீனமானோர் 57 பேர், 60 வயதுக்கு மேற்பட்டோர் 69 பேர்.
டிபிரிவில் 165 குடிசைகள் அமைக்கப்பட்டு 307 குடும்பங்களைச் சேர்ந்த 934 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 406 பேர், பெண்கள் 528 பேர், அங்கவீனமானோர் 35 பேர்,60 வயதுக்கு மேற்பட்டோர் 65 பேர்.
சஹனகம2இல் 759 குடும்பங்களைச் சேர்ந்த 2080 பேர் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1080 பேர், பெண்கள் 1000 பேர், அங்கவீனமானோர் 126 பேர், 60 வயதுக்கு மேற்பட்டோர் 84 பேர்.
வெளியுறவுத் தொடர்புகள் எதுவுமின்றி புல்மோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சஹனகமவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரு இடைத்தங்கல் முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னிமக்களுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் பல பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றன.
உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் கூட திருகோணமலை மாவட்ட அரச அதிபர் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளின் அனுமதியைப் பெற்றே முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நிவாரண மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.
யூ.என்.எச்.சி.ஆர்., யுனிசெவ், ஐ.ஓ.எம்., மல்டிசார் இன்ரநஷனல், மேர்சிபவுண்டேசன், உலக கரிசனை நிலையம், ஒபர், பீப்பிள் இன்நீட் ஆகிய உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இந்த இரு முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.
20இற்கு மேற்பட்ட தாதிமாரும் வைத்தியர் குழுவொன்றும் தினமும் இந்த இரு முகாம்களுக்கும் நேரடியாக விஜயம் செது நோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்கிவருகின்றன.
அரச சார்பற்ற நிறுவனங்களால் குடிநீர்த்தாங்கிகள், மலசலகூட வசதிகள் என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் போதியளவு அடிப்படை வசதிகள் இன்னமும் மேலதிகமாக தேவைப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்கிறார் இங்கு பணிபுரியும் மனிதாபிமான பணியாளர் ஒருவர்.
இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பெருமளவிலான மக்கள் தமது உறவுகள் சிதறுண்ட நிலையில் என்ன செவது, எவ்வாறு தேடிக் கண்டுபிடிப்பது, மீண்டும் அவர்களுடன் எப்போது இணைந்து கொள்வது என்ற மனக் கசப்புகளுடனேயே வாழ்க்கையை கழித்துக்கொண்டிருப்பதாகவும் அறியவருகிறது. கணவன்மாரை இழந்த மனைவிமார், மனைவியரை இழந்த கணவன்மார், குழந்தைகளை இழந்த பெற்றோர் என பல்வேறு தரப்பினரும் உளரீதியான பெரும் தாக்கங்களை எதிர்கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள எந்தவொரு மனிதனின் முகத்திலும் புன்சிரிப்பை தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது.
சொந்தமண்ணை, உறவுகளை, உடைமைகளை, உடலின் அங்கங்களை, செல்லப் பிராணிகளை கொடூர யுத்தத்திற்கு பலிகொடுத்த துயரங்களிலிருந்து மீள முடியாதவர்களாகவே இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் காலங்கள் கழிந்து கொண்டிருக்கின்றது என்கிறார் இங்கு தினமும் சென்று பணியாற்றும் மனிதாபிமானப் பணியாளர் ஒருவர்.
அதேநேரம் இடம்பெயர்ந்து வந்து புல்மோட்டையிலுள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டிருந்த வேளையில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கானோரின் நிலையை அறிய முடியாத சூழலேயுள்ளது.
அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்று உறவினர்கள் அதிகாரிகளிடம் கேட்டால் புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மட்டுமே பதிலளிக்கப்படுகின்றது.
வெளியுலகக் தொடர்புகளிலிருந்து முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கும் புல்மோட்டை சஹனகம முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் வெளியிடங்களிலுள்ள உறவுகளுடன் தொடர்பு கொள்ள தபால் பெட்டி ஒன்று மிக அண்மையில் தான் அரச அதிகாரிகளால் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்கள் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சிறு குழந்தைகளை நெருங்கிய உறவினர்கள் பொறுப்பேற்று பராமரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் புல்மோட்டை சஹனகமவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் வெளியுலக தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளார்கள்.உறவினர், நண்பர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலைமையே தொடர்ந்தும் நீடித்துக் காணப்படுகின்றது.
புல்மோட்டையின் எல்லையிலுள்ள யான்ஓயா படைமுகாமின் முன்பாக ""அகதிகளை பார்வையிட வேண்டாம்' தமிழில் எழுதப்பட்ட அறிவிப்பு பலகை கம்பீரமாக காட்சியளிக்கின்றது.
புல்மோட்டையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட அனுமதிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் அந்தக் கோரிக்கை முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையே இன்னமும் தொடர்கின்றது.
சொந்த மண்ணில் வளமுடன் வாழ்ந்த வன்னி மக்கள் வாழ்விழந்து ஒட்டிய வயிறுடன் முட்கம்பி சிறைகளுக்குள் முடக்கப்பட்டுள்ள துயர வாழ்விற்கு முடிவெப்போது?
Comments