தமிழினத்தை ஒட்டுமொத்தமாக அழித்து அதன் மூலம் அவர்களின் நியாயமான அரசியல் போராட்டத்தை திட்டமிட்டு அழித்தொழிக்க மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்காக தனது நிதி வலிமையை பெருமளவிற்கு செலவிட்டதால் நிதி நெருக்கடிக்கு ஆளான சிறிலங்க அரசி்ற்கு 2.6 பில்லியன் டாலர் கடன் கொடுத்து தூக்கி நிறுத்தியுள்ளது பன்னாட்டு நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.).
அயல் நாடுகளில் இருந்தும், தமிழினத்தை கங்கணம் கட்டிக் கொண்டு அழித்தொழிப்பது நன்றாகத் தெரிந்தும் கண்ணை மூடிக்கொண்டு 'சிறிலங்க மக்களின் புனர்வாழ்விற்கு' உதவிய கொடை நாடுகளிடமிருந்தும் வாங்கிக் குவித்த நிதியணைத்தையும் இராணுவத்திற்கும், தமிழர்கள் மீதான போரிற்கும் செலவிட்டுவிட்டு, அந்தப் போரில் தங்கள் உயிரை ஈந்த பல ஆயிரக் கணக்கான சிங்கள சிப்பாய்களுக்கு இழப்பீடும், ஓய்வூதியமும் தரவேண்டும் என்பதற்காக, இறந்த சிப்பாய்களின் கணக்கை காட்டாமல் அவர்களை ‘காணாமல் போனவர்களின் பட்டியலில்’ இன்று வரை வைத்திருந்து, கொல்லப்பட்ட சிப்பாய்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் இராஜ தந்திரத்தில் ஈடுபட்டுவரும் சிறிலங்க அரசு, இதற்கு மேல் தனக்கு கடன் கொடுக்க எந்த நாடும் (இந்தியா, சீனா தவிர) இல்லை என்ற நிலையிலேயே பன்னாட்டு நாணய நிதியத்தை நாடி, 1.9 பில்லியன் டாலர் (சிறிலங்க நாணய மதிப்பில் சற்றேறக்குறைய 22,000 கோடி) கடன் கேட்டது.
TNET
ஏனெனில் பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆளுமைக் குழுவில் மிக அதிகமான வாக்குகளைப் பெற்ற அமெரிக்கா (16.7 விழுக்காடு) சிறிலங்காவிற்கு கடன் அளிப்பதை எதிர்த்தது. சிறிலங்கா கடன் பெறுவதை அனுமதிக்கக் கூடாது என்று அந்நாட்டு செனட்டில் பல உறுப்பினர்கள் அமெரிக்க அரசை வற்புறுத்தினர். இதே நிலையை 5 விழுக்காட்டிற்கும் அதிக வாக்குரிமை பெற்ற இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியனவும் எதிர்த்தன. இவைகளின் அசைவிற்கேற்ப மட்டுமே நடந்துகொள்ளும் நாடுகளும் பல உள்ளதால் சிறிலங்காவிற்கு கடன் கிடைக்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.
ஆனால் சிறிலங்க அரசு கேட்ட 1.9 பில்லியனிற்கும் அதிகமாக 2.6 பில்லியன் டாலர்கள் கடன் கிடைத்த ‘அற்புதம்’ சர்வதேச கோணங்கி அரசியலை அப்பட்டமாக காட்டியுள்ளது.
நாடுகளுக்கு இடையிலான சர்வதேச உறவுகளும், ஒரு நாட்டின் நடத்தை மீதான மதிப்பீடு என்பது தார்மீக அடிப்படைகளிலோ அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட பன்னாட்டு உடன்படிக்கைகளின் அடிப்படையிலோ தீர்மானிக்கப்படுவதில்லை என்பதும், அவைகள் அந்தந்த நாடுகளின் - குறிப்பாக வல்லரசுகள் என்று தங்களைக் கருதிக்கொண்டிருக்கிற நாடுகளின் ‘பொருளாதார, பூகோள, இராணுவ நலன்’களையேச் சார்ந்தது என்பது நிரூபனமாகியுள்ளது.
சிறிலங்காவைப் போல், தனது சொந்த நாட்டு மக்களையே விமானத்தில் இருந்து குண்டுகள் வீசுயும், உலக நாடுகளால் போர்களில் கூட பயன்படுத்தக் கூடாது என்று ஒப்புக் கொள்ளப்பட்ட இரசாயன பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தியும், போரினால் துரத்தப்பட்ட மக்களை பாதுகாப்பு வலயம் என்று கூறி வரவழைத்து, அவர்களை பட்டினியும் போட்டு, கனரக பீரங்கிகளையும் கொண்டுத் தாக்கி அழித்த எந்த நாட்டிற்கும் எவ்வித உதவியையும் செய்வதில்லை என்று உள்நாட்டிலேயே தார்மீக பொறுப்புகளை அரசின் மீது கட்டாயமாக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன அமெரிக்கா போன்ற நாடுகள்.
அதனால்தான் சிறிலங்கா போன்ற ஒரு அரசு, அது ‘ஜனநாயக அரசாக’ தன்னை கூறிக்கொண்டாலும், ஜனநாயக் தூண்களை கட்டிக் காப்பதாக (தனக்கு வசதியான ஊடகங்களின் துணை கொண்டு) பிரச்சாரம் செய்து கொண்டாலும், ஐ.நா. உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளை கருத்தில் கொண்டு எவ்வித உதவியையும் செய்ய மறுத்து வந்துள்ளன.
இப்படிபட்ட பின்னணியில் சிறிலங்க அரசால் எப்படி கடன் பெற முடிந்தது என்றால், இந்தியா எனும் அதன் புதிய நட்பு நாட்டின் சாதுரியமான காய் நகர்த்தலால் கடன் கிடைப்பது சாத்தியமானது.
இது ஒன்றும் ரகசியமல்ல. இப்படி கூட நடக்குமா என்று எதிர்பாராததும் அல்ல. இப்படித்தான் நிகழப் போகிறது, சிறிலங்காவிற்கு கடன் கிடைக்கும் என்று பரவலாகவே பேசப்பட்டது. ஏன் என்றால் இந்தியா அதனை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க சட்டங்களும், அதன் அதிகாரமிக்க செனட், காங்கிரஸ் அவைகளும் அமெரிக்க அரசை என்னதான் நிர்பந்தித்தாலும், அமெரிக்க ‘அயலுறவு நலனை’ கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அந்நாட்டின் அயலுறவுச் செயலருக்கு உள்ளது!
FILE
இரு நாடுகளுக்கும் இடையிலான வலிமையான இராஜ தந்திரக் கூட்டாண்மையின் ஆறு தூண்களாக இராணுவ ஒத்துழைப்பு, பொருளாதாரம், கல்வி, விவசாயம், தொழில் மற்றும் சர்வதேச உறவு தொடர்பான கொள்கைகள் இருக்கும் என்றும் கூறினார்.
ஆக அவருடைய இந்தியப் பயணத்தில் உறுதி செய்யப்பட்டது இந்திய அமெரிக்க நட்புறவும், இராஜ தந்திரக் கூட்டாண்மையுமாகும். தெற்காசியாவில் இந்தியாவின் நலனையே தனது நலனாக அமெரிக்காவும், முக்கிய சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் நலனை ஒட்டியதாக இந்தியாவின் அணுகுமுறை இருக்க வேண்டும் என்பதே இரு நாடுகளுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட முக்கிய அம்சங்களாகும். இதன் தாக்கும் இனி வரும் காலங்களில் வெளிப்படத் துவங்கும். பயங்கரவாதத்தை பின்னிற்கு தள்ளிவிட்டு பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்குவது என்று கூட்டறிக்கையில் ஒப்புக்கொண்டதே தனது இரு நட்பு நாடுகளுக்கு இடையே ‘நல்லுறவு’ நிலவ வேண்டும் என்ற அமெரிக்காவின் விருப்பமே.
இந்த சந்திப்பின் போதுதான் சிறிலங்க அரசின் கடன் கோரிக்கை பேசப்பட்டதாகவும், பன்னாட்டு நாணய நிதியம் சிறிலங்காவிற்கு கடன் வழங்காவிட்டால், அதற்குத் தேவையான நிதியை சீனா வழங்கும் என்றும், அதன் காரணமாக சீனாவின் பிடிக்குள் முழுமையாக சிறிலங்கா சென்றுவிடும் என்றும், அதனை தவிர்க்க வேண்டுமெனில் ஐ.எம்.எஃப். அதற்கு கடன் வழங்க வேண்டு்ம் என்று இந்தியா வலியுறுத்தியதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் கூறின.
அதன்படியே கடன் கிடைத்துள்ளது. கடன் அளிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொள்ளாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியன வெளிநடப்புச் செய்து (தங்களது எதிர்ப்பை காட்டுகின்றார்களாம்) சிறிலங்க அரசு கடன் பெறுவதை உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்காவும் அதோடு ‘வெளிநடப்பு’ செய்த அதன் நேட்டோ கூட்டாளிகளும் நினைத்திருந்தால் ஜப்பான் உள்ளிட்ட அதிக வாக்குகளைக் கொண்ட நாடுகளையும் சேர்த்துக் கொண்டு உள்ளிருந்தே கடன் அளிப்பதை தடுத்திருக்கலாமே? நமது நாட்டில் கூட நடக்கும் ஒரு ‘சிம்ப்பிள் அரசியலை’ மிகச் சாதுரியமாக நடத்தி, எதிர்ப்பிற்கு எதிர்ப்பும் ஆச்சி, நட்பையும் மதித்ததாக ஆச்சி என்று அருமையான நாடகம் நடத்தி முடித்து விட்டனர்.
சிறிலங்கா போன்ற மனித உரிமை மீறல் குற்றச்சாற்றுகளுக்கு ஆளான நாடுகளுக்கு கடுமையான நிபந்தனையுடன்தான் ஐ.எம்.எஃப். கடன் அளிக்கும். ஆனால் அதில் கூட சிறிலங்க அரசிற்கு வெளிப்படையான நிபந்தனை ஏதுமின்றி, அதே நேரத்தில் தனது பொருளாதார ஆலோசனைகளை மட்டும் சிறிலங்க அரசு முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டு கடனை அளிக்க முன்வந்துள்ளது.
FILE
இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ச்சுயுற்றதாகக் கூறிய நாடுகளும், அங்கு நடந்தது என்ன என்பதை முழுமையாக அறிய பன்னாட்டு விசாரணைக்கு சிறிலங்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிய நாடுகளும், அப்படிப்பட்ட கொடூர குற்றச்சாற்றிற்கு ஆளான நாட்டின் அரசை நிதிச் சிக்கலில் இருந்து காப்பாற்ற அதற்கு தகுதியானதை விட 4 மடங்கு அதிகமாக கடன் அளித்து காப்பாற்றுகின்றன!
தங்களின் பொருளாதார, பூகோள நலன்கள் தாங்கள் மிகவும் மதித்துப் போற்றும் தார்மீக நெறிகளை விட முக்கியமானவை என்று இந்த நாடுகள் நிரூபித்துள்ளன என்றால், இவைகளும் சிறிலங்க அரசு மேற்கொண்ட இனப் படுகொலைத் திட்டத்தில் பின்னணியில் இருந்து செயல்பட்ட சக்திகளோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
மானுடத்தின் ஒட்டுமொத்த நலனை காப்பாற்றவே சர்வதேச நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அப்படிப்பட்ட நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டதன் மூலம் அவைகளின் அநாகரீக முகத்தை ஒளிவு மறைவின்றி மானுடம் தரிசித்துக் கொண்டிருக்கிறது.
- children genocide images / சிறார்களின் படுகொலை
- Tamil genocide images 8 /வன்னிப்படுகொலை படங்கள் 8
- Tamil genocide images 7 /வன்னிப்படுகொலை படங்கள் 7
- Tamil genocide images 6 /வன்னிப்படுகொலை படங்கள் 6
- Tamil genocide images 5 /வன்னிப்படுகொலை படங்கள் 5
- Tamil genocide images 4 /வன்னிப்படுகொலை படங்கள் 4
- Tamil genocide images 3 /வன்னிப்படுகொலை படங்கள் 3
- Tamil genocide images 2 /வன்னிப்படுகொலை படங்கள் 2
- Tamil genocide images 1 /வன்னிப்படுகொலை படங்கள் 1
- வன்னி இடப்பெயர்வு அவலம்
Comments