இனி இந்தியாவிடம் நெருங்கிச் செல்வது எப்படி என்பது குறித்தும் விவாதங்கள் முன்வைக்கப்படலாம்.
இந்தவாரம் வெளிவந்த ஈழப்போர் - 3, பாகம் - 2 கட்டுரையானது, பல சிந்தனைகளை கிளர்ந்தெழச் செய்துள்ளது என்பதற்குமப்பால், எது எமது அடுத்த தலைமை என்பது குறித்தும், இனி நாம் கடைப்பிடிக்க வேண்டிய வெளிநாட்டுக் கொள்கை எதுவாக இருக்க வேண்டுமென்பது பற்றியும் மிக வெளிப்படையாகக் கூறியுள்ளது.
‘இந்தியாவோடு அனுசரித்து, அதனை அரவணைத்து, இருதரப்பு நலன்களையும் அகத்திலெடுத்து, அதன் துணையோடு நமது போராட்டத் தேரை நாம் முன்னகர்த்துவோம்’ என்று புதிய வெளியுறவுப் பார்வையினை கட்டுரையாளர் முன்வைத்துள்ளார்.
இதனையே நாடு கடந்த தமிழீழ தேசிய அரசு பற்றி முன் மொழிந்த செல்வராசா. பத்மநாதனும், அதனை உருவாக்க முன்னிற்கும் உருத்திரகுமாரனும் வலியுறுத்துகின்றனர்.
மேலும் ‘இந்தியாவை மீறி தென்னாசியக் கடலில் ஒரு அலைகூட அசையப்போவதில்லை’ என்று கூறும் கட்டுரையாளர், இந்தயுகத்தில் வாழ்வது போல் தெரியவில்லை.
இந்தியாவின் கழுத்தைச் சுற்றி, சீனா தனது மேலாதிக்க முத்துமாலையை எப்பொழுதோ கோர்த்துவிட்ட, பிராந்திய அரசியல் உண்மையை, நாடுகடந்த தேச நிர்மாணிகள் புரிந்து கொள்ளவில்லை.
இந்து சமுத்திரப் பிராந்தியக் கடலாதிக்கத்தில், சீனாவின் கை மேலோங்கி இருப்பதாக, பன்னாட்டு அரசியல், இராணுவ ஆய்வாளர்கள் பல ஆதாரங்களோடு வெளியிட்டும், அப்படி இல்லையென்று அடம்பிடிப்பவர்கள், மக்களைத் தவறான திசையில் அழைத்துச் சென்று விடுவார்கள்.
ஆனாலும் சீனாவிற்கும் சிறீலங்காவிற்குமிடையே முகிழ்ந்துவரும் நெருக்கமானது, சமீப காலங்களில் மேலும்இறுக்கமடைகிறது.
அது அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து நுரைச்சோலை அனல் மின் நிலையம் வரை கால்பரப்பி விரிகிறது.
அத்தோடு தென்னிலங்கையில் புதிய பொருளாதார வலயங்கள் உருவாக்கப்பட்டு, அதில் சீனாவின் பாரிய முதலீடுகள் குவிக்கப்படப்போகிறது.
இவைதவிர இந்தியாவின் எல்லை நாடான நேபாளத்தில், சீனாவிற்கான தொடருந்து பாதை இணைப்பும், மியன்மாரில் எண்ணெய் வழங்கலிற்கான நீண்ட குழாய்கள் அமைக்கும் பணியும் விரைவில் முன்னெடுக்கப்படப் போகிறது.
பாகிஸ்தானிற்கும் சீனாவிற்கும் இடையேயுள்ள உறவு குறித்து பேசத் தேவையில்லை. அவ்வளவு நெருக்கம்.
ஆகவே சீனாவை மீறி, தென்னாசியக் கடலில் ஒரு அலைகூட அசையப் போவதில்லை என்பதே யதார்த்த பூர்வமான உண்மையாகும்.
அதேவேளை, சிறீலங்காவிற்குள் சீன ஆமை புகுந்துவிடுமென்பதால், தமிழீழம் பிரிவதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டுமென, சிவசங்கர் மேனனிற்கு அரசியல் வகுப்பு எடுப்பதால் எதுவுமே நடைபெறாது.
சீனாவின் காலு£ன்றலை முறியடிப்பதற்காகவே, ஓடிச் சென்று சிங்களத்திற்கு சகல உதவிகளையும் இந்தியா வழங்குகிறது என்கிற உண்மை இவர்களால் புரியப்படவில்லை.
பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேக்ஷ், மியன்மார் போன்ற நாடுகள் யாவும், சீனாவின் நட்பு வலயத்துள் ஏற்கனவே குடிபெயர்ந்துவிட்டன.
எஞ்சியிருப்பது சிறீலங்கா மட்டுமே. இதையாவது தனது பிடிக்குள் கொண்டு வருதற்கு, எதையும் இழக்க இந்தியா தயார்.
ஏனெனில் மேற்குறிப்பிடப்பட்ட சீனாவின் இந்து சமுத்திர பிராந்திய நட்பு வலய நாடுகளிலுள்ள துறை முகங்களை விட, அம்பாந்தோட்டையின் முக்கியத்துவம், கடல் வணிகப் பாதையில் முதன்மையானது.
80 களின் முற்பகுதியில், இந்தியாவிற்கான அச்சுறுத்தல், திருமலைத் துறைமுகத்தினூடாக வந்தது. இந்தியாவின் அன்றைய பிராந்திய நலனிற்கு எதிரியாகத் திகழ்ந்தது அமெரிக்கா.
இன்று, அம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக, சீன எதிரி முதன்மையாகிறார்.
இடங்களும், நாடுகளும் மாறியுள்ளனவே தவிர, இந்தியாவின் ஆதிக்க நிழல் யுத்தம் நிறுத்தப்படவில்லை.
இந்தியாவிற்கும், சிறீலங்காவிற்குமிடையேயுள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தி, ஈழத்தை வென்றெடுத்துவிடலாமென்று அன்று பல இயக்கங்கள் கணித்திருந்தன.
ஆனால் இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையே உள்ள முரண்பாடுகளைக் கையாண்டு தாயகக் கனவினை நிறைவேற்றலா
மென இப்போது சிலர் எண்ணுகிறார்கள். ஆனாலும் உண்மை எதுவென்றால், ஈழத்தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை முன்வைத்து -அல்லது அதனைப் பயன்படுத்தி சிறீலங்காவைத் தனது கட்டுக்குள் கொண்டு வருவதே இந்தியாவின் நோக்கம்.
87 இல் கைச்சாத்தான ஒப்பந்தம் பற்றி தேசியத் தலைவர் கூறிய கருத்தினைப் பாருங்கள்.
‘இந்திய - இலங்கை ஒப்பந்தம், இந்தியாவிற்கும் சிறீலங்காவிற்கும் இடையிலான ஓர் இராணுவ ஒப்பந்தம். தமிழரின் சுதந்திர இயக்கத்தையும், அதற்குத் தலைமை தாங்கும் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளையும் ஒழித்துக் கட்டுவதுதான் இந்த இராணுவ ஒப்பந்தத்தின் இலட்சியம்’.
அத்தோடு. ‘இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போராட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போராட்டத்தின் இந்திய இராணுவம் தலையீடு செய்தது. ஒரு இருண்ட அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்’. என்கிறார் தேசியத் தலைவர். வே. பிரபாகரன்.
இன்று ஒப்பந்தம் எதுவுமே இல்லாமல், பின் கதவுவழி புகுந்து, சீன படைத் துறை உதவியை அனுமதித்து, தேசிய விடுதலைப் போராட்டத்தின் இராணுவ வலிமையை இந்தியா சிதைத்துள்ளது.
அண்மைக் காலமாக, இந்திய ஆய்வாளர்கள் இராமனும், ஹரிஹரனும் வெளியிட்ட கருத்துக்கனை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.
அதாவது பிரபாகரன், பொட்டம்மான் இல்லாத தமிழர் தலைமையை இந்தியா பரிசீலிக்கும் என்பது போன்று விடயங்களை இவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.
எந்த ஆயுதப் போராட்டத்தை, 80களில், தமது உள்நுழைவிற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தினார்களோ, அதே போராட்டம் தமது நலன்களுக்கு இடையூறாக மாறிவிடும்போது, அதை அழிப்பதற்கு அதே இந்தியா 87 இல் போரிட்டது.
அதே போன்று 80 இல் திருமலைத் துறைமுகத்தில் கால்பதிக்க முயன்ற சக்தி, 2002இல் நோர்வேயூடாக புக முனைந்த போது, அதனை முறியடித்து, மகிந்தர் ஊடாக மறுபடியும் களமிறங்கியுள்ளது, இந்தியா.
இந்நிலையில், இந்திய - சீன கடலாதிக்கப் போட்டியில் பலிக்கடாவான ஈழத்தமிழினம், மீண்டும் இந்தியத் துணையோடு தனி ஈழம் அமைக்க முடியுமென்று உறுதியாகக் கூறுபவர்கள், சிங்களப் பேரினவாதத்தின் பலம் குறித்து குறைவாக எடை போடுகிறார்கள்.
அதேவேளை இன அழிப்புக்குத் துணை நின்ற இந்திய வல்லாதிக்கத்தின் உள் நோக்கத்தை சரியாக இவர்கள் புரிந்து கொள்ளவில்லையென்றே தெரிகிறது.
13வது, 17வது திருத்தச் சட்டங்களை, அதிகாரப் பகிர்வாக ஏற்றுக்கொண்டு, சிங்களத்தின் காலடியில் சரணாகதி அடையச் சொல்லும் இந்தியா, தாயகம், தன்னாட்சி என்கிற உயர் இலட்சியங்களை இப்போதைய பிராந்தியச் சூழலில் ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் திபேத் குறித்த இந்தியாவின் பார்வை இதனைப் புரியவைக்கும்.
தலைலாமாவின் நாடுகடந்த திபெத் அரசினை அங்கீகரித்தால், இந்தியாவுடனான சகல உறவுகளையும் சீனா நிச்சயம் முறித்துக்கொள்ளும். அதன் எதிர்வினையாக சிறீலங்காவில் சீனாவின் ஆதிக்க நகர்வுகள் வெளிப்படையாகவே முன்னெடுக்கப்படும் சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும்.
இவைதவிர இந்தியாவை விட பன்மடங்கு வளர்ச்சி கண்டுள்ள சீனாவின் கடற்படைக் கப்பல்கள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்நுழைய ஆரம்பித்துவிடும்.
ஆனாலும் சீனாவைக் கையாள்வதற்கு, இந்தியா முன்னெடுக்கும் இருவழி நகர்வுகள் குறித்தும் ஆராயப்படவேண்டும்.
இந்தியத் தூதுவர் நிருபாமா (மேனன்) ராவின் மூன்று வருடகாலப் பணியில், சீன-இந்திய பொருளாதார உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் மட்டும், இருதரப்பு வர்த்தகம் 52 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.
ஹ்மாலயாவினூடாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அத்தோடு பிஜீங்கிலுள்ள இந்தியத் தூதரகத்தில் கலாச்சாரப் பரிவர்த்தனைப் பிரிவொன்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய புதிய பிராந்திய அரசியல் சூழலில், நிருபாமா ராவ் பொறுப்பேற்கவிருக்கும் வெளியுறவுச் செயலாளர் பதவி, பல மாறுதல்களையும்,திருப்பங்களை அரசியலில் ஏற்படுத்தலாம்.
மேற்குலகு ஆதிக்கம் செலுத்தும் ஆசிய நாடுகளிலும் அல்லது செலுத்த முயலும் நாடுகளிலும், சீன -இந்திய கூட்டு நகர்வுகள் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை யசூசி அகாசி அண்ணன், அடிக்கடி சிறீலங்காவிற்கு பறந்து வருவதன் பின் புலத்தினை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஆகவே இந்தியாவை மீறி சிறீலங்காவால் எந்த நகர்வினையும் மேற்கொள்ள முடியாது என்பதற்காக, இந்தியாவிடம் சரணடைந்தால், ஈழசுதந்திரம் சாத்தியப்படுமென்று கற்பனை பண்ணக்கூடாது.
80களின் ஆரம்பத்தில், ஈழ விடுதலை இயக்கங்களைத் தேடி இந்தியாதான் வந்தது. அதற்கான தேவையும் அவர்களுக்கு இருந்தது.இன்று நாம் அவர்களைத் தேடிச் சென்று எதனைச் சாதிக்கப் போகிறோம்?
ஆனாலும் அவர்கள் எம்மைத் தேடி வருவார்கள். அதற்கான சாதகமான சூழ்நிலையை தென்னிலங்கையில் சிங்களமே உருவாக்கும்.
அதாவது சிறீலங்காவில், சீனா இந்தியாவிற்கிடையிலான ஆதிக்க முரண்பாடுகள் கூர்மையடையும் பொழுதே, தமிழர்கள் வசிக்கும் வட -கிழக்கின் அவசியம் இந்தியாவால் உணரப்படும்.
அதுவரை, சர்வதேச சமூகம் இன அழிப்பிற்கு ஒத்தாசையாக இருந்த வியடங்களை பரந்துபட்ட பல்லின மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
2001இல் அவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத பூச்சாண்டி ஓரங்கட்டப்பட்டு, உலகப் பொருளாதாரச் சீரழிவானது ஜோர்ஜ் புக்ஷ்சின் சகல யுத்த சூத்திரங்களை விழுங்கிவிட்டது என்கிற உண்மையும் உணரப்படவேண்டும்.
ஆயுதப் போராட்டம் மௌனித்து விட்டது, கெரில்லாப் போராட்டமென்பது பகற்கனவு - மட்டக்களப்பில் ராம் கொசு அடித்துக்கொண்டிருக்கிறார், என்று மல்லாந்து படுத்திருந்து எச்சில் துப்பி, சரணாகதி அரசியலை முன்வைத்தாலும், நாடுகடந்த அரசை இந்தியா, சீனா, மேற்குலகு என்று எவையுமே ஏற்காது.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் என்பவர்தான், விடுதலைப் புலிகளின் ஒரேயரு அரசியல் ஆலோசகர் என்று மக்களுக்குத் தெரியும்.
ஆனால் இன்றோ சிலர், தம்மை அரசியல் ஆலோசகர்களாக சுயபிரகடனம் செய்தவாறு, அதற்கு ஆதாரமாக, மாவீரர் பா. நடேசனை துணைக்கழைத்து, கற்பனைத் தலைவர்களாக உலா வர விரும்புகிறார்கள்.
போராட்டத் தலைவர்கள் மக்களால் உருவாக்கப்படுபவர்கள். வரலாற்றுச் செய்தி அது. தாயக மக்களும், போராளிகளுமே தமக்கான தலைவர்களைத் தெரிவு செய்யும் உரித்துடையவர்கள்.
இறுதியாக, சிதைவுகளிலிருந்து முளைவிடும், வல்லரசுக் கைக்கூலிகளின் செயல் குறித்து தலைவர் கூறிய கருத்தினைப் படியுங்கள்.
“எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனங்கண்டுகொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள். எதிரியின் கைப் பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுய நலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்குச் சக்திகள் மீது, எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும்”.
இதயச்சந்திரன்
நன்றி:ஈழமுரசு(10.07.09)
Comments