நான்காம் ஈழப் போரில் வன்னிப் பெருநில மக்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் காணாமல் போயுள்ளனர். இலங்கை இராணுவத்தின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள மக்களில் இளைஞர்களைப் பிரித்து அவர்களை வதை முகாம்களில் அடைக்கும் பணியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளது. எனவே முகாம்களில் அதிக அளவில் இருப்பது பெண்களும், குழந்தைகளும், வயோதிகர்களும்தான்.
ஆண்கள் துணையற்ற இந்தப் பெண்களை அவரவர் கிராமங்களில் திரும்பவும் குடியேற்றுவதற்கான திட்டத்தை இலங்கை அரசு தீட்டியிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு "வடக்கின் வசந்தம்" என்று பெயரிட்டிருக்கிறது. அதனை செயல்படுத்துவதற்காக மே 7 ஆம் தேதியன்று 19 பேர் அடங்கிய குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் அமைத்திருக்கிறது. அந்தக் குழுவில் ஒருவர் கூட தமிழர் இல்லை. அனைவரும் சிங்களவர்களே. இராணுவம், காவல்துறை மற்றும் நிர்வாகத்துறையை சார்ந்த சிங்களவர்கள் மட்டுமே அந்தக் குழுவில் உள்ளார்கள். நீதித் துறையில் இருப்பவர்கள் கூட அந்தக் குழுவில் சேர்க்கப்படவில்லை.
இப்படிப்பட்டத் திட்டத்தில் கலந்து கொள்ள இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை இலங்கை அரசு அழைத்திருக்கிறது. ஜூன் 9 ஆம் தேதியன்று அவர் இலங்கை ஜனாதிபதியை இதற்காக சந்தித்திருக்கிறார். ஜூலை மாதத்தில் இருந்து அவரது குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய ஆராய்ச்சி நிறுவனமும், அதனுடன் தொடர்பு கொண்ட வேறு தனியார் வேளாண் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்காக வவுனியாவில் இருந்து செயல்பட உள்ளன. மேலும், மன்னார் பகுதியில் மீன்பிடித் தொழிலுக்கான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றையும் அவர் தொடங்க உள்ளார்.
முகாம்களில் உள்ள வன்னி மக்களில் பெரும்பாலானோர் பெண்களாக உள்ள காரணத்தால் வன்னிப் பகுதியின் வேளாண் பணிகளுக்கு இந்தப் பெண்களைப் பயிற்றுவித்து, அவர்களை கிராமங்களில் குடியேற்றப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். விதைப்புக்காலம் அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதால் இந்தப் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசையும், இந்திய அரசையும் அவர் நிர்ப்பந்தப் படுத்தியிருக்கிறார். இந்தப் பணிக்காக இலங்கை அரசுக்கு, 500 கோடி ரூபாய் உதவியை இந்திய / தமிழ்நாடு அரசுகள் அறிவித்திருக்கின்றன.
வன்னிப் பெருநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் சிங்கள இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சிங்களர்களை மட்டுமே கொண்டுள்ள காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. சிங்கள நிர்வாகிகளை மட்டுமே கொண்டுள்ள நிர்வாகத்துறையும் வன்னிப் பகுதியில் நுழைந்துள்ளது. கூடுதலாக, வன்னியை சீரமைப்பதற்காக சிறையில் உள்ள 30 ஆயிரம் சிங்களக் கைதிகளை விடுவிக்கும் திட்டமும் உள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆண்கள் துணையற்ற பெண்களை மட்டுமே கிராமங்களில் குடியேற்றினால் என்ன நடக்கும்? மாண்புள்ள வாழ்க்கையை அவர்களால் நடத்திட முடியுமா?
"வலுக்கட்டாயமாக மீழக்குடியமர்த்தப் படப் போகின்ற இந்தப் பெண்களால் சிங்களமயமாக்கப்பட்டுள்ள வன்னியில் மானத்துடன் வாழ முடியுமா என்ற கேள்வி பற்றி சிந்திக்க வேண்டியது என்னைப் போன்ற வேளாண் விஞ்ஞானிகளின் வேலையல்ல. அவர்களின் பசித்த வயிறுக்கு நிரந்தரமாக சோறு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதை நிறைவேற்றுவது மட்டுமே என் வேலை. அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், விதைப்புக் காலம் தொடங்கும் அக்டோபருக்கு முன்பு அவர்களைக் குடியமர்த்தி, பயிற்சிகளை அளித்தாக வேண்டும்" என்ற ஈன வார்த்தைகளை அவர் உதிர்த்திருக்கிறார்.
மூன்று பெண்களுக்குத் தந்தையாக இருக்கும் இவரால் எப்படி இவ்வாறு பேச முடிந்தது? கும்பகோணம் மக்களுடன் மக்களாக நின்று 1930-களில் யானைக் கால் நோயை ஒழிக்கக் கடுமையாக உழைத்த டாக்டர். மாங்கொம்பு கிருஷ்ண சாம்பசிவனின் மகனா இது? "அறம் பிறழ்ந்த" இந்த ஈன வார்த்தைகளை அந்த மருத்துவரின் மகனால் எவ்வாறு உதிர்க்க முடிந்தது? சுவாமிநாதனின் 11 வயதில் சாம்பசிவன் திடீரென்று இறந்துபோனார். அதன் பிறகு சித்தப்பா கிருஷ்ணசுவாமி, மாமா கிருஷ்ண நீலகண்டன் ஆகியவர்களால் வளர்க்கப்பட்ட அவருக்குு, ஆண்களற்ற குடும்பத்திற்கு உள்ள பிரச்சினைகளை கண்கூடாகத் தெரியும். இருந்தும் கூட, "மானத்தை விட உணவே முக்கியம்" என்ற அற்ப வார்த்தைகளை இந்த 83 வயதிலும் அவரை உதிர்க்கத் தூண்டியது எது?
சோழ நாட்டின் தஞ்சாவூரிலும், சேர நாட்டின் அம்பாலப்புழையிலும் அவரது மூதாதையர்களுக்கு சோழ-சேர மன்னர்கள் "பிரம்மதேயமாக" பல நூறு ஏக்கர் நிலங்களை இலவசமாக வழங்கி, அவர்களின் பாரம்பரியம் தழைக்க வழி செய்து கொடுத்தனர். சேரநாட்டின் அம்பாலப்புழை மன்னரால் சுவாமிநாதனின் மூதாதையரான எஞ்ஜி வெங்கடாச்சல ஐயருக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தின் ஒருபகுதியிலேயே இன்றும் கேரளத்தின் வயநாட்டில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையம் தன் ஆய்வுக் நிலத்தைக் கொண்டிருக்கிறது. பல நூறாண்டுகளாக இந்தத் தமிழ் மண்ணால் பாதுகாக்கப்பட்ட பரம்பரை ஒன்றில் வந்த ஒருவரால், தம்மை மாண்புடன் வாழ வழி செய்துகொடுத்த ஒரு இனத்தினை முற்றிலும் அழிக்கப் போகின்ற நடவடிக்கைகளுக்கு எவ்வாறு துணை போக முடிந்தது?
பண்டித நேரு காலத்தில் மிக முக்கிய மூத்த அதிகாரியாகவும், நேர்மையாளராகவும் இருந்த திரு.எஸ்.பூதலிங்கம் பிள்ளையின் மகளே சுவாமிநாதனின் மனைவி திருமதி.மீனா. மீனாவின் தாயாரே கிருத்திகா என்ற திருமதி மதுரம். அறம் சார்ந்த அற்புத நாவல்களைத் தமிழுக்கு அள்ளி வழங்கியவர். தருமத்தை எடுத்தியம்பும் குழந்தைக் கதைகளை ஆங்கிலத்திலும் எழுதியவர். 93 வயது வரைப் பெருவாழ்வு வாழ்ந்த அந்த அம்மையாரின் மருமகனின் வாயில் " பெண்களின் மாண்பை விட உணவே முக்கியம்" என்ற வார்த்தைகள் வந்திருப்பதை என்னென்று புரிந்து கொள்ள?
"சமூக அறத்திற்காக வாழ்வதைக்காட்டிலும் சுய அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ளவே நாம் வாழ்ந்தாக வேண்டும் " என்ற போக்கிரித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் கண்ணோட்டத்தையே அவரின் இந்த நடவடிக்கைகள் தெளிவாக்குகின்றன. அப்படிப்பட்ட நடவடிக்கைகளையே அவர் அவரது வாழ்க்கையில் பலமுறை மேற்கொள்ளவும் செய்திருக்கிறார்.
1964 ஆம் ஆண்டில் அமெரிக்க உளவுத்துறையுடன் தொடர்புள்ள ஃபோர்டு/ராக்பெல்லர் ஃபௌண்டேஷன்களின் விஞ்ஞானியான நார்மன் போர்லாக்க்குடன் அவர் கூட்டு சேர்ந்து இந்தியாவை மேலை நாடுகளின் பூச்சிக்கொல்லி மற்றும் இராசாயண உர உற்பத்தித் தனியார் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றிய "பசுமைப் புரட்சித்" திட்டத்தை செயல்படுத்தியவர் அவரே. இந்தத் திட்டத்தின் விளைவாக 1990-களில் இருந்தே இந்தியாவின் பல இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசுநிலமாக மாறிவிட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
1983 ஆம் ஆண்டில் இந்தியாவின் அரிசி மூலாதாரங்களை பிலிப்பைன்ஸ் நாட்டில் ஃபோர்டு/ராக்பெல்லர் ஃபௌண்டேஷன்களுக்கு சொந்தமான சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்குக் கடத்திச் சென்று அதன் தலைவராக 1987 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவரும் அவரே.
மேற்கூறிய அமெரிக்க நிறுவனங்களுக்காக ஆற்றிய உதவிகளுக்குக் கைமாறாகவே 1988 ஆம் ஆண்டில் அந்த அமெரிக்க நிறுவனங்களின் செல்லப்பிள்ளையான நார்மன் போர்லாக்கால் நிறுவப்பட்ட முதல் "உலக உணவுப் பரிசை" அவர் பெற்றார்.
இந்தப் பரிசுப் பணத்தைக் கொண்டே 1988 ஆம் ஆண்டில் கலைஞர் அரசால் (முந்தைய காலத்தின் பிரம்மதேயம் போல) சென்னை மாநகரத்தின் மையப் பகுதியில் உள்ள தரமணியில் கொடுக்கப்பட்ட இலவச நிலத்தில் தன் ஆராய்ச்சி நிறுவனத்தை அவர் தொடங்கினார். இவ்வாறு தரமணியில் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே இன்று வன்னிப் பெண்மக்களின் மாண்பை சீர்குலைக்க சிங்கள அரசால் தீட்டப்பட்டிருக்கும் "வடக்கின் வசந்தம்" திட்டத்திற்கு உதவி செய்யத் தன்னை ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறது.
இந்த ஆய்வு நிறுவனத்தின் ஊடகத்துறைக்கு இந்து ஆங்கில நாழிதளின் தலைவரான என்.ராமே பொறுப்பாளராகப் பதவி வகித்து வருகிறார். இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்கி ஜூலை 3 ஆம் தேதியன்று அவர் வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமைப் பார்வையிட்டிருக்கிறார்.
“அகதிகள் முகாமைக் கண்ட அனுபவம் என்னை உய்விக்கும் அனுபவமாக இருந்தது. தற்காலிகக் கூடாரங்களில் இயங்கிவரும் பள்ளிகளில் படித்துவிட்டுத் திரும்பிவரும் குழந்தைகள் கல்வி அதிகாரிகளிடமிருந்து அடுத்த மாதம் நடைபெறப்போகும் பரீட்சைக்காக பெற்றுள்ள புத்தகங்களோடு திரும்பும் காட்சி இதில் விசேஷமானது...இந்த முகாம்களில் உள்ள சூழ்நிலைகளை நேரடியாகப் பார்த்தறியாமலேயே மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் அவை குறித்துத் தவறாக எழுதி வருகின்றன.ஆனால் உண்மையில், முகாம்களின் சூழ்நிலை அவை கூறுவதைவிட பன்மடங்கு நன்றாகவே உள்ளது” என்று பரவசப் பட்டிருக்கிறார்..
ஆனால், இதே முகாமை மே 23 ஆம் தேதியன்று ஐ.நா.சபையின் தலைவர் பார்வையிட்டபோது “இதுபோன்ற ஒரு கொடூரத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை” என்று வேதனைப்பட்டார்.
இந்த முகாமைப் பார்வையிட்ட இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதியவர்கள், “இந்த அப்பாவி மக்களுக்கு நாம் பெருந்தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவர்களுக்கு இன்று இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தீமைகளை எதிர்த்து இந்த நாட்டின் நீதிம்னறங்களில் அவர்கள் நீதியைப் பெற முடியாத சூழ்நிலையே உள்ளது என்பதுதான் இன்றைய உண்மை நிலை. இந்தக் கருத்தை நான் கூறியதற்காக என்ன தண்டனை எனக்குக் கொடுக்கப் பட்டாலும் அதை சந்திக்க நான் தயாராகவே இருக்கிறேன்” என்றார்.
ஐ.நா.சபையின் தலைவரையும், இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதியையுமே திரு.என்.ராம் பொய்யர்கள் என்று கூறத் துணிந்தது எதற்காஅக? இதன் மூலம் தனக்கும், தான் சார்ந்த பத்திரிகைக்கும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் அவர் செய்ய நினைப்பது என்ன?
”வடக்கின் வசந்தம்” என்ற நயவஞ்சகத் திட்டத்தின் மூலம் அவர் சார்ந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கப்போகும் பல கோடி ரூபாய் பணத்துக்காகவும், இலங்கை அரசிடம் இருந்து தனிப்பட்ட ரீதியில் கிடைத்துக் கொண்டிருக்கும் எச்சில் அதிகாரத்திற்கும் அவர் மயங்கிப் போயிருக்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? முகாம்களில் உள்ள மக்களின் துயரைப் பார்த்த பின்னரும் கூட, தனக்குக் கிடைத்த அந்த அனுபவத்தை “அது என்னை ஊய்விக்கும் ஒன்றாக உள்ளது” என்று கூறத் துணிந்த அந்த மனிதரை மனித இனத்தின் கடைகோடிக் கழிசடையே இவர் என்று கூறுவதைத் தவிர வேறு எவ்வாறு விவரிக்க முடியும்?
இப்படிப்பட்ட கழிசடையின் உதவியோடுதான் எம்.எஸ்.சுவாமிநாதன் தன் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தன்னையும், தன் மூதாதையரையும் பாதுகாத்த ஒரு சமூகத்தை என்.ராம் போன்ற கழிசடைகளின் நட்பால் முற்றுமாக மறந்து போயிருக்கிறார்.
துஷ்டர்களின் துணையால் மதிமயங்கி நின்று தம் மூதாதைகளைப் பாதுகாத்த ஒரு இனத்திற்கு எதிராக எம்.எஸ்.சுவாமிநாதன் செய்ல்பாடுகளை எடுக்க இருக்கிறார். அவரால் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த துரோகச் செயல்பாடுகளை அவரது குடும்பமும், உறவினரும், இனத்தோரும், சகாக்களும், “இது ஒரு மாபாதகச் செயல்" என்றும், இந்தப் பாவத்தை எந்த ஒரு கங்கையாலும் கழுவிட முடியாது என்றும் இடித்துரைத்து வாழ்வின் அந்திமக் காலத்திலும் பெருந்தவறு செய்ய முயலும் அவரை நல்வழிப்படுத்திக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
வன்னிப் பெண்டிரின் மாண்பிற்குக் களங்கமேற்படுத்தப்போகும் சிங்கள அரசின் திட்டத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பங்கேற்றால், அவரது ஆய்வு நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தைத் தமிழ்நாடு அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது ஆய்வு நிறுவனம் தமிழ்நாட்டில் செயல்படுவதற்கு உடனடியாகத் தமிழ்நாடு அரசு தடையைக் கொண்டுவரவேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழின மக்களான நாமனைவரும் இன்றே ஒன்றிணைவோம்!
நாம் தமிழர் இயக்கம்,
தமிழ் நாடு.
Comments