தள்ளிப்போகும் தீர்வு முயற்சிகள்

-இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப் படையில் தீர்வு காண்பதற்கு வாய்ப்பே இல்லை.

-அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாக வைத்தே தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும். அதுவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிறகே தீர்வுத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

-வன்னியில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி யிருக்கும் மக்களின் நடமாட்ட சுதந்திரம் இப்போதைக்கு சாத்தியப்படாது.

நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ் வாறு தமது நிலைப்பாட்டைத் திட்டவட்டமாகவும் தெளி வாகவும் வெளிப்படுத்திவிட்டார். இந்த அரசியல் நிலைப் பாடுகளை அவர் எடுத்திருக்கின்றமை சரியா, தவறா என்பது வேறு விடயம். ஆனால் தமது உத்தேசம் திட்டம் போக்கு எப்படி அமையும் என்பதை வெளிப்படையாக அவர் தெரியப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழர் தரப்பில் பேரம் பேசும் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் என்ற வலிமை இலங்கை அரசுப் படைகளின் இரா ணுவ நடவடிக்கைகள் மூலம் முறிக்கப்பட்டபோதே தென் னிலங்கை ஆட்சிப்பீடம் இத்தகைய ஒரு நிலைப்பாட்டையே அதன்பின் கைக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது இப்போது நிஜத்தில் நடக்கின்றது. அவ்வளவுதான்.

விடுதலைப் புலிகள் ஆயுத பலத்தோடு சம அந்தஸ் தோடு இலங்கை அரசுத் தரப்புடன் ஒரே மேசையில் அமர்ந்திருந்து பேசியபோது "உள்ளக சுயநிர்ணய உரிமை யுடன் கூடிய சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் அதிகாரத்தைப் பகிர்வது குறித்துப் புலிகளுடன் சேர்ந்து பேசத் தயார்!"என ஒஸ்லோ கூட்டறிக்கை என்ற சர்வதேசஆவணம் மூலம் ஒப்புக்கொண்ட இலங்கை அரசு, இப் போது விடுதலைப் புலிகள் முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டதும், சமஷ்டி என்ற கதைக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் நியாயமான ஒரு விடயம் உண்டு. எந்தத் தீர்வும் ஒரு தரப்பின் மீது மறுதரப்புப் பிரயோகிக்கும் வலிமை, அடக்குமுறை, பலம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவ தாக அமையக்கூடாது. அதுபோல எண்ணிக்கையில் பெரும்பான்மையினர், எண்ணிக்கையில் சிறுபான்மையி னருக்கு விட்டெறியும் "பிச்சை"ஆகவும் அது அமையக்கூடாது. அது போலவே அத்தகைய தீர்வு எத்தனங்களுக்கு ஆதரவு அளிப்போரின் எண்ணிக்கையின் அடிப்படையி லும் அது தீர்மானிக்கப்படக்கூடாது.

எந்தத் தீர்வும் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு அல்லது இனத்துக்கு நீதி, நியாயம் செய்வதாக அமைவதே மிக முக்கியமானதும் பிரதானமானதுமாகும். அது நீதியாக, நியாயமாக அமைவதன் காரணத்தால் அதைப் பெரும் பான்மையினர் ஆதரிப்பதாக இருக்கவேண்டுமே தவிர, மறுபுறமாக பெரும்பான்மையினர் விரும்பும் தீர்வே நீதி, நியாயமானதாக அர்த்தம் பண்ணப்படக் கூடாது.

ஆனால், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இனப்பிரச் சினைத் தீர்வு என்பது, அவர்களின் நீதி, நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்வது என்பதிலும் பார்க்க, தென்னிலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத மக்கள் அவர்களுக்கு எதுவரை விட்டுக் கொடுக்கத் "தாராளம்"கொண்டுள்ளனரோ அதுவரையே என்பதுபோல தென்னிலங்கை அரசியல் தலைமையால் வரையறை செய்யப்படுவதுதான் வேதனைக்குரியது; விசனத்துக்குரியது.

தாம் ஆட்சிக்கு வந்தால் அடுத்த மூன்று மாதங்களில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்க முடிவைக் கண்டறிந்து வெளிப்படுத்துவார் என் றும், இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பார் என்றும் அறி வித்தே தேர்தல் வாக்குறுதி அளித்தே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கையில் பெருவாரி வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்தார் ஜனாதிபதி ராஜபக்ஷ.

இப்போது மூன்று மாதங்கள் அல்ல, மூன்றரை வருடங் கள் கடந்துவிட்டன. விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம், முன்னர் எந்தத் தென்னிலங்கை அரசுத் தலை வரும் பெறாத வரலாற்றுச் சாதனையின் உச்சத்தில் அவர் இப்போது நிற்கின்றார். தென்னிலங்கையில் அவருக்கான ஆதரவும் செல்வாக்கும் இமயத்தைத் தொட்டு நிற்கின்றன. இந்தச் சமயத்தை சந்தர்ப்பத்தை வசமாகப் பயன்படுத்தித் தமிழர்களுக்கு நியாயம் செய்யும் தீர்வு ஒன்றை அவர் முன்வைப்பாராயின் அதைத் தென்னிலங்கையில் "சந்தைப்படுத்துவது"அவருக்கு ஒன்றும் கஷ்டமான விடயமாக இருக்க மாட்டாது. அப்படி நடந்துகொண்டு உலக வரலாற்றில் என்றும் பெயர் குறிப்பிடத்தக்க சரித்திர நாயகனாக உயர்ந்த நாட்டுத் தலைவனாக வருவதிலும் பார்க்க, தமக்குள்ள செல்வாக்கை உடனடி யாகப் பயன்படுத்தி அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தம்மை உறு திப்படுத்திக் கொள்வதுதான் முக்கியமானது என்று அவர் கருதுகின்றார் போலும்.

நல்லது. அப்படித் தமது அடுத்த எட்டு ஆண்டு காலப் பதவியை அதிகாரத்தை உறுதிப்படுத்திய பின்னர், அந்தப் பலமான அத்திவாரத்தில் நின்றுகொண்டு, தமிழர் களுக்கு அதிக விட்டுக்கொடுப்புடன் கூடிய நியாயத் தீர்வைத் தம்மால் வழங்க முடியும் என அவர் கருதவும் கூடும்.

அதாவது, பேரினவாதத்தில் மூழ்கிக் கிடக்கும் தென்னி லங்கையை அதிருப்திப்படுத்தியபடி, தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்கி, அந்தத் தீர்வையும் தனது எதிர்காலத்தை யும் வீணடிப்பதிலும் பார்க்க, தமது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, பின்னர் அந்த ஸ்திரத்தோடு நியாயத்தீர்வை வழங்குவது குறித்து ஆராய்வது நல்லது என அவர் எண்ணுகின்றாரோ தெரியவில்லை.

எது எப்படியென்றாலும் தனி அரசியல் தலைமை களின் நலனுக்காக சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுபறிப்பட்டுப் போகவிடப்பட்ட இலங்கைச் சரித்திரம் இப்போது மீண்டும் அதே பாதையில் பயணிக்க முயல்கின்றதோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியாது.

Comments