நோர்வே வாழ் ஈழத்தமிழர்களுக்கான நாடுதழுவிய ஜனநாயக மக்கள் கட்டமைப்பு

தமிழீழம் தொடர்பான நோர்வே வாழ் ஈழத்தமிழரின் அரசியல், மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியில் மக்கள் அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கி நோர்வே வாழ் ஈழத்தமிழர் மக்களவைக்கான யாப்பை உருவாக்கும் பணியில் சமுகப்பிரதிநிதிகள் அடங்கிய உருவாக்கக்குழு ஒன்று முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருகின்றது.

1) நோர்வேயில் வாழுகின்ற ஈழத்தமிழரின் நலன்களைப் பிரதிபலித்தல், 2) தாயகத்தில் அல்லலுறும் எமது உடன்பிறப்புக்களின் மனித உரிமைக்காய்க் குரல் கொடுத்தல், 3) ஈழத்தமிழரின் அரசியல் அவா தொடர்பான தெளிவான அடிப்படைகளில் வழுவாத நிலையில் நின்று செயற்படுதல் ஆகிய மூன்று முக்கிய குறிக்கோள்களுடன் ஜனநாயக விழுமியங்களுடனான யாப்பொன்றை வகுத்து நாடுதழுவிய ஒரு கட்டமைப்பை விரைந்து உருவாக்கவேண்டும் என்பதே எம்முன்னால் உள்ள பணியாகும்.

உலகளாவிய ரீதியில் குரல்கொடுக்கின்ற அதேவேளை அந்தந்த நாடுகளில் வெகுஜன மட்டத்திலும், அரசியல், மனிதாபிமான மட்டங்களிலும் சிறப்பாக நாம் செயற்பட்டால் மாத்திரமே சிறிலங்கா அரசு மீது யதார்த்தப+ர்வமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். அத்தோடு எமது மக்களின் மனிதாபிமான இன்னல்களைப்; போக்குவதும் அரசியல் தீர்வுக்காக சர்வதேச சமூகத்தைச் செயற்படவைப்பதும் சாத்தியமாகும் என்பது சர்வதேச சட்ட, மனிதாபிமான வல்லுநர்களின் எமது தேசிய இனப்பிரச்சனை சார்ந்த கருத்தாக அமைகிறது.

நோர்வேயில் ஈழத்தமிழரின் தமிழீழத் தாயகக் கோட்பாடு தொடர்பான மக்கள் ஆணை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படைகளை மீள உறுதி செய்தமையூடாக ஐயந்திரிபுக்கிடமின்றி மிக அண்மையில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளாலும் 1976ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, 1977 பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அரசியல் அடிப்படைகளான

1) இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகம்
2) ஈழத்தமிழர்கள் தனித்துவமான ஒரு தேசிய இனம்
3) ஈழத்தமிழர்கள் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை கொண்டவர்கள்
4) சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு ஈழத்தமிழர் பாரம்பரியத் தாயகத்தில் உருவாகவேண்டும்

என்பவையே எமது அரசியல் விருப்பை வெளிப்படுத்தும் நான்கு முக்கிய அடிப்படைகள் என்று நோர்வேயில் 10 மே 2009 அன்று நடாத்தப்பட்டிருந்த வாக்குக்கணிப்பில் 98.95 வீதமான ஈழத்தமிழர்கள்; மீளுறுதிசெய்திருந்தார்கள். இந்நிகழ்வானது ஈழத்தமிழ் புலம்பெயர் சமுகத்தின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒரு அரசியல் நிகழ்வாகும்.

இந்நிகழ்வு எமது தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வுகளை உருவாக்க முன்வருபவர்களை மேலும் ஆக்கப+ர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளத் தூண்டுவதாக அமைகிறது.

இந்த அடிப்படைகளைக் கொண்டு ஜனநாயகக் கட்டமைப்பொன்றை உருவாக்கி, இன்னலுறும் எமது மக்களுக்கும், எமது தேசியத்தின் இருப்புக்கும் பணியாற்ற அனைவரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி ஒத்துழைக்குமாறு வேண்டிநிற்கின்றோம்.

தேர்தலுக்கான திகதி பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு: ரமணன் கந்தையா

மின்னஞ்சல்: ncet@rocketmail.com

Comments