அகதி முகாம்களிலுள்ள மக்களின் விபரத்தை அரசு வெளியிட வேண்டும்

யாழ்.மாநகரசபை நிர்வாகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளிக்கத் தக்கதாக தமது வாக்குகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூட்டமைப்பில் இடம்பெறும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேசமயம், அகதி முகாங்களிலுள்ள மக்களின் விபரங்களை வெளியிடுமாறும் அரசாங்கத்தை அக்கட்சி கோரியுள்ளது. வெள்ளவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கட்சி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மேற்குறிப்பிட்ட கருத்துகளை வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது:


போக்குவரத்துப் பிரச்சினையாலும் உடல்நிலை சீரின்மையாலும் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாததால் இந்த ஊடகவியலாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துகின்றேன். இந்நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தலைவரென்றவகையில் கூட்டமைப்புக்கு வாக்குகளை வழங்குமாறு யாழ்.மாநகரசபை வாக்காளரை தாழ்மையுடன் கேட்கின்றேன்.

தற்போதைய நிலையில் தமிழர்களுக்கு தேவைப்படுவது தேர்தல் அல்ல. முதலில் இடம்பெயர்ந்துள்ள மூன்று இலட்சம் மக்களை மீளக் குடியமர்த்துவதேயாகும். இவர்கள் செட்டிகுளம் மெனிக் பார்மிலுள்ள பல முகாம்களில் பல அசௌகரியத்தின் மத்தியில் வாழ்கின்றனர்.

தகரத்தால் வேயப்பட்ட கொட்டிலின் கீழ் 5,6 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் தகரத்தின் கீழ் கடும் உஷ்ணத்துடன் வாழ்கின்றனர். அதேவேளை, இயற்கை கடன்களை நிறைவேற்றக்கூட உரிய வசதியின்மையால் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய சந்தர்பமும் அவர்களுக்கு ஏற்படுகின்றது.

குறிப்பாக இம் மக்களுக்குச் சுதந்திரமான நடமாட்டமில்லை. இது குறித்து எதிர்க்கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.க. ஆகியன தமது எதிர்ப்பை வெளியிட்டன. பாராளுமன்றத்தில் ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல என்ன காரணத்துக்காக இவர்களை அடைத்து வைத்துள்ளதாக கேள்வியெழுப்பியிருந்தார்.

முகாம்களிலுள்ளவர்களில் 3/4 பகுதியினர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை வேரோடு பிடுங்கி வவுனியா முகாம்களில் தடுத்து வைத்திருப்பதற்கு அவர்கள் என்ன குற்றம் இழைத்துள்ளனர். இவர்கள் அங்கு பல சொத்துகளைக் கொண்ட வன்னி மக்களாகும்.

போர் முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அரசு இந்த இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் உடனடியாக மீளக்குடியமர்த்த வேண்டுமென நான் அரசைக் கேட்கின்றேன். இதேவேளை, போர் முடிந்து 1 1/2 மாதங்களாகியுள்ள போதும் ஒவ்வொரு முகாம்களிலும் எத்தனை பேர் உள்ளனர். அவர்களின் பெயர் விபரங்கள் இன்னமும் வெளியிடப்படாதுள்ளது. இதன் மர்மம் என்ன? இதனை வெளிப்படுத்த வேண்டும்.

முல்லைத்தீவு அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுற்ற நிலையில் ஏன் வலிவடக்கு போல் முல்லைத்தீவையும் அறிவித்துள்ளீர்கள்? தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கையை குறைக்குமாறு கோருவது எதற்காக? இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

அதேபோல் போர் முடிந்துள்ள நிலையில் புலி ஆதரவாளர்கள் என்ற அடிப்படையிலுள்ள 9 ஆயிரம் பேர் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும். போரின் இறுதிக்கட்டத்தில் அதிகளவு பொதுமக்கள் பலியானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது போர்க் குற்றங்களாக கணிக்கப்பட வேண்டும்.

இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை விசாரணை வேண்டுமெனக் கூறியுள்ளார். போர் முடிந்த பின்னும் என்ன காரணத்துக்காக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஐ.தே.க. கேள்வியெழுப்பியுள்ளது. இதனை மாதாந்தம் நீடிப்பதன் மூலம் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கூடிய அதிகாரம் அளிக்கப்பட்டு தமிழர்களைக் கைது செய்வதற்கே இடமளிக்கும்.

இந்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக மட்டும் தான் பாவிக்கப்படுகின்ற நிலையில் இதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். அண்மையில் நான் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். அங்கு இன்னும் போர்ச்சூழல் உள்ளது போல் நிலைமையுள்ளது. யாழ்.குடாநாட்டில் கிட்டத்தட்ட 6 இலட்சம் மக்கள் உள்ளனர். இந்நிலையில் சுமார் 60 ஆயிரம் படையினர் எதற்காக?

யாழ்.மக்கள் அவசர தேவையின் நிமித்தம் உடனடியாக கொழும்புக்கு வரமுடியாதுள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வேண்டும். அதுவும் கொழும்பிலுள்ள வீட்டு உரிமையாளர் இவரை பொறுப்பேற்பதாகத் தெரிவிக்க வேண்டும். இது ஒரு பாரதூரமான உரிமை மீறலாகும். இதனை 01.08.2008 இல் அமுல்படுத்திய போது எனது ஆட்சேபனையை அங்குள்ள இராணுவ தளபதிக்கு இரு கடிதம் எழுதினேன்.

அவர் இம்முடிவு மேலிடத்து முடிவென தொலைபேசி மூலம் கூறினார். நான் மேலிடத்துக்கும் கடிதம் எழுதியும் பதில் வராததால் இது தொடர்பில் மனித உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரலில் தாக்கல் செய்துள்ளேன்.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக கெடுபிடிகளை அரசு மேற்கொள்ளும் நிலையில் ஆளுங்கட்சி வெற்றிலை சின்னத்தில் யாழ்.மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது.

இவர்கள் அந்த மக்களிடம் வாக்கு கேட்பதற்கு என்ன அருகதையுண்டு? எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் யாழ்.மாநகரசபை நிர்வாகத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி: தினக்குரல்

(13.07.2009)

Comments