தமிழீழம் என்ன புலிகளின் தாகமா..??!

சிறீலங்கா என்ற நாமம் 1972ம் ஆண்டு வரை உலக வரைபடத்தில் இருக்கவில்லை. அதுவரை அது சிலோன் அல்லது இலங்கை என்றே இருந்தது.

1948 இல் சிலோன் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற உழைத்தவர்களில் சேர் பொன் இராமநாதன்,பொன்னம்பலம், அருணாச்சலம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சோல்பரி என்ற ஆங்கிலேயப் பிரபுவின் முன் சிலோனுக்கு சுதந்திரம் அளிக்க முதல் 50:50 என்ற அரசியலமைப்புத் திட்டம் முன் மொழியப்பட்டது. அதில் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தோர் 50% அரசாங்கத்தில் இடம்பெற வாய்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால் அப்போதைய சில தமிழர்கள் தலைமைகள் அதை ஏற்க மறுத்து சிங்களவர்களும் நாமும் சகோதரர்களாக வாழ்வோம் என்று சொல்லி ஆங்கிலேயர்கள் தர முன்வந்ததையும் பெறாமல்.. ஆங்கிலேயர்களை விரட்டி விடுவதில் குறியாக இருந்தனர். இறுதியில் 50:50 திட்டம் தமிழர்களிடையேயான ஒற்றுமை இன்மையால் ஆங்கிலேயர்களால் நிராகரிக்கப்பட்டது.

அன்று அப்படி தமிழர்கள் தமது அந்தஸ்தை, உரிமைகளை சிங்களவர்களுக்கு விட்டுக் கொடுத்ததற்காக சிங்களவர்கள் தமிழர் தலைமைகள் சிலரை பல்லக்கில் தூக்கி கொழும்பு காலி முகத்திடலில் ஊர்வலம் வந்தனர். தமிழர் தலைமைகளும் அதில் உச்சி குளிர்ந்து உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்தனர்.

அதன் பின்னர் பல (1956,1958, 1977, 1981 மற்றும் 1983 ஆண்டுகளில்) இனக்கலவரங்கள் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டன. சிங்களவர்களால் தமிழர்கள் தொடர்ச்சியாகத் துன்புறுத்தப்பட்டனர். அரச பதவிகளில், கல்வி வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டனர்.

இறுதியாக சிலோன் என்றிருந்த இலங்கைத் தீவு சிங்கள எழுத்தின் அடையாளக் குறியோடு சிறீலங்காவாக சிங்களத் தலைமைகளால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வாளேந்திய சிங்கம் சிங்கள இனத்தை முன்னிலைப்படுத்த சிங்களத் தேசியக் கொடி சிறீலங்காவின் கொடியானது. பெளத்த மதம் தேசிய மதமானது. சிங்கள மொழி தனிச் சிங்களச் சட்டத்தின் மூலம் தேசிய மொழியாக்கப்பட்டது. "சிறி" என்ற சிங்கள எழுத்து சிங்களத் தேசியத்தை உச்சரிக்க எங்கும் புகுத்தப்பட்டது.



//1981 வரையான சிங்களக் குடியேற்றங்கள். அதன் பின்னான சிங்களக் குடியேற்றங்களுக்கு சரியான தரவுகள் பெறப்படுவது திட்டமிட்டு சிங்களத் தலைமைகளால் தடுக்கப்பட்டுள்ளது.(image: tamilnation.org) //

தமிழர் தேசங்கள் எங்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பமாகின. அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் இவை நிகழ்ந்தன.

இந்தப் பின்னணியில் தான் தந்தை செல்வநாயகம் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பயனாக டட்லி - செல்வா.. பண்டா - செல்வா ஒப்பந்தங்கள் உருவாகின. அவற்றிற்கு இந்தியா அப்போதும் மத்தியஸ்தம் வகித்தது.

ஆனால் இந்த ஒப்பந்தங்கள் எழுதப்பட்ட வேகத்திலேயே ஒப்பந்தம் போட்ட சிங்களத் தலைமைகளால் கிழித்தும் எறியப்பட்டன.ஆனால் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட போதெல்லாம் ஒப்பந்தம் போட மத்தியஸ்தம் வகித்த இந்தியா இப்போதும் போலவே அப்போதும் மெளனமே காத்து வந்திருக்கிறது.

இவற்றின் தாக்கத்தின் விளைவே தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் தமிழீழக் கோரிக்கையும் உருவாக வழி செய்தது.

அதில் புலிகளைத் தவிர எவரும் தமிழீழக் கொள்கையோடு இறுதிவரை ஒட்டி நிற்கவில்லை.

புலிகள் தோன்றிய பின்னரும் கூட சர்வ கட்சி - வட்ட மேசை மாநாடு.. திம்புப் பேச்சு.. இந்திய - இலங்கை ஒப்பந்தம்.. பிரேமதாச - புலிகள் பேச்சு.. சந்திரிக்கா - (புலிகள்) பிரபா பேச்சு.. ரணில் - பிரபா போர் நிறுத்த ஒப்பந்தம் என்று பல பேச்சுக்களும் ஒப்பந்தங்களும் போடப்பட்டன.

இறுதியில் எல்லாமே சிங்களத் தலைமைகளின் திட்டமிட்ட எதிர் நாசகார நகர்வுகளாலும் தமிழர் தரப்புக்களின் ஒற்றுமையின்மையாலும் இலக்குகளை எட்டாமல் செயலிழந்து போயின.

இப்போ.. தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக்கி அந்நிய சக்திகளின் உதவியோடு அவர்களையும் அழித்து.. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து.. சொத்துக்களை அழித்து.. தமிழ் மக்களை சொந்த இடங்களில் இருந்து துரத்தி அடித்துவிட்டு.. மீண்டும் தமது சிங்களத் தேசியத்தை இலங்கைத் தீவில்.. சிறீலங்கா என்ற புகுத்தப்பட்ட நாமத்தின் கீழ் நிலை நாட்டத் துடிக்கின்றனர் சிங்கள அரசுத் தலைமைகள்.

அபிவிருத்தி என்ற போர்வையில்.. சிவில் நிர்வாகத்தை மீளமைக்கிறோம் என்ற போர்வையில்.. ஜனநாயகத்தை காக்கிறோம்.. சுதந்திரத்தை தக்க வைக்கிறோம் என்ற போர்வைகளில்.. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை.. சிங்கள மயமாக்கலை தமிழர் தாயகம் எங்கும் செய்கின்றனர்.. இன்னும் இன்னும் செய்யவும் திட்டங்களைத் தீட்டியுள்ளனர். அதற்கு புலிகள் பலவீனப்பட்டுள்ள இந்தக் காலத்தை லாவகமாகக் கையாளவும் தொடங்கியுள்ளனர்.

தந்தை செல்வா காலத்தில் இருந்த சிங்களத் தலைமைகளுக்கும் இன்றுள்ள சிங்களத் தலைமைகளுக்கும் கொள்கை அளவில் வேறுபாடில்லை. அன்றும் இன்றும் அவர்களின் கொள்கை இலங்கை ஒரு சிங்களத் தீவு.. அங்கு சிங்களவர்களே ஆதிக்க இனம் என்பதாகும்.

அதேபோல் அன்றிருந்த தமிழ் தலைமைகளுக்கும் (செல்வநாயகம் தவிர்த்த) இன்றைய தமிழ் தலைமைகளுக்கும் (புலிகள் தவிர்ந்த) இடையில் எந்த வேறுபாடும் இல்லை. அன்றும் தமிழர்கள் காட்டிக் கொடுத்து தமது உரிமைகளை விட்டுக் கொடுத்துப் பல்லக்கில் ஏறினர். பவனி வந்தனர். இன்றும் காட்டிக் கொடுத்து உரிமைகளை விட்டுக் கொடுத்து குளிரூட்டிய பஜிரோக்களில் அமைச்சர்களாக எம்பிக்களாகப் பவனி வருகின்றனர்.

ஆனால் இடையில்.. மக்கள் தான் அன்றும் இன்றும்.. உரிமைகளை இழந்து சொல்லனாத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு அகதிகளாக.. ஏதிலிகளாக உலகெங்கும் அலைந்து திரிகின்றனர்.

இந்த நிலைக்கு யார் காரணம்.. மக்களின் தாகமான தமிழீழத்தை தலையில் ஏற்றிக் கொள்ள மறுக்கும் தமிழ் தலைமைகளும்.. சிங்களத் தலைமைகளும்.. உலக ஆதிக்க சக்திகளுமே அன்றி தமிழ் மக்களின் நியாயமான தமிழீழக் கோரிக்கை அல்ல.

புலிகளின் வீழ்ச்சி அல்லது பின்னடைவோடு தமிழீழக் கோரிக்கையும் சம்மட்டி அடி வாங்குகிறது. தமிழீழம் கேட்கப் போய்த்தான் இத்தனை அழிவு என்போர் தமிழர்களிடையேயும் தோன்றி வளர்ந்து வருகின்றனர். இவர்களின் அறியாமையை அகற்றவே இப்பதிவை இடுகின்றோம்.

தமிழீழக் கோரிக்கை.. தமிழர்களின் கொழுப்பெடுத்த அரசியல் கோரிக்கையல்ல. தமது உரிமை இழந்து.. வாழ்விழந்து..

வாழ வழியில்லாத நிலையில் பிறந்த அவர்களின் வாழ்வுரிமையைக் காத்துக் கொள்வதற்காக தீர்மானிக்கப்பட்ட கொள்கை.


புலிகளின் பெயரால் தமிழீழக் கொள்கையையும் சாகடிக்க நினைக்கும் தமிழ் மற்றும் எந்த சக்தியாக இருப்பினும் அவர்கள் தமிழர் விரோதிகள் என்றே நோக்கப்பட வேண்டியவர்கள்.

அதனை முதலில் தமிழீழக் கோரிக்கையின் நியாயம் தெரியாது.. அதன் தார்ப்பரியம் புரியாது அரசியல் நடத்தும் ஈழ மற்றும் தமிழக அரசியல் தலைமைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதையே இப்பதிவு உங்களிடம் தாழ்மையோடு கோரி நிற்கிறது.

நன்றி.
குண்டுமணி

Comments