காலம் கட்டவிழ்த்துவிடும் வழி



இருபது ஆண்டுகளாக தமிழீழ மண்ணில் தலைநிமிர்ந்து நின்ற தமிழீழ அரசு, இன்று அஞ்ஞாதவாச நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பொழுதும், தமிழீழ தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கை தணியவில்லை என்பதை நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் ஊடாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம் வெளிப்படுத்தி வருகின்றோம். இதேபோன்று, தமிழீழ தனியரசை நிறுவுவதற்காக என்றென்றும் எமக்குத் தோள்கொடுத்து உறுதுணை நிற்பதற்கான தமது தார்மீக ஆதரவை எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக மக்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். படை வலிமையின் மூலம் எமது மண்ணை இன்று சிங்களம் ஆக்கிரமித்துவிட்ட பொழுதும், எந்தவிலை கொடுத்தாவது எமது மண்ணை மீண்டும் மீட்டெடுப்போம் என்ற ஓர்மம் எம்மை விட்டு அகலவில்லை. இதனையே கரும்புலிகள் நாளில் மேற்குலக தேசங்கள் தோறும் நிகழ்ந்தேறிய உயிர்த்தெழுவோம் எழுச்சி நிகழ்வுகள் ஊடாக ஈழத்தமிழினம் வெளிப்படுத்தியது. இதற்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல் பெங்க@ரிலும் உயிர்த்தெழுவோம் எழுச்சி நிகழ்வு இடம்பெற்றது. வரலாறு காணாத இழப்புக்களையும், அழிவுகளையும், துன்பங்களையும் சந்தித்து நிற்கும் ஈழத்தமிழினம், உலகத் தமிழினத்தின் உறுதுணையுடன் அக்கினிப் பறவைகளாக உயிர்த்தெழுந்து தமிழீழ தனியரசை மீண்டும் நிறுவும் என்ற மெய்யுண்மையையே இவ்வாறான நிகழ்வுகள் கட்டியம்கூறி நிற்கின்றன எனக்கூறின் அது மிகையில்லை. இவ்வாறான பின்புலத்தில் நின்றவாறு, உலகத் தமிழினம் உடனடியாக ஆற்ற வேண்டிய பணிகளையும், கடப்பாடுகளையும் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

11 செப்டம்பருக்குப் பின்னரான உலக ஒழுங்கு என்பது முற்றுமுழுதாக மேற்குலகின் வலிமையில் இருந்து கட்டியெழுப்படுகின்றது. பனிப்போர்க் காலத்தில் சோவியத் ஒன்றியம் - அமெரிக்கா என்ற இருதுருவ நிலையில் இருந்த உலக ஒழுங்கு, பனிப்போரின் முடிவுடன் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட பல்துருவ நிலையில் இயங்கியது. ஆனால் இதற்கு ஆப்பு வைத்து, அமெரிக்காவை சீண்டியிழுத்து உலக ஒழுங்கை அமெரிக்காவின் முழுமையான மேலாதிக்கத்திற்கு உட்பட்ட ஒருதுருவ நிலைக்கு இட்டுச்சென்றது பின்லாடனின் இஸ்லாமிய அடிப்படைவாதம். சோவியத் ஒன்றியத்தின் சிதைவுடன் பனிப்போர் முடிவுக்கு வந்த பொழுது, பொதுவுடமைத்துவமும், மார்க்சியமும் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகவே அன்றைய தாராண்மைத்துவவாதிகள் வாதிட்டார்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும், அப்பொழுது பொதுவுடமைத்துவ ஆடையணிந்தவாறு முதலாளித்துவத்தை ஆரத்தழுவிக் கொண்ட சீனாவின் பொருண்மிய வளர்ச்சியும், தாராண்மைத்துவத்தின் வெற்றியை குறியீடு செய்து வரலாற்றின் முடிவில் மனித குலத்தை கொண்டு வந்திருப்பதாகவே அப்பொழுது பிரான்ஸிஸ் புக்குயாமா மார்தட்டிக் கொண்டார். புக்குயாமாவின் கருத்துப்படி, ஹேகலிடம் கடன்வாங்கி கார்ல் மார்க்ஸ் தரிசித்த வரலாற்றின் முடிவை பொதுவுடமைத்துவம் நிர்ணயிக்கவில்லை. மாறாக மாற்றுக் கருத்தியல்களை வெற்றிகொண்ட தாராண்மைத்துவமே வரலாற்றின் முடிவை நிர்ணயிக்கும் என்பதே புக்குயாமாவின் வாதமாக அமைந்தது. அவரைப் பொறுத்தவரை, தாராண்மைத்துவத்தின் மாற்றுக் கருத்தியல்களாக கருதக்கூடிய இஸ்லாமும், தேசியவாத இயக்கங்களும் கருத்தியல்களுக்கான பண்புகளை கொண்டிருக்கவில்லை. எனவே, பனிப்போரின் முடிவுடன் சனநாயக சமாதானக் கோட்பாட்டை இறுகப் பற்றிக்கொண்ட அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகம், உலகெங்கும் தாராண்மைத்துவ ஆட்சியைப் பரப்பும் தனது திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கக் தொடங்கியது. பனிப்போர்க் காலத்தில் மனிதநேயம் பேசிய ஐக்கிய நாடுகள் சபையும், பன்னாட்டு தன்னார்வ நிறுவனங்களும், பனிப்போரின் முடிவுடன் அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகின் தூண்களாக தம்மைக் கட்டமைத்துக் கொண்டன.

தேசிய இனங்களின் தன்னாட்சியுரிமை என்பது தாராண்மைத்துவத்தின் மூலவேர்களில் ஒன்று. இதனை பொருளியல் கருத்துலகில் நின்றவாறு மார்க்சியமும் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டதை பல தடவைகள் லெனின் நிதர்சனமாக்கியிருந்தார். ஆனால், துர்ப்பாக்கியவசமாக பனிப்போருக்குப் பின்னரான உலக ஒழுங்கில், இதன் வாரிசுரிமையை முன்னைநாள் சோவியத் ஒன்றிய தேசிய இனங்களான கிழக்கு ஐரோப்பியர்களுக்கு மட்டும் அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகம் உரித்தாக்கிக் கொண்டது. தமிழீழ தேசத்தின் தன்னாட்சியுரிமையையும், தனியரசுக்கான கோரிக்கையையும் உதாசீனம் செய்த மேற்குலகம், கிழக்கு ஐரோப்பியர்களின் தன்னாட்சியுரிமையை தயக்கமின்றி அங்கீகரித்து அவர்களுக்கு தனியரசு நிலையை வழங்கிக் கொண்டது. அப்படியிருந்த பொழுதும்கூட, ஆயுதவழி தழுவிய விடுதலைப் போராட்டங்களை மேற்குலகம் ஓரங்கட்டிவிடவில்லை. 1997ஆம் ஆண்டில் பன்னாட்டுப் பயங்கரவாதமாக இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவெடுக்கத் தொடங்கிய பொழுது பலம்வாய்ந்த ஆயுதப் போராட்ட இயக்கங்களின் வளர்ச்சியை அரசியல் அரங்கில் முடக்கும் கொள்கையளவிலான முடிவை அமெரிக்கா எடுத்தது. இதன் வெளிப்பாடாகவே 1997ஆம் ஒக்ரோபர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் அமெரிக்கா இணைத்துக் கொண்டது. இங்கு ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கும் தேசிய விடுதலை இயக்கங்களின் அரசியல் அபிலாசைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. இவ்வாறான தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆணையளித்த தேசிய இனங்களின் விருப்பு வெறுப்புக்களும் இங்கு கவனத்திற் கொள்ளப்படவில்லை. மாறாக, தாராண்மைத்துவ உலக ஒழுங்கிற்கு விரோதமான தீண்டத்தகா விடயங்களாகவே தேசிய விடுதலைப் போராட்டங்கள் கருதப்பட்டன. அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகைப் பொறுத்தவரை, சனநாயகம், தாராண்மைத்துவ பொருளாதாரம், தனிமனித சுதந்திரம், பன்மைத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி உலகில் வேரூன்ற வேண்டும். இங்கு தேசிய இனங்கள் என்றோ, சிறுபான்மை இனங்கள் என்றோ வேறுபாடுகள் இருக்கக்கூடாது. தேசிய இனங்களாயினும், சிறுபான்மை இனங்களாயினும், இன அடிப்படையிலான தேசிய அடையாளங்களைக் கைவிட்டு, ஏற்கனவே இருக்கக்கூடிய தேசிய அடையாளத்துடன் ஒத்திசைவாகவும், நல்லிணக்கத்துடனும் வாழப் பழக வேண்டும். இதுவே தாராண்மைத்துவ உலக ஒழுங்கு நிலைபெறுவதற்கு வழிகோலும்.

இந்த வகையில், ஈழப்பிரச்சினையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளும், சிங்கள தேசத்திடன் இருந்து அவர்கள் பட்டறிந்த கசப்பான அனுபவங்களும், அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலக ஒழுங்கிற்கு பொருட்டாகத் தென்படவில்லை. மாறாக, ஆயுத எதிர்ப்பியக்கம் என்ற நிலையில் இருந்து, ஆயுதங்கள் களையப்பட்ட அரசியல் கட்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் பரிணமிக்க வேண்டும், தமிழீழ தனியரசுக்கான கோரிக்கை கைவிடப்பட வேண்டும், சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்று, ஒன்றுபட்ட சிறீலங்காவிற்குள் அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான அல்லது ஆகக்கூடியது இணைப்பாட்சி வடிவத்தைக் கொண்ட அரசியல் தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என்பதே தாராண்மைத்துவ உலகின் நிலைப்பாடாகியது. அதேநேரத்தில், சிங்கள தேசியம் என்ற நிலையைக் கடந்து, சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், பறங்கியர் என நான்கு இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறீலங்கா என்ற தேசியத்தைக் கட்டியெழுப்பி, மத்தியில் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைப் பரவலாக்கி, தாராண்மைத்துவ பொருளாதாரத்தை சிங்கள தேசமும், அதன் அதிகார வர்க்கமும் இறுகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்பதும் தாராண்மைத்துவ உலகின் நிலைப்பாடாகத் திகழ்ந்தது.

இப்படியான அழுத்தங்களுக்கு முகம்கொடுத்தவாறு நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மீது, 2001ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு தடைவிதித்தது. அதேநேரத்தில், சமாதானப் புறவாக 1999ஆம் ஆண்டில் ஈழத்தீவில் களமிறங்கிய நோர்வே, 2000ஆம் ஆண்டின் இறுதியுடன் தாராண்மைத்துவ உலகின் நிகழ்ச்சித் திட்டத்தை முழுவீச்சுடன் அமுல்படுத்தும் நடவடிக்கைகளில் மூழ்கியது. இங்கு, தமிழீழ மக்களுக்கு நீதியளிப்பது நோர்வேயின் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, ஆயுதவழி தழுவிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதான அரசியல் போராட்டமாகத் தரமிறக்கி, தமிழீழ ஆயுத எதிர்ப்பியக்கமாக விளங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் படைவழியில் பலவீனப்படுத்தி, அதிகாரப் பகிர்வு அல்லது இணைப்பாட்சி என்ற வரையறைகளுக்குள் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை குறுக்கிக் கொள்வதே நோர்வேயின் நீண்டகால நிகழ்ச்சித் திட்டமாக அமைந்தது. என்றோ ஒரு காலத்தில் ஆயுதக் களைவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்க வேண்டும் என்று 2005ஆம் ஆண்டில் விதார் ஹெல்கிசன் கூறியமை இதற்கு சான்று பகர்ந்தது. அதேநேரத்தில், அன்று தாராண்மைத்துவ உலகின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்கவை அரசியல் - படைவழிகளில் பலப்படுத்தி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள், பன்னாட்டு தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக தென்னிலங்கையில் பொருண்மிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து, சிங்கள தேசத்திற்கு முண்டுகொடுக்கும் மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டத்தையும், அப்பொழுது நோர்வே கச்சிதமாக செயற்படுத்தியது.

எனவே, ஈழத்தீவில் மேற்குலகின் தேசிய அல்லது கேந்திர - பூகோள – பொருண்மிய நலன்கள் என்பது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீச்சை சிதைத்து, வலுவான தாராண்மைத்துவ ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய சிறீலங்கா என்ற தேசியத்தைக் கட்டியெழுப்புவதையே மையமாகக் கொண்டிருந்தன. இங்கே தமிழீழ தேசத்தின் அரசியல் அபிலாசைகளும், மனித உரிமைகளும் கிஞ்சித்தளவும் கணக்கிலெடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தமிழீழ விடுதலைப் போராட்டம் சிக்குண்டு சிதறடிக்கப்பட்டது என்பதை விட, தாராண்மைத்துவ உலக ஒழுங்கை ஏற்படுத்தும் மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டத்தில் நயவஞ்சகமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் இழுத்துச் செல்லப்பட்டு, யுத்தத்தின் மூலம் பெரும் பின்னடைவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளை சிங்களம் தோற்கடிக்கவில்லை. மாறாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய தாராண்மைத்துவக் கூட்டு வகுத்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய, இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானும் வழங்கிய படைவழி உதவிகளுடன், தமிழீழ மண்ணை சிங்களம் ஆக்கிரமித்துக் கொண்டது என்பதே உண்மை.

இன்று தனது நிலங்களையும், இறையாட்சியையும், அரசையும் தமிழீழ தேசம் இழந்துள்ள பொழுதும், தமிழீழ தனியரசை நிறுவும் ஆற்றலை, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இழந்து விடவில்லை. தமிழீழத்தில் இன்று தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரேயொரு சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் திகழ்வதாக சிலர் கூறுவது அபத்தமானது. தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில் தமிழீழ தனியரசை நிறுவும் உறுதியுடன் இன்றும் தமிழீழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளும், போராளிகளும் உள்ளார்கள் என்பதே மெய்யுண்மை. இப்படியான சூழலில், தமிழீழ தேசியத் தலைவரை தமிழ்கூறும் நல்லுலகில் இருந்து அழித்துவிடுவதற்கும், ஆயுதவழி தழுவிய போராட்டம் இனிச் சாத்தியமில்லை என்ற நஞ்சை விதைப்பதற்கும் சில சக்திகள் முற்படுகின்றன. இவற்றுக்கு துணைபோகும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை கொச்சைப்படுத்தும் புழுதிகளும் சில பொய்வழுதிகளால் கிளப்பிவிடப்படுகின்றன. இவற்றை அடியோடு நிராகரித்து, தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில் தமிழீழ மண்ணில் மீண்டும் தனியரசை நிறுவுவதற்கு உலகத் தமிழர்கள் உறுதிபூண வேண்டும். நாடு கடந்து அரசமைப்பது வேறு. ஆனால், நாட்டில் உள்ள தலைமையை மழுங்கடிக்கும் நோக்கத்துடன் கடல்கடந்து அரசமைத்து அமைச்சர்களாக வலம்வரும் முனைப்புக்களில் ஈடுபடுவதும், ஆயுதவழி தழுவிய விடுதலைப் போராட்டம் சாத்தியமில்லை என்று கூறுவதும், இவ்வாறான சக்திகளின் உண்மையான நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

இதுவரை காலமும் தமிழீழ மக்களை வஞ்சித்து, தமிழீழ அரசை சீர்குலைத்து, சிங்களத்திற்கு வெற்றியை அளித்த அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகம், இன்று சிங்களத்திற்கு எதிராக வரிந்துகட்டத் தொடங்குகின்றது. வன்னியில் மனிதப் பேரவலத்தை தமிழீழ மக்கள் எதிர்கொண்ட பொழுது அமைதி காத்த உலக ஊடகங்கள், இன்று வதைமுகாம் கொடூரங்களை உலக அரங்கில் அம்பலப்படுத்தத் தொடங்கி விட்டன. யுத்த காலத்தில் சிங்கள தேசத்திற்கு படைய – பொருண்மிய – அரசியல் - இராசதந்திர உதவிகளை வழங்கி, அதற்கு முண்டுகொடுத்த தாராண்மைத்துவ மேற்குலக சமூகம், இன்று தலைகுத்துக்கரணம் அடித்து சிங்கள தேசத்திற்கான பொருண்மிய உதவிகளை இழுத்தடிக்கத் தொடங்கி விட்டது. சிங்கள தேசம் இழைத்த போர்க் குற்றங்களுக்கு எதிரான குரல்கள் இன்று மேற்குலகில் மெதுவாக எழத் தொடங்கிவிட்டன. அன்று யுத்தகாலத்தில் சிறீலங்காவை சொர்க்கபுரியாக வர்ணித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பிரித்தானியாவின் மரபுவாத ஊடகமான த ரைம்ஸ் நாளேடு, இன்று சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான முகப்புச் செய்திகளையும், ஆசிரியர் தலையங்கங்களையும், ஆய்வுப் பத்திகளையும் வெளியிடுகின்றது. இதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. இங்கு எமது பரப்புரைகள் வெற்றியை ஈட்டித் தந்திருப்பதாக நாம் மார்தட்டிக் கொள்ளத் தேவையுமில்லை. அன்றி எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை மேற்குலகம் புரிந்து கொண்டிருப்பதாக எண்ணி நாம் ஏமாந்து விடவும் தேவையில்லை.

மாறாக, தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துதல் அல்லது அழித்தல் என்ற நிகழ்ச்சித் திட்டத்துடன், இதுவரை காலமும் நோர்வேயின் ஊடாக இயங்கிய மேற்குலகம், இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற நம்பிக்கையுடன், சிங்கள தேசத்தின் கடும்போக்குவாத மகிந்த ராஜபக்~வின் ஆட்சியை பலவீனப்படுத்தி, தனது தாராண்மைத்துவ மூலோபாயத்தையும், நிகழ்ச்சித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முற்படுகின்றது என்பதே உண்மை. சீனாவுடன் சிங்கள தேசம் நெருங்கி உறவாடுவது, இவ்வாறான யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ள சிங்களத்தின் அச்சவுணர்வையே புலப்படுத்துகின்றது. இதுவரை காலமும் ஈழப்பிரச்சினையில் மேற்குலகின் ஆதிக்கத்தை நிர்ணயிக்கும் சக்தியாக இந்தியாவே கருதப்பட்டது. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அமெரிக்க மேலாதிக்கத்தின் துணாக மாறிவரும் இந்தியா, மேற்குலகின் தாராண்மைத்துவ நிகழ்ச்சித் திட்டத்திற்கு இசைவாகவே ஈழப்பிரச்சினையையும், ஈழத்தீவு தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையையும் கட்டமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றது. இந்தியா விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் ஆட்சியில் இருக்கும் வரை, மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டமே இனி ஈழத்தீவில் அமுல்படுத்தப்படும்.

எனவே, இற்றைவரை எம்மை வஞ்சித்து, எமக்குத் துரோகம் இழைத்த மேற்குலகம், இன்று சிங்கள தேசத்திற்கு எதிராக வரிந்து கட்டத் தொடங்குவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களத்திற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று துடிக்கும் நாம் ஒவ்வொருவரும், இனி சிங்கள தேசத்திற்கு எதிராக மேற்குலகம் தொடுக்கப் போகும் பொருண்மிய - இராசதந்திர வலிந்த தாக்குதலுக்கு துணைநின்று, சிங்கள தேசத்திற்கு தகுந்த பாடம்புகட்ட வேண்டும். சிங்கள தேசத்தின் பொருண்மிய வலிமையை முற்றாக சிதறடித்து, அதன் படைவலிமையை சிதைக்க வேண்டும். சிங்கள தேசத்தை நோக்கி மேற்குலகம் ஏவப்போகும் ஒவ்வொரு அம்புகளும், எம்மால் வழங்கப்பட்டவையாக இருக்க வேண்டும். சிங்களத்தை நோக்கி மேற்குலகம் வாளை நீட்டும் பொழுது, அதனைக் கூர்மைப்படுத்திக் கொடுக்கும் வகையில் எமது அரசியல் - பரப்புரைப் பணிகள் அமைய வேண்டும். எம்மை எப்படி மேற்குலகம் ஓரம்கட்டி தீண்டத்தகாத பயங்கரவாதிகளாக புறந்தள்ளியதோ, அதேபோன்று சிங்களத்தை மேற்குலகம் முற்றுமுழுதாக புறந்தள்ளி, அடாவடி அரசு என்ற நிலைக்கு இட்டுச் செல்வதற்கு நாம் இனி உந்துசக்தியாக அமைய வேண்டும். தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில், தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான போராட்டம் மீண்டும் தனது பாய்ச்சலை தொடங்கும் பொழுது, சிங்கள தேசத்தை பலவீனப்படுத்திய பெருமைக்குரியவர்களாக நாம் இருக்க வேண்டும். இதுவே இன்று எம்முன்னே உள்ள தலையாய பணியாகும்.

இதனைவிடுத்து, தேர்தல் சகதியில் இறங்கி சிங்கள தேசத்துடன் கூட்டுச் சேர்வதோ, இந்தியாவின் காலடியில் மண்டியிடுவதோ, அன்றி தமிழீழ மண்ணில் உள்ள தலைமைக்கு மாற்றீடான தலைமையை மேற்குலகில் உருவாக்குவதோ, அன்றி ஏதோ எம்மால் இயலுமானதை செய்கின்றோம் என்றுகூறி தமிழீழ தேசத்தின் தலைமையை அழிக்க முற்படும் சக்திகளுக்கு நாம் துணைபோவதோ, எமது தலையில் நாமே மண்ணை வாரிப்போடும் செயலாகவே அமையும். நாடுகடந்து அமைக்கப்பட்ட அஞ்ஞாதவாச அரசுகளில், முப்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை திபெத் தேசம் கொண்டுள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக திபெத்தில் தோற்றம் பெறும் மக்கள் கிளர்ச்சிகளையும், ஆயுதப் போராட்டங்களையும் அரசியல் வழியில் நசுக்குவதற்கு துணைபோகும் மேற்குலகின் கருவியாக, இந்தியாவில் இயங்கும் தலாய் லாமாவின் அஞ்ஞாதவாச அரசு இயங்குவதை நாம் மறந்துவிட முடியாது. கடந்த ஆண்டு திபெத்தில் மக்களின் ஆயுதக் கிளர்ச்சி ஏற்பட்ட பொழுது, அதனைக் கண்டித்தவர்களில் ஒருவராக தலாய் லாமாவும் விளங்கியிருந்தார்.

எனவே, இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தின் தேவைகளைப் புரிந்து, சிங்கள தேசத்திற்கு எதிராக மேற்குலகம் தொடுக்கப் போகும் பொருண்மிய – அரசியல் தாக்குதல்களுக்கு உந்துசக்தியாக நாம் செயற்படுவோம்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கருத்தியலுக்கு அமைய, மேற்குலகைக் கொண்டு இப்பொழுது சிங்கள தேசத்தை நாம் தாக்குவோம்.

அதேநேரத்தில், தமிழீழ மண்ணில் தமது உயிரை வேலியாக்கிப் போராடும் எமது போராளிகளையும், தலைமையையும் பாதுகாப்போம். எமது பெருந்தலைவரின் தலைமையில் தேசிய விடுதலைப் போராட்டம் மீண்டுமொரு பாய்ச்சலைத் தொடங்கும் பொழுது, சிங்களத்தைப் பலவீனப்படுத்தி, எமது தேசத்தின் விடுதலையை விரைவுபடுத்திய பெருமைக்குரியவர்களாக மாறுவோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று முன்னெடுத்துச் செல்லும் முழுப்பொறுப்பும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களிடன் கையளிக்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மாறாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் உந்துசக்தியாக நின்று, தமிழீழ மண்ணில் எமது தேசிய விடுதலைப் போராட்டம் வீச்சுப்பெறுவதற்கு துணைநிற்கும் கடப்பாடே இன்றும்கூட எம்மீது சுமத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தலைமைத்துவம் என்றென்றும் தமிழீழ மண்ணில் இருந்தே வழங்கப்படும்.

அதனை சிதைத்து சீர்குலைக்கும் நோக்கத்துடன் மாற்றுத் தலைமைத்துவத்தை புகலிட தேசங்களில் உருவாக்குவது அல்லது கவர்ச்சிகரமான பூடகமான பெயர்களில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை துடைத்தழிப்பதற்கு கங்கணம்கட்டி நிற்கும் நாசகார சக்திகளுக்கு துணைபோகும் செய்கையே அன்றி வேறேதும் அல்ல.


பிரம்மசீடன்
brahmaseedan@yahoo.co.uk

Comments