வவுனியா தடுப்பு முகாமில் மிகப் பெரிய அவலத்தை முகங்கொடுக்கும் எமது உறவுகள் - உள்ளிருந்து ஒரு குரல்

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் ஏதிலிகளாக்கப்பட்டு வவுனியாத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களில் 35 ஆயிரம் பேர் பொக்குளிப்பான் உட்பட ஏனைய தொற்று நோய்களால் பாதிப்படைந்துள்ளனர் என ஏதிலிகள் முகாமில் கடமையாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஏதிலிகள் முகாம் பொறுப்பதிகாரி ஒருவர் பதிவு இணையத்திடம் தெரிவித்துள்ளார். முகாம் நிலரவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் ஏதிலிகளாக்கப்பட்டு வவுனியாத் தடுப்பு முகாங்களில் வலயம் வலயமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களில் 35 ஆயிரம் பேர் பொக்குளிப்பான், கொலரா, மஞ்சள்காமாலை, தோல் வருத்தம் உட்பட ஏனைய தொற்று நோய்களால் பாதிப்படைந்துள்ளனர்.

தடுப்பு முகாங்களில் நாள் ஒன்றுக்கு 5 தொடக்கம் 10 வரையிலான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். கொல்லப்படுபவர்களில் குழந்தைகளும் வயோதிபர்களும் அதிகமாக இருக்கின்றனர்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கைக் குழந்தைகள் எதுவித பாராமரிப்பு இல்லாது அவதிப்படுகின்றனர்.

முகாங்களில் கொல்லப்படும் தமிழர்களின் உடல் ஒன்றை வவுனியாவுக்குச் எடுத்துச் செல்ல தலா 10 ஆயிரம் ரூபா பணம் முகாம் நிர்வாகத்தினால் அறவிறப்படுகின்றது.

ஏதிலிகள் முகாங்களில் 35,000 சிறுவர்கள் தங்கியுள்ளனர். இவரில் 1800 சிறுவர்கள் தங்களது தாய், தந்தையரை இழந்து அநாதைகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வலயம் 2 ஏதிகள் முகாம்

குடிநீரைப் பெறுவதற்கா கொள்கலன்களை வரிசையில் அடுக்கி வைத்துவிட்டு நீர் வரும்வரை நீண்ட வரிசையில் பல மணி நேரம் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

மக்கள் தடுத்து வைக்கபட்டுள்ள முகாமில் அழுக்கு நீரும், கழிவுகள் முகாங்களில் குவிந்து காணப்படுகின்றது. முகாம்களுக்குள் காணப்படும் பாதைகளில் இரு மருங்கிருலும் கழவு நீர் தேங்கியுள்ளதுடன் மனிதக் கழிவு (மலம்,சலம்) முகாம் சுற்றாடலில் காணப்படுகின்றது. அத்துடன் மக்களால் வெளியேற்றப்படும் அனைத்து குப்பை கூழங்கள் உரிமை முறையில் அகற்றப்படாமையால் முகாமில் குவிந்து காணப்படுவதுடன் முகாம் வாளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது.

வலயம் 3 ஏதிலிகள் முகாம்

வலயம் 3 ஏதிலிகள் முகாமிற்கே அனைத்துலக இராஜ தந்திரிகள் மற்றம் வெளிநாட்டவர்கள், ஊடகவியலாளர்கள் சிறீலங்கா அரசாங்கத்தினால் அழைத்துச் செல்லப்படுவதால் இந்த முகாம் பிடிகேடியர் வீரக்கோன் என்ற இராணுவத் தளபதியின் கீழ் இயங்குகின்றது.

இங்குள்ள மக்களுக்கு அசிரி மற்றும் குடிநீரை படையினர் நேரடியாக வழங்குவதால் இந்த முகாம் மக்கள் ஓரளவு கவனிக்கப்படுகின்றனர்.

வலயம் 4 ஏதிலிகள் முகாம்

இந்த முகாமில் தண்ணீர்ப் பிரச்சினையே மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. இங்கு தமிழர்கள் கைதிகளை வைத்திருப்பது போன்று வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இங்கு வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இங்குள்ள மக்கள் பதிவுகள் எதுவும் இல்லாமல், உறவினர்களைப் பிரிந்த நிலையில் காணப்படுகின்றனர்.

இந்த முகாமில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணிகள் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. வெறுமனவே உணவை வழங்குவதற்கு மட்டுமே தன்னார்வ நிறுவனங்கள் உட் செல்ல முடிகின்றது.

உணவு வழங்கச் செல்லும் பணியாளர்கள் கூலித் தொழிலாளிகள் போன்றே தோற்றமளிக்கின்றனர்.

இவ்வலயத்தினுள் செல்லும் போது யாரும் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல முடியாது.

இங்குள்ளவர்களுக்கு மாற்றுத் துணி கூட இல்லை. தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் செல்லும்போது அங்குள்ளவர்கள் பெண்களுக்காக மாற்றுத் துணி கேட்கின்றனர்.

இங்குதான் அதிகமானோர் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வயலத்தில் தொற்றுக் கிருமிகள் அதிகம் காணப்படுகின்றன. எவருக்கும் பாதணிகள் இல்லாத காரணத்தினால் நகங்களுக்குள் கிருமிகள் சென்று சீழ் பிடித்து பலரது நகங்கள் அகற்றப்பட்டுவிட்டன.

பாதணிகளுக்குப் பதிலாக சிலர் கடதாசிப் பெட்டிகள் மற்றும் பொலித்தீன் பைகளைக் கால்களில் கட்டிக்கொண்டே நடமாடுவதுடன் மலம் கழிப்பதற்கும் செல்லும் போதும் இதனையே பயன்படுத்துகின்றனர்.

இந்த ஏதிலிகள் முகாம் அதிகளவான சிறீலங்காப் படையினர் குவிக்கப்பட்டு இருப்பதால் இராணுவ முகாம் போன்றே காட்சி அளிக்கின்றது.

போராளிகளுக்கான வதை முகாம்

ஆண் போராளிகளும், பெண் போராளிகளும் தனித் தனியே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு கிட்டத்தட்ட 9 ஆயிரம் ஆண் போராளிகளும் 2 ஆயிரம் பெண் போராளிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த முகாமை சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் படையினரே மேற்பார்வை செய்து வருகின்றனர்.

இங்கும் அடிப்படை வசதிகள் எதுவுமே கிடையாது. இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆண் போராளிகள் மற்றும் பெண் போராளிகளுக்கு மாற்றுத் துணி கூடக் கிடையாது. அத்துடன் இங்கு உணவு மற்றும் ஏனைய வழங்கல்கள் சீராக வழங்கப்படுவதில்லை.

காயமடைந்த போராளிகள் மற்றும் உடல் உறுப்புகளை இழந்த போராளிகளும் கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர்.

இவர்களுக்கு எந்த விதமான பாராமரிப்பு மற்றம் மருத்துவப் பராமரிப்புகள் இல்லாது இருக்கின்றனர்.

இந்த முகாமில் இரண்டு நாள் பயிற்சி பெற்றவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியவர்கள், ஓடியவர்கள், திருமணம் செய்த போராளிகள் மற்றும் சாதாரண போராளிகளும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

திருமணம் செய்த போராளிகளும் தனித் தனியே பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி திருமணம் செய்த 37 பேர் கர்ப்பிணிப் பெண்களாக உள்ளனர்.

இங்குள்ள போராளிகள் தங்களது கணவன், மனைவி, பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளைப் பார்வையிட வேண்டும் என அழுகின்றனர். எனினும் இதற்கான அனுமதியை சிறீலங்காப் படையினர் இதுவரை வழங்கவில்லை.

Comments