தமிழர்கள் மீண்டுமொருமுறை ஆணை வழங்கவேண்டிய சந்தர்ப்பம்

புலம்பெயர்வாழ் தமிழர்களே!

உங்களுக்கு சொல்லுகின்றோம். தற்போது இடம் நடைபெறப்போகும் யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழர்களாகிய நாம் இந்த தேர்தலை எப்படி முகம்கொடுக்கப்போகின்றோம் என்பதைபற்றி பலதரப்பிலிருந்தும் பலவாறான கருத்துக்கள் நிலவிவருகின்ற இன்றைய சூழலில், ஓர் தீர்க்கமான முடிவினை அனைவரும் எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

பேரினவாத கட்சிகளாலும் அவற்றுக்கு முண்டுகொடுக்கும் தமிழ் தேசவிரோத சக்திகளின் பிரச்சார நடவடிக்கைகளை நோக்குகின்றபோது தமிழ்மக்களால் நடாத்தப்பட்ட மூன்று தசாப்பதகாலமான போராட்டத்தின் அர்த்தமோ அதற்கான விலையினையோ கொச்சசைப்படுத்துவதாகவே உள்ளது. யாழ், வவுனியா நகரில் சில இடங்களில் பேரினவாத சக்திகளிடம் பணத்தைப் பெற்றுகொண்டு வெற்றிலைக்காக கூலிக்கு மாரடிக்கும் சிலரை பார்க்க தமிழினத்தை சிங்களவன் எவ்வளவு இலகுவாக விலைக்கு வாங்கிவருகின்றான் என்பதை புரிந்து கொள்ள முடியும். தமிழீழ, புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் தீர்க்கமாக ஆராயவேண்டியதும் முடிவெடுக்கவேண்டியதுமான வரலாற்று சந்தா்ப்பம் இதுவாகும்.

சில தீயசக்திகளின் சதிவலைகளில் சிக்காமல் தமிழர்களுக்குரிய தன்னாட்சி, சுயகௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் என்னசெய்யவேண்டும்? அதற்கு குரல்கொடுப்பவர்கள்யார்?

என்ற கேள்விக்கான பதிலினை மீண்டும் ஓர்தடவை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளோம்.

என்றுமில்லாதவாறு சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வரும் இவ்வேளையில் எமது அபிலாசைகளை ஒங்கி ஒலிப்பதற்கு ஒவொரு தமிழரும் முடிவெடுக்கவேண்டும். தவறுவோமாக இருந்தால் பேரினவாத சக்திகளின் இனஅழிப்பினை நியாயப்படுத்துவதாகவும் இதுவரை காலமும் இவ் உரிமைக்காக போராடி உயிர்நீர்த்த வீரமறவர்களுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும்,முகாங்களில் அடைபட்டுக் கிடக்கும் 3 இலட்சம் மக்களுக்கும் செய்யும் துரோகம் மட்டுமல்லாமல் எதிர்கால தமிழ்மக்களின் உரிமைகளுக்கு நாம்செய்யும் வரலாற்று தவறாகிவிடும்.

அண்மையில் மகிந்தராஜபக்சே கூறிய கருத்தை நோக்கி பாருங்கள் என்ன தீர்வு வழங்கவேண்டும் என்பது தனக்கு தெரியும் அதனை தமிழ் கூட்டமைப்பினரும் புரிந்து கொள்ளவேண்டும் என எக்காள தொனியில் கருத்து தெரிவித்திருந்தார் என்பதனை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். அடக்குமுறையின் ஆணிவேரே இதுதான். தமிழர்களுக்குரிய உரிமைகள் இதுவரை கிடைக்காவிட்டாலும் எங்கே தமிழன் சென்றாலும் தனி மரியாதை, சுயகௌரவம் கிடைத்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இதெல்லாம் யாரால் கிடைத்தது? நிகரில்லா விடுதலைப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததுதான் காரணம். அதற்கு துரோகம் செய்ய தமிழர்கள் சிலரும், பேரினவாதமும், வெளிநாட்டு சக்திகளும் ஒன்றுசேர்ந்து ஓர் இன அழிப்பையே நிகழ்த்தி இரத்த ஆற்றிலே மக்களை தவிக்கவிட்டு வெளிநாடுகளிடம் கையேந்துகிறார்கள்.

இதே இராணுவம் இதே படைவலு ஒன்றிரண்டல்ல 30 ஆண்டுகள் மோதித்தானே பார்த்தனர். எத்தனை இடத்தில் எப்படி எப்படியெல்லாம் ஓடினார்கள் என்று வேறு யாரிடமும் கேட்க தேவையில்லை. தற்போதைய கூட்டுப்படை தளபதியாம் பென்சேகாவே சொல்லுவார். அவர் யாழ்தளபதியாக இருந்தபோது 2001ஆம் ஆண்டு நாவற்குழி பாலத்திலே விடுதலை புலிகளின் வீரமணி உள்ளிட்டோரிடம் தோற்றதால்தான் யாழ் கட்டளை தளபதி பதவியையே இழந்தார். இதனை அவரது மனட்சாட்சியே சொல்லும். தற்போது உலக வல்லாதிக்க சக்திகள், நேசநாடுகள் என அதாவது அங்கே சண்டை இடம்பெறவில்லை சண்டை நடைபெற்றிருந்தால் நிச்சயம் நல்ல பதிலடி கொடுக்கப்பட்டிருக்கும்.

அதாவது 10 பேர் சேர்ந்து ஓர் இனத்தை அழித்துள்ளார்கள். அங்கே நேருக்குநேர் சண்டையைவிட குறித்த பிரதேசத்தை மையபடுத்தி எரிகுண்டுகள், கொத்துகுண்டுகள் வீசி அப்பிரதேசம் துடைத்தளிக்கப்பட்டே இராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர்கள் அனைவரும் பின்வருவனவற்றை ஒருமுறை மீள்பார்வை செய்வது ஏற்றதாக இருக்கும்

1. அமெரிக்கா தடுத்ததாம், பிரிட்டன் சொன்னதாம், ஐரோப்பிய ஒன்றியம் தூதுக்குழுவை அனுப்பியதாம் ஆனால் மகிந்த ஒருவருடைய கருத்துக்களையும் செவிசாய்க்காது துணிந்து முடிவெடுத்தார் வெற்றிகண்டார் என்கிறார்கள். யாரை யார் வெற்றி கொண்டது 50000தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், 14000பேர் காயமடைந்து அங்கவீனர்களாக அகதிமுகாங்களிலே, 3 இலட்சம் மக்கள் திறந்தவெளி சிறைச்சாலைகளில். இதுதானா வெற்றி?

யாரை அழித்தீர்கள்? பயங்கரவாதிகளையா?

இந்தப்போராட்டத்தை வழிநடாத்தியவர்கள் யார்?

அங்கீகரித்தவர்கள் யார்?

இலங்கையிலேயே வடகிழக்கிலே 23 தழிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை தவிர (துரோகி டக்ளஸ்தேவானந்தா) 22 பேரை பிரதிநிதிதுவப்படுத்தும் ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தொப்புள்கொடி உறவுகளான 6 கோடி தமிழக தமிழர்கள். அவர்கள் எல்லோருடைய குரல்வளையும் நசுக்கப்பட்டுள்ளது என்பதை கவலையோடு ஏற்றுத்தான் ஆகவேண்டும். 3 இலட்சம் மக்கள்தான் முகாங்களிலே அடைபட்டுக்கிடக்கிறார்கள். மீதி இத்தனை கோடி தமிழர்களும் வெளியிலேதான் நிற்கின்றோம் என்பதையும் பேரினவாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

2. சிங்கள பேரினவாதத்தின் போக்கிற்கு ஒருசில உதாரணங்களை சொல்லலாம். அண்மையில் வன்னியிலிருந்து அங்கே பராமரிக்கப்பட்டுவந்த செஞ்சோலை சிறார்களை ஓர் சிறுவர் இல்லம் அமைத்து அதிலே தங்கவைப்பதற்கு உலக அரங்கிலே பிரச்சார உத்திகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் சிறுவர் மற்றும் பெண்கள் புனர்வாழ்வு அமைச்சரான சிங்கள பெண்மணியால் இல்லம் திறப்பதற்காக அவர் கொழும்பிலிருந்து வந்து கொண்டிருந்தார். திடீரென அவர் வடக்கு ஆளுனரான சந்திரசிறியால் திருப்பி அனுப்பபட்டு சமாதான தேவதையாக மகிந்தவின் மனைவி வரவழைக்கபட்டு தொலைக்காட்சிகளில் பிரச்சாரங்கள் இடம் பெற்றது. ஆனால் அவற்றை வெளியிட்ட ஊடகங்கள் அந்த தமிழ் பாலகர்களுடைய இல்லத்திற்கே ஓர் தமிழ் பெயரைவைப்பதற்கு பேரினவாதிகள் விரும்பவில்லை. சிங்கள பெயரையே வைத்துள்ளார்கள் என்பதை பற்றி எவரும் கருத்திலெடுத்தாக தெரியவில்லை. அத்துடன் ஊடகங்களில் வந்த செய்தி திருமதி ராஜபக்சேவால் ஆதரவற்ற சிறார்களுக்காக 6 மாடி கட்டடம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. இதன் பின்னணியைப்பற்றி யாரும் அலட்டி கொள்ளவில்லை. இக்கட்டடம்கூட அவர்களுடையதல்ல. தமிழர்களின் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் 2005ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாவட்ட காரியாலயத்திற்காக அலுவலக்தையே திறந்துவிட்டு, தாம் ஏதோ கட்டுவித்து திறக்கபட்டதாக செய்தி வெளியிட்டார்கள்.

3. அடுத்து வன்னிமக்களின் மீள்குடியமர்விற்காக 19 பேர்கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தமிழ் பிரதிநிதியோ, அல்லது ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரோ, ஆகக்குறைந்தது ஊதுகுழல் ஊதுவோர் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை என்பதனை அரசாங்கத்தோடு ஊதுகுழல்களாக செயற்படுவோருக்கு தெரியவில்லையா?

அல்லது முதுகெலும்பில்லாதவர்களா இதை தட்டி கேட்க? வெற்றிலையிலே கேட்பதற்கும் இணங்கியிருக்கிறோம் என தமிழர்களில் தலையிலே மிளகாய் அரைக்க பார்க்கிறார்கள். இவர்கள் இணங்கவில்லை, இணக்கப்படுத்தப்பட்டார்கள். இதுவரை மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றார்கள். இப்போது கட்சி சின்னத்தையே காப்பாற்ற முடியாதவர்கள் எதிர்காலத்தில் தீர்வைபெற்றுத்தருவார்களாம். இணங்கி செயற்பட போகிறார்களாம். 19 பேரில் ஓருவரைக்கூட இணங்கி பெறமுடியாத நீங்கள் என்ன பெற்றுத்தரபோகிறீர்கள்?

வடக்கு செயலணி தலைவர் பதவி கொடுத்தார்கள். பின்னர் அதனையும் வடக்கின் விசேட செயலணி என மாற்றி அந்த பொறுப்புகூட பசில் ராஜபக்ச குடும்பத்திற்கு வழங்கப்பட்டுவிட்டது என்பதுகூட உங்களுக்கு தெரிந்திருக்காதே.

4. கிழக்கிலே ஜனநாயகம் மலர்ந்துள்ளதாக வெளிஉலகிற்கு காட்டிக்கொண்டு தேர்தலை வைத்து முதலமைச்சரையும் நியமித்துவிட்டு மாகாணசபை முடிவெடுக்க முடியாதவாறு ஓர் பேரினவாத இராணுவத்தளபதி ஒருவரை ஆளுனராக நியமித்து ஓர் பொம்மை ஆட்சியை நடத்துவதுபோல் அதிகாரங்களே தம்மிடம் இல்லை என மாகாண முதலமைச்சரே ஒத்துக்கொண்டுவிட்டார்.

வடக்கிலேயும் தற்போது தேர்தல் வைப்பதற்கு முன்னரே யாழ் கட்டளை தளபதியாகவிருந்த சந்திரசிறியை வடக்கின் ஆளுநராக நியமித்து வடக்கு கிழக்கை இராணுவமயப்படுத்தும் திட்டத்தைப் பேரினவாத சக்திகள் வெளிப்படையாகவே அரங்கேற்றி வருகின்றனர். இதுபற்றி என்னசெய்தார்கள்?

வடகிழக்கிலே நிர்வாகம் செய்வதற்கு படித்தவர்கள், திறமையுள்ளவர்கள் இல்லையா?

அப்படியான திறமை உங்களிடமும் இல்லையா?

அப்படியானால் நீங்கள் ஏன் தேர்தலில் நிற்கிறீர்கள்?

தமிழ் மக்களே நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள்!

இதில் புலம்பெயர்வாழ் மக்களுக்கு பாரிய பொறுப்புண்டு.

நாம் இங்கே பிரச்சாரங்களை முன்னெடுக்கமுடியாத நிலையிலேயே இருக்கின்றோம். உங்களாலான பிரச்சார ஒத்துழைப்புக்களை சம்பந்தப்பட்ட அமைப்புக்கள், கழகங்கள், பல்கலைக்கழகங்கள் ஊடாக ஈழ உறவுகள் சரியான பாதையில் செல்ல விரைவாக வழிகாட்டுங்கள் என்று மிகவும் உரிமையோடு கோரிநிற்கின்றேன்.

இவ்வண்ணம்

ஈழத்திலிருந்து உங்கள்

செம்பியன் செல்வன்.

Comments