காலமென்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும்...

"...சமாதான காலத்தில் எனது முதலாவது வன்னிப் பயணம் அதன் நினைவுகள் என்னோடு வாழும். வாழ்க்கையின் பயணம் அது தொடங்கிய இடத்தில் வந்து சேர்வதும் அப்போது அந்த இடத்தை முதன் முதலாக அறிவது போன்ற உணர்வும் ஏற்படின் நாம் பயணித்தோம் என்பதைக் காட்டும் என்றார் ரீ.ஸ் .எலியட். வன்னிமண்ணில் கால் வைத்தபோது ஏற்பட்ட உணர்வு இதுவே... முல்லையும் மருதமும் மயங்கிய இந்தப் பெருநிலப்பரப்பில் புலிகள் ஆட்சியில்

உடலுறுதி, மனவுறுதி, சித்த விலாசம், ஆத்ம சுதந்திரம், விரிவான கலைப்பயிற்சி, பயனுள்ள தொழில் முயற்சி, தாராளமான நட்பு, ஈகை, ஒருவரையொருவர் கொள்ளையடிக்காத அன்யோன்யம், சாதிமதப் பிடிவாதங்களற்ற சுதந்திரமான நிமிர்ந்த நடை, செல்வச் செருக்கற்ற சரளமான உறவு

என ஜனநாயகத்தின் பண்புகளைப் பட்டியலிட்ட விட்மனின் எழுத்துக்களை அங்கு காண முடிந்தது. "

Tamil Eelam Scene


Sri Lanka's Hidden Massacre of Tamils, Times On Line, 29 May 2009

முள்ளிவாய்க்காலில், நந்திக் கடலில் இடம் பெற்ற யுத்தம் சிங்களப் படையுடன் அல்ல. அது பனிப்போரின் முடிவுடன் ஏற்பட்ட உலக ஒழுங்கை மாற்றி அமைப்பதற்கான புதிய பனிப்போரின் யுத்தங்களில் ஒன்று.

19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் அத்திலாந்திக் பசிவிக் சமுத்திரங்கள் உலகின் அந்த நூற்றாண்டுகளின் தலைவிதியை நிர்ணயித்ததெனில் 21 ஆம் நூற்றாண்டின் தலைவிதியை நிர்ணயிக்க உள்ள இந்து சமுத்திரத்தின் கடல்வழிப்பாதைக்கான ஆதிக்க யுத்தங்களில் ஒன்று.

ஏக வல்லரசான அமெரிக்காவின் ஆதிக்கத்தின் வீழ்ச்சிக்கும் சீனாவின் எழுச்சிக்கும் வழி வகுத்த யுத்தங்களில் ஒன்று. ஒருமுனை உலக ஒழுங்கு பல முனை உலக ஒழுங்காக மாறுவதற்கான போர்களில் ஒன்று.

இந்த யுத்தத்தில் அமெரிக்காவோ இந்தியாவோ சீனாவோ றஸ்சியாவோ தத்தம் நலன்களுக்காக ஒருவருடன் ஒருவர் மோதாது மோதிய யுத்தம் இது. அதனால் இது ஒரு புதிய பனிப்போர்.

இந்து சமுத்திரத்தில் மேற்குலகின் ஆதிக்கத்தை அகற்றுவதற்கான முதல் யுத்தம் இது. ஆனால் இது ஒரு முடிவல்ல. தமிழ்த் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது இவ்வாறான ஒரு பகைப் புலத்திலே என்பதை பல அரசியல் இராணுவ துறைசார் வல்லுனர் வெளிப்படையாகவே அண்மைக்காலங்களில் கூறி வருகின்றனர். இந்த யுத்தத்தில் சிங்கள தேசத்திற்கு கிடைத்த ஆதரவு ஆயுதம், பயிற்சி, பணம் என்பன மட்டமல்ல, அதற்கு மேலாகக் கிடைத்த அரசியல், ராசதந்திர ஆதரவாகும்.

அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆலோசனைக்கான லோங்போட் ஆலோசனைக்கான தலைவரான வென் லியா ( Wen Liao is chairwoman of Longford Advisors, a political,economic and business consultancy ) புதிய வலுக்கொண்ட சீனா றூபிக்கனை கடந்துள்ளது (China Crosses the Rubican ) என்னும் தலைப்பில் கடந்த யூன் மாதம் எழுதிய கட்டுரை ஒன்றில் சீனாவின் ஆயுதம் மற்றும் இராசதந்திர ஆதரவின்றி மகிந்த ராஜபக்சவால் புலிகளைத் தோற்கடித்திருக்க முடியாது என கூறுகிறார்.

" For two decades ,Chinese diplomacy has been guided by the concept of the Country's " peceful rise ". Today, however ,China needs a new strategic doctrine, because the most remarkable aspect of Sri Lanka's recent victory over the Tamil Tigers is not its overwhelming nature, but the fact that China provided President Mahinda Rajapaska with both the military supplies and diplomatic cover he needed to prosecute the war. Without that backing, Rajapaksa's government would have had neither the wherewithal nor the will to ignore world opinion in its offensive against the Tigers ...." Wen Liao - China Crosses the Rubicon

இந்தியாவின் தென் கோடியில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் பல ஆயிரம் மைல் தொலைவில் உள்ள சீனா எவரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது செலுத்தும் ஆதிக்கத்தை விளக்கவே றூபிக்கனை சீனா கடந்தது என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

ரோமப் பேரரசின் யூலிய சீசர் பலம்வாய்ந்த ரோமப் பேரரசின் செனட்டர்களின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது இத்தாலியில் உள்ள றூபிக்கன் நதியைக் கடந்து தன் படையை நகர்த்திய வரலாறு பழையது. அன்றில் இருந்து மற்றவர்களின் மிரட்டல்களுக்குப் பணியாது நடக்கும் இராணுவ அரசியல் முயற்சிகளை விளக்க இந்த வார்த்தைப் பிரயோகம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.

முள்ளிவாயக்காலில் ஒரு இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்த வேளையில் அங்கு கனரக ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை பெருமளவு மக்கள் கொல்லப்படவில்லை என உலகிற்கு சொல்ல சீனாவுடன் இந்தியாவும் கைகோர்க்ககவேண்டிய நிலவரத்தை சீனா ஏற்படுத்தியிருந்தது எனலாம். தூரநோக்கற்ற இந்திய பிராமண ஆதிக்கத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று என்ற கருத்தும் முன்வைக்கப் படுகிறது.

இந்த யுத்தத்தில் தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்படவில்லை. தோற்போம் என்று தெரிந்தபோதும் போராடி வீரமரணம் எய்துவது என்ற இலட்சிய வெறி சரண் அடையவில்லை. ஒவ்வோர் வெளிப்பக்கத்திற்கும் ஒரு உள்பக்கம் உண்டு.

அந்த உள்பக்கத்தை காரண காரணிகளால் மட்டும் விளங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் காரண காரணிகளை பதப்படுத்துவதில் வெளிப்பக்கம் செல்வாக்குச் செலுத்துகிறது.

" தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழர்ச்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் கால நதியில் காலத்திற்குக் காலம் தோன்றி மறையும் நீர்க்குமிழிகள்போன்று நிலையற்றதாக மனித வாழ்வு சாவோடு முடிந்து போகிறது. முற்றுப் பெறுகிறது. ஆனால் எமது மாவீர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவை அல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்கள் வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழ் அன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று மன வலிமையின் நெருப்பாக எரிந்து எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி நெறிப்படுத்திச் செல்கிறார்கள் " தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் மாவீரர்நாள் உரை 27 நவம்பர் 2007.

தலைவர் கூறும் சத்தியத்தின் சாட்சியை, மன வலிமையை வெளிப் பக்க நிகழ்வுகளால் விளங்கிக் கொள்ள முடியுமா? சொல்லை நடத்திக்காட்டி வாழ்ந்த தலைமை விட்டுச் சென்ற போராட்ட இலட்சியத்தை எந்த வல்லரசாலும் எந்தப் புதிய உலக ஓழுங்காலும் அடிக்கிவிட முடியுமா?

மனிதனது பெரும் நிதி அவன் உயிர். அதிலும் பெரியது அவன் காதல். அதைவிடப் பெரியது விடுதலை. இங்கு காதலை ஆத்மாவிற்கும் விடுதலையை பரமாத்மாவிற்கும் ஒப்பிடும் அர்த்தத்தில் தன் உயிரையும் காதலையும் தன் நாட்டின் விடுதலைக்காகக் தியாகம் செய்வேன் எனப் பாடுகிறான் ஹங்கேரிய தேசியக் கவிஞன் சாந்தோர் பெட்டோவ்ஃபி.(Sandor Petofi)

" உயிர் ஒரு பெரு நிதி,
காதல் அதனினும் உயர்வுடையது
ஆம், சுயம்பெரு விடுதலை காண
துறப்பன் இவற்றினை நான் "


மண்ணில் விழைந்த முத்துக்களே...

சுயம்பெரு விடுதலைக்காக தம் உயிரினைத் துறந்தவர்கள், வாழ்கின்ற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் மட்டுமல்ல அதனைவிட இன்னும் வலுவாக இனிமேல் பிறக்க இருக்கும் தமிழர்களின் நெஞ்சங்களிலும் வாழ்வார் என்பதே வரலாறு காட்டும் உண்மை. வென்ற போராட்டங்களைவிட விடுதலைக்காக அடிபணிய மறுத்து உயிரைக் கொடுத்தோர் வரலாறே பிற்காலத்தில் அந்த மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு வலுச்சேர்த்துள்ளன.

கி.மு 480 இல் பாரசீகப் பேரரசே உலகில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. அந்தப் பேரரசு கிரேக்கத்தின்மீது படையெடுத்தபோது அவர்களை எதிர்த்து வெற்றிபெறமுடியாது என அறிந்தபோதும் சரண் அடையாது போராடி மடிவோம் என மடிந்த லியோனிடாஸ் வரலாறும் அந்தப் போர் நடந்த முகத்துவாரமான தேமொப்பைலே என்ற இடமும் கிரேக்க மக்களின் வரலாற்றில் பின்னர் அவர்கள் பெற்ற விடுதலையில் அழியா இடத்தைப் பெற்றுள்ளது. இதனை எமது முள்களிவாய்க்கால் யுத்தத்திற்கு ஒப்பிடலாம்.

ஆனால் இது பழைய வரலாறு. இன்று உலகம் மாறிவிட்டது .இது புதிய உலக ஒழுங்கில் இடம் பெற்றது என வாதிடலாம். அது வாஸ்தவம்தான் . ஆனால் இந்தப் புதிய உலக ஒழுங்கு மாறிக்கொண்டிருக்கும் வெளிப்புறம். மாறாத உட்புறம் மானிட விழுமியங்களை நோக்கியே நகர்கின்றது. அரவிந்த மகரிசி கூறுவதுபோல் இலட்சியத்தின் சக்தியை இத்தனையாயிரம் படைகள், ஆயதங்கள், நிறைவேற்று அதிகாரங்கள் என்பவற்றால் முடிவாக வெல்ல முடியாது. அவற்றின் ஆரம்பம் பெரும் வெற்றியாக இருக்கலாம். ஆனால் அதன் முடிவு பலமற்றுப்போகும்.

"...A feeling or a thought, Nationalism, Democracy, the aspiration towards liberty, cannot be estimated in the terms of concrete power, in so many fighting men, so many armed police, so many guns, so many prisons, such and such laws, ukases, and executive powers. But such feelings and thoughts are more powerful than fighting men and guns and prisons and laws and ukases. Their beginnings are feeble, their end is mighty. But of despotic repression the beginnings are mighty, the end is feeble..." Sri Aurobindo - The Strength of an Idea, 1907

" இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும்வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும்வரை விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி " தேசியத்தலைவர் திரு வே.பிரபாகரன்.

Einstein on Nationalism " பகை சூழ்ந்த இந்த உலகத்தில் ஒரு சமுதாய நோக்கு இல்லாமல் எம்மால் வாழவும் முடியாது சாகவும் முடியாது. இதனை எப்போதும் தேசியம் என அழைக்கலாம். அது என்னவாகிலும் அதன் நோக்கம் அதிகாரம் அல்ல. அதன் நோக்கம் தன்மானமும் நல்வாழ்வுமே. சகிப்புத்தன்மை இல்லாத, குறுகிய மனப்பான்மை கொண்ட, அத்தோடு வன்முறையை கையாளுகிற ஒரு மக்களிடையே நாம் வாழாது இருக்க முடியுமானால் உலகு தழுவிய ஒரு மனிதத்திற்காக எல்லாத் தேசியங்களையும் தூக்கி வீசுவதில் நான் முன்னிற்பேன். யேர்மன் அரசில் யூதர்களாகிய நாம் தகமைவாய்ந்த பிரசைகளாக இருக்க முடியாது என்ற ஆட்சேபனை, உதாரணமாக நாங்கள் ஒரு தேசியமாக இருக்கவேண்டின் ,அது சம்பந்தமான ஆட்சேபனை, அரசு என்பதன் இயல்பு பற்றிய தவறான புரிதலால் ஏற்படுவதாகும். அது தேசியப் பெரும்பான்மையினரிடம் சகிப்புத்தன்மை இன்மையால் ஏற்படுகிறது. சகித்துக்கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் நாங்கள் எம்மை ஒரு மக்கள் அல்லது தேசம் என்று கூறினாலும்சரி கூறாவிட்டாலும்சரி நாம் ஒரு போதும் பாதுகாப்பாக இருக்கமுடியாது " Albert Einstein - அல்பேட் அயன்ஸ்ரின் 1929.

" ஜே .ஆர் ,ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருப்பின் நான் துப்பாக்கி ஏந்தி இருக்கமாட்டேன் " தேசியத்தலைவர் வே.பிரபாகரன், 1984

எண்ணற்ற மாவீர்களின் தியாகத்தாலும் ....

Maveerar

Maveerar

... அதன் பின்னால் உள்ள இலட்சியங்களாலும் கட்டிவளர்க்கப்பட்ட போராட்டம் இது. இந்தக் காலத்தின் இலட்சியக் காட்சிகள் பல...

Mullaitivu Pongu Thamizh, 2005

Girls at Chencholai

அவற்றில் நான் தரிசித்த சிலவற்றை பதிவாக்க முயற்சிக்கிறேன். சமாதான காலத்தில் எனது முதலாவது வன்னிப் பயணம் அதன் நினைவுகள் என்னோடு வாழும். வாழ்க்கையின் பயணம் அது தொடங்கிய இடத்தில் வந்த சேர்வதும் அப்போது அந்த இடத்தை முதன் முதலாக அறிவது போன்ற உணர்வும் ஏற்படின் நாம் பயணித்தோம் என்பதைக் காட்டும் என்றார் ரீ.ஸ் .எலியட். (T.S.Eliot) வன்னிமண்ணில் கால் வைத்தபோது ஏற்பட்ட உணர்வு இதுவே.

Tamil eelam - De Facto State

A9 Road - Eelam Scenes

ஏ9 நெடும்சாலை எத்தனை உயிர்களைக் காவு கொண்டு மீட்கப்பட்டதால் அந்த வீதியில் ஓமந்தையில் ஏற்பட்ட உணர்வுகள் இன்னமும் பசுமையாக உள்ளது. அடங்காப்பற்றை உள்ளடிக்கிய வன்னிப் பெருநிலம் புலிகளின் ஆளுகையில் அரச கட்டுமானங்களைக் கொண்டிருந்த காலம் அது. வன்னியில் வழங்கப்படும் ஊர்ப்பெயர்கள் நீர்நிலைகளைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களான குளம், கேணி, வாய்க்கால், கட்டு, ஓடை, மடு, முறிப்பு, மோட்டை, வில், ஆறு, தண்ணி, போன்ற சொற்களில் முடிவதை அந்த மண்ணின் பயன்பாடுகள் காட்டி நின்றன.

Tamil Eelam - De Facto State

"பசுமைக் கோலங்கள்"

எமது நிலம் வறண்ட வானம் பார்த்த பூமியாக இருந்தபோதும் அங்கு நிலவிய பசுமைக் கோலங்களைக் கண்டபோது, எனது பல்கலைக்கழக வாழ்வில் 1967 இல் முதன்மதலாக தென்தமிழீழத்திற்கு சென்றிருந்தபோது என் மட்டுநகர் நண்பர்களுடன் கல்லடிப் பாலத்தில் அந்த பொங்கிவரும் பெருநிலவில் மீன்பாடுவதை கேட்க இருந்துவிட்டு எம்.ஜீ. இராமச்சந்திரனின் நாடோடி படத்தை பார்ப்பதற்கு சென்றிருந்தேன். அந்தப் படத்தில் வரும் கண்ணதாசனின் பாடல்களின் ஒன்று என் நினைவை விட்டு அகலாது இருந்தபோதும் அதன் நிசத்தை வன்னியில் தரிசித்ததுபோல் இருந்தது.

நாடு அதை நாடு, நாடாவிட்டால் ஏது வீடு......

பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறைமலைகூட நம் எல்லைக்கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயம் எங்கள் கூட்டம்

பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து புலியாகச் சீறும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும் .......

முல்லையும் மருதமும் மயங்கிய இந்தப் பெருநிலப்பரப்பில் புலிகள் ஆட்சியில்

உடலுறுதி, மனவுறுதி, சித்த விலாசம், ஆத்ம சுதந்திரம், விரிவான கலைப்பயிற்சி, பயனுள்ள தொழில் முயற்சி, தாராளமான நட்பு, ஈகை, ஒருவரையொருவர் கொள்ளையடிக்காத அன்யோன்யம், சாதிமதப் பிடிவாதங்களற்ற சுதந்திரமான நிமிர்ந்த நடை, செல்வச் செருக்கற்ற சரளமான உறவு

என ஜனநாயகத்தின் பண்புகளைப் பட்டியலிட்ட விட்மனின் எழுத்துக்களை அங்கு காண முடிந்தது.

சாதித் திமிரில் இருந்த சமுதாயம் ஒன்றில், அந்த அடக்குமுறை ஆத்மாவரை புரையோடிக் கிடந்த சமுதாயம் ஒன்றில் அடித்தளத்தில் இருந்தோர் தேசிய நீரோட்டத்தில் சரிசமனாக இணைக்கப்பட்டிருந்தமை தமிழ்த் தேசியத்தின் வெற்றியை வெளிப்படுத்தி இருந்தது. தேசியம் என்பது பற்றி பலரும் பலவாறான விளக்கங்கள் கொடுத்துள்ளனர்.

அதனை ஒரு அடக்கு முறையில் இருந்த அனுபவித்தோர் கூறும்போது அது அர்த்தம் உள்ளது. அந்த வகையில் " ஒரு சமுதாய நோக்கு இல்லாமல் இந்த உலகில் வாழவும் முடியாது சாகவும் முடியாது " எனக் கூறிய அல்பட் அயனஸ்ரின் வார்த்தைகள் தமிழ்மக்களுக்கு கூறியதுபோல் உள்ளது.

சாவதற்குக்கூட சமுதாயம் வேண்டும், அந்தச் சமுதாயத்திற்கென ஒரு நோக்கு வேண்டும். இந்தச் சமுதாய நோக்கை இன்று உலகில் வாழும் தமிழர் நெஞ்சங்களில் பதித்துவிட்ட தேசியத் தலைவரை சந்தித்த அந்த வாய்ப்பை வாழ்நாளில் மறக்கமுடியுமா?

இந்தச் சமாதான காலத்தில் பலரும் அவரைச் சந்தித்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அந்தச் சந்திப்பால் ஆகர்சிக்கப்பட்டு இருப்பார்கள். அவரவர் உணர்வுகளுக்கு ஏற்ப அந்தச் சந்திப்பு பலவிதமான உணர்வுகளை, காட்சிக் கோலங்களை அவர்கள் பெற்றிருப்பார்கள்.

இந்த இடத்தில் நாம் வாழ்வில் அழுந்தி அறிந்த ஒரு அனுபவத்தை கூறிவைப்பது பொருத்தமாக இருக்கும். அதாவது நாம் சில வேளைகளில் எமக்கு அருகே இருப்பவரை, பல ஆணடுககளாக பழகியவரை புரிந்து கொள்ளத் தவறுகிறோம். சிலரை ஒரு முறை சந்தித்தவுடனேயே அவர்களால் ஆட்கொள்ளப் படுகிறோம். சிலரைச் சந்திக்காமலே சந்தித்தவர்களைவிட நன்ககு விளங்கிக் கொள்கின்றோம்.

தேசியத் தலைவரின் வாழ்க்கை, செயல்கள், பேச்சுக்கள், எழுத்துக்கள் என்பன அவரை நாம் சந்திக்காமலே தரிசிக்கப் போதுமானவை. இருந்தபோதும் என் சந்திப்பில் என்னைப் பாதித்த சிலவற்றை என்னோடு நான் பேசிக்கொள்வதற்காகப் பதிவு செய்ய எத்தனிக்கின்றேன்.

தேசியத் தலைவரின் வாசிப்பை அதிலும் இராணுவ, தேசிய விடுதலைப் போராட்டங்கள் தழுவிய வாசிப்பை அவை சம்பந்தப்பட்ட படங்களை அவர் ஆழமாகப் பார்ப்பதை நாம் அறிவோம்.

Michael Collins - Commander iRAஅந்த வகையில் அயர்லாந்து தேசத்து விடுதலைப் போராட்டத்தின் காவிய நாயகர்களில் ஒருவரான மைக்கேல் கொலின்ஸ் பற்றிய உரையாடல் இடம் பெற்றது. அப்போது நான் கொலின்ஸ் பற்றி அறிந்திருக்கவில்லை. அந்தச் சந்திப்பின் பின்னரே கொலின்ஸ் பற்றிய யில்களையும் படத்தையும் பார்வைக்கு உள்ளாக்கினேன்.

அப்போது மைக்கேல் கொலின்ஸ்சின் வாழ்க்கையில் பல அம்சங்களில் தேசியத் தலைவருக்கும் ஒற்றுமை இருப்பதாக உணர முடிந்தது. அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில் அதுவும் ஆயுதப் போராட்டத்தில் கொலின்ஸ்சிக்கு ஈடாக எவரும் இல்லை எனலாம். சிறு வயதில் இருந்தே ஆழமான வாசிப்பு, இளமைக் காலத்தில் அவரது பள்ளி ஆசிரியரான டெனிஸ் லயன்ஸ் (Denis Lyons ) என்பார் ஊட்டிய தேசப்பற்றும் சுதந்திர வேட்கையும் தேசியத்தலைவரின் சிறுவயதில் வேணுகோபால் மாஸ்ரர் போன்றோர் வகித்த பாகத்துடன் ஒப்பிடத்தக்கது. தலைவரின் வாசிப்பில் நேதாஜி சுபாஸ்சந்திரபோஸ், மகாபாரதம், சோழசாம்ராச்சியத்தின் வரலாற்றைத் தழுவிய சரித்திர நாவல்கள், நெப்போலியன் வரலாறு போல் மைக்கேல் கொலிஸ்சின் வாசிப்பிலும் தேசப்பற்று தேசவிடுதலை சம்பந்தமான தொமஸ் டேவிஸ் (Thomas Davis) என்பாரின் எழுத்துக்கள், ரீ.டி சுலைவனின் (T.D .Sullivan ) ஜரிஸ் ஜதீகக் கதைகள், தொமஸ் மோரின் ( Thomas Moore ) பாடல்கள், எச்.ஜி.வெல்ஸ் (H.G.Wells ) என்பாரின் வரலாற்று நூல், ஒஸ்கார் வைல்ட், (Oscar Wilde ) ஜரிஸ் தேசியக் கவி யேட்ஸ் ( Yeats ) என்பன அடங்கும்.

அயர்லாந்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் மரணித்த மாவீர்களுக்கு மரியாதை செய்த கொலின்ஸ் கூறிய வார்த்தைகள்,

" நாம் பல அற்புதமானவர்களை இழக்கின்றோம். பல கண்ணியமாண நண்பர்கள். அவர்களது சாதனைகளையும், நினைவுகளையும் உரிய முறையில் எடுத்துக் கூற சிலராவது மிஞ்சுவார்கள் என நான் நம்புகிறேன். ஆனால் அவர்களுக்கு இந்த மண்ணின் சுதந்திரம் ஒன்றுதான் நாம் செலுத்தக்கூடிய முறையான புகழாரம் "

கொலின்ஸ்பற்றி நான் குறிப்பிடக் காரணம் என்னவெனில் அவரது வாழ்வின் சில பகுதிகளை மொழிபெயர்த்து நண்பன் மாமனிதர் ஜெயக்குமாரிடம் கொடுத்து விட்டேன் என்பதற்காக. அந்த வகையில் கொலின்ஸ் பற்றிய தாக்கத்தை தலைவரின் உரையாடல் ஏற்படுத்தியது.

இது போலத்தான் பண்டாரவன்னியன் பற்றிய எனது வாசிப்பும். இந்தியப் படையால் தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தகாலம். தலைவரைத் தேடி அழிப்பதற்காக பல்லாயிரமான இந்தியப் படைகள் வன்னிக்காட்டில் குவிக்கப்பட்டமை, நித்திகைக் குளம் என்பன பற்றி நாம் ஓரளவு அறிந்ததே.

இவை பற்றிக் கூறிய தலைவர் அந்த இருள் சூழ்ந்த பயங்கரமான வேளையில் " ஏனென்று தெரியாது பண்டாரவன்னியனை நினைத்தேன் " எனக் கூறியது என்னுள் கலந்து விட்ட வசனம்.

அதை அவர் கூறியபோது அந்த அபூர்வமான கண்கள் இன்னும் ஒளிவிட்டபடி இருந்ததோடு என்னால் அந்தக் கண்களை எதிர்கொள்ள முடியாதும் இருந்ததை உணர்ந்தேன். இதன் பின்னர் இவர் இதை ஏன் கூறினார் என நான் பல முறை அந்த வாக்கியத்தை தியானித்ததுண்டு.

உயிர் உன்னதமானது. அதைவிட உன்னதமானது காதல். இவற்றை விட உன்னதமானது தேசப்பற்று, அந்த தேசத்தின் விடுதலைக்காக ஆங்கிலேயருக்கு அடி பணிய மறுத்தவன் அடங்காப் பற்றின் மாவீரன் பண்டாரவன்னியன்.

ஆங்கிலேயர் வழங்கிய சுக போகங்களை தூ வென்று உதறியவன். காட்டிக் கொடுக்க காக்கைவன்னியன் இருந்தபோதும் மசியாத மானத் தமிழன். உலகில் சூரியனே அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தையுடைய பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் முட்டி மோதியவன். 1803 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அதிகாலை 5 மணியளவில் நடந்த கடைசி யுத்தத்தில் ஆங்கிலத் தளபதி கப்டன் வொன் டிறிபேக் தலைமையிலான ஆங்கிலப் படையுடன் இறுதிமட்டும் போராடிய பண்டாரவன்னியன் மாவீரனாகி வரலாற்றில் வாழ்கின்றான்.

செவி வழிச் செய்திகளின்படி இவனது காதலியாகிய இளவரசி குருவிச்சி நாச்சி மன்னனின் வீரமரணச் செய்திகேட்டு நச்சுக் கிழங்கை அருந்தி தென்னோலைப் பன்னாங்கில் படுத்திருந்து உயிர் நீத்தாள். பண்டார வன்னியன் மறைந்துவிட்டபோதும் அவன் மூட்டிவிட்ட விடுதலை நெருப்பை கொடிய பகை சூழந்த சமயத்தில் தேசியத் தலைவர் எண்ணியது தற்செயலான சம்பவம் அன்று.

அன்னை பூமியென்றும் அடங்காப்பற்றாம்
வன்னி மண்ணின் மானத்தைக் காத்திடத்
தன் உயிர் கொடுத்துப் புகழ்கொண்ட மாமன்னன்
மாவீரன் பண்டாரவன்னியன்

என்ற முல்லைமணியின் பாடலை நெஞ்சில் நிறுத்துகின்றேன்.

தேசியத் தலைவருடனான சந்திப்பில் பரதநாட்டியம் பற்றிய உரையாடலும் இடம் பெற்றது.


Alage Alage Thamil Alage
அழகே, அழகே, தமிழ் அழகே...

பரதநாட்டியம் தமிழர் நாட்டியம் அல்ல என்ற கருத்து அங்கு ஒருவரால் முன்வைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் தமிழ்மக்களின் தொன்மையான ஆடல் கலையில் அதுவும் ஒன்று, சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள், சங்ககாலத்து விறலியர் ஆட்டங்கள், சிலப்பதிகார ஆதாரங்கள். வேத்தியல் பொதுவியல், பதினொரு ஆடல்கள், சரபோஜிமகாராசா காலம், தஞ்சைநால்வர் வகுத்த அலாரிப்பு, தில்லானா என நான் எனக்குத் தெரிந்ததை அடிக்கிக் கூறினேன்.

இதில் என்னோடு கலந்த உணர்வுகள் நான் கூறியவை அல்ல . அவற்றை தேசியத்தலைவர் செவிமடுத்தவிதம், அவரின் கண்கள், உடம்பின் சைகைகள் யாவும் தனியே என்னைக் கௌரவித்ததுபோல் இருந்தது.

இது போல் பல விடயங்களில் மற்றவர்கள் தம் கருத்துக்களைச் சொன்னபோது தமது கருத்துக்களுக்கு அவர் தந்த முக்கியத்துவத்தை அனுபவித்திருப்பர்.

2002 ஆம் ஆண்டிலேயே அடுத்த சண்டை இவங்களுடன் இல்லைத்தானே எனக் கூறியதை இன்று வென் லியோ என்னும் சீனத்துப் பெண் மட்டுமா கூறுகிறாள்?

சமாதான காலத்தில் திருமணம் செய்த போராளிகளின் இருப்பிட வசதிகள், அவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்ற துடிப்பு , அவுஸ்திரேலியாவில் புதிதாக மணம் முடிப்போரின் இருப்பிட வசதிகள் என்பன பற்றியெல்லாம் அறிவதில் காட்டிய ஆர்வம் என்பன ஒரு அற்புதமான மனிதத்தின் ஆளுமை என்று கூறுவதா?

இவைதவிர வன்னியில் கண்ட காட்சிகளும் சிந்தனைகளும் அவை தழுவிய கருத்துருவாக்கங்களும் அவர்கள் கட்டி எழுப்பிய தேச நிர்மாணங்களின் பின்னால் உள்ள கதைகள். அவைபற்றி நிறைய எழுதுவதும் பேசுவதும் காலத்தின் தேவையாகும். ஏனெனில் விடுதலை என்பது ஒரு செயல் மட்டுமல்ல ,அது ஒரு கனவு, ஓரு லட்சியம், ஓரு சமுதாய நோக்கு, நாம் உலகிற்கு தமிழ் செய்வதற்கான ஊற்று.

இந்த வகையில் கலை, இலக்கியம் , கல்வி , மொழி சார்ந்து பல சிந்தனைகளும் கருத்துருவாக்கங்களும் அங்கு செயல்பட தொடங்கி இருந்ததைக் கண்டேன். ஒரு மக்களை முற்றாக அடிமைப்படுத்த வேண்டின் அவர்கள் மொழியை அழித்துவிட்டால் போதும். ஆங்கிலக் கல்வி தமிழர்களுக்குச் செய்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம் எனலாம்.

மொழியின் சக்தி,அது செலுத்தக் கூடிய செல்வாக்கு என்பனவே 1835 ஆம் ஆண்டில் மக்கோலை பிரபுவால் இந்தியாவிற்கான கல்வி அறிக்கையைச் சமர்பித்தபோது அந்தக்கல்வி ஆங்கில மொழியில் இடம்பெறவேண்டும் எனச் சொல்ல வைத்தது.

எமக்கும் எம்மால் ஆளப்படும் கோடிக்கணக்கானவர்களுக்கும் இடையே தொடர்பாடும் ஒரு வர்க்கத்தை எம்மால் இயன்றவரை உருவாக்கவேண்டும். இந்த வர்க்கத்தினர் இரத்தத்தால், நிறத்தால் இந்தியராகவும் ,விருப்புக்களில், மதிப்àடுகளில், ஒழுக்கங்களில், அறிவாற்றலில் ஆங்கிலேயராகவும் இருக்கவேண்டும் என அவர் சொன்னார்.

"We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect." Imperialism & Thomas Macaulay - Minute on Indian Education, 1835

இன்று தமிழ்நாட்டில் ஆங்கிலத்தின் ,செல்வாக்கால் தமிழ்க் கல்வி படும்பாட்டை என்னவென்று சொல்வது. ஆனால் தமிழில் சிந்தித்து தமிழில் பேசுவோரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என்பதால் அது பல முற்போக்கான சாதனைகளை கல்வியில் ஏற்படுத்தியிருந்தது. புலிகளால் சமூகக் கல்வி என்ற பாடம் வன்னியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சிறீலங்கா கல்வித்திணைக்கள பாடங்களுடன் மேலதிகமாக இப்பாடம் கல்வித்திட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக அந்த யில் ஒன்றின் முன்னுரையில் கூறப்பட்டவற்றை பதிவது பயனாகலாம்.

சிறிலங்கா அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் இதுவரை கற்பிக்கப்பட்டுவரும் வரலாற்றுப் பாடலில்கள் உண்மையான வரலாறாக அமையாமல் சிங்கள இனத்தை மேன்மைப்படுத்தக்கூடிய வகையிலேயே மிகைப்படுத்தியும் ,தமிழ்மக்களின் பெருமைகளை மறைத்தும் ,தமிழ்மக்களை இழிவு படுத்தும் வகையிலே திரித்தும் எழுதப்பட்டுள்ளன.
இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரிய நாடென்றும் அவர்களது வரலாறே ஈழத்து வரலாறு என்றும் சிங்களவரால் சிங்களவர்களுக்காக சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஆக்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே தமிழ் மாணவர்களுக்கு ஈழத்து வரலாறு என கற்பிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பும் மேன்மையும் மிக்க வரலாற்றைக் கொண்ட இனம் அந்த வரலாற்றாற் பெருமையடைகிறது. அத்தகைய வரலாறு அந்த இனத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது.

பெருமைமிக்க பண்டைவரலாற்றைக் ,கொண்ட ஈழத்தமிழினத்தின் இன்றைய மாணவர்கள் தமது வரலாற்றைக் கற்பதும் தெரிந்துகொள்வதும், அதலிடாக அவர்கள் வளர்ச்சியைப் பெறுவதும் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு மறுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி "உனது இனம் இந்த மண்ணை ஆக்கிரமிக்க வந்த இனம். இந்த மண்ணில் அக்கிரமம் புரிந்த இனம். கள்ளத்தோணியில் வந்த இனம். அடிமை இனம்" எனத்தமிழினத்தை இழிவுபடுத்துகின்றன. பொய்யான வரலாறு தமிழ் மாணவர்களுக்குப் புகட்டப்படுகிறது.

இத்தகைய கல்வியினால் தமிழ் மாணவர்கள் தன்னம்பிக்கையோ நாட்டுப்பற்றோ அற்றவர்களாக வாழும் நிலை இருந்து வருகிறது.

இனத்திற்கு வழிகாட்டும் வரலாற்றுக் கல்விக்கு அந்த நிலை என்றால் ,சமூகவாழ்க்கையை நெறிப்படுத்தும் நோக்கோடு சிறிலங்கா அரசால் கற்பிக்கப்படும் சமூகக் கல்வியிலிடாகத் தமிழ் மாணவர்கள் தமது நாட்டின் நீர்வள நிலவளங்களையோ சமூக அறிவையோ ,வாழ்க்கையை நெறிப்படுத்தக் கூடிய அறிவையோ பெற முடியவில்லை. தமிழினம் சிங்களவர்களுக்கு அடங்கி அடிமையாக வாழவைப்பதற்கேற்ற வகையிலேயே சமூகக்கல்விப் பாடத்திட்டம், பாடப்பரப்புக்கள் திட்டமிடப்பட்டு ஆக்கப்பட்டுள்ளன.

எனவேதான் இன்றைய வரலாறு ,சமூகக்கல்வி பாடங்களில் தமிழ் மாணவர்களுக்கு நாட்டமோ ஆர்வமோ ஏற்படவில்லை. தேர்வுகளில் புள்ளி பெறுவதற்கென்ற ஒரேநோக்கிலேயே இப்பாடங் களைத் தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர்.

தமிழ் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடியதாகவும், பொதுத்தேர்வுகளுக்கு ஊறுநேராத வகையிலும் 6, 7, 8 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு " சுமூகக்கல்வியும் வரலாறும் " என்ற பாடயிலிலிடாகச் சில பாட அலகுகளைச் சமூகக் கல்வி மன்றம் ஆக்கித் தந்திருக்கிறது.

இந்தலிலை மாணுவர்கள் துடிப்போடும் , ஆர்வத்துடனும் கற்று அறிவையும் பயனையும் பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் வேணவாவுமாகும் "

சுமூகக் கல்வி மன்றம், துடிப்பும் ஆர்வமும் வீறுகொண்ட ஒரு சமுதாய நோக்கிற்கு வழிவகுக்கும் எனப் புலிகள் அரசியல் கட்டுமானத்தில் கல்விக்கு வழங்கிய காட்சிகளை இரை மீட்கின்றேன்.

இதேபோல் வீறுகொண்ட கலை இலக்கியங்களுக்கு அந்தக் கட்டுமானத்தில் உன்னதமான இடத்தை வழங்கியிருந்தனர். 1995 ஆம் ஆண்டில் 5 லட்டசம் மக்கள் இரவோடு இரவாக யாழ்ப்பாணத்தைவிகட்டு வன்னிக்கு நகர்ந்தபோதும் புலிகளின் கலை பண்பாட்டு சஞ்சிகையான வெளிச்சம் மங்கிவிடவில்லை. இந்த வெளிச்ச இதழ்களை நோட்டமிடும்போது அதனை அணி செய்யும் ஆக்கங்கள் தேசியத்தின் உன்னதங்களாக ,விடுதலை என்ற இலட்சியத்தின் பொறிகளாக விடுதலை ,சமூகம், மொழி , அரசியல் சார்ந்த தலைவரின் சிந்தனைகளையும் தாங்கி அணிசெய்கின்றன. ஏராளமான போராளிகளின் படைப்புக்கள் வெளிச்சத்தில் பளிச்சிடுகின்றன.

2001 ஆம் ஆண்டு பவள இதழ் பல ஆக்கங்களை சுமந்து நிற்கும் காட்சிகளும் கோண்டாவிலில் கலை இலக்கியப் பட்டறை ஒன்றை பார்க்க முடிந்ததும் நீங்காத நினைவுகள் ஆகும். தத்துவ விசாரணைகள், உரத்த சிந்தனைகள், கிரேக்கரின் நகர அரசை என் கண்முன் நிறுத்தியதுபோல் இருந்தது. இதே போன்று தலைவரின் வழிகாட்டலில் எழுந்த மொழிப் பல்கலைக் கழகத்தின் பின்னால் உள்ள சிந்தனைகள் சம்பந்தமாக உரியவர்களுடன் உரையாடியபோது கனவுலகில் இருப்பதுபோன்ற பிரமையே ஏற்பட்டது.

எம் முந்ததையரின் சிந்தனைகள் யாவும் எமது மொழியிலேயே செப்பனிடப்பட்டுள்ளது. எமது வரலாற்றின் வாகனம் அது. அந்த மொழி சம்பந்தமாக இவர்களிடையே எல்லாத் துறைகளிலும் இருந்த கனவுகளும், காட்சிகளும் எத்தனைமுறை அழுத்திச் சொன்னாலும் மிகையாகாது. வில்லியம் சாப் ( William Sharp ) என்பார் பியானா மக்லியோட் (Fiana Macleod) என்னும் பேனா பெயரில் பறக்கும் விதி (The Winged Destiny: Studies in the spiritual history of the Gael) என்னும் நூலில் மொழி பற்றிக் கூறியவற்றை இவர்கள் சிந்தனைகளில் கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.

இன்று இவையாவும் பொய்யாய், பழம்கதையாய் மெல்லப் போய்விட்டனவா? விடுதலை என்ற சிந்தனை முதலில் மனித மனங்களில், உள்ளங்களில் துளிர்விடுகின்றன. அவற்றை யாரால் அழிக்கமுடியும்? இந்தக் காட்சிகள் மறையுமா.

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதி கண்டோம்
காண்பதல்லா உறுதியில்லை
காண்பது சக்தியாம்
இந்தக் காட்சி நித்தியமாம் " மகாகவி சுப்பிரமணியபாரதி

வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ? புதியதோர் விதி செய்யப் புறப்பட்ட இலட்சியங்களை அழிக்கமுடியுமா? அடக்குமுறையே சிவகுமாரன்களையும், தங்கத்துரைகளையும், குட்டிமணிகளையும், கிட்டுகளையும், திèபன்களையும், அன்னை பூபதிகளையும் உருவாக்கிய வரலாறு எம் கண்முன் விரிந்து கிடக்கிறது.

அண்மையில் காலமான பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்த பசிய கவிஞன் முருகையன் செய்த புதியகுறள்களில் ஒன்று

ஆவி கொடுக்க அசையாத் திடம்கொண்ட
மாவீரர் வாழும் மண்

Maveerar Naal

அந்த மண் இன்று வீழ்ந்த கிடக்கலாம். ஆனால் அடக்குமுறை, வதைமுகாகங்கள், அகதிவாழ்வு, இனப்படுகொலை, இவற்றையெல்லாம் கடந்து உயிர்த்தெழுந்த யூதமக்கள் தம் இலட்சியத்தை சுமந்து நாடு கண்ட வரலாறு என் கண்முன்னே விரிய நான் கண்ட காட்சிகளும் நித்தியமாம் இது சத்தியமாம் எனத் துணிகின்றேன்.

ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

Comments

Anonymous said…
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்