ஆளும் மகிந்த அரசு தனது ஏகோபித்த அரசியல் பலம் நாடெங்கும் பரந்துள்ளதை அறிவிப்பதற்கு துருப்புச்சீட்டாக இந்த தேர்தலை பயன்படுத்தவேண்டும் என்ற நோக்குடன் இந்த தேர்தலையும் பய்ன்படுத்தவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இதற்காக, அரசியல் கூட்டணிகள் - தேர்தல் வாக்குறுதிகள் என எத்தனையோ விடயங்களை மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு அறுவடைக்காக காத்திருக்கும் மகிந்த அரசுக்கு முண்டுகொடுப்பதற்கென, சில தமிழ் கட்சிகள் தமது கொள்கைகளை சிங்கள தேசியத்திடம் அடகுவைத்துவிட்டு மக்கள் முன்போய் வாக்குகேட்கவும் துணிந்துவிட்டன.
குடாநாட்டு தேர்தல் நிலைவரம்
எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநகரசபை தேர்தலில் யாழ் மாநகரசபைக்கான 23 உறுப்பினர் பதவிக்கு நான்கு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சை குழுக்களை சேர்நத 174 பேர் இம்முறை போட்டியிடுகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் 1 இலட்சத்து 417 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுள் 335 பேர் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர்.யாழ் மாவட்டத்தில் 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என யாழ் மாவட்டத்தின் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்துள்ளார்.
இவர்களைவிட, யாழ் மாநகரசபை தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கென 6 மாவட்டங்களில் 17 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து வேறுமாவட்டங்களில் உள்ள யாழ் மாநகரசபைக்கு உட்பட மக்களில் இந்த தேர்தலில் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களில் 6242 பேர் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைஅடுத்து இந்த கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 324 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 849 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 320 வாக்களர்கள் தகுதி பெற்றுள்ளனர்.புத்தளம் மாவட்டத்தில் 4550 வாக்களர்கள் தகுதி பெற்றுள்ளனர்.அனுராதபுரம் மாவட்டத்தில் 120 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
கொடிகாமம், மற்றும் கைதடி பகுதிகளில் அமைந்துள்ள தடுப்புமுகாம்களில் உள்ள மக்களில் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றவர்களுக்கென சிறப்பு வாக்கு சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
வவுனியா தேர்தல் நிலைவரம்
வவுனியா நகரசபைக்கான 11 உறுப்பினர் பதவிக்கு ஆறு அரசியல் கட்சிகள் மற்றும் மூன்று சுயேட்சை குழுக்களை சேர்நத 135 பேர் போட்டியிடுகின்றனர். வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரை இங்கு 24 ஆயிரத்து 626 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். இந்த தேர்தலுக்காக 18 இடங்களில் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டியிடும் கட்சிகள்
மேற்படித்தேர்தல்களில் போட்டியிடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் களத்தில் குதித்திருக்கின்றன.
யாழ் மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆளும் மகிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் மூன்று சுயேட்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன்.
ஆனால் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஒரு சுயேட்ச்சைக்குழு தாக்கல் செய்தல் வேட்பு மனுக்கள் தேர்தல் தெரிவு அதிகாரியால் செல்லுபடியற்றவையாக அறிவிக்கப்பட்டது.
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. ஆளும் மகிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து அந்த கட்சியின் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன்.
ஆனால்,தமிழர் விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்தல் வேட்பு மனுக்கள் தேர்தல் தெரிவு அதிகாரியால் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் வரலாறு
யாழ்ப்பாண மாநகரசபை என்பது யாழ்ப்பாண நகரத்தை நிர்வாகம் செய்துவரும் உள்ளூராட்சி அமைப்பு ஆகும். இது தற்போது யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியையும், நல்லூர் தொகுதியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது. இது வட்டாரம் என அழைக்கப்படும் 23 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முன்னர் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் வெவ்வேறாக உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூடி நகரமுதல்வர் , துணை முதல்வர் ஆகியோரைத் தெரிவு செய்வர்.
புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட பின்னர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதிலும் விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். நகரமுதல்வர் மற்றும் துணைமுதல்வர் ஆகியோரையும் மக்களே நேரடியாகத் தெரிவு செய்கின்றனர்.
1861 ஆம் ஆண்டில் வீதிக் குழு என அழைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபையைப் போன்றதொரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. பின்னர், 1906 ஆம் ஆண்டில் - 1898 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 13 ஆம் இலக்கச்சட்டவிதிகளுக்கு அமைய - முதலாவது உள்ளூராட்சிச் சபை உருவானது. 1921 ஆம் ஆண்டில் இது, நகரப்பகுதிச் சபை ஆகவும்,பின்னர் 1940 இல், நகரசபையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இது மாநகரசபை ஆனது.
குடியேற்றவாதக் காலப் பாணியில் கட்டப்பட்ட யாழ்ப்பாண மாநகரசபைக்கான கட்டிடம், யாழ்ப்பாணக் கோட்டைக்கு அண்மையில் அமைந்திருந்தது. இங்கே சபை அலுவலகங்களுடன், நகரமண்டபமும் அமைக்கப்பட்டிருந்தது. 1980 களின் இறுதியில், கோட்டையைச் சுற்றி இடம்பெற்ற போர் நடவடிக்கைகளினால் இக் கட்டிடம் முற்றாகவே அழிந்து விட்டது.இதனைத் தொடர்ந்து மாநகரசபையின் அலுவலகம் நல்லூருக்குத் தற்காலிக இடமொன்றுக்கு மாற்றப்பட்டது.
தற்போது யாழ்குடாநாட்டில் நடைபெறும் மாநகரசபை தேர்தலானது 11 வருடங்களுக்கு பின்னர் அங்கு இடம்பெற ஏற்பாடகியுள்ளது. 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் அங்கு மாநகராட்சி தேர்தல் நடைபெறவில்லை.
கடந்தகால தேர்தல் நிலைவரம்
1983 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசு கொண்டுவந்த அவசரகால நிலை பிரகடனத்தின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கான உள்ளூராட்சி தேர்தல்கள் காலவரையின்றி ரத்துசெய்யப்பட்டன.
1995 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டை அப்போதைய சந்திரிகா அரசு ஆக்கிரமித்தவுடன் 1998 இல் யாழ் மாநகரசபை தேர்தலை நடத்த முடிவு செய்தது. இதன்பிரகாரம் 1998 ஜனவரி 29 ஆம் திகதி யாழ் மாநகரசபைக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் தமிழர் விடுதலைக்கூட்டணி 9 ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றது. ஆனாலும் 358 வாக்குகள் மாத்திரமே கூடுதலாக பெற்றதன் மூலம் ஏனைய கட்சிகளை வென்ற தமிழர் விடுதலைக்கூட்டணியால் பெரும்பான்மையுடைய கட்சியாக மாநகரசபையில் தனது பலத்தை நிரூபிக்கமுடியவில்லை.
அவ்வாறு பலத்தை நிரூபித்து மாநகரபை நிர்வாகத்தை அமைப்பதற்கு அதற்கு அடுத்தநிலையில் தலா ஆறு ஆசனங்களை பெற்ற புளொட் மற்றும் ஈ.பி.டி.பியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளவேண்டிய கட்டாயநிலை இருந்தது. ஆனால், தமது கொள்கைகளுக்கு முரணான கொள்கைகளையுடைய கட்சிகளுடன் சேர்ந்துகொள்ள தமிழர் விடுதலைக்கூட்டணி விரும்பாமையினால் அப்போதைய யாழ் மாநகரசபை நிர்வாகம் அமையவில்லை.
வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் 1983 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு மீண்டும் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டபோது 1994 இல் வவுனியா நகரசபைக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. அப்போது கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் 39 தொகுதிகளிலும் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடைபெற்றன.
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள இந்த இரண்டு மாவட்டங்களுக்குமான மாநகரசபை மற்றும் நகரசபைக்கான தேர்தல்கள், மகிந்த அரசின் போருக்கு பிந்திய பலத்தினை அரசியல் ரீதியாக தமிழ்மக்கள் மத்தியில் நாடி பிடித்துப்பார்க்கும் முக்கிய பரிசோதனையாக இருக்கப்போகிறது.
ஆனால்,குடாநாட்டு தேர்தலை பொறுத்தவரை, அங்கிருந்து இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் வசிப்போர் என்ற ரீதியில் சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் வாக்குகள் எவ்வளவு தூரம் நீதியாகவும் நேர்மையாகவும் பெறப்படப்போகின்றன என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
தமிழர் தாயகத்துக்கு வெளியே ஆறாயிரம் வாக்காளர்களை வைத்து அவர்களை 'எவ்வாறு பயன்படுத்தவேண்டுமோ' அவ்வாறு பயன்படுத்தக்கூடியவாறு வாக்குச்சாவடிகளை அமைத்து தமது தேர்தல் திருகுதாளங்களை அரங்கேற்றும் வகையில் இந்த தேர்தல் நடைபெறவிருப்பது தமிழ்மக்களை பொறுத்தவரை துரதிஷடமான ஒரு விடயமே ஆகும்.
இங்கெல்லாம் - அதாவது அனுராதபுரம், கம்பகா, களுத்துறை, புத்தளம் ஆகிய பிரதேசங்களில் - தமிழ்ப்பிரதிநிதி்த்துவத்தை உறுதி செய்யும்வகையில் தேர்தல் நடைபெறுமா என்பது மிகப்பெரிய சந்தேகம்.
குடாநாட்டில் தமிழரின் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட்டாலும் இறுதிநேர தீர்மானிக்கும் வாக்குகளாக அல்லது தமிழத்தேசிய விரோத போக்குடைய கட்சிகளின் பலத்தினை மேலோங்க செய்து நிர்வாகத்தினை கைப்பற்றுவதற்காக இந்த வெளிமாவட்டங்களில் உள்ள வாக்காள்களின் வாக்குகளை நினைத்தவாறு கூட்டிக்கொள்வதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன.
அந்த வகையில் நீதியானதும் நேர்மையானதும் தேர்தல் என்ற கோட்பாடு எவ்வாறு களத்தில் எதிரொலிக்கப்போகிறது என்பது, தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே ஊகிக்கக்கூடியதாக உள்ளது.
இந்த தேர்தலும் - இன்னொரு தடவை - அரசின் விளம்பரத்துக்காக தமிழ்மக்களை பொம்மையாக பயன்படுத்திய நாடகமாக அரங்கேறப்போகின்றது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.
ஆகவே, போர் வெறி பிடித்த இனவாத அரசுக்கு ஜனநாயக முலாம் பூசுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தேர்தல் முயற்சியை கண்டு சர்வதேச சமூகம் இன்னமும் ஏமாறப்போகிறது. தமிழினத்தை ஏமாற்றப்போகிறது.
Comments