அகதிகளை இந்தத் தடுப்பு முகாம்களில் மூன்று வருட காலத்துக்குத் தடுத்துவைத்திருக்கும் திட்டம் ஒன்றையே அரசு தொடக்கத்தில் வைத்திருந்தது. அகதிகளில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருக்கின்றானரா என்பதைக் கண்டறிவதற்கும், வன்னியில் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்த பகுதிகளில் கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுவதற்கும் இந்தக் கால அவகாசம் தேவை என அரசு தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.
இந்தக் காலம் ஐந்து வருடங்கள் வரையில் நீடிக்கலாம் எனவும் சொல்லப்பட்டது. இருந்தபோதிலும் உதவி வழங்கும் நாடுகளின் கடுமையான அழுத்தம் காரணமாகவும், முட்கம்பி வேலிகளை தடுப்பு முகாம்களுடன் ஒப்பிட்டு வெளியிடப்படும் கருத்துக்களையடுத்தும் இந்த அகதிகளில் 80 வீதமானவர்களை இந்த வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்துவதற்கு அரசு இணக்கம் தெரிவித்தது. இதற்காக 180 நாள் வேலைத் திட்டம் ஒன்றும் தம்மிடம் இருப்பதாகவும் அரசு அறிவித்திருந்தது.
இருந்தபோதிலும் இந்த முகாம்களுக்குள் தற்போது தொடங்கியிருக்கும் கட்டுமானப் பணிகள் இவர்களை நிரந்தரமாகவே முகாம்களுக்குள் வைத்திருக்கும் திட்டத்துடன் அரசு செயற்படுகின்றதா என்ற கேள்வியை எழுப்புவதாக உதவி நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டல்களை மீறுவதாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், அகதிகளை அதிக காலத்துக்கு வைத்திருக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அகதிகளுக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளையும் வழங்காமல் இந்த நிரந்தரக் கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கு அவர்களையே அதிகாரிகள் பயன்படுத்துவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் வட்டாரங்கள் தெரிவித்தன. இது உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டல்களை மீறுவதாக அமைந்திருக்கின்றது எனவும் இலண்டன் `ரைம்ஸ்` நாளேடு இது தொடர்பாக வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி ஒன்றில் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பான ஆதாரங்களைக் கொண்டுள்ள ஆவணங்களும் தம்மிடம் இருப்பதாகவும் இலண்டன் ரைம்ஸ்` தெரிவித்திருக்கின்றது.
கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இது தொடர்பான தமது கடுமையான கண்டனத்தை தொண்டர் நிறுவனங்கள் தெரிவித்தன. சீமெந்துத் தரையை அமைக்கும் விடயம் மிகவும் செலவானதாகும். இருந்தபோதிலும் மழை காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அத்துடன், இந்நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தற்காலிக புகலிடம் தொடர்பிலான விதிமுறைகளை மீறுவதாகவும் அமைந்திருக்கின்றது. சீமெந்துத் தரையை அமைப்பது நிரந்தரக் கட்டுமானத்தின் அரைப்பகுதியாகும் என அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இடம்பெயர்ந்தவர்களை அந்த இடத்தில் நீண்ட காலத்துக்கு இருப்பதாகச் செய்வதாக அமையும்.`மெனிக்` முகாம் பகுதியிலேயே இவ்வாறு நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன. இங்குள்ள ஆறு வலயங்களில் நான்கு வலையங்களுக்குள்தான் தம்மால் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும், இரு வலயங்களுக்குள் செல்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சூனியப் பகுதி என மர்மமான பெயர் சூட்டப்பட்டுள்ள பகுதிகளும் அடக்கம் எனவும் நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பகுதிக்குள் பணி புரிய தமக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், ஆனால் கட்டடங்கள் எழுப்பப்படுவதை தம்மால் வெளியில் இருந்தே பார்க்கக்கூடியதாக இருப்பதாகவும் உதவிப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். இருந்தபோதிலும் இலண்டன் `ரைம்ஸ்` வெளியிட்டுள்ள இது தொடர்பான செய்தியை இலண்டனில் உள்ள சிறீலங்காவின் தூதுவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அகதிகளை 180 நாள் திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றுவதற்கே திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி: ஈழமுரசு - 11.17.2009
Comments