ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. வழமையாக முற்போக்கான ஏகாதிபத்திய விரோதத் தகவல் எதையுமே தமிழாக்குவதில் தமிழ் ஊடகவியலாளர்கட்கு அக்கறையில்லை. உலக நிகழ்வுகள்
பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் ஏதாவது இந்திய இணையத்தளத்திலிருந்தாவது அப்படியே எடுத்தாளப்பட்டு உரிய நன்றி கூறல் இல்லாமல் "நன்றி - இணையம்" என்ற சொற்களுடன் வெளிவருகின்றன. மேற்கூறிய கட்டுரை 10-05-2009 ஞாயிறு தினக்குரலில் மிகக் கவனமாகத் தமிழாக்கப் பட்டுள்ளது. இவ்வாறான அக்கறை பிற விடயங்களிலும் இனிமேற் கொண்டு காட்டப்படும் என்று எதிர்பார்ப்போமாக.மேற்படி கட்டுரை கட்டுரையாளரான ஜெரமி பேஜின் சொந்தச் சரக்கல்ல. லண்டன் டைம்ஸ் ஒரு இடதுசாரி விரோத ஏடு. சீனாவும் ரஷ்யாவும், சோஷலிஸத்திலிருந்து விலகிய பின்பும் அவற்றைப் பற்றிய குரோதம் பாராட்டுகிற கட்டுரைகள் தொடர்ந்தும் அதில் வருவதற்கான காரணம் அமெரிக்க-மேற்கு ஐரோப்பிய உலக மேலாதிக்கத்திற்கு அவை சவாலாக இருப்பது தான்.
ஜெரமி பேஜ் என்றுமே முற்போக்கான பத்திரிகையாளராக அறியப்பட்டவரல்ல. மேற்கூறிய கட்டுரைக்கான தகவல்கள் ஒட்டு மொத்தமாக பி. ராமன் எனப்படும் முன்னாள் றோ உளவு நிறுவன ஆணையாளரின் மூலம் பெறப்பட்டவை என்று கட்டுரை மூலம் தெரிய வருகிறது. இந்திய-சீன உறவைச் சீர்குலைக்கும் விதமாகச் சீனாவைப் பற்றிய செய்தித் திரிபை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிற 'ஆய்வு நிறுவனங்கள்" மூன்றிலாவது ராமன் முக்கியப் பொறுப்பில் உள்ளார்.
அவற்றுக்கான இணையத் தளங்கள் உள்ளன. அவை வழங்கிய தகவல்களைப் பயன்படுத்தியே காலஞ் சென்ற டி.பி. சிவராம் உட்பட்ட தமிழ்த் தேசியவாதிகள் தங்களுடைய "ஆய்வுகளை" வழங்கினர். அவற்றின் ஆதாரத்தின் மீது அமைந்த அரட்டைகளும் அரை உண்மைகளும் மறுபடியும் மறுபடியும் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு உண்மைகளாக முன்வைக்கப் படுகின்றன.
தமிழிற் சீனா பற்றிய விமர்சனம் முன்வைக்கப்படும் போது பொதுவாகவும் ரஷ்யா பற்றியவை முன்வைக்கப்படும் போது இடையிடையிலும் அவை சோஷலிச நாடுகள், கம்யூனிஸ்ற் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதற்கு அழுத்தந் தெரிவிக்கப்படுவது வழமையாகி விட்டது. அதன் நோக்கம் விளங்கிக் கொள்ளக் கடினமானதல்ல.
எவ்வாறு திரிபுவாதிகளதும் சமசமாஜிகளதும் தவறுகளைக் காட்டி நேர்மையான இடதுசாரிகளை எல்லாம் களங்கப்படுத்தி வந்துள்ளார்களோ அவ்வாறே முதலாளியம் வேரூன்றி விட்ட சீனாவையும் முற்றாகவே முதலாளிய நாடாகி அல்லற்பட்டு அதிலிருந்து மீளப் பொருளாதாரத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அந்தரித்து நிற்கும் ரஷ்யாவையும் காட்டி, அவற்றின் குறைபாடான நடத்தையைச் சோஷலிச நாடுகளது நடத்தையாக அடையாளங் காட்டுவது விஷமத்தனமன்றி வேறல்ல.
அதே வேளை சீனாவும் முன்னாள் சோவியத் யூனியனும் சோஷலிஸத்திலிருந்து விலகியதை முன்னிட்டு அவற்றுடன் கண்மூடித்தனமான பகைமை பாராட்டுகிற இடதுசாரிகள் உள்ளனர். சீன-சோவியத் முரண்பாடு இருந்து வந்த காலத்தில் ஒரு தரப்பை ஆதரித்து மற்றதை விமர்சித்தவர்களுட் சிலர் அக் காலத்தில் இருந்தவாறே தமது பழைய பகைமைகளைப் பேணி வருகின்றனர். இத்தகையோர் சீனாவையோ ரஷ்யாவையோ யார் குற்றஞ் சாட்டினாலும் அதற்கான காரண காரியங்களை ஆராயாமல் அவற்றை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதையுங் காணலாம்.
நாம் உலகத்தை எந்த நிலைப்பாட்டிலிருந்து நோக்குகிறோம் என்பதைச் சார்ந்தே உலக நிகழ்வுகள் பற்றிய நமது மதிப்பீடுகள் அமைகின்றன. நமது நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் உண்மைகளை மூடி மறைக்கவும் புனைவுகளை உண்மையென்று பரப்புரை செய்யவும் நாம் முற்படுவோம் என்றால், முடிவில் நாம் நம்மையே ஏய்த்துக் கொண்டோராவோம்.
தமிழ்த் தேசியவாதிகள் சிலர் இலங்கைத் தமிழரின் பிரதான எதிரி சீனாவே என்று காட்டுவதற்காக ராமன் போன்றோரது தகவல்களையும் ஏகாதிபத்தியவாதிகளதும் இந்திய மேலாதிக்கவாதிகளதும் புனைவுகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இப் போக்கு அண்மைக் காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.
எனினும், அனைத்தினதும் சாராம்சம் பின்வருமாறு எனலாம்.
1. சீனா இந்தியாவுக்கு எதிரான மேலாதிக்கப் போட்டியில் இறங்கியுள்ளது.
2. சீனா இந்தியாவிற்கெதிரான கடல் முற்றுகை ஒன்றுக்கு ஆயத்தப்படுத்துகிறது.
3. சீனா இலங்கைக்குப் பேரழிவு ஆயுதங்களை வழங்கித் தமிழ் இன ஒழிப்பை மும்முரமாக ஆதரிக்கிறது.
4. சீனா இலங்கையின் சரிந்து விழும் பொருளாதாரத்தை நிலை நிறுத்த உதவி அதன் மூலம் இலங்கை மீது பூரண ஆதிக்கஞ் செலுத்த முயலுகிறது.
5. மேற்கூறிய காரணங்களாலேயே இந்தியா இலங்கை அரசாங்கத்தின் பேரினவாதப் போருக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.
மேற்கூறிய அடிப்படையிலேயே இந்தியா தனது அண்டை நாடுகளின் அமைதியைக் குலைக்கும் விதமாகக் கடந்த நாற்பதாண்டுகட்கும் மேலாக நடந்து கொண்டமையையும் சிலர் நியாயப்படுத்துகின்றனர்.
சீனா இதுவரை எந்த நாட்டின் மீதும் மேலாதிக்கஞ் செலுத்தவில்லை. சீனா சோஷலிச நாடாக இருந்த போது வகுக்கப்பட்ட அயற் கொள்கையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. இனி மாறலாம் என்பது வேறு விடயம். சாத்தியப் பாடுகளை எல்லாம் சமகால உண்மைகளாகக் கருதுவது அறிவுடைமை அல்ல.
தன்னுடைய கடற் பகுதியிலேயே எல்லைத் தகராறுகளைப் பேசித் தீர்க்க வேண்டும் என்பது சீனாவின் நிலைப்பாடாகத் தொடருகிறது. இதுவரை தனது எல்லைப்புற நாடுகள் எதன் மீதும் மேலாதிக்கஞ் செலுத்தாத ஒரு நாடாகச் சீனா இருந்து வந்துள்ளது. எனவே இந்து சமுத்திரத் தென்னாசிய வலயத்தில் மேலாதிக்கப் போட்டி என்று சில இந்திய மேலாதிக்கவாதிகள் அலறுவது திருடனே எல்லாரையும் முந்திக் கொண்டு "திருடன்! திருடன்!!" என்று கூவுவது போன்றதே.
ஆபிரிக்கக் கரையோராம் முதலாக மியான்மார் வரையிலான பகுதிகளில் உள்ள நாடுகளில் சீனா துறைமுகங்களின் அபிவிருத்திக்கு உதவி வந்துள்ளது. அதற்கு நோக்கங்கள் உள்ளன. அதை வெறுமனே சீன மேலாதிக்கமென்று மொட்டையாக முடிவு காணாமற், சாத்தியமான காரணங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்வது அறிவுடைமையாகும்.
சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதார வளர்ச்சியால் எண்ணெய் முதலாகப் பல மூலவளங்களை இறக்குமதி செய்கிற தேவை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் சீனாவைச் சூழப் பல இடங்களிலும் வலுப்பட்டு வருகின்றன. அண்மையிற் கூடச் சீனக் கடற் பகுதியில் அமெரிக்க இராணுவக் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து சீனக் கடற் படையாற் தடுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப் பட்டது. எனினும் அமெரிக்கா பிற நாடுகளின் கடற் பிரதேசங்களை மதிப்பதாக இல்லை.
இந்தியாவை அமெரிக்காவுக்குக் கீழ்ப்பட்ட ஒரு பிராந்திய மேலாதிக்க வல்லரசாக்குகிற முயற்சிக்கு இந்திய ஆட்சியாளர்கள் மிகவும் உடந்தையாகவே நடந்து வந்துள்ளனர். இந்தியா-இஸ்ரேல்-ஈரான் என்ற அடிப்படையில் அமெரிக்கா திட்டமிட்டு வந்துள்ள ஆசிய இராணுவக் கூட்டணிக்கு ஈரான் மட்டுமே இதுவரை தடையாக இருந்து வந்துள்ளது. இப் பின்னணியில், ஏதாவது காரணங் காட்டிச், சீனாவின் கடல் வணிகம் தடைகட்கு உட்படலாம. அத் தடை இந்து சமுத்திரத்தின் எப்பகுதியிலும் நிகழலாம். அவ்வாறான நிகழ்வுகள் சென்ற நூற்றாண்டின் போர்கட்குக் காரணமாய் இருந்துள்ளன. அவ்வாறான ஒரு சூழ்நிலையை மட்டுமன்றி அமெரிக்கா சீனாவுக்கு வேண்டிய கடல் வழிப் பாதைகளிற் தடைகளை விதிக்கக் கூடிய பல்வேறு சாத்தியப்பாடுகளைச் சீனா புறக்கணிக்க இயலாது.
சீனாவின் ஒரு பகுதியான தாய்வான் 1949 முதல் இன்னமும் அமெரிக்க ஆதிக்கத்தில் உள்ளது. திபெத்தில் அமெரிக்கா பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கிறது. வடமேற்கில் மத அடிப்படையிற் தேசியவாதிகளைத் தூண்டி விடுகிறது. இவற்றையெல்லாம் கணிப்பிற் கொள்ளுகிற போது, சீனா தன் பாதுகாப்புப் பற்றி எச்சரிக்கையின்றி இருக்க இயலாது என்றே விளங்கும்.
இதுவரை சீனா தனது பொருளாதாரச் செல்வாக்கை வலுப் படுத்துவதிலேயே முக்கிய கவனங்காட்டி வந்துள்ளது. அத்துடன் இந்து சமுத்திரம் பிராந்தியத்தில் அமெரிக்கா கடல்வழிப் பாதை எதையும் மறிக்க முற்பட்டாற் தனது கப்பல்கட்குத் துறைமுகங்களும் மற்றும் கடல்வழிகளும் பண்டங்களைக் கொண்டு செல்லத் தரை வழிகளும் தேவை என்கிற அடிப்படையிலேயே சீனா இப் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளிற் துறைமுகங்களை விருத்தி செய்ய உதவுவதன் மூலம் தனது கப்பல்கட்கான துறைமுக வசதிகட்கு ஒரு உத்தரவாதத்தைப் பெற முயலுகிறது. இவற்றில் எந்தத் துறைமுகந் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட நாட்டை வற்புறுத்துகிற விதமான உடன்படிக்கை எதுவும் இல்லாததோடு சீனக் கடற்படைத் தளமாகப் பயன்படுத்தப் படுவதற்கான எந்தவிதமான சாடையுமே இல்லை.
சீனா இலங்கைக்கு அம்பாந்தோட்டைத் துறைமுக விருத்திக்கு வழங்குகிற கடனும் அதை நிர்மாணிக்கும் பணியும் முற்றிலும் வணிக அடிப்படையிலானவை. அந்தக் கடன் தொகை அங்கீகரிக்கப்பட்ட ஆண்டை வைத்து, இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளில் சீனா யப்பானையும் மீறி விட்டது என்று ஜெரமி பேஜ் எழுதியிருந்தார். அவருடைய செய்தித் திரிப்புகளை மறுத்துச் சீன வெளி அலுவல் அமைச்சு கடும் மறுப்புத் தெரிவித்திருந்தது. எனினும் ராமன், பேஜ் போன்றோர் பரப்புகிற வதந்திகள் போய்ச் சேரவிருக்கும் பல இடங்களிற் சீனாவின் மறுப்புப் பற்றியோ உண்மை நிலைமைகள் பற்றியோ அக்கறை இல்லை.
இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்காகப் பலவேறு நிதி வழங்கல்களை மேற்குலகு நிறுத்துவதாகக் கூறிச் சில நிதி வழங்கல் வசதிகளை இடைநிறுத்தினாலும் யப்பான் தொடர்ந்தும் நிதி வழங்கி வந்துள்ளது. இது அமெரிக்க ஆசியுடன் நடக்கிறதா, அல்லது அமெரிக்காவை மீறி நடக்கிறதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.
சீனா இலங்கையின் பொருளாதார விருத்திக்கு உதவுவது பற்றிப் பேசுவோர் இலங்கையிற் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்தியா மேற்கொள்ளுகிற முயற்சிகள் பற்றிப் பேசுவதில்லை. சம்பூரில் இந்தியா நிறுவவுள்ள அனல் மின் நிலையம், மோதல்கள் வலுப்பெற்று இலங்கை ராணும் சம்பூரைப் பிடித்தவுடனேயே அங்கீகரிக்கப் பட்டது. அத்துடன் அப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகவும் அறிவிக்கப்பட்டது. வடமேற்குப் பகுதியில் இந்தியா எண்ணெய் அகழ்வுக்கு உடன்படிக்கை செய்ததை எதிர்க்காமல் சீனாவுடனான உடன்படிக்கைகளை எதிர்ப்போரது நோக்கங்கள் கவனத்துக்கு உரியன.
இலங்கையில் ராணுவ மேலாதிக்கத்திற்கான போட்டி அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையிலானதாகவே கடந்த பல தசாப்தங்களாக இருந்து வந்துள்ளது. கொலனியத்தின் இறுதிச் சுவடுகள் போன பின்பு இலங்கை மண்ணில் அடி பதித்த படைகள் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் அல்லாமல் வேறெந்த நாட்டினவையும் அல்ல. இவற்றில் இந்தியாவினது படைகள் 1971ல் நேரடியான குறுக்கீட்டுக்கு ஆயத்தமாய் இருந்தன. 1987ல் நேரடியாகக் குறுக்கிட்டன.
இந்தியா இலங்கையின் உள் அலுவல்களிற் குறுக்கிடுவதற்குச் சீன மிரட்டல் காரணமாக இருக்கவில்லை. அது இப்போது ஒரு வசதியாக்கப் பட்டுள்ளதே ஒழிய உண்மையான காரணங்கள் வேறு. இலங்கையின் அணிசேராக் கொள்கை முழுமையானதாக இருப்பதை இந்தியா விரும்பவில்லை. இந்தியாவின் தரப்பிலே இலங்கை நிற்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு முரணாக 1962 வரை எதுவும் நடக்கவில்லை. எனினும் இந்திய-சீன எல்லை மோதலின் போதும் 1971இல் இந்திய-பாக்கிஸ்தான் மோதலின் போதும் இலங்கை வகித்த நடுநிலையை இந்தியா வெறுத்தது. குறிப்பாக மேற்குப் பாக்கிஸ்தானில் இருந்து கிழக்குப் பாக்கிஸ்தானுக்கு (இன்று பங்களாதேஷ்) பாக்கிஸ்தான் விமானங்கள் இலங்கையில் எரிபொருள் நிரப்ப நின்று போனதை இந்தியா வெறுத்தது.
எனினும் ஒரு நேச நாடு தனது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குத் தனது படைகளைக் கொண்டு செல்ல உதவுவது இந்திய-பாக்கிஸ்தான் முரண்பாட்டில் ஒரு பக்கம் சார்வதாகி விடாது. எனினும், இந்தியாவின் மேலாதிக்கப் பார்வையில் அந்த நியாயம் விளங்கியிராது. எவ்வாறாயினும் இந்தியா இலங்கையின் உள் அலுவல்களிற் தலையிடுவதில் எச்சரிக்கையுடனேயே இருந்து வந்தது. ஆனாலுந் தமிழ்த் தேசியவாதிகள் இந்த அதிருப்தியைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தும் நோக்கத்துடனே இருந்தனர். இந்தியா இலங்கையிற் குறுக்கிடுவதற்கான சூழ்நிலை தமிழர் மீதான அக்கறையாலன்றி ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சி அமெரிக்காவின் சார்பான திசையில் அயற் கொள்கையை நகர்த்திய போது ஏற்பட்டது. இந்தியா பற்றித் தமிழர் மனதில் உருவாக்கப்பட்ட உன்னதமான படிமம் 1987ல் தான் உச்சத்தை எட்டியது. ஆனால் 1988 அளவிலேயே அது நொறுங்கி விழுந்தது.
1987இல் இந்தியா இலங்கைத் தமிழருக்குச் செய்த துரோகத்திற்கு என்ன சீனத் தலையீடு காரணமாயிருந்தது என்று யாருமே சொல்வதில்லை. ஏனென்றால் சீனா 1952 முதல் எப்போதுமே இலங்கையுடன் நட்புறவைப் பேணி வந்தது. 1957இல் ராஜதந்திர உறவுகள் ஏற்பட்ட பின்பு அது வலுப்பட்டது. 1970களில் சீனா ஏகாதிபத்திய விரோத காலனிய விரோத விடுதலைப் போராட்டங்களை வலுப்படுத்து முகமாகச் சில ஆபிரிக்க நாடுகட்குப் பெரிய பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளது. இவை எல்லாம் சீனாவின் மேலாதிக்க நோக்கிலானவை என்று யாராலுமே குற்றஞ்சாட்ட இயலவில்லை.
சீனாவின் அயற் கொள்கையிற் சர்வதேச நிகழ்வுகளும் போக்குக்களும் முக்கியமான பங்களித்துள்ளன. எப்போதுமே அமெரிக்கா பற்றிய ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்து வந்துள்ளது. 1961க்குப் பிறகு, சோவியத் யூனியனுடனான முரண்பாடு, 1967இல் சோவியத் யூனியன் செக்கோஸ்லவாக்கியவக்குப் படைகளை அனுப்பியதிலிருந்து வலுப் பெற்றது. சோவியத் யூனியனில் பிரெஷ்னெவ் ஆட்சி இருந்த காலம் முழுவதும் சீன-சோவியத் உறவில் முறுவல் நிலை இருந்து வந்தது. 1980களில் தொடங்கிய நெகிழ்வு சோவியத் யூனியனின் உடைவின் பின்பு, சீனாவின் அரசியல் மாற்றங்களின் விளைவாகவும் ரஷ்யாவில் அமெரிக்காவின் ஆதிக்க முனைப்பு கடும் எதிர்ப்பைக் கண்டதன் பயனாகவும், ஒரு புதிய உறவை வலுப்படுத்தி உள்ளது.
அமெரிக்கா உலகின் மிகப் பெரிய ராணுவ வல்லரசாக உள்ளது. அதன் ராணுவத் தளங்கள் அமெரிக்க எல்லைகட்கும் அப்பால் வெகு தொலைவிற் பலவேறு நாடுகளில் உள்ளன. இப்பபோது இந்திய மேலாதிக்கம் அதன் கூட்டாளியாகி விட்டதோடு அதன் அயல்நாடுகளது உள் அலுவல்களில் தீவிரமாகக் குறுக்கிடுகிறது. இக் குறுக்கீடுகள் மூலம் சார்க் அமைப்பு என்பதும் இந்திய மேலாதிக்கத்தின் ஒரு கரமாக மாற்றப்பட்டு வருகிறது. இதை எல்லாம் மூடி மறைக்கவே, சீன மிரட்டல் என்பது சிலரால் முன்னெடுக்கப்படுகிறது. இதில் முக்கியமானது என்னவென்றால் இந்திய அரசாங்கமோ அமெரிக்காவோ குற்றஞ் சாட்டுகிற விதமாகச் சீனா இதுவரை எந்த நாட்டின் உள் அலுவல்களிலுங் குறுக்கிட்டதில்லை. சீனாவின் 'முத்துமாலை" எனப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத் துறைமுக வசதிகளின் விருத்திக்கான உதவி பற்றி இதுவரை முற்குறிப்பிட்ட விஷமிகளை விட வேறு எவரும் குறிப்பாக எந்த நாட்டின் அரசாங்கமுமே விமர்சிக்கவுமில்லை ராணுவ நோக்கங் கற்பிக்கவும் இல்லை. அதற்கான வாய்ப்பும் ஆதாரங்களும் இருந்திருந்தால் இந்தியாவும் அமெரிக்காவும் அதைப்பற்றி வெளிவெளியாகப் பேசத் தயங்கி இரா.
சீனா இலங்கைக்குப் பொருளாதார உதவி வழங்குவதாலும் ஆயுதங்களை வழங்குவதாலுமே இலங்கை அரசாங்கத்தால் தனது பேரழிவுப் போரை முன்னெடுக்க இயலுமாக உள்ளது என்பது ஜெரமி பேஜின் கட்டுரையின் சாராம்சம் எனலாம். ஆனால் இலங்கை அரசாங்கப் படைகள் பயன்படுத்தி வருகிற பேரழிவுப் போர்க்கலங்களில் ஏகப் பெரும்பான்மையானவை எங்கிருந்து வந்தன என்பதற்கான விபரங்களை டைம்ஸ் கட்டுரையாளரோ அவரது தகவல்களின் தோற்றுவாயான ராமனோ தரவில்லை. தர விரும்பவும் மாட்டார்கள். அவை மேறகுலகினதும் இந்தியாவினதும் கபட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டும் என்பதே அதற்கான காரணமாகும்.
சீனா இலங்கைக்குக் கடற்படைக்கான விசைப்படகுகள், ராடார் கருவிகள், விமானங்கள் என்பனவற்றையும் சிறிய வகையான ஆயுதங்களையும் விற்றுள்ளது. அது சரியா பிழையா என்பது ஒரு கேள்வி. ஆனாற் சீன ராணுவ உபகரணங்கள் கொண்டே தமிழர் அழிக்கப்படுகின்றனரா என்பது இன்னொரு கேள்வி. சீனா தனது பாதுகாப்புக்காகவும் ஏகாதிபத்திய, கொலனிய, மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் போராட்டச் சக்திகட்கும் பாதிக்கப்பட்ட நாடுகட்கும் ஆயுதங்களை வழங்குவதும் சரியானதே. இதையே சீனா 1970கள் வரை செய்தது. எனினும் சீனா முதலாளியப் பாதையில் போகத் தொடங்கிய பின்பு, ஆயுத உற்பத்தி, பாதுகாப்பு என்பதற்கும் அப்பால், வணிக நோக்கிலும் நடைபெறுகிறது. இது சில முன்னாள் சோஷலிஸ நாடுகளின் சீரழிவின் போது தொடங்கிய ஒரு போக்காகும். இதை மாக்ஸிய லெனினிஸவாதிகள் விமர்சித்தே வந்துள்ளனர். எனினும் இவ் விடயத்தில் சீனாவையோ ரஷ்யாவையோ தனித்து நோக்கி விமர்சிப்பது தவறானது.
இலங்கை உட்படப் பலவேறு நாடுகளின் இடையிலும் நாடுகட்குள்ளும் போரை மூட்டி அதன் மூலம் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயலுகிற நாடுகளின் வரிசையில் சீனா உள்ளடங்காது. எனினும் தனது நேச நாடு ஒன்றின் பாதுகாப்புக்கு என்று சீனா வழங்குகிற ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டுக்குப் போருக்கோ ஒரு சமூகத்திற்கு எதிரான ஒடுக்குமுறைப் போருக்கோ பயன்படாத முறையில் சீனா கட்டுப்பாடு எதையும் விதிக்க இயலாது. எனவே தான் சீனா உலக ஆயுதச் சந்தையில் முன்வரிசையில் இல்லாவிடினும் அதன் ஆயுத விற்பனை சோஷலிச, மனித விடுதலைக் கண்ணோட்டங்களில் விமர்சனத்துக்கு உரியதாகிறது.
மறுபுறம், இந்திய, அமெரிக்க மேலாதிக்கங்கள் தமது ராணுவச் செயற்பாடுகள் மூலமும் பிற குறுக்கீடுகளின் மூலமும் சீனாவுடன் உறவுடைய நாடுகளைத் தமது ஆதிக்க மண்டலங்கட்குள் கொண்டு வர முற்படுகிற போது சீனாவும் தனது தேசிய நலன்களின் பேரில் அங்கு இழுபடுகிறது. ஆதனால், அது சரியான நடத்தையாகி விடாது. எனினும் சீனா ஆயுதம் வழங்குவதாலேயே இந்தியா ஆயுதம் வழங்குகிறது என்கிற வாதம் உண்மைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போடுவதாகும்.
அமெரிக்கா உலகளாவிய முறையில் ஒவ்வொறு மூன்றாமுலக நாடுகட்கும் எதிரான ஒரு மிரட்டலாக உள்ளது என்பதையும் அது உலகின் பலவேறு பகுதிகளிலும் தனது படைகளை நீண்ட காலத்திற்கோ குறுகிய காலத்திற்கோ தொடர்ந்தும் நிலைநிறுத்தி வருகிறதா என்பதையும் தென்னாசியாவின் சிறிய நாடுகட்கு இந்தியா ஒரு பெரிய மிரட்டலாக வளர்ந்து வந்துள்ளதா என்பதையும் நாம் முதலில் விசாரிக்க வேண்டும. அதன் அடிப்படையில் சீனாவின் நடத்தையை விளங்கிக் கொள்வதும் விமர்சிப்பதும் கூடப் பொருத்தமாயிருக்கும்.
ராமன் போன்றோரின் பொய்ப் பிரசாரங்கட்கு எளிதாக எடுபடுவோரைவிட அவ்வாறான பொய்த் தகவல்களை வலிந்து தேடிப் பரப்புரை செய்வோர் மூலம் ஏமாற்றப்படுவோர் அனேகர் என நம்புகிறேன். ஏனெனில் ராமனுடைய நோக்கங்களை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். அவை மறுவர்த்தம் பெற்று வழமையான ஊடகங்கள் மூலம் வெளிவருகிற போது அவற்றுக்கு ஒரு நடுநிலைத் தோற்றம் உருவாகிறது.
சீனாவைத் தமிழர் நம்புவதாலோ நம்பாததாலோ அவர்களது உரிமைகட்கும் விடுதலைக்குமான போராட்டங்களிற் பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை. ஆனால் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் குறுக்கீடுகளின் இயல்பு வேறுபட்டது. அவற்றை நம்புவதா விடுவதா என்பதற்கு நடைமுறை முக்கியத்துவம் உள்ளது. தமிழ் மக்கள் தம்மை விட யாரையுமே அதிகம் நம்பாமல் இருப்பது பாதுகாப்பானது. அவர்கள் நம்பக்கூடிய சக்திகள் யாரென் அவர்களது போராட்ட அரசியல் எவ்வாறு விரிவடைகிறது என்பதே தீர்மானிக்கும். அவை நிச்சயமாக எந்த மேலாதிகக வல்லரசாகவும் இரா என்பது மட்டும் உறுதி.
(நன்றி: "புதிய பூமி" ஜூன்,2009)
Comments