இலங்கையின் குற்றம் உலுக்கும் உலக நீதிமன்றம்!

எல்லாவற்றுக்கும் சட்டம் உண்டு... சண்டை போடுவதற்கும்! வெட்டுக் குத்துக்கும் விதிமுறைகள் வைத்திருக்கிறோம். அதை 'மீறாத' தாக்குதல்கள் முறையானதாகக்கூட அங்கீகாரம் பெற்றுவிடும். ஆனால், இலங்கை அரங்கேற்றி இருக்கும் யுத்தம் உலகின் அத்தனை தார்மீக நெறிமுறைகளையும் கொன்று குவித்து ஓய்ந்திருக்கிறது!

30 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் முடிவாக புலிகள் அமைப்பு கொன்று தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால், மனித உரிமை பேசுவோர், சமாதானம் குறித்துக் கவலைப்படுவோர், அமைதிக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என அனைவரும் 'இலங்கையில் நடந்தது இந்நூற்றாண்டின் மிகப் பெரிய படுபாதகச் செயல்!' என்று கண்டிக்கிறார்கள்.

'பயங்கரவாதிகளை ஒடுக்கும் போரில் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டுள்ளார்கள். இது கண்டிக்கப்பட வேண்டும்!' என்று ஐ.நா-வின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 17 நாடுகள் கோரிக்கை வைத்தன. ஆனால் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதை ஏற்கவில்லை. தீர்மானம் தோற்றுப் போனது. அது தொடர்பான விவாதத்தில் பேசிய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, ''நம் கண் முன்னால் நடந்த கொடுமைகள் தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். அது நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்!'' என்று மன்றாடினார். தீர்மானம் தோற்றது என்பதைவிட, இலங்கைக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வென்றது. ஐ.நா. சபை ஏற்காவிட்டாலும் உலகத்தின் முன் உண்மை சிரித்தது. அமெரிக்க இல்லினாய்ஸ் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் பிரான்சிஸ் பாயில், ''கடந்த சில மாதங்களில் மட்டும் 10 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்கள். அந்தப் பிணங்களை அழிக்கும் வேலை நடக்கிறது. காஸாவில் என்ன நடந்ததோ அதுதான் இலங்கையிலும் நடக்கிறது'' என்று சொன்னார். 'டைம்ஸ்' பத்திரிகை 'சாட்சியம் இல்லாத படுகொலைகள்' என்று தலையங்கம் எழுதியது. 'வானத்தில் வெடித்து தரையில் பாதிப்பை ஏற்படுத்தும் குண்டுகளால் அதிக உயிரிழப்பு ஏற்படும். பொதுமக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இது போன்ற தாக்குதலை நடத்தக் கூடாது என்று ஜெனிவா விதி 3 கூறுகிறது. ஆனால், இலங்கை 81 மி.மீட்டர் முதல் 120 மி.மீட்டர் வரையிலான பீரங்கிக் குண்டுகளை

வைத்துள்ளது. இவை வெடித்துச் சிதறினால் எவ்வளவு பெரிய மரமும் கருகிக் குச்சியாகிவிடும். இலங்கையில் நடந்திருக்கும் மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள், வெளியுலகம் கற்பனை செய்வதைவிடவும் மிகமிக மோசமானவை. இந்தப் போர் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை 7 ஆயிரம் சாமானிய மக்கள் பலியாகிஇருக் கலாம் என்று ஐ.நா. மன்ற அலுவலர்கள் கணித்திருக் கிறார்கள். மாறாக, 20 ஆயிரம் பேர் பலியாகி இருக்க லாம் என்று இப்போது தெரிகிறது!' என்று எழுதுகிறார் அப் பத்திரிகையின் நிருபர். ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் பான்கி மூனுடன் சென்ற நிருபர் இவர். இவை எல்லாம் போர் நடந்த காலகட்டத்தில். இப்போது அங்கு என்ன நிலைமை?

''அகதிகளாக முகாம்களில் தங்கியிருந்த மக்களை பார்க்கப் போனேன். அவர்களுக்கு இலங்கைக்குள் நீதி கிடைக்காது. அதற்கான சட்டங்கள் இங்கு இல்லை. இதைச் சொல்வதற்காக நான் தண்டிக்கப் படலாம்'' என்று கண்ணீர் மல்கச் சொல்லி, தனது 11 ஆண்டுகால தலைமை நீதிபதி பதவியில் இருந்து விடை பெற்றுள்ளார், சரத் டி சில்வா. இவரது கூற்றுக்குப் பிறகு, கொஞ்சம் தைரியம் சேகரித்துக்கொண்ட இலங்கை மனித உரிமை அமைப்பாளர் சுனிலா அபயசேகரா என்ற பெண், ''தடுப்பு முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் ஆறாத காயங்களுடன் மாதக்கணக்கில் இருக்கிறார்கள். இலங்கை உளவுத் துறையின் சித்ரவதைகள் பிரபலமானது. இப்படியான சித்ரவதைக்கு உட்பட்டவர்கள் தங்களுக்கு நடந்தவற்றை எங்களுக்குச் சொல்லி வருகிறார்கள்'' என்று வார்த்தைகள் உதிர்த்துஇருக்கிறார். மேலும், இலங்கை அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் தமிழர்கள் இன்னமும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறதா?

இந்தியாவில் மிக முக்கியமான மனித உரிமை அமைப்பான பி.யூ.சி.எல். அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் இதற்கு முடிவுகட்டும் முயற்சியாகப் பல மாதங்களாக முட்டி மோதிக்கொண்டு இருப்பவர். அவரிடம் கேட்டோம்.

''போர் நடக்கும்போது போரியல் நடைமுறையை மீறுவது இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகமாக நடந்துள்ளது. இந்தக் கொடூரங்கள் மொத்தமாக மறைக்கப்படுகின்றன. கொழும்பு பகுதியில் வெள்ளை வேன் மூலமாக ஆட்களைக் கடத்திச் சென்று காணாமல் செய்வதும் அதன் பிறகு போர் என்று அறிவித்து பொதுமக்கள், நோயாளிகள் என்று யாரையும் பார்க்காமல் குண்டுகள் வீசிக் கொல்வதும் தொடர்ந்து நடந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு கொடுத்த அறிக்கையின்படிபல்வேறு மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன. மக்கள் கண்காணிப்பகம், பொதுமக்கள் மீதான தாக்குதலைப் பட்டியலிட்டுள்ளது. சேட்டிலைட் படங்களைப் பல்வேறு நாடுகள் எடுத்து வைத்துள்ளன. எனவே, இலங்கையில் நடந்தவற்றை மறைக்க முடியாது.

இதைக் கேள்வி கேட்கும் இடத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபைதான் இருக்கிறது. அதிலுள்ள நிரந்த உறுப்பு நாடுகளுக்கு எங்கள் அமைப்பு சார்பில் முழுமையான அறிக்கை அனுப்பியிருக்கிறோம். போர்க் குற்றங்கள், மனித வதைகள் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுப்படி இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்துக்கான காரணங்கள் அதில் மலையளவு அடுக்கப்பட்டுள்ளன. இதைப் பரிசீலனை செய்து வருவதாக எங்களுக்கு அந்த நாடுகள் பதிலளித்துள்ளன. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஹேக்கில் உள்ளது. இங்கு 15 நீதிபதிகள் இருக்கிறார்கள். பிராஸிக்யூட்டர் இருக்கிறார். இலங்கை மீது போர்க் குற்றத்தை பதிவு செய்யலாம் என்று இந்நாடுகள் பிராஸிக்யூட்டருக்குச் சொன்னால் ராஜபக்ஷே மீது வழக்கு பதிவாகும். அதன்பிறகு விசாரணை நடக்கும்.

இதில் உள்ள ஒரு சிக்கல், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற நடைமுறையை ஏற்றுக்கொண்டதாக கையெழுத்துப் போடாத நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதைச் சொல்லி அவர்கள் தப்பிக்கப் பார்க்கலாம். அப்போது ஐ.நா. பாதுகாப்பு சபை தன்னிச்சையாக வழக்கைப் பதிவு செய்ய உரிமை இருக்கிறது. எனவே, நிச்சயம் இலங்கை தப்ப முடியாது!'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சுரேஷ். இதுவரை இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளின் மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்புகொண்டு மனமாற்றம் செய்யும் காரியங்கள் இவர்களால் நடந்து வருகின்றன.

இந்த வகையில் சமீபத்தில் சிக்கியிருக்கிறார் சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர். ஆப்பிரிக்க நாடான சூடானில் வாழும் கறுப்பின முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டும் முயற்சியாக நடந்த இனஅழிப்பைத் திட்டமிட்டு செய்தவர் ஓமர். அவர் மீது ஆறு வழக்குகள் பதிவானது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில். கடந்த மாதம் 18-ம் தேதி இவர் கைது செய்யப்பட்டு அங்கு ஆஜர்படுத்தப்பட்டு இருக்கிறார். இதே போல் போஸ்னியா அதிபர் ரடோவன் கராச்ஸிக் கைதாகி உள்ளார். இரண்டு லட்சம் போஸ்னிய முஸ்லிம்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். 1992-95 காலகட்டத்தில் இது நடந்தது. உள்நாட்டுக் குழப்பத்தால் நாட்டை விட்டுத் தலைமறைவாகிவிட்ட இவர் மீதும் ஹேக் நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது. 10 ஆண்டு களுக்குப் பிறகு அவரைச் சமீபத்தில் பெல்கிரேட் என்ற கிராமத்தில் கைது செய்தனர். நாட்டு வைத்திய ராக வாழ்ந்துகொண்டு இருந்தார் அந்த அதிபர். இவருக்குத் துணையாக இருந்த ராணுவ ஜெனரல் ராட்கோ மிளாடிக் இன்னமும் தலைமறைவாகத்தான் இருக்கிறார்.

இன்னொரு உதாரணம்தான் ரத்தத்தை உறைய வைப்பது...

தென் கொரியாவில் இருந்த சர்வாதிகாரி சைங்மான் ரீ, தன்னை எதிர்த்தவர் அனைவரையும் கொன்று குவித்துக் குழிகளில் புதைத்தார். சுடுவதும் புதைப்பதும் தொழிலாக மாறியது. இந்த அட்டூழியத்துக்கு எதிராகப் போராடிய அனைவரும் எந்த ஆதாரங்களும் இல்லா மல் அலைந்தார்கள். ஆனால், கிட்டத்தட்ட 15 ஆண்டு கள் கழித்துப் பெய்த பெரும் மழை வெள்ளத்தில்புதைக் கப்பட்ட பிணங்களின் எலும்புகள் வெள்ளமாக ஓட ஆரம்பித்தன. ஊரறிந்த ரகசியத்தை யாரால் மறைக்க முடியும்? அமைதி மற்றும் சமாதானத்துக்கான ஆணை யம் அது குறித்த விசாரணையை நடத்தியது. அன்று சாட்சி சொல்ல வந்த ராணுவ வீரர்கள் அனைவரும் அந்தக் கொடூரத்தைக் கலங்கிய கண்களுடன் ஒப்புக்கொண்டார்களாம். வரிசையாக நிற்க வைத்துச் சுடும் படங்களை அவர்கள் ஆதாரங் களுடன் ஆணையத்துக்கு ஒப்படைத்தது வரலாறு!

உயிரோடு இருந்து சாதிக்க முடியாததை ஈழத்திலும் செத்துப் போன அந்த சடலங்கள் நிச்சயம் செய்யும்!

ப.திருமாவேலன்

Comments