தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் நடத்தி வருபவர், கூடவே ஈழ விவாகரம் பற்றி ‘குற்றம் சாட்டுகிறேன்…’ என்கிற தலைப்பில் பரபரப்பு புத்தகத்தையும் எழுதிக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சுற்றுப்பயணத்துக்காக திருநெல்வேலியிலிருந்து பட்டுக்கோட்டை விரைந்துகொண்டிருந்த வைகோ ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்துள்ள மனம் திறந்த பேட்டி.
தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் உங்கள் இயக் கத்தினர் நம்பிக்கை இழந்து விடமாட்டார்களா?
”எனக்கோ இயக்கத்துக்கோ துளி வருத்தம் கூட கிடையாது. வாரி இறைத்த கோடிகளால், தப்பிப் பிழைத்திருக்கிறது தி.மு.க கூட்டணி. நாங்கள் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு… ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறோம். கிராமப் புறங்களில் ‘மழை பதமாகப் பெய்தால்தான் உழவுக்கும் விதைப்புக்கும் சரியாக வரும்’ என்பார்கள். அதிக மழை பெய்தால் விதைக்க முடியாது.
உண்மையாகவே சொல்கிறேன்… நான் தோற்றதும் ஒரு வகையில் நல்லதற்குத்தான். இந்தத் தோல்வி, நடுநிலையான மக்களின் இரக்கத்தையும் அனுதாபத்தையும் எங்கள் பக்கம் திருப்பி இருக்கிறது. எங்களை நோக்கிய மக்களின் பார்வை, கருணையோடும் இரக்கத்தோடும் இருக்கிறது. மாறாக, ‘பணத்தை இறைத்தால் வெற்றி பெற்று விடலாம்’ என்கிற எண்ணம் தி.மு.க-வுக்குள் மதமதப்பாகத் தலைதூக்கி, அங்குள்ளவர்களின் கொள்கைப் பிடிப்பை மேலும் உறுதியிழக்கச் செய்திருக்கிறது. தேர்தலில் ஜெயித்திருந்தாலும், கொள்கை அளவில் தி.மு.க. குன்றிக்கொண்டே வருகிறது… இதுவே உண்மை. விரைவிலேயே இதை எல்லோரும் உணர்வார்கள்!”
தேர்தல் தோல்விக்குப் பிறகு ஈழ வீழ்ச்சியும், ‘பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்கள் மரணம்’ என்று வந்த செய்திகளும் எந்தளவு பாதித்திருக்கிறது?
“ஈழத்தில் கோரத் தாக்குதலை நடத்த சிங்கள அரசு திட்டமிட்டிருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் நடப்பதற்கு ஐந்து தினங்களுக்கு முன்பாக 11-5-09 அன்றே பேசினேன். அபாயம் நடக்கப் போகும் சேதியறிந்து, நான் ஓட்டுகூட கேட்கவில்லை. ஆனாலும், எல்லோர் கண் பார்க்கவே சிங்கள ராணுவம் நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவை நடத்தி முடித்து விட்டது.
சிங்களப் பேய்கள் கோர நாக்கைச் சுழற்றிக் கொடூரங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த கடந்த மே 16-ம் தேதி… விருதுநகரில் நான் தோற்றுப்போன செய்தியும் எங்கள் கூட்டணி பெரும்பான்மை பெறாத செய்தியும் என் செவிகளை எட்டியது.
அன்று மாலை 5.30 மணிக்கு ‘கொஞ்ச நேரம் கண்களை மூடினால் தேவலாம்’ போலிருந்தது. கட்டிலில் படுத்த சில நிமிடங்களிலேயே கண்ணயர்ந்து விட்டேன். அப்போது ஒரு கனவு… ‘தலைவர் பிரபாகரனை பார்க்க வாருங்கள்’ என என்னை யாரோ அழைக்கிறார்கள். ஒரு பெரிய மண்டபத்தில் பலர் கூடி இருக்கிறார்கள். அவர்கள் யாரென எனக்குத் தெரியவில்லை.
அங்குள்ள ஒரு அரங்கத்தின் மூலையில் திரைச்சீலைகள் தொங்குகின்றன. அதனருகே என்னை அழைத்துப் போகிறார்கள். அருகே ஒருவர் தையல் மிஷினில் துணி தைக்கும் சத்தம் கேட்கிறது. திரைச்சீலையை விலக்கி தலைவரைப் பார்க்கச் சொல்லி என்னை அனுப்புகிறார்கள். நான் தலைவரோடு பேசும் ஆவலோடு உள்ளே போகிறேன். அங்கே ஐந்தடி தூரத்தில் ஒரு மரக்கட்டிலில் தலைவர் பிரபாகரன் சீருடையில் படுத்துக் கொண்டிருக்கிறார். இடது கால் தரையை தொட்டவாறு இருப்பதைக் கூட கனவில் என்னால் உணர முடிகிறது.
இருபது வருடங்களுக்கு முன் அவரை நேரில் நான் எப்படிப் பார்த்தேனோ, அதே தோற்றத்தில் இருக்கிறார் தலைவர். அங்கு வேறு யாருமே இல்லை. அவரை எழுப்புவதா வேண்டாமா என நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நம்மை வரச் சொல்லிவிட்டு, இப்படி தூங்க மாட்டாரே என்கிற யோசனையும் என்னுள் ஓடுகிறது… அவர் நிம்மதியாகத் தூங்கட்டும் என நினைத்தபடி அவர் முகம் பார்த்தபடியே நான் நிற்கிறேன். அடுத்த கணமே எனக்கு விழிப்பு வந்து விட்டது.
பதற்றம் கவ்வ எழுந்துவிட்டேன். எப்போதும் என் இதயத்தில் சுமந்திருந்தாலும், கடந்த இருபது வருடங்களில் ஒரு தடவைகூட நான் தலைவர் பிரபாகரனை கனவில் கண்டதில்லை..! இதுவே முதல்முறை. இப்படியொரு கனவு இப்போது ஏன் வந்தது என்று எனக்கு விளங்கவில்லை..!
என் மனம் சொல்ல முடியாத அளவுக்குக் குழப்பத்தில் ஆழ்ந்தது. அடுத்த இரு தினங்களில்தான் ஈழ சாம்ராஜ்யம் சரிக்கப்பட்ட அடுத்தடுத்த செய்திகள் என் ஈரக் குலையை அறுத்து வீசின. புலிகளையும் தமிழ் ஈழக் கோரிக்கையையும் ஒரு சேர அழிக்க இந்தியா போட்ட திட்டம் ஈடேறி விட்டது. என் தவிப்பும், கொதிப்பும் குறையாத நாளில்தான் பிரபாகரனின் சடலமாக ஒரு போலி உருவத்தை சிங்கள ராணுவம் காட்டியது அதைப் பார்த்த பிறகுதான் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்பது எனக்குப் புரிந்தது.”
பிரபாகரன் இறந்து விட்டதாக புலிகளே சொல்லி இருப்பது பற்றி…
“தலைவர் உயிரோடு இருக்கிறார் என உறுதியாக சொன்ன செல்வராசு பத்மநாபன், இப்போது ‘இல்லை’ எனச் சொல்கிறார். இந்த விவகாரத்தில் நான் யாரையும் குற்றம்சாட்டும் நிலையில் இல்லை. ஆனாலும், எனக்கு வந்த உறுதியான உண்மைத் தகவல்களை வைத்து, ‘பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்’ என்பதை இப்போதும் அடித்துச் சொல்கிறேன். அவர் மிக பத்திரமான இடத்தில் இருக்கிறார் என்பதுதான் என் நம்பிக்கை. உரிய நேரத்தில் ஈழப் போரை மறுபடியும் அவர் முன்னெடுத்து முன்னேறுவார். பாதுகாப்பு காரணங்கள் கருதி அவரைப் பற்றி நானறிந்த விவரங்களை இப்போதைக்கு சொல்ல முடியவில்லை!”
“சிங்கள அரசு காட்டியது பிரபாகரனை போன்ற போலி உடல் என்று எப்படி இத்தனை உறுதியாகச் சொல் கிறீர்கள்?…”
“பிரபாகரனின் பெற்றோர் இப்போது ராணுவ முகாமில்தானே இருக்கிறார்கள்… அவர்களுடைய மரபணு மாதிரியை எடுத்து பிரபாகரனின் உடலாக வெளிப்படுத்திய அந்த உடலின் மரபணு வோடு ஒப்பிட்டுக் காட்ட வேண்டியதுதானே… ஏன் செய்யவில்லை? ‘எங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரபாகரனை கொன்று விட்டோம்’ என உரிய ஆதாரங்களை காட்டி, உலகத்தின் முன்னால் நிரூபிக்க வேண்டியதுதானே… சிங்கள அரசின் இடத்தில் இருந்தால் அதுதானே யாரும் செய்யக்கூடியது!
பிரபாகரனின் நெற்றி தொடங்கி பாதம் வரை எனக்கு அத்துப்படியாகத் தெரியும். புலிகள் தரப்பிலிருந்து எனக்குக் கிடைத்திருக்கும் தகவல்களும் என் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன. ஈழப் போராட்டம் மறுபடியும் முன்னெடுக்கப்படும் நாளில் அனைத்து மர்மங்களும் விலகும்…”
பிரபாகரன் உயிரோடிருப்பதாக வீணான நம்பிக்கையை பரப்பி, நீங்கள் அரசியல் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் விமர்சனங்கள் குறித்து?
“ஒரு நாக்கு எந்த அளவுக்கு புகழும் என்பதும், எந்தளவுக்கு மனதைப் புண்ணாக்கும் என்பதும் இத்தனை வருட பொது வாழ்வில் நான் அறியாததா? இதைவிட கொடூரமான, குரூரமான விமர்சனங்களைக் கடந்து வந்தவன் நான். என் தம்பி ரவி, ஒரு வருட காலம் விலங்கோடு சிறைக் கொடுமை அனுபவித்தார். காயம்பட்ட நாற்பது போராளிகளை மருந்தூட்டி, உணவூட்டி என் தாய் காப்பாற்றினார். ஈழ விடுதலையில் நாங்கள் கொண்டிருக்கும் தூய்மைமிக்க உறுதியை, யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. பரபரப்புக்காகவோ ஆதாயத்துக்காகவோ வெற்று நம்பிக்கையை நாங்கள் பரப்ப வேண்டிய அவசியமில்லை..!”
திராவிட நாடு கோரிக்கையைப் போலவே தனி ஈழக் கோரிக்கையையும் தவிர்த்து விட்டு, சிங்கள அரசுடன் அனுசரித்து நடந்து கொள்வதே நல்லது என முதல்வர் கருணாநிதி சொல்லி இருக்கிறாரே?
“திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன எனச் சொன்னார் அண்ணா. அது மட்டுமல்ல… திராவிட நாடு கோரிக்கையையும் ஈழக் கோரிக்கையையும் ஒப்பிடுவதே தவறு. இங்கே நமக்கு சம உரிமை இருக்கிறது. ஆனால், ஈழத்தில் குறைந்தபட்ச அடிப்படை சுதந்திரங்கள்கூட அப்பாவி தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது. தமிழர்களின் கலாசாரம், வழிபாடு, இலக்கியம் என அனைத்து அடையாளங்களுமே அழித்தொழிக்கப்பட்டு விட்டது.
ஈழத்தில் நடந்தேறிய அத்தனை கொடூரங்களையும் கொட்டக்கொட்ட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கலைஞர், இப்போது சிங்களர்களோடு தமிழர்களை அனுசரித்து வாழச் சொல்கிறார். ஆயிரம் ஆயிரமாக உயிர்களைக் கொடுத்து, மலை மலையாக சடலமாகி… ஈழத்து மண்ணில் கலந்து கிடக்கும் ஆத்மாக்கள் கூட கலைஞரின் வார்த்தைகளைக் கேட்டு கலங்கிப் போயிருக்கும். என் தமிழினத்தை அழித்தவனை கூண்டிலேற்றச் சொல்ல வேண்டிய கடமைமிக்க முதல்வர் பதவியில் உள்ள ஒருவரே, சிங்களவனிடம் மண்டியிடச் சொல்லும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது..?
‘தமிழர் பூர்வீகத் தாயகத்தை ஒருபோதும் அமைய விடமாட்டேன்’ என ராஜபக்ஷே இப்போதும் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய குரூர வெறியை உலகுக்கு அம்பலமாக்கி, அவரைக் கூண்டிலேற்றி, ‘இவர்தான் ஹிட்லரை விடகொடூரமான இனவெறியர்’ என்ற உண்மையை அடையாளப்படுத்த வேண்டிய கடமை, தமிழர்கள் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் கலைஞரின் வார்த்தைகள், ‘சிங்களவர்களைக் கண்டு தமிழகம் நடுங்குவது’ போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது. ‘நம்மைக் கண்டு தமிழக முதல்வரே பயப்படுகிறார்’ என சிங்கள வெறியர்கள் கொண்டாடக்கூடிய சூழல், கலைஞரால் உருவாக்கப்பட்டு விட்டது. தமிழ் வரலாற்றில் மன்னிக்க முடியாத மற்றுமொரு துரோகத்தை கலைஞர் கருணாநிதி செய்து விட்டார்.
கலைஞரின் மதுரமான எழுத்துகளும் மயக்க வைக்கும் பேச்சும் தமிழினத்தை அழிக்கவே முழுதாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யப் பயன்படும் பதவி என்ற கத்தியை கொலை செய்யப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கலைஞர்.
நான் ஒருபோதும் கலைஞரின் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் தவறாகச் சொன்னதில்லை. ஆனால், இதயத்து நரம்பு தெறிக்க தாங்க முடியாத வலியோடு இப்போது சொல்கிறேன்… நாளைய தமிழ் சமுதாயம் தமிழினத்துக்கு துரோகம் செய்தவராகவே கலைஞரை வரிசைப்படுத்தி வைத்திருக்கும்!”
- கறுப்புத்துண்டை முறுக்கி விட்டபடி தொண்டர் களோடு கலக்கிறார் வைகோ.
நன்றி: ஜூனியர் விகடன்
Comments