நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதில் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பங்கு உண்டு: வி.உருத்திரகுமாரன்

uruththirakumar
நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதில் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பங்கு உண்டு என்று தெரிவித்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி வி. உருத்திரகுமாரன், தமிழ் மக்களின் அரசியலில் நாடு கடந்த அரசே அதியுயர் அமைப்பாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூஜேர்சி மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.07.09) அமெரிக்க இலங்கை தமிழ் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘உயிர்த்தெழுவோம்’ நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு, அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை [United States Political Action Counvil], அமெரிக்க தமிழ் இளையோர் அமைப்பு [PEARL] ஆகிய நான்கு அமைப்பினர் கூட்டாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கலந்துகொண்டு – நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சி பற்றி விளக்கமளித்து – அவர் ஆற்றிய உரை வருமாறு:

விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை வெவ்வேறு நாடுகள் தமது அரசியல், பூகோள நலன்களுக்காக அழித்துவிட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தை அழித்தன் காரணமாக தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கக்கூடிய மார்க்கத்தை அழித்துவிட்டார்கள்.

தமிழ்த் தேசிய தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை அழித்ததன் மூலம் இலங்கைத் தீவில் ஒரு சமரசப் பேச்சுவார்த்தைக்கு இன்றியமையாததான – அத்தியாவசியமான – அந்த அதிகார மையத்தையும் அனைத்துலக சமூகம் அழித்துவிட்டது.

இலங்கைத் தீவில் இன்று தமிழர் தரப்பில் ஒரு அதிகார வெறுமை – அதிகார வெற்றிடம் – அரசியல் வெற்றிடம் – காணப்படுகிறது. இலங்கைத்தீவில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட முன்னரும் இந்த அதிகார வெற்றிடம் இருந்தது. அதன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டத்தை ஏந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அந்த ஆயுதப் போராட்டத்தை நசுக்கியதன் மூலம் இலங்கைத் தீவில் இன்று அதிகார வெற்றிடம் தோன்றியுள்ளது.

இத்தகைய அதிகார வெற்றிடத்தை நாங்கள் எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றியே நாங்கள் சிந்திக்க வேண்டும். இலங்கைத் தீவின் உள்ளேயே இருந்துகொண்டு இதனை நிவர்த்தி செய்யலாமா என்பதைப் பார்க்க வேண்டும்.

இலங்கைத்தீவில் இன்று 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். யாழ். குடாநாடு ஒரு திறந்த சிறைச்சாலையாக இருக்கின்றது. கிழக்கு மாகாணம் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது.

தெற்கில் வாழும் தமிழ் மக்கள் இராணுவத்தினராலோ அல்லது இராணுவக் கூலிப்படையாலோ எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம், எந்த நேரத்திலும் கொண்டுசெல்லப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.

அதுமட்டுமன்றி சிறிலங்காவால் 1983 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 6 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமானது அங்கே தனிநாடு கேட்கும் பேச்சு சுதந்திரத்தைக்கூட தடை செய்து அதனை ஒரு குற்றமாக வைத்திருக்கிறது.

அதுமட்டுமன்றி தமிழ் இளைஞர்களை கைது செய்து தடுப்பு முகாமில் வைத்திருப்பதற்காக 1979 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டு இன்றுவரை அவை நடைமுறையில் உள்ளன.

எனவே இந்த அடிப்படையில் மேற்படி அதிகார வெறுமையை இலங்கைத்தீவில் இருந்துகொண்டு நிவர்த்தி செய்யமுடியாது. மேற்படி அதிகார வெறுமையை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள்தான் நிவர்த்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்களால் அனைத்துலக சமூகத்தில் அவர்கள் ஒரு அரசியல் சக்தியாக இப்போது உருவாகி விட்டார்கள்.

தொடர்ச்சியாக நடைபெற்ற எழுச்சிப் போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலம் நாங்கள் அனைத்துலக சமூகத்திடம் ஒன்றை தெளிவாகக் கூறியிருக்கிறோம்.

புலம்பெயர் தமிழர்களாகிய நாம் எமது நாடு கடந்த அரசில் பண்பை வெளிப்படுத்தியுள்ளோம் என்பது தான் அது. We have demonstrated our transnational mode of politics. இது சமூகவியல் அடிப்படையிலோ அல்லது அரசியல் அடிப்படையிலோ ஒரு புது மாதிரியான நடவடிக்கை.

நாடு கடந்த அரசு என்று நாங்கள் கூறவருவது யாதெனில், அனைத்துலக ரீதியில் தமிழ்மக்களால் நடத்தப்பட்டு வருகின்ற அரசியல் போராட்டங்களை உள்வாங்கிக்கொண்டு செல்லும் ஒரு அமைப்பாகத்தான் இந்த நாடு கடந்த அரசு இருக்கும்.

நாடு கடந்த அரசை நாங்கள் எவ்வாறு அமைக்கவிருக்கிறோம்?

இப்போது அமைக்கப்பட்டிருப்பது ஒரு குழு. இந்த குழுவுக்கு இரண்டு வடிவங்கள் இருக்கின்றன. முதலாவது வடிவம் உடனடிப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக செயற்படுகின்றது.
குறிப்பாக கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் நலன்களை பேணுவதற்கான நடவடிக்கை எடுக்கும் முக்கிய குழுவாக இதனை அமைத்திருக்கின்றோம்.

அடுத்து – அனைத்துலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒருதரப்பு அல்லது அமைப்பு ஊடாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களிடத்தில் ஒரு தேர்தலை நடத்தி அதன் மூலமாகத்தான் நாடு கடந்த அரசை நாங்கள் உருவாக்கவிருக்கின்றோம்.

இவ்வாறு உருவாக்கப்படுகின்ற அரசு ஜனநாயக அடிப்படையில்தான் உருவாக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஜனநாயக அரசு ஒன்றுக்குரிய அத்தனை அம்சங்களைக் கொண்டதாகவும்தான் இந்த நாடு கடந்த அரசை உருவாக்கவிருக்கின்றோம்.

இந்த அரசு எந்தவொரு தனிப்பட்ட குழுவினருக்கான இடமானதாக இல்லை. தமிழ் மக்கள் எவரும் இதில் போட்டியிடலாம். போட்டியில் தெரிவு செய்யப்படுபவர்தான் இந்த சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்று பின்னணியில் இந்த நாடு கடந்த அரசை நாங்கள் பார்க்க வேண்டும். ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநாயகம் அவர்களின் காலத்தில் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நாங்கள் போராடினோம்.

சத்தியாக்கிரகம், பணிப்புறக்கணிப்பு மூலம் நாங்கள் அன்று போராடினோம். ஆனால் எங்களுடைய நியாயமான போராட்டம் முறியடிக்கப்பட்டதனால்தான் தமிழ்த் தேசிய இனம் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

அந்த ஆயுதப்போராட்டம் அனைத்துலக சமூகத்தால் முறிக்கப்பட்ட சமயத்தில் நாடு கடந்த அரசு மூலம் அனைத்துலக சட்டங்களுக்கு – அனைத்துலக உறவுகளுக்கு – அனைத்துலக ஜனநாயக விழுமியங்களுக்கு – அமைவாக எமது போராட்டத்தைக் கொண்டுசெல்ல இருக்கிறோம்.

இந்தியப்படை 1987 ஆம் ஆண்டு வந்தபோது தலைவர் சுதுமலைக் கூட்டத்தில் கூறியதை நான் இங்கு உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். “போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் மாறாது, குறிக்கோள் மாறாது” என்றார் தலைவர். அந்த அடிப்படையில்தான் நாடு கடந்த அரசை முன்னெடுத்துச் செல்லவிருக்கின்றோம்.

இங்கு நான் சில விடயங்களை உங்களுக்கு கூறவிரும்புகின்றேன். இது ஒரு புறநிலை அரசு அல்ல. புறநிலை அரசு என்பது – நாட்டைவிட்டு வெளியே சென்று அங்கு ஒரு அரசை நடத்தி பின்னர் நாட்டு நிலைமை சுமூகமான பின்னர் திரும்பிவருவதையே குறிக்கும்.

லிதுவேனியா, எஸ்தோனியா போன்றன சோவியத்தின் ஆக்கிரமிப்பின்போது அவ்வாறான ஒரு புறநிலை அரசை நிறுவின. அனைத்துலக நிலமை மாறியபின்னர் அவர்கள் மீண்டும் அந்த நாடுகளுக்கு சென்று அரசை அமைத்தார்கள். இந்தியாவின் ஆதரவுடன் தலாய்லாமா ஒரு புறநிலை அரசை இன்றும் நடத்தி வருகின்றார்.

ஆனால் நாங்கள் நடத்தவுள்ள நாடு கடந்த அரசுக்கு ஒரு நாடு தேவையில்லை. எனவே எங்களுக்கு வெளிப்படையாக எந்தவொரு நாடும் அங்கீகாரம் தராவிட்டாலும் நாங்கள் நாடு கடந்த அரசை முன்னெடுத்துச் செல்லலாம்.

நாடு கடந்த அரசு அமைப்பது குறித்த எமது முயற்சியை வெளிப்படுத்தியபோது, இப்படியான நாடு கடந்த அரசு அமைத்ததாக வரலாற்றில் இல்லை என்றும் இது உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான பங்களிப்பாக இருக்கும் என்று கூறினார்கள். நாங்கள் ஒரு தனித்துவமாக இருக்கின்றோம். தனித்துவமாகத்தான் எங்களுடைய போராட்டத்தை நாங்கள் நடத்திக்கொண்டு செல்லமுடியும்.

நாடு கடந்த அரசின் வெற்றியானது மாறிவரும் அனைத்துலக அரசுகளின் அரசியல் சூழ்நிலைகளில்தான் தங்கியுள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று அனைத்துலக ரீதியில் பின்னிப்பிணைந்துள்ளதை நாங்கள் பார்க்கவேண்டும்.

உதாரணமாக ஆபிரிக்க தேசிய காங்கிரசும் தென்னாபிரிக்காவும் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதன்முறையாக “விடுதலைப் புலிகள் ஒரு தேசிய விடுதலை இயக்கம்” என்று கூறிய ஆபிரிக்க தேசிய காங்கிரசும் தென்னாபிரிக்காவும் சிறிலங்கா தொடர்பான வாக்களிப்பு வந்தபோது சிறிலங்காவுடன் சேர்ந்து வாக்களித்ததையும் நாங்கள் பார்க்கவேண்டும்.

தமிழ்த் தேசியப் போராட்டம் அனைத்துலக அரசியலுடன் இன்று இரண்டற கலந்துவிட்டது. கடந்த 13 ஆம் நாள் வெளிவந்த Financial Times பத்திரிகையில் Fear of Influence என்று சிறந்த கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது.

தென்னாசியாவில் சீனா எவ்வாறு வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது, தென்னாசியாவில் இந்தியாவைச் சுற்றி சீனா எவ்வாறு தளங்களை அமைத்து வருகின்றது, தென்னாசியாவில் சீனா தனது ஆதிக்கத்தை எவ்வாறு நிலைநாட்டி வருகிறது என்றும் அது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எவ்வாறு கவலையைக் கொடுக்கின்றது என்றும் ஒரு விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது.

எனவே எங்களுடைய போராட்டமானாலும், நாடு கடந்த அரசு என்றாலும் சரி அதனுடைய வெற்றி மாறிவரும் அனைத்துலக பூகோள அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தங்கியுள்ளது.

நாடு கடந்த அரசு குறித்த அறிவிப்பை எதற்காக அவசரப்பட்டு செய்தார்கள், எதற்காக மற்றவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அறிவித்தார்கள் என்று சிலர் கூறினார்கள். இந்த நிலைப்பாடு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்துதான் வந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பது அனைத்துலக சமூகத்தாலும் தமிழ்மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட விடயமாகும். அனைத்துலக நாடுகளில் நடந்த எந்தவொரு ஆர்ப்பாட்டமானாலும் எந்தவொரு எழுச்சி நிகழ்வானாலும் அவற்றில் தமிழ்மக்கள் தாயகக் கொடியுடன்தான் நிற்கின்றனர்.

தமிழர் தேசியம் – தமிழர் தாயகம் – தமிழர் தன்னாட்சி என்ற மூன்று நிலைப்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பாகத்தான் இதனை நாங்கள் கொண்டுசெல்ல இருக்கிறோம். ஏற்கனவே நான் கூறியதுபோல இதனை ஒரு தேர்தலின் மூலம்தான் உருவாக்குவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

ஜனநாயக அடிப்படையில் உருவாக்குவதால் இந்த அமைப்புத்தான் தமிழர் சம்பந்தமான, தமிழர்களின் அபிலாசைகள் சம்பந்தமான ஒரு அதியுயர் கட்டமைப்பாக இருக்கும்.

ஜனநாயகத்தின் அடிப்படையில், ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் நாடு கடந்த அரசு உருவாக்கப்படுவதால் இதனையே தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை வெளிப்படுத்தும் அதியுயர் அமைப்பாகக் கொண்டுசெல்ல இருக்கிறோம்.

நாடு கடந்த அரசு அதியுயர் அமைப்பாக இருப்பதால் ஏனைய அமைப்புக்களுக்கு எந்தவிதமான இடமும் இல்லை என்று கருதிவிட முடியாது. இங்கு ஒன்றுக்கொன்று போட்டியாக எதுவும் இடம்பெறவில்லை. உதாரணமாக அனைத்துலக மன்னிப்புச் சபை செய்கின்ற பணியை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் செய்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் வேட்கை தொடர்பாக நாடு கடந்த அரசைத்தான் அதியுயர் அமைப்பாக நாங்கள் கொண்டுசெல்ல இருக்கிறோம். இது தொடர்பாக பல்வேறு இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், பல்வேறு அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் ”இது ஒரு வரலாற்று நிகழ்வு, தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை உருவாக்கவேண்டும். எனவே இந்த அமைப்பில் நானும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த அமைப்பில் நாங்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்வது என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அவுஸ்திரேலியாவில் இருந்து சிவில் பொறியியலாளரான மாணவர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில் தானும் இதில் பங்களிக்க விரும்புகிறேன், என்ன மாதிரி பங்களிக்கலாம் என்று கேட்டிருக்கிறார்.

தற்போது நாடு கடந்த அரசுக்கான ஆலோசனைக்குழுவே உருவாக்கப்பட்டிருக்கிறது. அடுத்து நாடு கடந்த அரசு குழு உருவாக்கப்படும். இதில் மேற்படி மூன்று கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்ட அனைத்து தரப்பையும் இயலுமான அளவிற்கு உள்ளடக்கி உருவாக்குவோம்.

அத்துடன் நாடுகள் சார்ந்த அளவிலும் உபகுழுக்களை உருவாக்கி அவற்றின் ஊடாகத்தான் இதனை நாங்கள் கொண்டுசெல்ல இருக்கிறோம்.

நீங்கள் உங்களது கருத்துகளை கூறவேண்டுமானால் நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு உங்களது கருத்துக்களை கூறலாம். இந்த அமைப்பு எப்போது வரப்போகிறது, இந்த குழுக்கள் எப்போது உருவாக்கப்படப்போகின்றன என்பதை பார்த்துக் கொண்டிராமல் இந்த அமைப்பு எப்படி வரவேண்டும் என்பதை உருவாக்குவதில் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பங்கு உண்டு.

எனவே நீங்கள் ஒவ்வொருவரும் எப்படி நாங்கள் இதனை கொண்டுசெல்ல வேண்டும் என்ற உங்களது கருத்துக்களை அனுப்பினால் அவற்றையும் நாங்கள் கருத்தில் எடுத்துக்கொண்டு – இறுதி வடிவத்தை தயாரிப்போம்.

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த பேராசிரியர் சொர்ணராஜா அவர்கள் எமது ஆலோசனைக்குழுவில் இருக்கின்றார். அவர் ஒரு வரைவை கடந்த வாரம் தயாரித்திருக்கிறார்.

அதாவது நாடு கடந்த அரசை முதலில் நாம் கிழக்கு இந்தியக் கம்பனி வடிவத்தில் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது, பொருளாதார ரீதியில் ஒரு பலம் மிக்க வடிவமாக கொண்டுவரவேண்டும் என்று அவர் கருதுகிறார்.

பிரித்தானியர் இலங்கைக்கு வருகை தந்து ஆதிக்கம் கொள்வதற்கு முன்பாக கிழக்கு இந்தியக் கம்பனி வடிவத்தில் அங்கு வந்து தமது ஆதிக்கத்தை செலுத்தினார்கள். எனவே நாங்களும் முதலில் பொருளாதார அடிப்படையில் நாடு கடந்த அரசை கொண்டுசென்று அதன் அடிப்படையில் நாங்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

இப்படி பல்வேறு கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த கருத்துக்களை எல்லாம் ஒன்றாக இணைத்து எங்களுடைய சொந்த அமைப்பாக கருதி நாடு கடந்த அரசுக்கான உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள்.

நடந்து முடிந்த சம்பவத்திற்காக நாங்கள் மனமுடைந்து விடக்கூடாது. நாங்கள் இங்கு இப்படியான கூட்டம் நடத்துவதே ராஜபக்ச அரசு எங்களை இன்னமும் அரசியல் ரீதியாக அடிமை கொள்ளவில்லை என்பதை வெளிக்காட்டும்.

எனவே நாடு கடந்த அரசு அந்த அடிப்படையில்தான் உருவாக்கப்படவிருக்கின்றது.

தியாகம் விரயமானதாக வரலாறு இல்லை, நீதி தோற்றதாக சரித்திரம் இல்லை.

தர்மம் தனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்.


இவ்வாறு தனது உரையில் வி.உருத்திரகுமாரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments