அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த தமிழ் ஈழக் குரல்!

''எங்களை அழிக்க முடியாது... நாங்கள் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று வருவோம்!''

- அமெரிக்காவில் அதிர்ந்து எழுந்திருக்கிறது புலி கோஷம்.

வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் 22-ம் ஆண்டு மாநாடு, ஜார்ஜியா மாநிலம் அட்லாண்டா மாநகரில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து வைரமுத்து, தமிழருவி மணியன், ம.நடராசன், சிலம்பொலி செல்லப்பன் ஆகியோர் கலந்துகொண்ட இந்த விழா, ஓர் எழுச்சி விழாவாகவே அமைந்தது.

இந்தப் பேரவையின் ஒவ்வோர் ஆண்டு விழாவிலும் புலி அனுதாபிகளின்

ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதனாலேயே அமெரிக்கா, கனடா,இலங்கை மற்றும் இந்திய உளவுத் துறையினரின் கண்காணிப்புக்குள் இடம்பிடித்துவிடும். இந்த முறையும் அப்படித் தான்!

விழாவில் கலந்துகொண்டு உணர்ச்சிகர மாகப் பேசிய வைரமுத்து, ''போர் நின்று விட்டதாகக் கூறப் படுகிறது.களம் ஓய்ந்து விட் டாலும், அதற்கான கார ணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. அப்பாவித் தமிழர்கள் சம உரிமையோடு அவரவர் நிலத்தில் குடி அமர்த் தப்பட வேண்டும்.

பத்தாம் நுற்றாண்டில் வாள் எடுத்துத் தன் வீரத்தைக் காட்டி, உலகை வென்றான் ராஜராஜ சோழன். 21-ம் நூற்றாண்டில் துப்பாக்கி எடுத்து தமிழனின் மானம் காத்தான் மாவீரன் பிரபாகரன். உலகத் தமிழர்களுக்கு முகவரி கொடுத்தவன் அவன். ஒருவேளை அவன் மறைந்திருந்தால், அது துரோகத்தால் பெற்ற வெற்றி! சாவே வந்து பிரபாகரனிடம் பிச்சை கேட்டிருக்கும். அஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல, கிழக்கு மீண்டும் சிவக்கும்... மறுபடியும் உதிக்கும்... அந்த விடியலே தமிழ் ஈழம். இங்கே ஒரு வெள்ளைக்காரப் பெண் ஈழத்தின் வலியைப் பற்றிப் பேசினார். அவரைப் போன்றவர்கள் இன்னும் நிறைய பேர் ஈழம் மலரத் தேவை!'' என்றார் வைரமுத்து.

ஈழ மக்களி டையே தனி யாகப் பேசிக் கொண்டிருந்த போது தமிழருவி மணியன், ''தீக்குச் சியும், தீக்கிரையாக்கி விடும் சிகரெட்டும் ஒரே பெட்டியில் இருக்கலாம். ஆனால், தமிழனும் சிங்களவனும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது!'' என்றார். ''தமிழ் ஈழம் தவிர்க்க முடியாதது.

ஆனால், யுக்திகளை மாற்றவேண்டும். 20 ஆண்டுகள் முன்பிருந்த அரசியல் சூழல் வேறு. அப்போது அமெரிக்க-ரஷ்ய பனிப் போர். இப்போதோ, இந்தியா-சீனா பனிப்போர் ஆசியாவில் மையம் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளுமே தமிழர்களை ஆதரிக் காததால்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டது. இலங்கையைவிட ராணுவ பலம் அதிகம் இருந்தால் போதுமே, தமிழ் ஈழம் பெற்றுவிடலாம் என்று முப்படை கண்ட மாவீரன் உலக நாடுகளின் ஆதரவை பெறத் தயங்கி நின்றான். அதுவே எதிராகிவிட்டது. ஆகவே, அநாதைகளாக விடப்பட்டோம். இப்போதுகூட தனிநாடு கேட்கவில்லை. இந்திய அரசில் உள்ள மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தைதான் கேட்கி றோம் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டது. ஆனால், அதை சிங்கள அரசு குப்பையில் போட்டது. அதையாவது மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டாமா?

இலங்கை இறையாண்மைக்கு இழுக்கில்லா தனி மாநிலம் பெற அனைத்து ஈழத்தலைவர்களும் கருணாநிதி, ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும். 40 எம்.பி-க்கள் டெல்லியை அசைக்க முடியும். அதற்கு உங்களிடம் முதலில் ஒற்றுமை அவசியம்!'' என்றார்.

விழாவில் கலந்துகொண்டவர்களில் குறிப்பிடத் தக்க கவனத்தைப் பெற்றார் ம.நடராசன். ஜார் ஜியா மாநில ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டேவிட் போய்த்ரிஸ், சுமார் 2 மணி நேரம் ம.நடராசனுடன் பேசி இந்திய அரசியல், தேர்தல் வியூகம் என்று அலசி னாராம். ஈழத் தமிழர்களும் ம.நடராசனை சந்தித்து ஆலோசனை செய்தார்கள்.

அவர்கள் மத்தியில் பேசிய நடராசன், ''இந்திரா உயிரோடு இருந்திருந்தால், பங்களா தேஷ் உருவாக்கியதைப் போல் தமிழ் ஈழம் அமைத்திருப்பார். அவர் ஒரு ராஜதந்திரி. ஆகவேதான், விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தார். ராஜீவ் காந்தியும் மிக அழகாக ஈழப் பிரச்னையைக் கையிலெடுத்தார். அதற்குள் அவரை சுற்றி இருந்த தீயசக்திகள் இலங்கையிடம் காசு வாங்கிக்கொண்டு, அவர் புத்தியை மழுங்கடித்துவிட்டன. சோனியா தன் மாமியாரையும் மதிக்கவில்லை, கணவரையும் மதிக்கவில்லை..!

ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வடக்கையும் கிழக்கையும்இணைத்து ஒரே தமிழ் நிலம் அமைக்க வழி வகுத்தது. இப்போது இலங்கை உச்ச நீதிமன்றம், அந்த ஒப்பந்தத்தின் 13-வது ஷரத்தை ரத்து செய்து, இந்தியாவின் முகத்தில் கரிபூசி உள்ளது. கணவர் போட்ட ஒப்பந்தத்தை மதிக்காத இலங் கையை தட்டிக்கேட்க சோனியாவுக்கு ஏன் தைரிய மில்லை? இந்தியா-பாகிஸ்தான் போரின்போது அமெரிக்க அதிபரான நிக்ஸன் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் இந்திரா. அவர் உடம்பில் இந்திய ரத்தம் ஓடியது. இந்தியாவின் புகழை உலக நாடுகளில் நிலைநிறுத்தினார். ஆனால், இப்போது அண்டை நாடுகளான குட்டி தேசங்கள் நம்மை மதிப்பதில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, சுதந்திரம் கிடைக்கும் வரை அங்கு அமைதி திரும்பாது; இலங்கையில் அமைதி இல்லாத வரை இந்தியாவில் அமைதி கிடையாது. இதை சோனியா உணர வேண்டும். கலைஞரையும் இனி நம்பிப் பயனில்லை. தமிழ் ஈழம், புலி என்றாலே கடுமையாக எதிர்த்துவந்த ஜெயலலிதா, அங்கே நடக்கும் கொடுமைகளைக் கண்டு தன் 20 வருட நிலைப் பாட்டை மாற்றிக்கொண்டார். இனி, அவரை நம்பலாம்...'' என்று பேசியிருக்கிறார்.

தமிழ் விஞ்ஞானியான 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை, வேலூர் ஜி.விஸ்வநாதன்... தமிழ் சினிமா நடிகர்களான பசுபதி, ஜீவா, நடிகை கனிகா ஆகியோர் பேசுகையில் ஈழப் பிரச்னையைத் தொடவில்லை.

அனுராதா ஸ்ரீராம் தமிழ் இசை திரைப்பாடல் நிகழ்ச்சியில் இடை இடையே ஆங்கிலத்தில் பேச, கடுப்பான தமிழ் சங்கத் தலைவர் ஒருவர் 'தமிழில் பேசுங்க' என்று சத்தம் போட்டார். உடனே, அனுராதா ஸ்ரீராம், ''நானும் தமிழச்சிதாங்க. தமிழ்த் திரைப்படத் துறையில் மலையாளிகளும், இந்திக்காரர்களும்தான் அதிகமாகப் பின்னணி பாடுகிறார்கள். உங்கள் கோபத்தை அங்கு சென்று காட்டுங்களேன்... பெருமைப்படுகிறேன்!'' என்றார் பட்டென்று!

பேச்சுகளுக்கிடையில், வன்னியில் நடை பெற்ற படுகொலைகளை, சித்ரவதைகளை புகைப்படங்களாகத் திரையில் காட்டினார்கள். பிணக்குவியல்கள், முடமான மனிதர்கள் என உலுக்கிப்போட்ட அந்தக் காட்சிகளைப் பார்த்து, அந்த அரங்கத்தில் இருந்த குழந்தைகள் பயப்பட, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கண்களைப் பொத்த வேண்டி வந்தது.

புலிகள் ஆதரவு பொங்கி வழிந்த இந்த மாநாட் டின் இன்னொரு முக்கிய அம்சம், நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைத்து, அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற முயலும் ருத்திரகுமாரனை அழைக்காததுதான்.

இன்னொரு முக்கிய அம்சம் - இந்தப் பேரவை யின் கடந்த ஆண்டு விழா மலர்களில் எல்லாம் இடம் பெற்றிருந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் வாழ்த்துச் செய்தி இந்த முறை மிஸ்ஸிங்..!

ருத்திரகுமாரன் ஸ்பெஷல் பேட்டி!

பிரபாகரன் இடத்தைப் பிடிக்க பதவிச் சண்டையா?

நாடு கடந்த தமிழ் ஈழ அரசை உருவாக்கிவரும் நியூயார்க் வாழ் வழக்கறிஞர்-அரசியல் ஆலோசகர் விசுவநாதன் ருத்திரகுமாரனுக்கு ஈழத் தமிழர்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் பெருகிவரும் நிலையில்... முதன் முறையாக நம்மிடம் மனம் திறந்து பேசினார் அவர்.

''நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவி அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிக அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழர்கள்தான் இந்த இயக்கத்தின் தூண். ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல... இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடி னார்கள். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால், இலங்கை அரசு இதை நசுக்கியது. கயமைத்தனமாக அடியோடு அழிக்க முனைந்தது. வேறு வழியின்றி ஆயுதம் எடுத்தோம். அதன் பின்னரே வெளியுலகுக்கு தமிழி னத்தின் துன்பங்கள் தெரியவந்தன. 'போராட்ட வடிவங்கள் மாறினாலும், லட்சியம் ஒன்றுதான்!' என்று சதுமலையில் எங்கள் தலைவர் கூறினார்.

தமிழர்களின் தேசியப் பிரச்னைக்கு சுயநிர்ணய அடிப்படையில் ஒரு தீர்வு காண்பதற்கு இது அமைக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு சமபல நிலை அவசியம். அரசுக்கு சமமாக இருந்தோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, இப்போது அந்த இடைவெளியை நிரப்ப மிகவும் அவசியம்.புறநிலை அரசுக்கும் [Government in excile] நாடு கடந்த அரசுக்கும் [Transnational Government] பல ஒற்றுமைகள் இருந்தாலும், சில வேறுபாடுகள் உள்ளன. ஒரு நாட்டில் அரசு அமைக்க இயலாதபோதே புறநிலை அரசு பிறக்கும். தலாய்லாமா, பாலஸ்தீனர்கள், ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் போன் றவை இந்த வகை. நாங்களோ, உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்க இதைக் கையில் எடுத்திருக்கிறோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு இன்னமும் அமைக்கவில்லை. அதை அமைப்பதற்காகவே செயற்குழுவை ஏற்படுத்தியுள்ளோம். பலர் இந்தியாவில் இருந்து தொடர்புகொண்டு, 'உலகத் தமிழர் வரலாற்றில் இது ஒரு புதிய சகாப்தமாயிற்றே... எங்களை ஏன் சேர்க்கவில்லை?' எனக் கேட்கின்றனர்.

எங்கள் அறிக்கையை ராஜதந்திரிகள், தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி, அவர்களின் கருத்துகளையும் கேட்டிருக்கிறோம். அடுத்தது, ஒவ்வொரு நாடுகளிலும் செயற்குழுவினை அமைக்கவிருக்கிறோம். கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளன. இந்தக் குழுக்களுக்குப் பயிற்சிப் பட்டறையும் நடத்தி வருகிறோம். தமிழ் ஈழப் பிரச்னையில் - குறிப்பாக கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்களில், இந்தியாவின் பங்கை பல கோணங் களில் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றுதான் கூறுகிறோம்.

இனி ஆயுதப் போராட்டம் இல்லை. இந்தியாவின் இறையாண்மையையோ அல்லது பூகோள நலன்களையோ எம்முடைய செயல்கள் பாதிக்காது என உறுதி அளிக் கிறோம்.

நாங்கள் திட்டமிடுவது, வெறும் வலைதளத்தில் மட்டுமே வாழும் அரசு அல்ல... தலைவருக்குப் பிறகான பதவிச் சண்டையும் அல்ல. எந்த ஒரு குழுவையோ அல்லது தனிநபரையோ இது முன்னிலைப்படுத்தாது. விரைவில் தேர்தலும் நடத்துவோம். ஜனநாயக முறைப்படி, அதில் யாரும் பங்கு பெறலாம். முகாம்களில் சீரழியும் மூன்று லட்சம் ஈழ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எங்கள் இலக்கு, தனி ஈழம். அதை இனி ஜனநாயக முறையில் இந்தியா, உலக நாடுகளின் உதவியுடன் பெறுவோம்!'' என்று நம்மிடம் சொன்ன ருத்திரகுமாரனிடம்,

''பிரபாகரன் இடத்துக்கு தாங்கள் வர முயற்சிக்கிறீர் களா?'' எனக் கேட்டோம்.

''அப்படியெல்லாம் இல்லை. அவர் இடத்தை இட்டு நிரப்புவதற்கு யாருமில்லை. அதற்கான முயற்சியை நான் மட்டுமல்ல, யாருமே எடுக்க மாட்டார்கள். அவருடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். ஈழ தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்காகவும் உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.


யூதர்களையும் தமிழர்களையும் ஒப்பிட்டு பிரபாகரன் தனக்கு நெருக்கமானவர்களிடத்தில் பேசியதாக கடந்த 08-07-2009 ஜூ.வி. இதழில் அட்டைப் படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4-ம் தேதி அன்று, 'யுனைடெட் ஸ்டேட்ஸ் தமிழ் ஈழம் ஆக்ஷன் கமிட்டி' என்ற அமைப்பு ஈழ விடுதலைக்கான முன்னோட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு தலைவராக யூத இன மருத்துவரான இலைன் ஷாண்டர் என்ற பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். யூத இனம் போலவே தமிழ் இனமும் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து திமிறி எழும் என்கிறார்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

Comments

ttpian said…
we will win!
we will form Tamileelam:
k.pathi
pathiplans@sify.com