உலகத்தினரால் ஒரு விடுதலை இயக்கமாகவும், இந்தியா உள்ளிட்ட அரசுகளால் பயங்கரவாதிகள் என்று மட்டமே பார்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், சாதி, மத பேதமற்ற ஒரு அரசமைப்பை உருவாக்கி தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் நிலத்தை ஆண்டு தங்கள் அரசியல் ஆளுமைத் திறனை நிரூபித்தவர்கள் என்று பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன் கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மக்கள் சமூக உரிமை கழகத்தின் (பி.யூ.சி.எல்.) சார்பில் ‘இலங்கை: பாடங்களும், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் மீது மனித உரிமை ரீதியில் அது ஏற்படுத்திய தாக்கங்களும்’ (Sri Lanka: Lessons and implications for Human Rights in India and South Asia) என்ற தலைப்பில் கருத்தாய்வு நடந்தது.
பெங்களூரின் புறநகர் பகுதியான உத்தரி கிராமத்தில் பயர் பிளைஸ் என்ற வளாகத்தில் 2 நாள் கருத்தரங்கம் ஜூலை25ந் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில பி.யூ.சி.எல். அமைப்பின் தலைவர் டாக்டர். வி.சுரேஸ் நிகழ்வு குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார்.
மனித உரிமை செயற்பாட்டாளர் டாக்டர்.கே.பாலகோபால், சிறீலங்காவில்,தீவிரவாதத்தை ஒடுக்குதல் என்ற பெயரில் மனித உரிமைகள் மட்டுமல்ல, மனிதர்களே அழிக்கப்பட்ட கொடூரத்தை விளக்கிப் பேசினார்.
முதலாவது அமர்வில், கருநாடக மாநில மாநில பி.யூ.சி.எல் அமைப்பின் தலைவர் தலைவர் பேரா.ஹசன் மன்சூர் தலைமையேற்றார்.
பேரினவாத சிங்கள அரசு வேட்டையாடக் காத்திருக்கும் சிங்களப் பத்திரிக்கையாளர் குஷால் பெராரா போருக்குப் பின் அங்கு நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார்.
தமிழ் வெப்துனியா ஆசிரியர் அய்யநாதன், கடைசிக் கட்ட போரின் போது, மே-18 மற்றும் மே-19 தேதிகளில் ஒட்டுமொத்த தமிழினமே கருவறுக்கப்பட்ட கொடூரத்தை ஆதாரங்களுடன் விளக்கிப் பேசினார்.
வதை முகாம்களில் தற்போதைய நிலை, மனிதக்கொடூரன் ராஜபக்சேயின் ராணுவத்தின் இனவெறியாட்டம், சிங்கள கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் போன்றத் தலைப்புகளில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆற்றிய உரைகள், இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பி.யூ.சி.எல். அமைப்பினரை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் என். ராம் பற்றி குறிப்பிட்டு பேசும் போதெல்லாம், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
'ஒன் வாய்ஸ்' அமைப்பின் சார்பில் உரையாற்றிய திருமுருகன், போருக்குப் பின் நிவாரணம்...
என்றப் பெயரில் இந்திய/இலங்கை அரசுகள் மீண்டும் தமிழின அழிப்பு குறித்தும், "வடக்கில் வசந்தம்"என்றப் பெயரில் தமிழர்கள் சொந்தமண்ணில் நிர்க்கதியாகபடுகிறார்கள், அதற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ராஜபக்சே யுடன் கைகோர்த்துள்ளது பற்றியும் என விளக்கிப் பேசினார்.
இறுதி நிகழ்வாக, தமிழினத்தின் எதிர்காலம், தமிழர்களின் அரசியல் என்ற தலைப்பில், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளரும், ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்? இந்திய உளவு நிறுவனங்களின் சதி போன்ற தமிழினத்திற்கான வரலாற்று ஆவண நூல்களின் ஆசிரியருமான. விடுதலை. இராசேந்திரன் உரையாற்றினார்.
இந்தியாவிலும், சிறிலங்காவிலும், மனித உரிமைகளை பறிக்கும் அரசியல் நடைபெற்றுக்கொண்டுள்ளது. பி.யூ.சி.எல் போன்ற மனித உரிமை அமைப்புகள், தேசிய இன உரிமை பேசுபவர்களின் பாதுகாப்பு செய்யும் அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும். நாடாளுமன்ற/அமைச்சரவை ஒப்புதலின்றி, தமிழினத்திற்கு மனித உரிமைத் துரோகத்தை இந்தியா செய்துள்ளது.
இந்திய/இலங்கை கூட்டு சதியை, சர்வதேச சமுகத்தின் முன்பும்,சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடமும் அம்பலபடுத்தவேண்டும்.
அமெரிக்காவின் மீதான செப்டம்பர்-11 தாக்குதலுக்கு முன்பே,சிறிலங்காவுடன் சம அரசியல் பலத்தில், தமிழீழம் என்ற தனியரசை நடத்திக் காட்டியவர்கள் விடுதலைப் புலிகள்.
சாதி, மத பேதமற்ற அரசியல் சாசனத்தை உருவாக்கி தமிழ்நிலத்தை ஆண்டவர்கள் விடுதலைப் புலிகள். சிங்கள ராணுவத்தை வெற்றிக் கொண்டு, ராணுவ ரீதியாக பலம் பெற்று அரசாங்கம் நடத்தும் போது தான்,அரசியல் தீர்வுக்கு ஒப்புக்கொண்டு, நார்வே பேச்சு வார்த்தையின் போது" தன்னாட்சி சபை" திட்டத்தை முன் வைத்தவர்கள் புலிகளே.
இவ்வாறு, இராணுவ ரீதியாக பலம் பெற்ற அரசியல் இயக்கத்தை "பயங்கரவாத அமைப்பாக" பட்டியலிட்டது சர்வதேசத்தின் தவறு. தற்போது 15,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை இழந்த பின்பும் அய்க்கிய நாடுகளின் அவையில் தமிழீழம் குறித்து தீர்மானம் இடம்பெற செய்து வென்றவர்கள் விடுதலைப் புலிகளே!
புலம் பெயர் தமிழர்களின் தற்போதைய முயற்சியான" நாடு கடந்த அரசாங்கம்" அமைக்கும் முயற்சிக்கு, பி.யூ.சி.எல் போன்ற மனித உரிமை அமைப்புகள் துணை நிற்கவேண்டும் என்று இராசேந்திரன் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர். டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்துக்கொண்டனர்.
ஈழப்போராட்டத்தை சித்தரிக்கும் நிழல் பட கண்காட்சியும் வளாகத்தில் இடம் பெற்றிருந்தது.
- விடுதலை.இராசேந்திரன்.
Comments