சிவநாதன் கிசோர் அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்;சண் தவராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவநாதன் கிசோர் அவர்கள் கடந்த மாதம் சிறி லங்காப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான வாக்களிப்பின் போது நடுநிலைமை (?) வகித்ததன் ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு நபராக மாறியுள்ளார்.

இது தொடர்பில் அவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய செவ்வியில் தனது நிலைப்பாடு தொடர்பில் ஒளிவுமறைவு இன்றி விளக்கியிருந்தார்.

அவரே தனது செவ்வியில் ஒத்துக் கொண்டதைப் போன்று, இன்றைய நிலையில் வன்னியிலே வதை முகாம்களில் சொல்லொணாத் துயரை அனுபவிக்கும் எம் தமிழ் உறவுகளின் நலவாழ்வுதான் எமது கரிசனைக்குரிய அதி முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. என்ற போதிலும் கூட எனது நேரத்தில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி இந்த மடலை வரைவதற்குக் காரணம் இது அவசியமானதும் அவசரமானதும் எனக் கருதுவதாலேயே ஆகும்.

தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டு இன்றுவரை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் பாடுபட்டு வருபவன் என்ற அடிப்படையிலும், 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றொரு அரசியல் அமைப்பு தோற்றம் பெறக் காரணமாக இருந்தோரில் ஒருவன் என்ற வகையிலும், சமூகப் பொறுப்புமிக்க ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியிலும் எல்லாவற்றுக்கும் மேலாக திரு. கிசோர் அவர்கள் பிறந்த அதே மண்ணில் பிறந்தவன் என்ற காரணத்தினாலும் இந்த மடலை வரைகின்றேன்.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் பல வழிகளில் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. 2002 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறி லங்கா அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை, இதற்கூடாக தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைமை, அவர்கள் சார்பில் - வேறு வகையில் சொல்வதானால் - அவர்களின் சிபாரிசின் போரில் தேர்தல் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுப் போட்டியிட்ட நிலைமை, எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணா அம்மான் இயக்கத்தை விட்டுப் பிரிந்து சென்றிருந்தமை போன்ற சூழலில் இந்தத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் த.தே.கூ. வெற்றி பெறும் என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம் என்றாலும் கூட அதில் போட்டியிட்ட நபர்களிலே நீங்கள் வெல்ல வேண்டும் என நானும் எனது நண்பர்கள் பலரும் விரும்பினோம். ஒரு வகையில் மறைமுகமாக அதற்காகப் பாடுபட்டோம் என்ற விடயம் உங்களுக்கே கூட ஆச்சரியமான ஒன்றாக இருக்கலாம். அதற்குக் காரணம் நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் வன்னி மாவட்டத்திலே போட்டியிட்டவர் என்பதுவுமே.

பிரதேச வாதத்தை ஒரு சாக்காக வைத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்ற நிலையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்த திரு. கிசோர் தோற்கடிக்கப் பட்டால் அது பிரதேசவாதம் என்ற கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துவிடும் என்ற அச்சமே உங்கள் தேர்தல் வெற்றி தொடர்பில் நாங்கள் அக்கறைப்படக் காரணமாய் அமைந்திருந்தது.

தேர்தல் வெற்றியின் பின்னர் யூன் மாதம் முதலாம் திகதி கருணா குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தேசப்பற்றாளர் ஜி. நடேசனின் இறுதி ஊர்வலம் வவுனியாவுக்கு வந்தபோது உங்களை நேரில் சந்திக்கக் கிடைத்தது. அந்த வேளையில் உங்களதும் குறிப்பாக உங்கள் துணைவியினதும் ஆளுமையை அவதானிக்க முடிந்தது.

செவ்வியில் கூறியிருந்ததைப் போலவே நீங்கள் எந்தக் கட்சியையும் சாராதவர் என்பது உண்மையே. அதேவேளை நீங்கள் ஒத்துக் கொண்டதைப் போன்று நீங்கள் தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டிருந்தீர்கள். 2004 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கை தமிழரசுக் கட்சி) தனது கொள்கைள் தொடர்பாகத் தெளிவாக வரையறுத்துக் கூறியிருந்தது. நீங்கள் அவற்றை வாசித்து, புரிந்து, ஏற்றுக் கொண்டு அவற்றை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தீர்கள் நீங்கள் சுயேட்சைக் கொள்கையுடனேயே போட்டியிடுவதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பகிரங்கமாக அறிவித்திருக்கவில்லை.

இது தவிர, உங்களுக்கு வாக்களித்த வன்னி மக்கள் யாவருமே நீங்கள் செஞ்சிலுவைச் சங்கத்தில் சேவையாற்றிய ஷகிசோர் ஐயா| என்பதற்காகவே வாக்களித்தவர் அல்ல. மாறாக தமிழ்த் தேசியத்தையும் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தையும் ஏற்றுக் கொண்டு பணியாற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுபவர் என்பதற்காகவே அதிகமானோர் உங்களுக்கு வாக்களித்தனர். அன்று உங்களுக்கு வாக்களித்த மக்கள் நீங்கள் என்றாவது இப்படியான ஒரு முடிவை எடுப்பீர்களோ என ஒரு கணமாவது சிந்தித்திருந்தால் உங்களுக்கு வாக்களித்திருப்பார்களா என்பதை நினைத்துப் பாருங்கள். அது தவிர, அந்த மக்களோ அல்லது கட்சியோ தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாத நிலையில் அதை மாற்றிக் கொள்ளும் உரிமை உங்களுக்கு உள்ளதா?

மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனமான செஞ்சிலுவைச் சங்கத்தில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகப் பணியாற்றியவர் நீங்கள். ஷஆயனெயவந’ எனப்படும் பதத்தின் உண்மையான அர்த்தம் என்னவென நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். செஞ்சிலுவைச் சங்கம் மனிதாபிமானப் பணியாற்றும் ஒரு சர்வதேச நிறுவனமாக இருந்தாலும் கூட, சூழ்நிலைக்கேற்ப இருதரப்பின் சம்மதத்துடன், விதிக்கப்பட்ட பணிகளை மாத்திரமே செய்யும் நிறுவனமே அது. சில வேளைகளில் மனச்சாட்சிக்கு விரோதமாகக் கூட பணியாற்ற வேண்டிய சூழல் அங்கே இருக்கும்.

கிட்டத்தட்ட உங்கள் அரசியல் வாழ்வும் அத்தகையதே. உங்களுக்கு மக்கள் வழங்கிய ஷஆயனெயவந’ அப்படியே தான் இருக்கின்றது. மக்களின் அனுமதி இன்றி அந்த ஆணையை மீறும் உரிமை உங்களுக்கு இல்லை என நான் திடமாக நம்புகின்றேன்.

இவ்வாறு நான் கூறுவதால் உங்களின் சுயமான செயற்பாடுகளுக்கு நான் எதிரானவன் என நினைத்துவிட வேண்டாம். தனிமனித உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாடு கொண்டவன் நான். அதேவேளை, மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் தன்னலமாகச் சிந்திப்பது தவறு என்பதிலும் தெளிவான நிலைப்பாடு கொண்டவன்.

தங்களுடைய செயற்பாடுகள் தொடர்பான விமர்சனம் முன்வைக்கப்படுவது இதுவே முதன் முறையல்ல. கடந்த சில வருடங்களாக - அதுவும் உங்கள் சகாக்கள் ஒரு சிலராலேயே - இத்தகைய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அப்போதெல்லாம், தமிழ் மக்களின் இயல்பான குணமான பொறாமையின் அடிப்படையில் தோன்றிய கருத்துக்களே அவை என நினைத்து நாம் அவற்றைப் புறக்கணித்திருந்தோம்.

தற்போதைய தங்களுடைய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக தாங்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் வலுவுள்ளவை என நான் கருதவில்லை. முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் அவல வாழ்வு தீர்க்கப்பட வேண்டுமானால் அரசுடன் சார்ந்து செயற்பட்டாலேயே அது சாத்தியமாகும் என நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.

சிங்களப் பேரினவாதத்தின் உண்மை முகத்தைத் தெரிந்து வைத்துள்ளவன் என்ற அடிப்படையில் இதனை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இந்த மக்களின் இன்றைய அவல வாழ்வுக்கு அடிப்படைக் காரணமே இந்தச் சிங்களப் பேரினவாத அரசு தான். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்ட மக்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே சிங்களம் அவர்களைச் சிறை வைத்திருக்கின்றது. இந்நிலையில் நீங்கள் அரசுக்கு ஆதரவாகச் செயற்படுவதால் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என நம்புவது மடமை.

ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயற்பாடுகளில் தனது உயிரைப் பணயம் வைத்தவர். பல தடவைகள் சாவின் விளிம்புவரை சென்று வந்தவர். அவரால் சாதிக்க முடியாததை உங்களால் சாதித்துவிட முடியுமா?

இன்று அவருக்குக் கூட சோதனைக் காலம் வந்திருக்கின்றது. யாழ். மாநகர சபைத் தேர்தலில் தனது சொந்தக் கட்சி சார்பில் கூட போட்டியிட முடியாத சூழலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். தனது காலடியில் கிடப்பவர்களுக்கு சிங்களப் பேரினவாதம் செய்யும் கைம்மாறு இதுவே.

கடந்த காலங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள் இவ்வாறே சிங்களப் பேரினவாதத்துக்கு வால் பிடித்தார்கள். இன்று அவர்கள் விலாசம் அற்றவர்களாகப் போய் விட்டார்கள். இதற்கு நல்ல உதாரணம ஷசொல்லின் செல்வர்| செ. ராஜதுரை. ஜே.ஆர். ஜெயவர்தன மந்திரிசபையில் இணைந்து கொள்ளும் வரை மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் முடிசூடா மன்னனாக விளங்கிய அவர் இன்று எங்கே? இந்த நிலை உங்களுக்கும் வர வேண்டுமா?

இதில் இன்னுமொரு விடயமும் இருக்கின்றது. ஒருவர் என்ன செய்கிறார் என்பதை விட யார் என்ன செய்கிறார் என்று பார்ப்பதில் அதிக அக்கறை கொண்டவர்கள் எமது தமிழ் மக்கள்.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழர் பிரதிநிதியாகத் தெரிவாகிய 2 பேர் கட்சி மாறினார்கள். இருவருமே கிழக்கைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பொத்துவில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான எம். கனகரத்தினம், இரண்டாமவர் மட்டக்களப்பைச் சேர்ந்த செ. ராஜதுரை.

இது தவிர கருணா அம்மானின் பிளவும், அவர் கையிலெடுத்த பிரதேச வாதம் என்ற ஆயதமும் ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களுக்கும் அவப்பெயரைத் தேடித் தந்தது. அந்தப் பட்டியலில் நீங்களும் இணைந்து கொள்ளாதீர்கள் என உரிமையுடன் வேண்டிக் கொள்கின்றேன்.

இது தவிர தங்களின் நாடாளுமன்றப் பதவிக்காலம் முடிவு பெறுவதற்கு ஒரு வருடத்துக்கும் குறைவான காலமே இருக்கின்றது. அதற்கிடையில் அவசரப்பட்டு நீங்கள் எடுக்கும் முடிவினால் பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது என நான் திடமாக நம்புகின்றேன்.

சிங்கள ஆயுதப் படைகளால் கைது செய்யப்பட்டுச் சிறையிலே சித்திரவதைகளை அனுபவித்து வந்த காலத்தில், அவர்கள் தமிழ் மக்களை எவ்வளவு கேவலமாகக் கருதுகிறார்கள், நடத்துகிறார்கள் என்பதைச் சுயமாக அனுபவித்தவர் நீங்கள். அந்த நினைவுகள் இன்னமும் உங்கள் மனதில் பசுமையாக இருக்கும் என நான் நம்புகிறேன். இன்றைய நிலையில், சிங்கள அரசுத் தலைமையின் உத்தரவு எதுவும் இல்லாமலேயே தமது மனம்போன போக்கில் அவர்கள் தடுப்பு முகாம்களியே அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை எவ்வளவு கேவலமாகச் சித்திரவதை செய்கிறார்கள், இழிவு படுத்துகிறார்கள் என்பதை நாம் அறிவோம். பண்பு நிலையி;ல் மாற்றம் பெறாத இவர்கள் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என நீங்கள் நம்புவதற்கு என்ன அடிப்படை இருக்கிறது?

சாத்தியமான சகல வழிமுறைகளுக்கு ஊடாகவும் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த முயற்சிகள் நிறைவேறாத பட்சத்திலேயே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. இன்று உலகத்துக்கே தெரிந்துவிட்ட இவ் வரலாறு உங்களுக்கும் நன்கு தெரியும். எனவே, இன்றைய நிலையில் ஷஅரசுடன் இணைந்து மக்களின் உரிமைகளைப் பெறுவது| எனக் கூறுவது எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தாரும் ஏறிச் சறுக்கி விழுந்த கதையாகவே அமையும். சக்கடத்தாராவது அப்படி நடக்கும் எனத் தெரியாத நிலையில் அவ்வாறு நடந்து கொண்டார். ஆனால், நீங்கள்…?

இன்று தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே உதவ வேண்டுமானால் தமிழ் மக்களின் நலனுக்காக உண்மையாகப் பாடுபடும் சக்திகளின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். நீங்கள் இன்று அந்த அணியிலேயே இருக்கிறீர்கள். ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு ஊடாக முயற்சி செய்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயம் கிட்ட நிறையவே செய்ய முடியும். உங்கள் பொன்னான நேரத்தை அதற்காகக் செலவிடுவீர்களாயின், ஈழத் தமிழர்கள் மாத்திரமன்றி, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் உலகத் தமிழர்கள் யாவருமே உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள். இன்றைய சந்ததி மட்டுமல்ல நாளைய சந்ததியும் உங்களை நிச்சயம் பாராட்டும். செய்வீர்களா?


“சிங்கத்தின் வாலாய் இருப்பதை விட சிற்றெறும்பின் தலையாய் இருப்பதே மேல்!"

Comments