பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

உலக சமூகம் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்க மிகப் பெரும் மனிதப் படுகொலையை இலங்கைத் தீவிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது இனத்தின் மீது அரங்கேற்றியுள்ளது. மனித குலம் வெட்கித் தலைகுனியும் விதத்திலான இனப்படுகொலை 21 ம் நூற்றாண்டில் எமது மண்ணிலேயே அரங்கேறியுள்ளது. நீதிக்கான எமது போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஒன்றரை தசாப்தகாலமாக தமிழர் தயாகத்தில் இயங்கிவந்த தமிழீழ நடைமுறை அரசகட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டு மக்களின் வாழ்வும் வளமும் சீரழிக்கப்பட்டுள்ளது. வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அடிப்படை மனித உரிமைகள், ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குரல்வளைகள் நசுக்கப்பட்டுள்ளன.

வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழந்த மக்களில் 3 லட்சம் வரையிலான மக்கள் தடுப்பு முகாமில் வெயிலுக்கு நிற்க கூட நிழலின்றி, மழைக்கு ஒதுங்க கூட இடமின்றி கம்பி வேலிகளுக்குள் மனஅழுத்தங்களுடன் சொல்ல முடியாத துன்பச்சுமையுடன் காலத்தை கழித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் உறவுகளோ தினமும் தமது உறவினைத்தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

தமது தாய் மண்ணுக்காக போராடிய போராளிகள்; கைதிகளாக வதை முகாம்களில் வதைக்கப்படுகின்றார்கள்.

இந் நிலையில் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கவும் உரிமைகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து ஒன்றிணைந்து போராட வேண்டிய பாரிய

பொறுப்பும், கடமையும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான எங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தலையாய கடமையில் நாம் உள்ளோம். இந்த வரலாற்றுக் கடமையை செய்வதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையியில்

அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டிய அவசியமான காலகட்டத்தில் நிற்கின்றோம். எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நாம் தொடர்ந்து உறுதியுடன் இலக்கு நோக்கி பயணிப்போம்.

உலக சரித்திரத்திலேயே யூத மக்களும் எமது இனத்தினைப்போன்று அதற்கு மேலான கொடுமை நிறைந்த சூழ்நிலையிலேயே இருந்திருந்தார்கள். புலம் பெயர் நாடுகளில் அவர்களிடம் இருந்த ஒற்றுமையான மிகப்பெரிய கட்டமைப்பு இருந்திருந்ததால். அந்த கட்டமைப்புக்கும் அதன் செயற்பாட்டுக்கும் முன்னால் குற்றவாளிகளை நிறுத்தினார்கள். தாம் தமது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்டார்கள் இன்று அந்த கனவை நனவாக்கினார்கள். அதே போலவே நாமும் இந்த யூத இனத்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல எம்மாலும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும்

இன்று எம்மிடம் மிக முக்கிய அவசர கடமைகள் காத்திருக்கின்றன.

எமது தேசியத்தை வலியுறுத்தவும், நியாயங்களை எடுத்துக்கூறவும், எமது போராட்டத்தின் அடுத்த வடிவமாக நாம்'பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை' என்ற அமைப்பை உருவாக்குகின்றோம்.

பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையானது

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் 1976ஆம் ஆண்டு அனைத்துத் தமிழ்க்கட்சிகளாலும் பிரகடனப்படுத்தப்பட்டு, 1977 இலங்கைத்தீவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் பெருமித்த ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத்தீர்மானத்தில் வெளிப்படுத்தப்பட்டு கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற தேசிய விடுதலைப் போரில் ஒப்பற்ற அர்ப்பணிப்புகளுடாக வலுப் பெற்று, சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த சித்திரை 18 ம் திகதி 2009 அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள வலியுறுத்தும் வகையில் பிரான்சில் நடை பெற்ற வாக்கெடுப்பில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்புக்களால் வாக்களிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசியமும் பாரம்பரியத் தாயகமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அத் தீவின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு உருவாக்கப்படுவதற்காக பாடுபடும்.

தாயகத்திலுள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்.

பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமது இனத்தின் தனித்துவங்களையும், இனத்துவ அடையாளங்களையும் பேணிப்பாதுகாக்கவும், பிரான்ஸ் மக்களுடன் நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பவற்றினை ஏற்படுத்தவும் பாடுபடும்.

இது தமிழ் மக்களின் அரசியல் ஒருமைப்பாட்டுச்சபையாக, எமது உரிமைகளை இந்நாட்டினருக்கும், உலகிற்கும்; எடுத்துச் செல்லும் அமைப்பாக, தமிழீழ மக்களின் அரசியல் குரலாக அமையப்போகின்றது. பிரான்சில் பரந்து வாழும் தமிழ் மக்களுடனும் அதற்காக உழைக்கும் அமைப்புகளுடனும், மனிதநேய தொண்டர் அமைப்புகளுடனும், ஸ்தாபனங்களுடன் தொடர்ந்து செயலாற்றவுள்ளோம். இந்த தமிழீழ மக்கள் பேரவையில் இங்கு வாழும் புத்திஐPவிகளும், மூத்த கல்விமான்களும், பிரெஞ்சு, தமிழ்சட்டவாளர்கள்,அரசியல்வாதிகள், தமிழனப்பற்றாளர்கள், தாயக விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் இதுவரை தொண்டாற்றி வருபவர்கள் எல்லோரினதும் ஆலோசனைகளோடு, பங்களிப்போடும் உருவாக்கம் பெறவுள்ளது. இந்த பேரவையினால் முன்னெடுக்கப்படும், செயற்பாட்டிற்கும், தமிழ் மக்கள் அனைவரையும் ஓரணியாய் தன்மான உணர்வுள்ள தமிழராய், ஒருமித்த குரலினால் ஓங்கி வளர்த்திட உங்கள் எல்லோரினதும் அன்பையும், ஆசியையும் பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும், இன்னும் பிற வள உதவிகளையும் தந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கை கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்


தொடர்புகளுக்கு:

பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை.

Comments