தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட ஆயுதப்போரே எமது இனத்தின் வலியை உலகிற்கு உணர்த்தியது

நான்காவது ஈழப்போரின் ஓய்வுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா அரசும் அதற்கு உறுதுணையாக இருந்து தமிழ் மக்களின் விடுதலைப் போரை முற்றாக நசுக்க முனைந்த இந்திய மத்திய அரசும் தொடர்ச்சியாக தெரிவித்து வருவதுடன் அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போரின் இலட்சியத்தை தகர்த்து அதனை மனிதப்பேரவல நெருக்கடிக்குள் புதைத்துவிட முனைந்து வருகின்றன.

தனது பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதன் மூலம் அமெரிக்காவுக்கு போட்டியாக பொருளாதார மற்றும் படைத்துறை கட்டமைப்புக்களில் தன்னைப்பலப்படுத்த சீனா முயன்று வருகின்றது. ஐரோப்பா கண்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அமைதி, அமெரிக்க பிராந்தியத்தில் அமெரிக்கா ஏற்படுத்திய அமைதி போன்றவை அவர்களின் வளர்சிக்கும், பலத்திற்கும் காரணம் என சீனா நம்புகின்றது.

எனவே தான் அது பெருமளவு முதலீடுகளை தனது பிராந்திய நாடுகளில் மேற்கொள்வதுடன், அங்குள்ள நெருக்கடி
களையும் தணிப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்திருந்தது. மறுபுறம் இந்தியாவும் அதற்கு போட்டியாக தனது முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
எனினும் விடுதலைப் புலிகளின் படை பலம் அதனை எதிர்கொள்ள இராணுவத்திற்கு தேவைப்பட்ட படை பலம் போன்றவை சிறீலங்கா அரசினை சீனாவின் பக்கம் அதிகம் சாய வைத்திருந்தது. ஆனால் இந்தியா அதற்கு எதிரான போக்கினை மேற்கொள்ள துணியவில்லை. அதுவும் போட்டியாக சிறீலங்கா அரசினை பலப்படுத்தவும், விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது.

2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளில் மேற்குலகம் பங்குகொண்டதை இந்தியா சந்தேகக் கண்கொண்டு பார்த்ததுடன், அவர்களை வெளியேற்றவும் மறைமுகமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. மேற்குலகத்தை வெளியேற்றுவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது சீனாவின் ஆளுமையை தடுப்பதற்கு தவறிவிட்டது. அதனை அவர்கள் தற்போது கூட உணர்ந்து கொள்வார்களோ தெரியாது.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளின் போரிடும் வலுவையும், அரசியல் ஆளுமைçயுயும், மக்களின் ஆதரவையும் முறியடிப்பதற்கு பல வழிகளில் மிகவும் தீவிரமாக போர் நிறுத்த காலத்தில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது என்பது உண்மை. போர் நிறுத்த காலத்தில் இராஜதந்திர வழிகளிலும், போரின் போது படைத்துறை வழிகளிலும் அது காத்திரமான பல நர்வுகளை மேற்கொண்டிருந்தது.

அதன் ஒரு அங்கமாக இந்தியாவின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணன் சில நகர்வுகளை மேற்கொண்டிருந்தார். போர் நிறுத்த காலத்தில் வன்னிப் பகுதிக்கும் சிறீலங்காவுக்கும் விஜயங்களை மேற்கொண்டிருந்த சமாதான முயற்சிகளுக்கான நோர்வேயின் அனுசரணையாளர் எரிக் சொல்யஹய்ம் அவர்கள் தனது பயணத்தின் போது இந்தியாவுக்கும் சென்று தகவல்களை பரிமாறிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதே சமயம் அவர் பிரித்தானியாவுக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தையும் சந்தித்து செல்வதையும் மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் நாராயணன் கலாநிதி பாலசிங்கத்துடன் சில தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். அந்த தொடர்புகள் பின்னர் நட்பாகவும் மெல்ல மெல்ல மாற்றமடைந்தது. கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்கு தேவையான மருத்துவ பொருட்களையும் நாராயணன் பிரித்தானியா செல்பவர்களிடம் வாங்கி கொடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நாராயணன் விடுதலைப் புலிகளிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார். அதாவது முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கு ஒரு மன்னிப்பு அறிக்கையை வெளியிடுமாறும், அதன் பின்னர் தமிழ் மக்களுக்கு சார்பாக இந்திய மத்திய அரசின் போக்கை மாற்றுவதற்கு தான் முயற்சிகளை மேற்கொள்ளவதாகவும் தெரிவித்திருந்தார்.

நாராயணனின் தொடர்ச்சியான வற்புறுத்தல்கள், தமிழ் மக்களின் பக்கம் உள்ள நியாயங்களின் பக்கம் இந்தியாவை திருப்பும் முயற்சி என்பவற்றை கருத்தில் கொண்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கம் “ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு வருந்துவதாகவும், அது தவறு எனவும்” இந்திய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த அறிக்கையை அப்படியே தலைகீழாக உருமாற்றிய இந்திய ஊடகங்கள் “ராஜீவ் காந்தியின் கொலைக்கு விடுதலைப் புலிகள் உரிமை கோரியுள்ளனர்” “ராஜீவ் காந்தியின் கொலையை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. கலாநிதி அன்ரன் பாலசிங்கம் வழங்கிய தகவல் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தை கலந்தாலோசிக்காது வெளியிடப்பட்ட தகவலாகவே இருந்தது.

இந்த நிலையில் தான் விடுதலைப் புலிகளின் மத்தியகுழு வன்னியில் அவசரமாக கூடி இந்த தகவலால் ஏற்படப்போகும் நன்மை தீமைகள் தொடர்பாக கலந்தாலேசனைகளை நடத்தியதுடன், நாராயணயன் மேற்கொண்ட நகர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. மூத்த தளபதிகளும், மூத்த உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தை தொடர்புகொள்ளாது தெரிவித்த கருத்துக்கு விடுதலைப் புலிகள் தமது அதிருப்தியை கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் அதனை தமிழ்செல்வனே தொலைபேசி ஊடாக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் தவறுகளும் அதற்கான தண்டனைகளும் நிகழாதவை அல்ல. அதற்கு போராளிகளோ, பொறுப்பாளர்களோ விதிவிலக்கானவர்களும் அல்ல. தண்டனைகளை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவது தான் ஒரு விடுதலைப் போராளியின் சிறப்பு. உதாரணமாக கேணல் ஜெயத்தை நாம் கருதிக்கொள்ளலாம்.

1993களில் மாத்தையா மீதான ஒழுக்காற்று நடவடிக்கையின் போது கேணல் ஜெயமும் தண்டனைக்கு உள்ளாகியிருந்தார். இயக்கத்தில் இருந்து விரும்பினால் அவர் வெளியேறலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அத்தனை தண்டனைகளையும் ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து அமைப்பில் இருந்து தமிழ் மக்களின் விடுதலை மீதான தனது வேட்கையை வெளிப்படுத்திய உன்னதமான போராளி மற்றும் கட்டளை தளபதி அவர்.

பின்னைய நாட்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அபிமானத்தை பெற்றுக்கொண்ட தளபதிகளில் கேணல் ஜெயமும் ஒருவர். பிரிகேடியர் பல்ராஜ் கூட பல தடவைகள் தண்டனைகளை அனுபவித்து மீண்டவர். இவ்வாறு எத்தனையோ போராளிகளையும், தளபதிகளையும் நாம் உதாரணம் காட்டமுடியும்.

விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தை பொறுத்தவரையில் அவர்கள் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் மீது அளவுகடந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். அதனை தேசத்தின் குரலின் இறுதி நாட்களில் நாம் கண்டிருந்தோம். கலாநிதி அன்ரன் பாலசிங்கம் கூட பல தடவைகள் அதனை தெரிவித்திருந்தார். அதாவது “தம்பி சில விடயங்களில் என்னுடன் முரண்பட்டதுண்டு, ஆனால் சில மணிநேரத்தில் அண்ணை என அழைத்தவாறு அவர் மீண்டும் வந்துவிடுவார்” என அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்தையும் நாம் மறந்துவிட முடியாது.

மீண்டும் நாராயணனின் விவகாரத்திற்கு வருவோம். நாராணயணின் திட்டப்படி விடுதலைப் புலிகளால் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்ட போதும், அவர் கூறியது போல இந்தியா தமிழ் மக்களுக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. அதனை நாம் சில வருடங்கள் கழித்து தற்போது ஆணித்தரமாக உணர்ந்து கொண்டுள்ளோம்.

இந்தியா சிறீலங்கா அரசுடன் கூட்டுச்சேர்ந்து படை நடவடிக்கை மூலம் எமது போரட்டத்தை பெரும் அழிவுக்கு உள்ளாக்கியுள்ளது. சிறீலங்கா அரசை உலகின் அழுத்தங்களில் இருந்து இராஜதந்திர வழிகளில் காப்பாற்றி வருகின்றது. கனரக ஆயுதங்களின் தாக்குதலில் சிக்கியிருந்த அப்பாவி மக்களில் ஒரு சிலரை கூட இந்தியா காப்பாற்ற முன்வரவில்லை. அப்பாவி மக்களை மேற்குலகம் காப்பாற்ற முன்வந்த போதும் இந்தியா தனது இராஜதந்திர அழுத்தங்களை பயன்படுத்தி தடுத்து விட்டது.

எனவே நாராயணன் கூறியது போல எதுவும் நிகழவில்லை. எம்மை அவர் நம்பவைத்து முதுகில் குத்திவிட்டார் என்பதை நாம் சில வருடம் கழித்து உணர்ந்து கொண்டோம், ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமை அன்றே உணர்ந்திருந்தது. அது தான் யதார்த்தம்.

எனினும் இந்திய அரசின் வஞ்சகமான நகர்வுகள் மூலம் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தை நாராயணன் நம்பவைத்து முதுகில் குத்தி விட்டாரா? அல்லது கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் இரஜதந்திர நகர்வுகள் தவறாகிப்போய்விட்டனவா? என்பதற்கான விடைகளை தேடுவது சிரமமமாக இருந்தாலும், விடுதலைப் புலிகளின் தலைமை அன்று மேற்கொண்ட நடவடிக்கை, இந்திய அரசின் மீதான அவர்களின் கணிப்புக்கள் போன்றன சரியானவை.

எமது உறவுகள் 50,000 மேற்பட்டோரின் உயிர்கள் முள்ளவாய்க்காலில் இழக்கப்பட்டபோது அதனை நாம் வலுவாக உணர்ந்து கொண்டுள்ளோம். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கணிப்புக்கள், தமிழ் மக்களை பல தடவைகள் காப்பாற்றி உள்ளன என்பதே உண்மையானது.

1987 ஆம் ஆண்டு உலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்திய இராணுவத்துடன் விடுதலைப் புலிகள் மோதிய போது அதனையும் ஒரு சிலர் கேலியாகத்தான் பார்த்தனர். விடுதலைப் புலிகளுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என சிலர் வாதிட்டனர். ஆனால் 1990 ஆம் ஆண்டு வடக்கு ‡ கிழக்கு மாகாணசபையின் முதல்வரான வரதராஜப்பெருமாள் தன்னிச்சையாக தனிநாட்டு பிரகடனத்தை மேற்கொண்ட பின்னர் இந்தியாவுக்கு தப்பியோடிய போது தான் விடுதலைப் புலிகளின் முடிவுகளும், தீர்மானங்களும் எவ்வளவு சரியானவை என்பதை தமிழினம் மட்டுமல்லாது இந்திய படையுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுக்களும் உணர்ந்து கொண்டன.

தமிழ் மக்களை இனிமேல் ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வா கூறிவிட்டு சென்றார். ஆனால் ஆண்டவன் வரமாட்டான் எமது உரிமைகளை நாமே பெறவேண்டும் என எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறினார். சாதித்தும் காட்டியிருந்தார். விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் தான் எமது இனத்தின் துயரங்களை உலகின் கண்களின் முன் நிறுத்தியதன் முக்கிய காரணி.

தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட ஆயுதப்போர் எமக்கு அதிக நன்மைகளைத்தான் தந்துள்ளது. உலகில் எம்மை அடையாளப்படுத்தியதும் அது தான். எமது இனத்தின் வலிகளையும், வேதனைகளையும் ஐ.நாவின் மனித உரிமை சபைவரை கொண்டு சென்றதும் அதுதான்.

மீண்டும் எமது விடுதலைப் போர் பயணிக்கப்போகும் பாதை எது என்பதை களம் தான் தீர்மானிக்கப்போகின்றது. புலம் அதற்கான ஆதரவுகளை தான் வழங்க முடியும்.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி:ஈழமுரசு(10.07.09)

Comments