அந்த `அறிவார்த்தமான` வாக்கியத்தை முதன் முதலில் கூறியவர் டொக்டர் ஜோசப் மெங்கெல் (யிஷீsமீஜீலீ விமீஸீரீமீறீமீ) என்ற ஜேர்மனியர். பல்வேறு நபர்களின் தாடை எலும்புகளின் வடிவத்தைப் பரிசோதிப்பதன் மூலம் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியை மேதைமை படிப்புக்காக 1930-களின் இறுதியில் மேற்கொண்டவர் இவர்.
கிட்லரின் நாசி இராணுவத்தின் மருத்துவராக 1940 இல் சேர்ந்தார். 1943ம் ஆண்டு, மே 24ம் திகதி அவுஸ்விட்ச் - பிர்கானாவ் சித்திரவதைக் கொட்டடியில் இருந்த `நாடோடிகளுக்கான முகாமில் (நிஹ்ஜீsஹ் சிணீனீஜீ) மருத்துவராக நியமிக்கப்பட்டார். உயிருள்ள மனிதர்களின் மீது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவருக்குப் பிடித்த ஒன்று. இரட்டைப் பிறப்புக்களின் மீது அவருக்குத் தனிப்பட்ட ஆர்வமிருந்தது. அதுபோல, குள்ள மனிதர்களும் அவருடைய பரிசோதனைகளுக்கு உவப்பான `எலிகளாக`வே கணிக்கப்பட்டார்கள்.
அவருடைய ஆய்வுக்காக சுமார் 1,500 இரட்டை ஜோடிகள் பயன்படுத்தப்பட்டனர். தான் மேற்கொள்ளப்போகும் பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கும் பல்வேறு இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் நல்ல துணிகளையும், உணவையும் கொடுப்பார். இதனைப் பல மாதங்கள் தொடர்வார்.. “மெங்கெல் மாமா... மெங்கெல் மாமா...!” என்று குழந்தைகள் அவரை வளைய வரும். திடீரென ஒரு நாளில், அவர்களைத் தன் பரிசோதனைக் கூடத்துக்கு அழைத்துச் செல்வார். மயக்கம் ஏற்படுத்தும் சொக்லெட்டைக் கொடுப்பார். மயங்கிக் கிடக்கும் குழந்தைகளின் இதயத்தில், அவர்களை உடனே கொல்லும் விசத்தை ஊசி மூலம் செலுத்துவார். குழந்தைகள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் உடல்களை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களின் அவயவங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பொறுமையாகப் படித்தறிவார்.
இரட்டையர்களை ஒன்றாக வைத்துத் தைத்து, அவர்களால் உயிர்வாழ முடிகிறதா என்ற மகத்தான ஆய்வையும் அவர் மேற்கொண்டார். குழந்தைகளின்கண்களின் நிறத்தை மாற்றுவது எப்படி என்ற ஆராய்ச்சிக்காக பல்வேறு இரசாயனப் பொருட்களை ஊசி மூலம் அவர்களின் கண்களுக்குள் செலுத்திப் பார்த்தார். இப்படிப்பட்ட கொடூர ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ள ஒரு இடமாக ஆஸ்விச் சித்திரவதைக் கொட்டடி உள்ளது என்பதை அறிந்தவுடன் பிறந்த உற்சாகத்தில், அவருடைய உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்தான்... `ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!` என்பது. எம்.எஸ்.சுவாமிநாதன் துணையுடன் இலங்கை அரசாங்கம் நடத்தவுள்ள `பரிசோதனை`யும் யூத இனத்துக்கு மெங்கெல் செய்த கைங்கரியம் போன்றதுதானா... புதிய விவசாயப் பரிசோதனையில் வன்னிப் பெருநில மக்கள் எலிகளாகப் பயன்படப் போகிறார்களா என்ற அச்சம் எழுகிறது!
சிறீலங்கா இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட நான்காம் ஈழப் போரினால் வன்னிப் பெருநில மக்கள் அனுபவித்த - அனுபவிக்கும் துன்பங்களைச் சொல்ல முயலும்போது மொழியும் நம்மைக் கைவிட்டு விடுகிறது.
2007 இறுதியில் வட ஈழத்தின் மீது சிறீலங்கா அரசு போர் தொடுத்தது. 2008 ஏப்ரலில் அது மன்னார் பகுதியை அடைந்தது. அப்போது வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 4 இலட்சத்து 3 ஆயிரம் ஆகும். போர் முடிந்த இன்றைய நாளில், 2008 ஏப்ரலில் வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்திருந்த 4 இலட்சத்து 3 ஆயிரம் மக்களில் வெறும் 2 இலட்சத்து 62 ஆயிரத்து 632 பேருக்கு மட்டுமே கணக்கு உள்ளது. 35 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்கு என்ன ஆயிற்று என்பதற்கு கணக்கு இல்லை.
மே 27ம் திகதியன்று அளிக்கப்பட்ட ஐ.நா. சபையின் மனித உரிமை நிறுவனத்தின் கணக்கின்படி, அனைத்து அகதிகள் முகாம்களிலும் இருந்த வன்னிப் பெருநில மக்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரத்து 130 ஆகும். ஆனால், அந்த நிறுவனத்தால் மே 30ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2 இலட்சத்து 77 ஆயிரம் ஆகக் குறைந்திருந்தது.
யூன் 15ம் திகதியன்று சிறீலங்கா அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2 இலட்சத்து 62 ஆயிரத்து 632 என மேலும் குறைந்திருந்தது. மே 27-க்கும் யூன் 15க்கும் இடைப்பட்ட 19 நாட்களில் மட்டுமே முகாம்களில் இருந்த 27 ஆயிரத்து 498 பேர் காணாமல் போயுள்ளனர் என்பது
தானே பொருள்?
மே 23ம் திகதியன்று வவுனியாவின் மெனிக் முகாமில் உள்ள மக்களை ஐ.நா. சபையின் தலைவர் பான் கீ மூன் சந்தித்தபோது, “என் வாழ்வில் இதுவரை இப்படிப்பட்டதொரு பேரவலத்தை நான் கண்டதில்லை!” என்று பெரிதும் வருந்தினார்.
சில நாட்களுக்கு முன்னதாக இதே மக்களை சந்தித்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா, “இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கினை இழைத்துக் கொண்டிருக்கிறோம்!” என்றார்.
இந்த நிலையில்... மே 7ம் திகதியன்று சிறீலங்கா அரசு வன்னிப் பெருநிலத்தினை மீளுருவாக்கம் செய்வதற்கான செயற்குழு ஒன்றை அமைத்தது. 19 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தக் குழுவுக்கு சிறீலங்கா அதிபரின் ஆலோசகரும் சகோதரரும் இனவாத கருத்துகளை அள்ளி வீசுவதில் முன்னணியில் நிற்பவருமாகிய பசில் ராஜபக்ச தலைவராக நியமிக்கப்பட்டார். மீதமுள்ள 18 பேரில் அதிபரின் மற்றொரு சகோதரரும், `மருத்துவமனைகளின் மீது குண்டு வீசுவது சரியான செயலே` என்று திருவாய் மலர்ந்தருளிய சிறீலங்கா இராணுவத்தின் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவும் ஒருவராவார்.
உறுப்பினர்களில் 7 பேர் இராணுவம் மற்றும் காவற்துறையைச் சேர்ந்தவர்களாகவும் (இதில் சிறீலங்கா இராணுவத்தின் தளபதியான சரத் பொன்சேகாவும் அடக்கம்) 10 பேர் சிறீலங்கா அரசின் நிர்வாகத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்களில் 18 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இஸ்லாமியர் ஆவார். வன்னிப் பெரு நிலத்தை மீளுருவாக்கம் செய்வதற்கான தம் திட்டத்துக்கு இவர்கள் இட்டிருக்கும் பெயர்தான் `வடக்கின் வசந்தம்`.
ஒரு இஸ்லாமியரைத் தவிர்த்து, வேறுதமிழர்கள் யாருமற்ற இந்தக் குழுவினால் தமிழர்களுக்காக உருவாக்கப்படவிருக்கும் `வசந்தம்` எத்தகைய மலர்ச்சியை யாருக்குக் கொண்டுவரும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.
`அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை 180 நாட்களுக்குள் முடிப்போம்` என்று யூன் மாதத் தொடக்கத்தில் சிறீலங்கா அதிபர் முழங்கினார். அதை அவர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறாரோ என்று உலகம் பார்த்திருக்க... நம்மூர்வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், சிறீலங்கா அதிபரின் கண்ணுக்குத் தெரிந்தார்.
யூன் 9ம் திகதியன்று ராஜபக்சவை சந்தித்து ஆலோசித்தார் எம்.எஸ்.சுவாமிநாதன். அப்போது, “வேளாண் மீளுருவாக்கத்தில் ஈடுபட இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் யூலை மாதத்திலேயே தம் கலந்துரையாடலைத் தொடங்க வேண்டும்” என ராஜபக்ச, சுவாமிநாதனிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, `வடக்கின் வசந்தம்` திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
“போரில் உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் ஏற்பட்ட சேதம் காரணமாக, வேலை செய்யக் கூடிய வலுவுடைய ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. வேளாண் தொழிலுக்குப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். எனவே, வேளாண் ஆராய்ச்சியும் கல்வியும், அவற்றின் திட்டங்களும், பயிற்சி முறைகளும் பெண்களை மனதில் கொண்டே கட்டமைக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார் சுவாமிநாதன். ஆண்கள் இல்லாத தமிழினத்தை ராஜபக்ச உருவாக்கியுள்ளார் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரத் தகவல் வேண்டும்?
“வவுனியாவில் உள்ள ஒரு ஆய்வு நிறுவன வளாகத்திலிருந்து இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் இலங்கையின் வேளான் விஞ்ஞானிகளுடனும், விவசாயிகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும். இதில் முகாம்களில் உள்ளவர்களும் கலந்துகொள்ளவேண்டும். ஒக்டோபர் மாதம் விதைப்புக் காலமாகும். எனவே வேளாண் பயிற்சி, திறன் மேம்படுத்துதலுக்கான செயல்களை ஓகஸ்டில் தொடங்கியாக வேண்டும். மண் பரிசோதனை ஊர்திகள், விதைகள், ஊட்டச் சத்துக்கள், கருவிகள் ஆகியவை அனைத்து ஊர்களுக்கும் செப்ரெம்பருக்குள் சென்றடைய வேண்டும்” என்றும் கூறியுள்ளார் சுவாமிநாதன். வேளாண் விஞ்ஞானியின் ஆர்வமும், அதன் பின்னாலிருக்கிற சிறீலங்கா அரசின் அவசரமும் கம்போடியாவை ஆண்ட கொடுங்கோலன் போல்போட் காலம், இலங்கையில் மீண்டும் திரும்பிவிடுமோ என்ற அச்சத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது.
1975ம் ஆண்டு ஏப்ரலில் கம்போடிய நாட்டின் அதிகாரத்தை போல்போட் (சலோத் சார்) தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. நகரங்களில்இருந்த அனைவரும் கிராமப்புறங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அனைவரும் பொதுமையாக்கப்பட்ட பண்ணைகளில் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். நாட்டின் வளர்ச்சிக்காக நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்தப் பணிகளின்போது மட்டுமே சுமார் 17 இலட்சம் மக்கள் மடிந்து போனார்கள். அதாவது, கம்போடியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 21 வீதம் இல்லாமல் போய்விட்டார்கள். வன்னிப் பெருநில மக்களின் துன்பமோ இதை விடப் பெரிது. ஏற்கெனவே கடந்த 13 மாதங்களில் அவர்களில் 35 வீதம் காணாமல் போயிருக்கிறார்கள். ஆண்கள் அனைவரும் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் முகாம்களில் உள்ள பெண்களையும், சிறுவர்களையும், வயோதிகர்களையும் கிராமப்புறங்களில் குடியமர்த்தி... எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயரால் கடுமையாக வேலை வாங்குவதற்கு ராஜபக்ச திட்டம் வகுக்கிறார்.
உறவுகளை இழந்து பட்டினியாலும் நோயாலும் முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்தப் பெண்களால், ஓகஸ்ட் மாதம் வேளாண் பயிற்சி மற்றும்திறன் மேம்பாட்டு செயல்களில் எப்படிக் கலந்து கொள்ள முடியும்? இழப்புகள், மன உளைச்சல்கள், இடப்பெயர்வுகளால் ஏறத்தாழ நடைபிணங்கள் ஆகிவிட்டிருக்கும், பெண்களின் எஞ்சிய உயிரையும் பறிப்பதற்கான மாற்று ஏற்பாடாக இதை ஏன் கருதக்கூடாது?
போருக்கு உதவி செய்து தமிழினத்தின் துன்பத்துக்குக் காரணமாக இருந்த இந்தியா... இன்று மிச்சமிருக்கும் தமிழர்களையும் தந்திரமான ஒரு திட்டத்தின் மூலம் கொன்று குவிக்க முயலும் சிறீலங்காவிற்கு 500 கோடி ரூபாயை அளிக்கப் போகிறதா? ‘வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் நோக்கம் ஈழத்தில் பயிர் பண்ணுவது அல்ல... இன்னும் மிச்சம் இருக்கும் தமிழர்களின் உயிர்களை மெல்ல மெல்லக் கொல்வதுதான்’ என்ற அச்சத்தைப் போக்குவதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் என்ன உத்தரவாதம் வைத்திருக்கிறார்?
ஜூனியர் விகடன்` இதழுக்கு இயக்குநர் சீமான் எழுதிய கட்டுரையில் இருந்து...
நன்றி: ஈழமுரசு (10.07.09)
Comments